உலகெங்கும் தந்தை பெரியாரின் தத்துவக் கொள்கைகளைப் பரப்பிட 1994இல் தொடங்கப்பட்ட பெரியார் பன்னாட்டு அமைப்பு உலகெங்கும் சமூக நீதிக்காகப் பாடுபடும் பெருமக்களுக்கு சமூக நீதிக்கான கி.வீரமணி விருது என்னும் பெயரில் ஒரு விருதினை வழங்கி வருகிறது. இவ்விருதினை 1996இல் சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களுக்கு வழங்கப்பட்டது. தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இவ்விருது தமிழ்நாட்டு அளவிலும் இந்திய அளவிலும் உலக அளவில் சமூக நீதிக் கொள்கைகளுக்காக பாடுபடும் பெருமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் இந்த ஆண்டுக்கான விருது எழுத்தாளரும் ஆவணப்பட இயக்குநரும் சமூக செயற்பாட்டாளருமான வித்யா பூஷன் ராவத் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது.
இந்த விருது வழங்கும் விழாவும், ஆசிரியர்
கி.வீரமணி, வழக்குரைஞர் அ.அருள்மொழி ஆகியோர் நூலான “ஆஸ்திரேலியாவில் பெரியார்” புத்தக வெளியீட்டு விழா! என்று நடைபெற்ற இரு பெரும் விழாக்கள் 14.11.2025 அன்று மாலை 6 மணியளவில், சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் தரைத்தளத்தில் உள்ள மாநாட்டு அரங்கில் மிகச் சிறப்பாக நடைபெற்றன. இந்நிகழ்வில் பெரியார் மருத்துவக் குழுமத்தின் செயலாளர் – மருத்துவர் ஆர்.மீனாம்பாள் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். எஸ்.ராஜரத்தினம் அய்.ஏ.எஸ். (ஓய்வு) தலைமையேற்று உரை நிகழ்த்தினார். அமெரிக்கா – பெரியார் பன்னாட்டு அமைப்பின் இயக்குநர் மருத்துவர் சோம. இளங்கோவன் ”ஆஸ்திரேலியாவில் பெரியார்” புத்தகத்தை வெளியிட, ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் நா.எழிலன் பெற்றுக்கொண்டு, புத்தகம் குறித்த ஆய்வுரையை வழங்கினார். அதைத் தொடர்ந்து நிகழ்வில் தமிழ், ஆங்கில மொழிகள் கலந்து இணைப்புரை வழங்கிய முனைவர் கோ.ஒளிவண்ணன், விருதாளரை ஆங்கிலத்தில் அறிமுகம் செய்வித்து உரையாற்றினார். விருதுக்கான கருத்துருவை வாசித்த மருத்துவர் சோம.இளங்கோவன், வித்யா பூஷன் ராவத் அவர்களுக்கு, பலத்த கைதட்டல்களுக்கிடையே 2025ஆம் ஆண்டுக்கான, “சமூகநீதிக்கான கி.வீரமணி விருது” வழங்கி சிறப்பித்தார். கழகத் தலைவர் விருதாளருக்கும், நிகழ்வுக்கு வருகை தந்திருந்த அவரது மகள் பிரியதர்ஷினி அவர்களுக்கும் சேர்த்து பொன்னாடை அணிவித்து சிறப்புச் செய்தார். தொடர்ந்து விருதாளரைப் பாராட்டி கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி உரையாற்றினார்.
ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பெரியாரின் கொள்கைகளை மிகுந்த ஈடுபாட்டுடன் பரப்பி வருகிறார்; திராவிடர் கழகம் தான் திராவிடர் இயக்கத்தின் முதுகெலும்பாக இருக்கிறது; நாங்கள் தமிழ்நாட்டு மாடலைப் பின்பற்ற விரும்புகிறோம்; வடநாட்டில் மக்கள் இதைச் சரியாக புரிந்து கொள்ளவில்லை;
ஆர்.எஸ்.எஸ். இதைப் பயன்படுத்திக் கொள்கிறது; பெரியார், ஃபூலே, அம்பேத்கர் ஆகியோரை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்; பெரியார் – ஆசிரியர் கி.வீரமணி – தமிழ்நாட்டின் பங்களிப்பு இந்தியா முழுவதற்கும் பெரிதாகத் தேவைப்படுகிறது; பெரியார் தான் – தமிழ்நாடு தான் – திராவிட மாடல் தான் நம்பிக்கை தருகிறது என்று குறிப்பிட்டுப் பேசினார். ¦


