Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

இயக்க வரலாறான தன் வரலாறு 372

கலைவாணர்
நூற்றாண்டு விழா ! கி.வீரமணி

டுத்த நாள் (24.12.2007) தந்தை பெரியார் நினைவு நாள் விழா
சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது.
காலையில் “சமூக சீரழிவுக்கு பெரிதும் காரணமாய் இருப்பது எது?” என்னும் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில துணைச் செயலாளர் சி.மகேந்திரன் பங்கேற்றார். பின்னர் ‘பெரியார் வலைக் காட்சி’ (Periyar web vission) திறப்பு விழா நடைபெற்றது.

தந்தை பெரியாரின் கருத்துகளை உலகெங்கும்
பரப்பும் திட்டத்தின் முக்கியப் பகுதியாக இணையத்தில் நம் வலைதளங்கள் பணியாற்றிய நிலையில் காட்சி ஊடக வடிவத்தில் இன்றைய
இளைஞர்களையும், உலகத் தமிழர்களையும் ஒரு சேரச் சென்றடைய, பெரியார் வலைக்காட்சி
(Periyar Webvision) இணையத் தொலைக்காட்சி உருவாக்கப்பட்டு, அதன் தொடக்க விழா நடைபெற்றது. பெரியார் வலைக்காட்சியின் ஒளிபரப்பைத் தொடங்குவதற்கான ‘Publish’
விசையை இயக்கி வைத்தோம். அதன் தொடர்ச்சியாக அதற்கென்று அமைக்கப்
பட்டுள்ள படப்பிடிப்பு அரங்கத்தில் ஒளிப்பதிவைத் தொடங்கி வைத்து உரையாற்றி
னோம். அவ்வுரை உடனடியாக வலையேற்றப்
பட்டு உலகெங்கும் காணும் வகையில் ஒளிபரப்பானது. இந்தத் தொடக்க விழாவில் கழகப் பொருளாளர் கோ.சாமிதுரை பொதுச் செயலாளர்கள் கவிஞர் கலி.பூங்குன்றன்,
சு.அறிவுக்கரசு மற்றும் பாவலர் அறிவுமதி, கவிஞர் பழனிபாரதி, கவிஞர் நா.முத்துக்குமார், இசையமைப்பாளர் கவி ஆகியோர் பங்கேற்றனர். இதற்கான தொடக்கப் பணிகளைச் செய்த பகுத்தறிவாளர் கழக வெளிநாட்டுத் தொடர்புச் செயலாளர்கள் தி.பெரியார்
சாக்ரடீஸ், ச.பிரின்சு என்னாரெசு பெரியார், ஆலோசகர் கணேஷ்ராம், பெரியார் வலைக்
காட்சிப் பொறுப்பாளர்கள் உடுமலை வடிவேல், இராஜு ஆகியோரைப் பாராட்டினோம்.

பின்னர் தொடர்ந்து  “21ஆம் நூற்றாண்டில் பெரியார் இயக்கத்தின் தாக்கம்’’ என்னும் தலைப்பில் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.  பகுத்தறிவாளர் கழக பொதுச் செயலாளர்
வீ.குமரேசன் வரவேற்புரையும் கழகப் பொதுச் செயலாளர் சு.அறிவுக்கரசு தலைமை உரையும் ஆற்றினர். விஜயவாடா நாத்திக மய்யத்தின் செயல் இயக்குநர் டாக்டர் விஜயம், இந்திய பகுத்தறிவாளர் சங்கத் தலைவர் சேனல் இடமருகு, தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் உ.மதிவாணன் ஆகியோர் உரைக்குப் பின் நாம் தலைமை உரையாற்றினோம்.

தந்தை பெரியார் பெருந்தொண்டர்களில் மூத்த முதியவரும், சென்னை ‘‘உயர் நீதிமன்றத்தில் நீதி அரசராக இருந்து ஓய்வு பெற்றவருமான, மாண்பமை அய்யா
ஜஸ்டீஸ் பெ.வேணுகோபால் அவர்கள் தமது 88ஆம் வயதில் சென்னையில் 25.12.2007 அன்று முடிவெய்தினார் என்ற செய்தி கேட்டு மிகவும் வேதனையும், சொல்லொணாத் துயரமும் அடைந்தோம்.

பல வழக்குகளைக் கழகத் தோழர்களுக்காக இலவசமாக நடத்தி வெற்றி வாகை சூடியவர் இவர்!

தஞ்சையில் வழக்
குரைஞராக சுமார் 65 ஆண்டுகளுக்கு முன்பு பணியாற்றிய அந்தக் காலத்து “அத்திப் பூத்ததுபோன்று” அத்தொழிலில் பிரபலமாக இருந்து முன்னேறிய கழக வழக்கறிஞர்! தஞ்சையில் அவரும், குடந்தையில் முத்து தனபால் அவர்களும், பட்டுக்கோட்டையில் வேணுகோபால் அவர்களும் (இயக்க) வழக்கறிஞர்களாக இருந்த கழகத்தின் அந்நாள் காவலர்கள்!

தஞ்சை நகர திராவிடர் கழகத் தலைவராகவும்,
திராவிடர் கழக மத்திய நிருவாகக் குழு உறுப்
பினராகவும் இருந்து செயல்பட்டவர்.

பின்பு “டிஸ்டிரிக்ட் முன்சீஃப்” என்ற பதவிக்கு தமிழ்நாடு சர்வீஸ் கமிஷனால்
தேர்வு செய்யப்பட்டு, படிப்படியாக வளர்ந்து,
மத்திய அரசின் சட்டத்துறையின் மேல்
அதிகாரியாகவும் திறம்படப் பணியாற்றி
அங்கு முத்திரைப் பதித்தவர்; அதன்பின்,
அவரை வருமான வரித்துறை மேல்முறை
யீட்டு நீதிபதியாக நியமிக்கப்பட்டார் (Member,
Income Tax Appillate Tribunal). அதன் பிறகு முதலமைச்சர் எம்.ஜி.ஆர். காலத்தில், இவர் திராவிட இயக்க முன்னோடி தந்தை பெரியார் அவர்களால் பெரிதும் மதிக்கப்பட்டவர் என்பதை அறிந்தே, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக (முதலில் கூடுதல் நீதிபதி, பிறகு நிரந்தர நீதிபதி) நியமனம் பெற்று, அப்பணியை மிகச் சிறப்பாக அணி செய்தவர்.

ஓய்வு பெற்ற பின்பும், மண்டைக்காடு கலவரத்தினையொட்டி நியமிக்கப்பட்ட நீதி விசாரணைக் கமிஷனின் தலைவராக இருந்து இவர் தந்த அறிவுரைகளும், பரிந்துரைகளும் மிகவும் நிலைத்த புகழைப் பெற்றவை.

ஓய்வு பெற்ற நிலையில், பெரியார் திடலுக்கும்,
நமக்கும் அவர் தோன்றாத் துணையாக, இருந்ததோடு, மதி உரைஞராக (Mentor) இருந்து, பல ஆக்கப்பூர்வ யோசனைகளை அளித்துப் பங்காற்றிய பெருந்தகையாளர்!

69 சதவிகித இடஒதுக்கீடு சட்டத்
திருத்தத்தினை 31-சி பிரிவின்கீழ் கொண்டு
வர, அதற்கான வரைவினைத் தயாரிக்க நமக்கு மிக மிக உதவிகரமாக இருந்த சட்ட வல்லுனர்!

சேத்துப்பட்டில் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு மரியாதை செலுத்தி இரங்கல் உரையாற்றி
திடலுக்கு வந்து அன்னை மணியம்மையார் மன்றத்தில் நடைபெற்ற அகில இந்திய பிற்படுத்தப்
பட்ட வகுப்பு சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் பங்கேற்றோம். கூட்டமைப்பின் சார்பில் பிற்படுத்தப்பட்டோரின் சமூக நீதிக்கான அம்சங்கள் அடங்கிய அறிக்கையினை நம்மிடம் கூட்டமைப்பின் தலைவரும் பொதுச்செயலாளரும் அளித்தனர். அன்று மாலை சென்னை மயிலாப்பூரில் கழக இளைஞரணியினர் அமைத்திருந்த பெரியார் படிப்பகத்தைத் திறந்து வைத்தோம்.

அகில இந்திய கட்டுநர் சங்கத்தின் திருச்சி மய்யம் சார்பில், தில்லை நகர் மக்கள் மன்றத்தில் நடைபெற்று வந்த கட்டிடப் பொருள் கண்காட்சியில் 26.12.2007 அன்று பங்கேற்றுப் பாராட்டினோம்.

அடுத்த நாள் (27.12.2007) காலை செங்கிப்பட்டி
அடுத்த பூதலூரில்  நடைபெற்ற  பெரியார்
நூற்றாண்டு கல்விவளாக ஓட்டுநர் விஜயகுமார்
-சுசீலா ஆகியோர் மண விழாவை நடத்தி வைத்துவிட்டு, அருகிலுள்ள சித்திரக்குடிக்குச் சென்று உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று
வந்த பெரியார் பெருந்தொண்டர் தங்கராசு அவர்களைச் சந்தித்து உடல்நலம் விசாரித்தோம்.

28.12.2007 அன்று மாலை தேவநேயப் பாவாணர் நூலகக் கட்டடத்தில் உலகத் தமிழர்
ஒப்புரவாளர் பேரவை சார்பில் நடைபெற்ற சிங்கப்பூர் பொன்.சுந்தரராசு எழுதிய “பொன். சுந்தரராசு படைப்புகள்”என்ற நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்றோம். நூலை, நிதி அமைச்சர் இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் வெளியிட, தொழிலதிபர் சிங்காரம் பெற்றுக்
கொண்டார். பின்னர் நாம் உரையாற்றினோம்.

மதுரை கோரிப்பாளையம் பள்ளி வாசல்
அருகில் 29.12.2007 அன்று மாலை திராவிடர்
கழக வழக்கறிஞர் அணி தலைவர் வழக்கறிஞர் கி.மகேந்திரன் தலைமையில் நடைபெற்ற சேது சமுத்திரத் திட்ட விளக்கப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினோம். இவ்விழாவில்
வாழ்வியல் சிந்தனை நான்காம் பாகம், சிங்கப்பூரில் தமிழர் தலைவர் ஆகிய நூல்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

02.01.2008 அன்று மலேசிய அரசின் மூத்த அமைச்சர் டத்தோ சாமிவேலு அவர்கள் பெரியார் திடலுக்கு வருகை தந்து நம்மைச் சந்தித்து உரையாடினார். கவிஞர்
கலி.பூங்குன்றன், வழக்கறிஞர் அருள்மொழி, வரியியல் அறிஞர் ச.இராசரத்தினம் ஆகியோர் உடன் இருந்தனர்.

04.01.2008 அன்று வைக்கம் போராட்டத்தின் 85ஆம் விழா 2008 முதல் 2011 வரை மூன்று ஆண்டுகளுக்கு கேரள மாநிலம் வைக்கத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. வைக்கம் சட்டமன்ற உறுப்பினர் கே.அஜீத் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) தலைமையில் கேரள தொ.மு.க. செயலாளர் அனில்குமார், தி.மு.க. மகளிரணிச் செயலாளர் டாக்டர் சாபிரா, வைக்கம் விழாக் குழுவின் பொருளாளர் கொச்சி மதுமோகன் ஆகியோர் சென்னை, பெரியார் திடலில் நம்மைச் சந்தித்து விழா பற்றி விவாதித்தனர். குழுவினருடன் திராவிட முன்னேற்றக் கழக இலக்கிய அணியின் மாநிலச் செயலாளர் திருவில்லிப்புத்தூர் ச.அமுதன், சென்னை மேனாள் மேயர் சா.கணேசன் ஆகியோரும் வந்திருந்தனர்.

எமது பவளவிழவை முன்னிட்டு, 06.01.2008 அன்று குடியாத்தத்தில் எமது எடைக்கு எடை நாணயங்களைக் கழகப் பொறுப்பாளர்கள் வழங்கினர்.

07.01.2008 அன்று தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் 11ஆம் ஆண்டு விழா (விடுதலை 08.01.2008) சென்னை பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் சிறப்பாக நடைபெற்றது.

முதல் நிகழ்ச்சியாக “தமிழன் இசை பறிக்கப்
பட்டது எப்படி?” என்ற தலைப்பில் மதுரை நா.மம்மது ராஜா குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.

வரியியல் அறிஞர் ச.இராஜரத்தினம் அவர்கள் நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தார்.

நா.மம்மது ராஜா அவர்களுக்கும், பேராசிரியர் குணசேகரன் அவர்களுக்கும் பெரியார் விருது வழங்கிப் பாராட்டினோம்.

பெரியார் வழி நிற்கும் திரைப்பட இயக்குநர் ஆர். சுந்தர்ராஜன் அவர்கள் கடவுள் மறுப்புக் கொள்கையை விளக்கிப் பேசினார்.

பார்ப்பனப் பாசிசத்தை அகற்ற பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகளைப் பரப்புவது ஒன்றே வழியென்று பகுத்தறிவுப் பாவலர் அறிவுமதி எடுத்துரைத்தார்.

பேராசிரியர் குணசேகரன் அவர்கள் தந்தை பெரியார் பேராசிரியர்களுக்கெல்லாம் பேராசிரியர் என்று பெருமை சிறக்கப் பேசினார்.

நிறைவாக, தமிழர் கலைகளை விளக்கி நாம் சிறப்புரையாற்றினோம்.

தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் இரண்டாம் நாள் நிகழ்வாக கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் நூற்றாண்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.

08.01.2008 அன்று மாலை 7 மணியளவில், பெரியார் திடல், ராதா மன்றத்தில் நிகழ்வு தொடங்கியது. கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்கள் வரவேற்புரையாற்றினார். பொருளாளர் கோ. சாமிதுரை அவர்கள் தலைமை வகித்தார்.

இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் அவர்கள் பெரியார் கொள்கைகள் தன் வாழ்நாளில் எப்படிப் பயனளித்தன என்று விளக்கிப் பேசினார்.

இயக்குநர் ராம்ஜி பாலன் நாங்களெல்லாம் இந்த அளவிற்கு உயர்ந்து நிற்பதற்குக் காரணம் பெரியார் ஊட்டிய உணர்வுகள்தான் என்று குறிப்பிட்டார்.

கலைவாணர் அவர்களின் மகன் என்.எஸ்.கே. நல்லதம்பி அவர்கள், பெரியார் திடல் தான் எங்களின் தாய் வீடு, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தான் எங்கள் வழிகாட்டி, நாங்கள் என்றென்றும் நன்றியுடன் இருப்போம் என்று தம் உணர்வுகளைப் பகிர்ந்தார்.

நடிகர் காகா இராதாகிருஷ்ணன் அவர்கள், பெரியார் கொள்கைகளைப் பரப்ப நான் எங்கு அழைத்தாலும் வந்து பிரச்சாரம் செய்வேன் என்று உறுதியளித்தார்.

நிகழ்வில் கலைவாணர் படத்தைத் திறந்து வைத்து அவர்களின் அரும்பணிகளை, சிறப்புகளை, திறத்தை, நற்குணங்களை விளக்கிப் பேசினோம். திரைத் துறையினர் பெரியார் கொள்கைகளைப் பரப்ப முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம்.

இயக்குநர் சா.செந்தாமரை, இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன், இயக்குநர் ராஜ்ஜி பாலன், என்.எஸ்.கே.நல்லதம்பி ஆகியோருக்குப் பொன்னாடை போர்த்திப் பாராட்டினோம்.

நினைவுகள் நீளும்…