Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

தமிழர் தலைவரின் பெண்ணுரிமை சிந்தனைகள்… (தொகுப்பு : த. மரகதமணி )

(ஜாதி ஒழிப்பும், பெண்ணடிமை ஒழிப்பும் சுயமரியாதை இயக்கத்தின் இரு கண்கள். தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இடைவிடாது பெண்ணுரிமைக்குப் பாடுபட்டு வருகின்றார். இயக்க மாநாடுகளை நடத்தும்போது கூடவே பெண்கள் விடுதலை மாநாட்டையும் இணைத்து நடத்துகின்றார். மாநாடுகளில் பெண்கள் விடுதலைக்கான புரட்சிகரமான தீர்மானங்களை நிறைவேற்றும்படி கழகத் தோழியர்களைக் கேட்டுக் கொள்கின்றார். தாம் நடத்தி வைக்கின்ற வாழ்த்துரை சொல்கின்ற மணவிழாக்களில் அவருடைய உரை பெண்ணுரிமையை வலியுறுத்துவதாகவே அமைந்திருக்கின்றது. அவரது பெண்ணுரிமைச் சிந்தனைகள்.)

“பிறவியின் பெயரால் பேதம் கூடாது என்பதுதான் தந்தை பெரியார் அவர்களின் எல்லா கொள்கைக்கும் அடிப்படை ஒருவன் உயர்ந்த ஜாதியில் பிறந்தவன் என்பதாலும் தாழ்ந்த ஜாதி என்று சொல்லப்படுகிற ஜாதியில் பிறந்தவன் என்பதாலும் ஏற்றத்தாழ்வுகள் எப்படி இருக்கக் கூடாதோ. அதுபோலத்தான் ஒருவர் பெண்ணாகப் பிறந்துவிட்டார் என்பதற்காக அவர் அடிமையல்ல; ஒருவர் ஆணாகப் பிறந்துவிட்டார் என்பதற்காக எஜமானன் அல்ல, ஜாதியின் பெயரால் பிறவி பேதம் கூடாது என்று சொல்லப்படும் கருத்து ஆண்-பெண் பேதம் கூடாது என்பதற்கும் பொருந்தும்”

– விடுதலை 27.08.1979

“உரிமை, விடுதலை என்பது ஒருவர் பார்த்து மற்றவருக்குக் கொடுக்கப்படுவதல்ல. தட்டிப் பறிக்கப்பட வேண்டிய ஒன்று. நீங்கள் கிளர்ந்து எழுந்தால் விடுதலை கிடைக்கும்.

– விடுதலை 28.8.1979

“சமூக நீதியைப் போலப் ‘பாலின நீதி’ (Gender Justice) என்பதும் மிக முக்கியமான ஒன்று. பெண்கள் எப்பொழுது எல்லாத் துறைகளிலும் முன்னேறுகின்றார்களோ அப்பொழுதுதான் இந்த நாடும் எல்லாத் துறைகளிலும் முன்னேறும்.

மக்கள் தொகையில் சம பங்கு வகிக்கக் கூடிய பெண்கள் உரிமை இழந்து அடிமைகளாய் வாழ்வது ‘சமுதாயப் பக்கவாதம்’.

– நூல் நாடாளுமன்றத்தில்
பெண்கள் இட ஒதுக்கீடு முட்டுக்கட்டை ஏன்?

”வாக்காளர் தொகையில் 47 விழுக்காடு உள்ள பெண்கள் இந்திய நாடாளுமன்றத்தில் வெறும் 7.3 விழுக்காடே உள்ளனர். இது ஒரு ஆரோக்கியமான நிலையா?”

– விடுதலை 12.11.1996

“ஒரு கால் சரியாக இருந்து இன்னொரு கால் சரியாக இல்லாவிட்டால் முடம்தானே! இந்த முடமான சமுதாயம் சரியான சமுதாயமாகத் திகழ வேண்டுமென்றால் ஆண் – பெண் சமத்துவம் உருவாக வேண்டும்’

– விடுதலை 30.5.1981

. ”நம் முன்னோர்கள், பெற்றோர்கள் எல்லாம் பெண் தலை நிமிர்ந்து செல்லக்கூடாது; பேசக் கூடாது, சிரிக்கக் கூடாது என்று கற்பிதம் செய்துள்ளனர். இது நம் மக்கள் – பெண்கள் மீது சுமத்தி வைத்துள்ள அடிமைத்தனத்திற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும். அதைப்போலவே கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்று சொல்கின்றார்களே ஏன்? கல்லானாலும் மனைவி, புல்லானாலும் பெண்டாட்டி என்று சொல்வதில்லை. கற்புக்கரசி என்று சொல்கிறார்களே தவிர, ‘கற்புக்கரசன்’ என்று ஏன் ஆணைச் சொல்வதில்லை. காரணம் சமூகம் ஒட்டுமொத்தமாகப் பெண் மீது அடிமைத்தனத்தைச் சுமத்தியுள்ளது”

– ‘விடுதலை’ – 01.10.1980.

“மனு தர்மம் பெண்களைப் பற்றிக் கூறுகின்றது. பெண்களுக்கு இருக்கின்ற இயற்கையான உணர்வு என்ன? என்று சொல்லும்போது. கற்பு நிலையின்மை. நிலையா மனம், நட்பு இன்மை உடையவர்கள் என்றும் பெண்கள் எப்போதும் துரோகம்தான் செய்வார்கள் என்றும் ‘மனு’ சொல்கின்றான். பெண்களுக்கு மான உணர்ச்சி இருந்தால் இந்த மாதிரி ஒரு புத்தகத்தை நடமாடவிடலாமா? பெண்கள் விடுதலை இயக்கம் என்று ஓர் இயக்கம் இந்த நாட்டிலே நடக்குமானால், அந்த இயக்கத்திலே செய்யப்பட வேண்டிய முதல் நடவடிக்கை என்னவென்றால் மனுதர்ம சாத்திரம் நாடெங்கும் சுட்டுப்பொசுக்கப்பட வேண்டும்”

– ‘விடுதலை’ – 9.9.1980

பெண்களை இழிவுபடுத்தும் உரிமைகளை மறுக்கும் மத நம்பிக்கைகள் சம்பிரதாயங்கள் பழக்கவழக்கங்கள் சாஸ்திரங்களை அறவே புறக்கணிக்க வேண்டும்

– ‘விடுதலை’ – 30.05.2012

பெண் சிரித்தால் போச்சு புகையிலை விரித்தால் போச்சு என்று சொல்லிவிட்டார்கள் அப்படி என்றால் பெண்கள் என்றால் சிரிக்கவே கூடாதா அப்படி என்றால் பெண்கள் நோயாளியாகவே இருக்க வேண்டுமா வெறும் பொருளாதார விடுதலை வந்தால் போதாது சமூக விடுதலையும் பெறவேண்டும்

– ‘விடுதலை’ – 9.6.2012

பட்டுப் புடவை, நகை லிப்ஸ்டிக் கலாச்சாரத்தை விட்டு வெளியே வாருங்கள் தந்தை பெரியார் சிந்தனைகளைச் செவிமடுங்கள்

– ‘விடுதலை’ – 9.6.2012

காலில் விழுகின்ற கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்கள். யார் காலிலும்
விழக்கூடாது. காலில் விழுந்தால் தான் அவரை நேசிக்கிறோம் என்று காட்ட வேண்டிய அவசியம் யாருக்கும் கிடையாது.

அன்பு, கட்டுப்பாடு, ஒழுக்கம், பாசம் என்பதெல்லாம் திராவிட இயக்கத்தாலே குடும்ப ரீதியாக அய்யா அண்ணன், சகோதரி, தம்பி என்று உருவாக்கப்பட்ட ஓர் அமைப்பு இதை தெளிவாக உருவாக்க வேண்டும் அது தெளிவாக வளர வேண்டும்

– ‘விடுதலை’ – 23.12.2016