டிசம்பர் 2 – சுயமரியாதை நாள். திராவிடர் கழகத் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் பிறந்த நாள். உண்மை வாசகர்கள் அனைவருக்கும் அய்யா ஆசிரியர் பிறந்த நாள் வாழ்த்துகள்.
இந்த 02.12.2025 அன்று அய்யா ஆசிரியர் அவர்களுக்கு 92 வயது முடிந்து 93 வயது ஆரம்பமாகிறது. பலருக்கும் இருக்கும் வியப்பு போலவே அய்யா ஆசிரியர் அவர்களின் பணியும், உரைகளும் மிகப்பெரிய வியப்பை எனக்கும் தருகின்றது. சுறுசுறுப்பாக இயங்கும் பலர் 60 வயதில் அரசுப்பணி ஓய்வு பெற்றவுடன் சோர்வடைந்து வீட்டுக்குள் முடங்கி விடுவதைப் பார்க்கின்றோம். இன்னும் கேட்டால் அவர்கள், எங்கள் காலத்தில் அப்படி இருந்தது, இப்படி இருந்தது என்று புலம்புவதைப் பார்க்கின்றோம். ஆனால், 10 வயதில் இந்த இயக்கத்தில் பேச்சாளராக, நாற்காலியில் ஏறிப் பேசிய காலம் முதல் இன்று வரை அய்யா ஆசிரியர் அவர்களின் உரையில் அப்படி ஓர் உற்சாகமும் தீப்பொறியும் இருக்கிறது.. அண்மையில் ‘ஆஸ்திரேலியாவில் பெரியார்’- பெரியார் உலக மயம்! உலகம் பெரியார் மயம்!!’ என்னும் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கக்கூடிய ஒரு பேட்டி மிகப்பெரும் விழிப்புணர்வைக் கொடுக்கும் பேட்டி. அந்தப் பேட்டியில் இந்த 83 ஆண்டு காலப் பொதுவாழ்வில், தன்னுடைய வாழ்க்கையின் சிறந்த பகுதி எது? என்பது பற்றிய விளக்கத்தைக் கொடுத்திருக்கிறார்.
“கடுமையான நெருக்கடி காலத்தின் போது மிசா கைதியாகச் சிறைச்சாலையில் இருந்திருக்கின்றேன். அங்கே அடிபட்டு இருக்கிறேன். நாங்கள் பார்த்த பார்வையே வேறு. நிறைய தாக்கங்கள் எல்லாம் இருந்தன. அதில் என்ன லாபம் என்று பார்த்தால்,நீங்கள் கேட்டது போன்று அமெரிக்காவிலும் ஒருவர் கேள்வி கேட்டார் – ‘‘என்னுடைய வாழ்க்கையின் சிறந்த பகுதி உங்களுக்குப் ‘பெஸ்ட் பார்ட் ஆஃப் யுவர் லைஃப் எது’ ’’ என்று. மிசா காலம் – அடிபட்ட காலம்தான் ‘பெஸ்ட் பார்ட் ஆஃப் லைஃப்’ என்று சொன்னேன். சிறைச் சாலையில்தான் எங்களை எவ்வளவு மோசமாக நடத்த முடியுமோ அந்த அளவிற்கு நடத்தினார்கள். உணவுகளில் கலப்படம். எட்டடிக் கொட்டடியில் எட்டுப் பேரை அடைத்தார்கள். வெளியில் விட மாட்டார்கள். அதை ஏன் என்னுடைய வாழ்க்கையின் சிறந்த பகுதி என்று நான் சொல்கிறேன் என்றால், இனிமேல் எனக்குக் கஷ்டம் ஏற்பட்டால் அதைவிடக் கீழே போக முடியாது. இது போன்ற வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்காது. மூன்று மாத காலத்திற்குப் பிறகு நிலைமை மாறியது. புத்தகங்களைப் படிப்பது எழுதுவது போன்ற செயல்களைச் செய்தோம். ஆகவேதான், நம்முடைய நோக்கு அதனைத் தீர்மானிப்பது தான் போக்கு.” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இந்தப் பேட்டியைப் படிப்பதற்கு முன் என்னிடம், ‘உங்கள் வாழ்க்கையின் சிறந்த பகுதி எது?’ என்று கேட்டால், சிறந்த பணிக்காக விருது பெற்ற நிகழ்வு,முனைவர் பட்டம் பெற்ற நிகழ்வு என்று சொல்லியிருப்பேன் அல்லது வேறு ஏதேனும் சொல்லியிருப்பேன். ஆனால், தன்னுடைய வாழ்க்கையின் மிக மோசமான பகுதியை, தன்னுடைய வாழ்க்கையின் சிறந்த பகுதி என்று ஆசிரியர் அவர்கள் சொல்வதற்கான காரணத்தை அவரே கூறியிருக்கிறார்.’ இனி மேல் அவருக்கு ஒரு கஷ்டம் என்று வந்தால் அது, மிசா காலத்துக் கொடுமையை விடக் கீழே போகாது’ என்று.
அறிஞர் அண்ணா அவர்கள், தன்னுடைய வசந்த காலம் எது என்று கேட்டபோது’தந்தை பெரியாரோடு இணைந்து திராவிடர் கழகப் பிரச்சாரம் செய்த காலங்கள்’ என்று குறிப்பிட்டார். ஒரு குறிப்பிட்ட காலத்தில் அறிஞர் அண்ணா அவர்கள் தந்தை பெரியாரை விட்டுப் பிரிந்து விட்டார். 1949இல் பிரிந்து பின்பு 1967இல்தான் தந்தை பெரியாரோடு ஒன்று சேருகின்றார். அப்படி இணைந்த காலத்தில் தன்னுடைய வசந்த காலம் என்று தந்தை பெரியாரோடு 18 ஆண்டுகளுக்கு முன்பு ஏறத்தாழ 15 ஆண்டுகாலம் தந்தை பெரியாரோடு இணைந்து பணியாற்றிய காலத்தைத் தன்னுடைய வசந்த காலம் என்று குறிப்பிட்டார்.
அய்யா ஆசிரியர் அவர்களைப் பொறுத்த அளவில் தந்தை பெரியாரோடு இணைந்து கழகப்பணி ஆற்ற ஆரம்பித்தபிறகு,ஆசிரியர் அவர்களின் வாழ்நாள் காலம் எல்லாம் தந்தை பெரியாரின் தொண்டராக அவரின் கட்டளைகளை ஏற்றுப் பணியாற்றிய காலம்தான் – தந்தை பெரியாருக்குப்பின் தந்தை பெரியாரின் கொள்கைகளைப் பரப்பும் காலம்தான் அவரின் வாழ்க்கைக் காலம். எனவே, அறிஞர் அண்ணாவைப் போல் தந்தை பெரியாரோடு இருந்த காலம், இல்லாத காலம் என்று ஒன்று இல்லாத காரணத்தால் அய்யா ஆசிரியர் அவர்கள் அப்படிக் குறிப்பிடவில்லை. ஆனால், தன் வாழ்க்கையில் மனதால்,உடலால் மிக அதிகமான வலியை அனுபவித்த காலத்தை, மிசா காலத்தைத் தன்னுடைய வாழ்க்கையின் சிறந்த பகுதி என்று குறிப்பிட்டிருக்கிறார். எண்ணி,எண்ணி வியக்கும் பதிலாக இந்தப் பதில் இருக்கிறது.
எனக்கு 61 வயதாகிறது. நான் உடலால் மிகவும் துன்பப்பட்ட காலம் எது என்று கேட்டால், எனக்கு இருதய அறுவை சிகிச்சை நடந்த காலம். 2015இல் எனக்கு அறுவை சிகிச்சை முடிந்து ஒரு மாத காலம் உடல்வலி மிக அதிகமாக இருந்தது. அதனால் மனவலியும் இருந்தது. அய்யா ஆசிரியர் அவர்களின் கூற்றுப்படி பார்த்தால் எனது வாழ்க்கையின் சிறந்த பகுதி எது என்று கேட்டால் மேற்கண்ட பகுதியாகும். ஏனெனில், அப்படிப்பட்ட துன்பம் மீண்டும் வருவதற்கு வாய்ப்பில்லை.இப்படி ஒவ்வொருவரும் தங்களுடைய வாழ்க்கையின் சிறந்த பகுதியாகத் தாங்கள் மிகவும் துன்பப்பட்ட பகுதியைத்தான் எடுத்துக்கொள்ளவேண்டும் என்பது மிகச்சிறந்த நேர்மறைச் சிந்தனையாகத் தோன்றுகிறது. .
நெருக்கடி நிலை காலத்தினைப் பற்றி அய்யா ஆசிரியர் அவர்கள் இன்னொரு இடத்தில் ‘உண்மையான தொண்டர்களை,நண்பர்களைப் புரிந்து கொள்ள, அறிந்து கொள்ள நெருக்கடி
நிலை காலம் உதவியது’ என்று குறிப்பிட்டிருப்
பார். உண்மைதான். உண்மையானவர்கள் இயக்கத்திற்காக நின்றார்கள்; ஏதோ ஒன்றை எதிர்பார்த்து இருந்தவர்கள்,வந்தவர்கள் எல்லாம் நெருக்கடி நிலை காலத்தில் காணாமல் போய்விட்டார்கள் என்ற எதார்த்தத்தைக் கூறி, மிக மோசமான காலத்தில் கூடச் சில நல்லவையும் நிகழும் என்று அய்யா ஆசிரியரின் கூற்றின் மூலம் அறிய முடிகிறது.
என்னுடைய வாழ்க்கையே திறந்த புத்தகம் என்றார் ‘சத்தியசோதனையில்’ அண்ணல் காந்தியடிகள். தன்னுடைய வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை எல்லாம் ‘அய்யாவின் அடிச்சுவட்டில்’ என்ற தலைப்பில் தொடர்ச்சியாக அய்யா ஆசிரியர் அவர்கள் கொடுத்துக்கொண்டிருக்கிறார்.இயக்க வாழ்க்கையே என் வாழ்க்கை, தனியாக எனக்கு வாழ்க்கை என்று ஒன்று இல்லை என்று நம்மை வழி நடத்தும் அய்யா ஆசிரியர் இட்ட பணிகளைச் செய்வது, நிறைவேற்றுவது ஒன்றே நமது வாழ்க்கையாக அமையட்டும். ¦


