Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

ஆளுமை மிக்க ஆசிரியர்! — முனைவர் கடவூர் மணிமாறன்

சிரியர் என்றாலே அனைத்து நாட்டார்

அய்யாநம் வீரமணி அவர்கள் என்பார்!

மாசில்லா உயர்மனத்தர், மாந்த நேயர்

மனம்முழுதும் திராவிடத்தைச் சுமக்கும் நல்லார்!

வீசுபுகழ்ப் பெரியாரின் உலகம் காண்பார்!

வெண்தாடி வேந்தரையே எண்ணி வாழ்வார்!

காசு,பணம் கடவுள்மதம் சாதி என்றே

கதைப்போரின் முகத்திரையைக் கிழித்து வைப்பார்!

 

பத்தாம்நல் அகவையிலே மேடை ஏறிப்

பாராட்டைப் பெற்றஇவர் இதுவ ரைக்கும்

முத்திரையைப் பதித்துவரும் நற்பேச் சாளர்!

முதுகலையின் விருதுகளை மூன்றும் பெற்றார்!

நத்திவரும் இனப்பகையை நடுங்கச் செய்வார்!

நற்றமிழர் இனத்துக்கே நலன்கள் சேர்ப்பார்!

கத்துகடல் கடந்துமிவர் திராவி டத்தின்

கருத்தியலை, சிந்தனையைப் பதிவு செய்வார்!

 

வாழ்வியலின் சிந்தனைகள் தொகுதி யாவும்

வரலாற்றுக் கருவூலம்! வாழ்வில் வீணே

ஊழ்வினையை மோட்சத்தை நரகம் தன்னை

உள்ளத்தே பதுக்கியுள மூடர் கூட்டம்

பாழ்நெறிகள் கற்பிக்கும் பகவத் கீதை

பகர்வதனை மறுபக்கம் என்னும் நூலில்

வீழ்ச்சியினால் மனம்நோகும் தமிழர் தம்மின்

விதிப்பயனைச் சதியென்றே விளக்கம் தந்தார்!

 

தெருவோர மக்கள்தம் மாண்பைக் காக்கும்

திராவிடப்பே ரியக்கத்தைத் தாங்கி நிற்கும்

அருந்தூணாய்த் திகழ்கின்றார் அறிஞர் போற்றும்

அறிவுமண விடுதலையாம் இதழ்ந டத்தும்

பெருமைக்கே உரியவராம்! சமூக நீதி

பேணுபவர்! நால்வருண இழிவைச் சாடி

அருமைமிகு பகுத்தறிவின் மாண்பைக் கூறி

ஆரியத்துப் புரட்டினரை அலறச் செய்வார்!

 

ஒழுக்கத்தை, நேர்மையினை, உழைப்பைப் போற்றும்

ஒப்பரிய சட்டவியல் அறிஞர்! என்றும்

அழுக்குமனம் கொண்டோரின் அகந்தை தன்னை

ஆளுமையால் வரலாற்றுத் தரவைக் கொண்டே

இழுக்கென்றே மிகச்சாடி எதிர்ப்பைக் கூறி

எல்லார்க்கும் விழிப்புணர்வைத் தருவார் நாளும்!

புழுக்களென வாழ்வோரின் உயர்வுக் காகப்

போர்க்குரலை எழுப்பிவரும் புரட்சி யாளர்!

 

தொண்ணூற்று மூன்றினிலே அடிப தித்தார்;

தொலைநோக்குச் சிந்தனையால் பெருமை        பெற்றார்!

எண்ணத்தில் செயற்பாட்டில் பெரியார் போலும்

இனமான உணர்வூட்டித் திராவி டத்தின்

தொண்டறத்தில் முன்நிற்கும் களப்போ ராளி!

துடிப்புமிகு கொள்கையுரம் வாய்க்கப் பெற்ற

அண்ணல்நம் ஆசிரியர் இனத்தின் மீட்பர்

ஆண்டுபல நூறாண்டு கடந்தும் வாழ்கv