Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

தோழர் வீரமணியின் சேவை… – தந்தை பெரியார்

ழக விஷயமாய் நான் நீண்ட நாளாகப் பெருங்கவலைப்பட்டுக் கொண்டு இருந்தேன். இதற்கென்றே இரு தோழரை வேண்டினேன். அவர்களில் ஒருவர் தோழர் ஆனைமலை நரசிம்மன் பி.ஏ. ஆவார். மற்றொருவர் தோழர் கடலூர் வீரமணி எம்.ஏ., பி.எல்., அவர்கள். இதில் தோழர் நரசிம்மன் அவர்கள். எனது வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு தனது எஸ்டேட்டை மக்களுக்கு ஒதுக்கிக் கொடுத்துவிட்டு, வீட்டை விட்டே வந்து விட்டார். அதனாலேயே அவரைக் கழக மத்திய கமிட்டிக்குத் தலைவராகத் தேர்ந்து எடுக்கலாம் என்று கருதி, முதலில் கழகப் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கச் செய்தேன். தோழர் வீரமணி அவர்
களைக் கேட்டுக் கொண்டபோது அவர் சென்னையில் வக்கீலாக தொழில் நடத்திக் கொண்டு கழக வேலையையும், பத்திரிகை வேலையையும் கவனித்துக் கொள்வதாகச் சொன்னார். அது எனக்கு
திருப்தி அளிக்கவில்லை. என்றாலும் அந்த அளவுக்கு ஆவது கிடைத்த அனுகூலத்தை விடக் கூடாது என்று கருதி அவரைக் கழக துணைப் பொதுக்காரிய
தரிசியாக தேர்ந்தெடுக்கச் செய்தேன்.

இந்த நிலையில் தோழர் நரசிம்மன் அவர்களுக்கு ஒரு சங்கடமான நிலை ஏற்பட்டது.
அதாவது அவர் எஸ்டேட்டை. குடும்ப நிருவாகத்தை, கவனித்து வந்த அவரது மூத்த மகன் – வயது சுமார் 25 உள்ள சங்கருக்கு
உடல் நோய்வாய்ப்பட்ட தோடு அது ஓர் அளவு மூளைத்தாக்குதலுக்கு ஆளாகிவிட்டதால், குடும்ப நிருவாகத்திற்கும் எஸ்டேட் கவனிப்புக்கும்
சிறிது காலத்திற்காவது அவர் (நரசிம்மன்) ஆனைமலையில் இருந்தாக வேண்டிய அவசியம் ஏற்பட்டு விட்டது. அதன் பயனாக இன்னும் சில நாளைக்கு அவரது முழு நேரத் தொண்டுக்கு இடமில்லாமல் போய் விட்டது.

இந்த நிலையில் தோழர் வீரமணி அவர்கள், நான் உள்பட பலர் வேண்டுகோளுக்கும், விருப் பத்திற்கும் இணங்க, கழகத்திற்கு முழு நேரத் தொண்டராய் இருக்கத் துணிந்து பத்திரிகைத் தொண்டையும் பிரச்சாரத் தொண்டையும் தன்னால் கூடிய அளவு ஏற்றுக் கொண்டு தொண்டாற்ற ஒப்புக் கொண்டு குடும்பத்துடன் சென்னைக்கே வந்து விட்டார்.

இது நமது கழகத்திற்கு கிடைக்க முடியாத ஒரு பெரும் நல்வாய்ப்பு என்றே கருதி
திரு.வீரமணி அவர்களை மனதார வரவேற்பதோடு கழகத் தோழர்களுக்கும் இந்த நற்செய்தியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வீரமணி அவர்கள் வக்கீல் தொழிலில் ஈடுபட்ட சிறிது நாட்களுக்குள் மாதம் 1-க்கு ரூ.200. ரூ.300 என்கிற கணக்கில் வருமானமும், அதிகாரிகளின் பாராட்டுதலும் மதிப்பும் பெறத்தக்க நிலையை அடைந்துவிட்டார்.

அவரது இயக்க சம்பந்தமில்லாத நண்பர் களும், வக்கீல் தோழர்களும் அவருக்கு எவ்வ ளவோ ஆசை ஏற்படும்படியான எதிர்காலத் தைப்பற்றி சொல்லித் தடுத்தும், அதை ஏற்காமல் துணிந்து முழு நேரப் பொதுத் தொண்டுக்கு இசைந்து முன்வந்தது குறித்து நான் அதிசயத்தோடு அவரைப் பாராட்டி வரவேற்கிறேன்.

மனைவி, குழந்தை குட்டி இல்லாத வாலிபப் பருவத்தில் பொதுத் தொண்டு உற்சாகம் பலருக்கு ஏற்படுவது இயற்கை. ஆனால் மனைவி, குழந்தை, குடும்பப் பொறுப்பு, நல்ல எதிர்காலம், தொழில் ஆதரவு ஆகிய இவை உள்ள நிலையிலும், நாளைக்கும் அவர் (வீரமணி) ஒப்புக் கொள்வதானால் (எம்.ஏ., பி.எல்.,) என்பதனாலும் பரீட்சையில் உயர்ந்த மதிப்பெண் வாங்கி இருக்கும் தகுதியாலும்) மாதம் ரூ.250-க்கு குறையாத சம்பளமுள்ள அரசாங்க அல்லது ஆசிரியர் பதவி அவருக்கு காத்திருந்து ஆசை காட்டிக் கொண்டிருக்கும் போதும், அவைகளைப்பற்றிய கவலையில்லாமல் முழு நேரப் பொதுத் தொண்டில் இறங்குவதென்றால் இது இயற்கையில் எப்படிப் பட்ட மனிதரிடமும் எளிதில் எதிர்பார்க்க முடி யாத விஷயமாகும்.

உண்மையைச் சொல்கிறேன். தோழர் வீரமணி இந்த முழு நேரத் தொண்டிற்கு இசையாதி
ருந்தால் தினசரி விடுதலையை நிறுத்தி வாரப் பத்திரிகையாக திருச்சியில் அல்லது ஈரோட்டில் நடத்த முடிவு செய்திருந்தேன்.

 – ஈ.வெ. ராமசாமி
(விடுதலை 10.8.1962)

«««

“வீரமணி அவர்கள் எம்.ஏ.,பி.எல்., பட்டம் பெற்றவர். நல்ல கெட்டிக்காரத் தன்மையும் புத்திக் கூர்மையும் உள்ளவர். அவர். எம்.ஏ., பி.எல். பாஸ் செய்து வக்கீல் தொழிலில் இறங்கியவுடன் மாதம் ரூ.300, ரூ.400 வரும்படி வரத்தக்க அளவுக்கு தொழில் வளர்ந்ததோடு கொஞ்ச காலத்திலேயே மாதம் ரூ.500, ரூ.1,000 தொழில் வளம் பெற்றுவரும் நிலையைக் கண்டவர். இந்த நிலையில் அவர் ஒரு சாதாரண ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவராகவும் இருந்து வந்தவர். இந்த நிலையில் சுயநலமில்லாது எவ்விதப் பொருள் ஊதியத்தையும் கருதாமல் பொதுத் தொண்டு செய்ய ஒருவர் வந்தார் என்றால், இதுபோல மற்றொருவர் – வந்தார் – வருகிறார் வரக்கூடும் என்று உவமை சொல்லக்கூடாத ஒரு மாபெரும் காரியம் என்றே சொல்லவேண்டும். அப்படிப்பட்ட ஒருவரை நாம் தக்கபடி பயன்படுத்திக் கொள்ளாவிட்டால் அது நம்முடைய அறியாமையாகவே முடியும் என்ற எண்ணத்தின் மீதே அவரை நம் இயக்கத் தலைமைப் பிரச்சாரகராகவும், நமது ‘விடுதலை’ ஆசிரியராகவும் பயன்படுத்திக் கொள்ள முன்வந்து, அவருடைய ஏகபோக ஆதிக்கத்தில் ‘விடுதலை’யை ஒப்படைத்து விட்டேன்

‘விடுதலை’ பத்திரிகையை நிறுத்தி விடாததற்கு இதுதான் காரணம்!

இனி ‘விடுதலை’க்கு உண்மையான பிரசுரகர்த்தா
வாகவும் ஆசிரியராகவும், வீரமணி அவர்கள் தான் இருந்து வருவார்.

எந்த நிலையில் வீரமணி அவர்கள் இந்தப் பொறுப்பை ஏற்கிறார் என்றால், ‘விடுதலை’யை நான் நிறுத்திவிடப் போவதை அறிந்த சிலர் ‘விடுதலை’ பத்திரிகை காரியாலயத்தையும் அச்சு இயந்திரங்களையும் மாதம் 1க்கு 1,000 ரூபாய் முதல் 1,500 ரூபாய் வரை வாடகைக்குக் கேட்டுக் கொண்டிருந்த நிலையில், அதை வாடகைக்குக் கொடுப்பதைவிட நிறுத்திவிடுவதே மேல் என்று நம்முடைய நண்பர்கள் எல்லோரும் நமக்கு வேண்டுகோளும் அறிவுரையும் விடுத்துக் கொண்டிருக்கும் நிலையில், இயக்க நலத்தையே குறியாகக் கொண்டு பொறுப்பேற்க முன்வந்தார்.

   – தந்தை பெரியார்
‘விடுதலை’, 6.6.1964

«««