‘நீங்கள் கொடுத்த நூல் அகதியாய் வசிக்கும் ஈழப் பெண் எழுதியது. காரில் சென்ற பொழுதே படித்துவிட்டேன்’ என்று கூறிய பொழுது எதற்காக அவ்வளவு ஆச்சரியம் அடைந்தேன் என்பது தெரியவில்லை. இது ஒன்றும் முதல் முறை அல்லவே. சிட்னி, பிரிஸ்பேன் என்று சுற்றிவிட்டு, லேசான குளிரில் கான்பரா விமான நிலையத்தில் சந்தித்த பொழுது, காலையில் கொடுத்த நூல் பற்றி, ஒரு சில மணி நேரத்தில் மீண்டும் சந்தித்த பொழுது ‘இது ஒரு சங்கி எழுதிய நூல்’ என்று சொல்லி ஆச்சரியப்பட வைத்தவர் தானே!
நூல்கள் மேல் எப்போதுமே ஆர்வம் அதிகம். நூல்களைத் தேடி வாசிப்பவர்களைக் கண்டால் ஓர் அன்யோன்யம் பிறக்கும். நின்று கொண்டே படிப்பவர்கள், நடந்து கொண்டே படிப்பவர்கள், பயணங்களில் படிப்பவர்கள் என்று பலரைக் கண்டு ஆச்சரியத்துடன் கூடிய பொறாமையுடன் பார்ப்பதுண்டு. ஆனால், அவர்களுக்கு எல்லாம் முத்தாய்ப்பாய், குறைந்தபட்ச ஓய்வுடன், தீராப் பணிசுமைக்கிடையில், புதிதாக ஒரு நூல் கையில் கிடைத்தால், அதை அடுத்து கிடைக்கும் சந்தர்ப்பத்திலேயே படித்துவிட வேண்டும் என்ற ஆர்வம் 93 வயது வரை இருப்பதெல்லாம், இந்தச் சமூகத்தின் மேல், நூல்களின் மேல் உள்ள காதலையும் தாண்டி வேறு என்னவாக இருந்து விட முடியும்!
அய்யா ஆஸ்திரேலியா வந்த சமயத்தில் மிக விரும்பி பார்க்க ஆசைப்பட்ட இடம், ஆஸ்திரேலிய தேசிய நூலகம். அங்கு அணி வகுத்திருந்த நூல்களில் ஒரு 5 நூல்களைப் படிக்க வேண்டும் என்று குறிப்பெடுத்து நூல்களில் ஒன்றாகிய ‘Chai Time at Cinnamon Gardens’தான் இந்த முறை அய்யாவைச் சந்தித்த பொழுது கொடுக்க நேர்ந்தது. அவரைச் சந்திக்கக் காத்திருந்த பொழுதே அவர் பணியில் தான் இருந்தார். தோழர் கொண்டு வந்த அறிக்கையைச் சரி பார்த்து கையொப்பம் இட்டுக்கொண்டிருந்தார். அவ்வளவு பணிகளுக்கு இடையிலும், அய்யா வேலையாக இருக்கிறார், இன்று காண முடியாது என்று ஒரு முறை கூட திருப்பி அனுப்பப்பட்டதேயில்லை. எப்போது சென்றாலும் அதே பூரிப்பு, அதே மரியாதை.
சென்ற முறை அய்யாவைச் சந்தித்த
பொழுது சற்று பெருமிதமான தருணம் என்று கூட சொல்லலாம். தொ. பரமசிவனின் ‘இந்து தேசியம்’ என்ற நூலின் ஆங்கில மொழி
பெயர்ப்பை, அய்யாவிடம் நேரடியாகக் கொடுக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இரண்டாகக்
கொடுங்கள் என்று கேட்டு வாங்கி, ஒன்றைத் திடல் நூலகத்திற்கு என் கண் எதிரே கொடுத்
ததைப் போல மீண்டும் ஒரு பெருமிதமான தருணம் வருமா என்று தெரியவில்லை. தந்தை பெரியார் நூல்கள் இருக்கும் அறையில், பெரியாரின் அறிவுப் பெட்டகத்தில், என் பெயர்
பொறித்த ஒரு நூல் இடம் பெற்றிருக்கிறது என்பதே ‘அறிவிற்கு’ திடல் கொடுக்கும் மரியாதையைப் புரிந்து கொள்ளலாம்.
அய்யா அவர்கள் ஆஸ்திரேலியா வந்திருந்த சமயம், பெரியார் – அம்பேத்கர் சிந்தனை வட்டத் தோழர்கள் அனைவர்க்கும் முதல் மரியாதை செய்தார். ஆனால், அவர்கள் யாருக்கும் கிடைக்காத ஒரு பரிசை எனக்கு மட்டுமே கொடுத்தார். தான் படித்து, குறிப்பெடுத்து, மேடையில் மேற்கோள் காட்டுவதற்காக வைத்திருந்த ‘அசல் மனுதர்ம சாஸ்திரம்’ என்ற நூலினை என்னிடம் கொடுத்து ‘உங்களைப் போன்ற பெண்கள் தான் இதைப் படித்து மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும்’ என்றார்.
நூல் முழுக்க அடிக்கோடிட்ட வாக்கியங்
களும், முக்கியமான பக்கங்கள் மடக்கி வைத்திருக்கப்பட்டதும், எவை எவை முக்கியமானவை என்பதை உணர்த்தின. எவ்வளவு பெரிய பணியை என்னிடம் கொடுத்திருக்கிறார்! எத்தனை பெயருக்கு இந்த வாய்ப்பு கிடைத்து விடும்!!
இயக்கத்தில் உள்ள பெண்கள் பலரும் அய்யாவை அண்ணன், அப்பா என்றெல்லாம் குறிப்பிடுவதாகப் படித்ததுண்டு. அய்யாவாக வந்து இரண்டு தினங்களில் ஊர் திரும்பும் பொழுது தாத்தாவைப் பிரியும் சோகத்தை ஏற்படுத்தியது, தமிழ்நாட்டின் ஆணிவேர்
அரசியலின் அடிச்சுவடி
யாய் இருக்கும் ஒரு மாபெரும் இயக்கத்தின் தலைவனாக இருப்பதினால் மட்டுமில்லை. இயக்கத்தில் இருக்கும் தோழர்
களை, குறிப்பாக பெண்களை, தன் அரசியல் குடும்பமாய் பார்க்கும் அய்யாவை ‘ஆசிரியர்’ என்று அழைப்பதில்தான் நிறைவடைகிறது.
அய்யாவின் பணிகள் தொடர்வது, தமிழ்நாட்டைத் தாண்டி, கடல் கடந்து வாழும் என் போன்ற பெண்களுக்கும் முக்கியத் தேவை!
இது அய்யாவின் பிறந்தநாள் இல்லை; ஒரு பல்கலைக்கழகத்தின் பிறந்தநாள்!! ¦


