பெரியார் உருவாக்கிய திராவிடர் கழகம் அவர் வழியிலேயே இன்றளவும் எந்தவிதப் பதவிகளுக்கும் ஆசைப்படாமல் சுயமரியாதைப் பகுத்தறிவுக் கருத்துப் பரப்புரையையும், அதற்கான களப்போராட்டங்களையுமே முதன்மையாகக் கொண்டுள்ளது.
உலகளாவிய அளவில் பகுத்தறிவுச் சிந்தனைகள் எந்த நிலையில் உள்ளன என்பதையும், மேலைநாடுகளில் நாத்திகர்கள் எப்படி இயங்குகிறார்கள் என்பதையும் அறிந்து, அதைத் தமிழ்நாட்டிற்கேற்ப பரப்புகிற நோக்கத்துடன் 1931 டிசம்பர் 13ஆம் நாள் சென்னை துறைமுகத்திலிருந்து பிரான்ஸ் நாட்டின் அம்போய்ஸி என்ற கப்பலில் பெரியார் பயணித்தார். பல மாதங்கள் அய்ரோப்பிய நாடுகளிலும், அன்றைய சோவியத் யூனியனிலும் நாத்திகர்களைச் சந்தித்
தார். அவர்களின் சங்கங்
களுக்குச் சென்றார். மனித உரிமை அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டார்.
‘பெரியாரை உலக மயமாக்குவோம், உலகைப் பெரியார் மயமாக்குவோம்‘ என்கிற திராவிடர் கழகத் தலைவர்-தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தந்தை பெரியாரின் கருத்துகளால் தமிழ்நாடு இந்தியாவில் தனித்துவமான நிலையில் முன்னேற்றம் கண்டு வருவதை உலக நாடுகளில் பெருமையுடன் எடுத்துரைத்து, அந்த நாடுகளில் பெரியார் கொள்கைகளைப் பரப்பி, அதற்கான ஆதரவாளர்களைத் திரட்டி வருகிறார். 92 வயது நிறைந்தாலும் தொண்டு செய்து பழுத்த பழமாகத் தன் பணியினைத் தொடர்ந்து வருகிறார் ஆசிரியர்.
சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டின் சிறப்பு நிகழ்வாக இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் செயின்ட் ஆண்டனி கல்லூரியில் 2025 செப்டம்பர் 4 மற்றும் 5 ஆகிய இரண்டு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. சுயமரியாதை இயக்கம், பெரியாரியல் குறித்த
ஏ.ஆர்.வேங்கடாசலபதி, கார்த்திக் ராம், மனோகரன் ஆகிய வல்லுநர்களின் ஆய்வுக் கட்டுரை நூல்கள் வெளியிடப்பட்டன. அதன் சிகரமாக, தமிழ்நாடு முதலமைச்சர் சமூக நீதிக்கான சரித்திர நாயகர் அவர்கள் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகக் கருத்தரங்கில் தந்தை பெரியாரின் படத்தைத் திறந்து வைத்தார்.
இந்தப் பெருமைமிகு நிகழ்வுக்கு, அதே ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் 1983ஆம் ஆண்டு பெரியார் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவின் தொடர்ச்சியாக ஆசிரியர் அவர்கள் பெரியாரியல் குறித்த கருத்தரங்கில் உரையாற்றினார். இலங்கையில் தமிழர் நலனுக்காக அமைதி வழியில் பாடுபட்ட தமிழர் அய்க்கிய முன்னணியின் தலைவர் அமிர்தலிங்கம் அவர்களும் அந்த நிகழ்வில் பங்கேற்றார்.
42 ஆண்டுகள் முன்பாகவே பெரியாரை உலகமயமாக்கும் முயற்சிக்கான விதையை நட்டவர் ஆசிரியர். அது இன்று தழைத்து வளர்ந்திருப்பதைப் பல நாடுகளில் காண முடிகிறது. சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான், ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் அய்ரோப்பிய நாடுகள் உள்ளிட்ட பல நாடுகளிலும் கருத்தரங்குகளை நடத்தி பெரியார் கொள்கையையும், சமூக நீதி தத்துவத்தையும் ஆசிரியர் தொடர்ந்து பரப்பி வருகிறார்.
ஜப்பான் மொழியில் பெரியார் குறித்த நூல்களைத் தமிழ்நாட்டைச் சேர்ந்த தோழர்கள் கமலக்கண்ணன், டோக்கியோ செந்தில் ஆகியோர் சிறப்பாகக் கொண்டு வந்துள்ளனர். இதில் ஆசிரியர் அவர்களின் ஊக்கமும் ஒத்துழைப்பும் முதன்மையானதாகும். கடந்த ஆண்டு ஜப்பானுக்குப் பயணம் மேற்கொண்டு பெரியார் விழாவில் பங்கேற்ற ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், அதற்கு முன்பும் அங்கு சென்று சமூக நீதி சார்ந்த முன்னெடுப்புகளை மேற்கொண்டதை ஜப்பான் வாழ் தமிழர்கள் மட்டுமின்றி, ஜப்பானியர்களும் நினைவில் வைத்துக் குறிப்பிடத் தவறவில்லை.
அந்த நாட்டில் தூய்மைப் பணி செய்பவர்
களையும், இறைச்சிக்காக மாடுகளை வெட்டி, அதன் தோல்களை உரிப்பவர்களையும் பொதுச் சமூகத்திலிருந்து விலக்கி வைக்கும் நிலை பல காலமாகத் தொடர்ந்து வந்தது. அவர்கள் தனியாக வசிக்கும் பகுதிக்கு ‘புரோக்கு’ என்று பெயர். அதனால் அவர்களை ‘புரோக்குமின்’ என ஜப்பானியர்கள் கொச்சையான முறையில் அழைத்து வந்தனர். அவர்களுடனான காதல், திருமணம் போன்றவை தடை செய்யப்பட்டிருந்தன. இவற்றை எதிர்த்து, தங்கள் உரிமைக்காக அவர்கள் போராடிய நிலையில், ஆசிரியர் அவர்களும் அவர்களுக்கான உரிமைக்காக அங்கு குரல் கொடுத்தார். இன்று அவர்களின் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சமூக நீதிக் கொள்கைக்கு நாடு, இனம், மொழி என்ற எல்லை கிடையாது. மனிதம் மட்டுமே அதன் இலட்சியப் பார்வை என்பதை பெரியார் வழியில் ஜப்பானில் நிறுவியவர் ஆசிரியர்.
அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் பெரியார் பன்னாட்டு மய்யம், அமெரிக்கா வாழ் தமிழர்களிடம் மட்டுமின்றி அந்நாட்டின் பகுத்தறிவாளர்கள், முற்போக்குச் சிந்தனையாளர்கள் பங்கேற்கும் மன்றமாகச் செயல்பட்டு வருகிறது. அதன் Chapter எனப்படும் கிளைகள் ஜெர்மனி, கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் தத்தம் பங்களிப்பைச் செய்து வருகின்றன. ஜெர்மனியின் கொலோன் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆய்வு செய்பவர்
கள் பெரியார் சிந்தனைகள் மீது ஈடுபாடு கொண்டு, தமிழ்நாட்டுக்கு வந்து ஆய்வுகளைத் தொடர்கின்றனர்.
ஆஸ்திரேலியாவில் உள்ள பல்கலைக்கழகங்
களில் பெரியாரின் கொள்கைகள் பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, புத்தகங்களாக வெளிவருகின்றன. இந்த 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆஸ்திரேலியாவில் பெரியார் – அம்பேத்கர் சிந்தனை வட்டம் சார்பில் நடைபெற்ற பன்னாட்டு மகளிர் உரிமை நாள் விழாவில் ஆசிரியர் அவர்கள் கலந்து கொண்டு, பெண்களின் உரிமை குறித்து சிறப்பான உரை நிகழ்த்தினர். அந்த நிகழ்வில் திராவிடர் கழகத்தின் பரப்புரைச் செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி அவர்களின் கருத்துரை பலருக்கும் சிந்தனை விருந்தாக அமைந்தது.
இந்த நிகழ்வில் ஆஸ்திரேலியா நாடாளு
மன்ற உறுப்பினர்கள் டாக்டர் மிஷேல் ஆனந்தராஜா, டாக்டர் கரீனா கார்லண்ட், ஜான் முலே ஆகிய மூவர் கலந்துகொண்டனர். இவர்களில் இருவர் பெண் உறுப்பினர்கள் என்பதையும், அவர்கள்தான் இந்த மேடையில் பெரும்பான்மையாக இருக்கிறார்கள் என்பதையும் ஆசிரியர் அவர்கள் பெரியாரியப் பார்வையுடன் எடுத்துரைத்தார். நவம்பர் மாதத்தில் பன்னாட்டு பெரியார் மய்யம் முன்னெடுப்பில் ஆஸ்திரேலியாவில் நடந்த பன்னாட்டு மனிதநேய மாநாட்டில் திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், பெரியாரியல் ஆய்வாளர்கள் ஆகியோர் பங்கேற்று பெரியாரின் கொள்கைகள் எக்காலத்திற்கும் ஏற்றவை என்பதை நிறுவினர்.
சிங்கப்பூர்-மலேசியா ஆகிய நாடுகள் ஒரே நாடாக மலேயா என்றிருந்த காலத்திலேயே அங்கு பயணம் மேற்கொண்டு மலேயா தமிழர்களிடம் பகுத்தறிவுப் பரப்புரை செய்தவர் தந்தை பெரியார். அப்போது அங்கிருந்த சனாதனவாதிகள் மலேயா அரசாங்கத்திடமே முறையிட்டு முடக்க முயற்சித்தபோதும், பெரியார் தன் கருத்துகளை நடவு செய்தார். சீனர்கள், மலேயா மக்கள் ஆகியோரிடமும் அவர் பேசினார். 2023ஆம் ஆண்டு மலேசியாவில் நடந்த தமிழ் ஆய்வு மாநாட்டில் ஆசிரியர் அவர்களின் கருத்துரை சுயமரியாதை உணர்வையும், பகுத்தறிவுச் சிந்தனையையும் தூண்டுவதாக அமைந்தது. சனாதனக் கூட்டம் காலித்தனம் செய்து தடுத்துவிடலாம் எனப் போட்ட திட்டமும் தவிடுபொடியானது.
கடல் கடந்த நாடுகளில் அவற்றின் சட்டங்களை மதித்து செயல்பட வேண்டும் என்பதே பெரியாரும் அண்ணாவும் அங்கு வாழ்கின்ற தமிழர்களுக்குத் தொடர்ந்து வழங்கி வந்த அறிவுரையாகும். சிங்கப்பூரில் திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவை அங்குள்ள தமிழர்களின் பங்களிப்புடன் இயங்கி வந்தன. பிறநாட்டு அமைப்புகளின் செயல்பாடுகளுக்கு அனுமதி மறுத்து சிங்கப்பூர் அரசு சட்டம் இயற்றிவிட்டது. பெரியார் வழியில் அதனை மதித்து நடந்தன திராவிட இயக்கங்கள்.
அதே நேரத்தில் சிங்கப்பூர் வாழ் திராவிடத் தமிழர்கள் 2005ஆம் ஆண்டு முதல் பெரியார் சமூக சேவை மன்றம் என்ற அமைப்பை நடத்தி வருகின்றனர். ஆண்டுதோறும் பெரியார் பிறந்தநாள் விழா மற்றும் பகுத்தறிவு நிகழ்வுகள் சிங்கப்பூர் தமிழர்களால் நடத்தப்படுகின்றன. ஆசிரியர் பல முறை பங்கேற்று உரையாற்றியுள்ளார். 2025 நவம்பர் 9ஆம் நாள் ‘பெரியாரும் சிங்கப்பூரும்’ என்ற தலைப்பிலான நிகழ்வை பெரியார் சமூக சேவை மன்றம் சிங்கப்பூர் உமறுப்புலவர் தமிழ்மொழி நினைவு அரங்கில் கொண்டாடியது.
எப்போதுமே இளையதலைமுறையை ஊக்குவித்து, அதன் அறிவாற்றல் வளர்ந்திட துணை நிற்கும் எந்நாளும் இளைஞரான 92 வயது ஆசிரியர் அவர்கள் முன்னிலையில், சிங்கப்பூர் வாழ் இளந்தமிழ்த் தலைமுறையினர் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்தியதுடன், பெரியார் குறித்த கருத்தரங்கத்தில் தங்கள் பார்வையில் பெரியாரை மிக அழகாக எடுத்துரைத்
தனர். கருத்தரங்கத்தில் இளையதலைமுறையினர் சொற்பொழிவைப் பார்த்து வியந்த ஆசிரியர் அவர்கள், “பெரியாரும் அவருடைய கொள்கை
களும் எந்த அளவிற்கு இந்த இளைஞர்களைப் பக்குவப்படுத்தியிருக்கிறது என்பதை இங்கே காட்டியிருக்கிறார்கள். விஜயகுமார், அருள் ஆஸ்வின், செல்வி.நரசிம்மமூர்த்தி தமிழ்மதி ஆகியோர் இந்தக் கருத்தரங்கத்தினை அற்புதமாக நடத்தியிருக்கிறார்கள்” என்று மனதாரப் பாராட்டி மகிழ்ந்தார். மதியழகன் தயாரிப்பில் அரங்கேறிய நாட்டிய நாடகத்தையும் பாராட்டினார்.
பெரியார் ஏற்றிவைத்த அறிவுச் சுடரை அணையாமல் பாதுகாத்து, அன்னை மணியம்மையாருக்குப் பிறகு அதனை தன் கையில் ஏந்தி, எதிர்ப்புகளைப் பொசுக்கி, சமூக நீதி வெளிச்சத்தைப் பாய்ச்சிக் கொண்டிருக்கும் ஆசிரியர் அவர்கள், அந்த வெளிச்சம் இளையதலைமுறைக்கு வழிகாட்ட வேண்டும், உலக நாடுகளிலும் பரவவேண்டும் என்பதற்காக கருத்தரங்குகள், மாநாடுகள், பெரியார் பன்னாட்டு மய்யத்தின் சார்பிலான உயர் விருதுகள், பகுத்தறிவு-நாத்திக மாநாடுகள் ஆகியவற்றை திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்துவதுடன் அவரே அதில் நேரில் பங்கேற்று உலகெங்கும் திராவிட முழக்கத்தை ஓங்கி ஒலித்து வருகிறார்.
நூற்றாண்டு நிறைந்த சுயமரியாதை இயக்கம் போல, ஆசிரியரின் அருந்தொண்டு நூறாண்டுகள் கடந்தும் உலகெங்கும் பெரியாரைக் கொண்டு செல்லும். ¦


