Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

திராவிடர் திசைகாட்டி! திருநிறை ஊருணி! ஆசிரியர் கி.வீரமணி வாழ்க! வாழ்க!! – மஞ்சை வசந்தன்

பெரியாரின் சரியான வாரிசு!  வியப்பின் மறுபெயர்! திராவிடர் திசைகாட்டி! திராவிடர் கருவூலம்! தமிழர்களின் காப்பரண்! தகைசால் தமிழர் என்று இப்படி எத்தனையோ பெருமைகளுக்கு உரியவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

இவை எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல் வள்ளுவர் வரையறுத்த,

“ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்

பேரறி வாளன் திரு”

என்னும் குறளுக்கு இலக்கணமாகவும் திகழ்கிறார் என்பது சிறப்பினும் சிறப்பு! இப்படிப்பட்ட சிறப்பிற்குரியவர்கள் இவ்வுலகில் அரிதினும் அரிது. காரணம், இதற்கு அளவற்ற உழைப்பும், அயராத தேடலும், ஆழ்ந்த அறிவும், தெளிவும், அதைப் பிறருக்கு வழங்கும் ஆற்றலும் வேண்டும். அதற்குப் படிப்பாற்றல், படைப்பாற்றல், பேச்சாற்றல், எழுத்தாற்றல், ஆய்வுத் திறன், அர்ப்பணிப்பு உள்ளம் வேண்டும். இவை அனைத்தும் ஒருங்கு சேரப் பெற்ற உயர்ந்த ஆற்றலாளர் இவர் என்பதால் இக்குறளுக்கு இலக்கணமாகும் உயர் தகுதியைப் பெறுகிறார்.

வள்ளுவரின் மேற்கண்ட குறள் கூறுவதைப் பொருத்திப் பார்ப்பின் இவ்வுண்மையை அறியலாம்.

ஊர்ப்பகுதியில் ஊருணி என்று ஒரு நீர்நிலை இருக்கும். அதற்கு ஊருணி என்று ஏன் பெயர் என்றால் ஊரின் பல இடங்களிலும் பொழியும் மழை நீர் ஓடிவந்து அந்த நீர் நிரம்பும் பள்ளத்தில் ஒன்று சேரும். ஊரின் நீரையெல்லாம் உள்வாங்கி நிற்பதால் அது ஊருணி என்று அழைக்கப்பட்டது.

ஆண்டு முழுவதும் நீரைச் சிறுகச் சிறுகத் திரட்டி தன்னுள் சேர்த்து வைத்துக்கொள்ளும் ஊருணி ஆண்டு முழுவதும் அம்மக்களுக்கு நீரை வழங்கிக் கொண்டிருக்கும்.

பேரறிவாளனின் அறிவும் அப்படிப்பட்டதே! வாழ்நாளெல்லாம் பல வகையிலும் அறிவைத்
திரட்டி தன்னுள் வைத்துள்ள பேரறிவாளன் தன்னிடம் உள்ள பல்துறை அறிவை மக்களுக்குக்
காலமெல்லாம் வழங்கிக்கொண்டிருப்பான்.

ஊருணி நீர் நிலையானது எப்படி சிறுகச் சிறுகத் தன்னுள் சேர்த்த நீரை மக்களுக்கு வழங்குகிறதோ, அப்படி பேரறிவாளன் சிறுகச் சிறுகச் சேர்த்த தன் அறிவை மக்களுக்கு வழங்குவான். எனவே, பேரறிவாளனின் அறிவு என்பது ஊருணி நீர் போன்றது என்றார்.

அந்த ஊருணிக்கு மிகச்சரியான எடுத்துக்
காட்டு ஆசிரியர் அய்யா கி.வீரமணி அவர்கள்.

ஊருணி நீரை மெல்ல மெல்லச் சேர்ப்பது போல, ஆசிரியர்  பள்ளிப் பருவம் முதற்கொண்டே பல்துறை அறிவைத் தம் வாழ்நாளெல்லாம் சேர்த்து வருகிறார். இங்கு திரு என்பது அறிவைக் குறிக்கும். அப்படி தாம் சேர்த்த அறிவை இந்த மானுடம் பயன் பெற எழுத்தாலும், பேச்சாலும் வழங்கி வருகிறார். அவர் வாழ்நாளெல்லாம் படித்த  பல்துறை சார்ந்த நூல்கள் ஆயிரமாயிரம். அப்படி அந்த நூல்களின் வழிப்பெற்ற கருத்துகளை “வாழ்வியல் சிந்தனைகள்” என்ற கட்டுரைத் தொகுப்புகளாய் மக்களுக்குத் தொடர்ந்து வழங்கி வருகிறார். அந்த வாழ்வியல் சிந்தனைகளின்மூலம் பகுத்தறிவு, தன்மானம், சமூகநீதி, மருத்துவம், சட்டம், சமூகவியல், உளவியல், அரசியல், கலை, பண்பாடு, வரலாறு, புவியியல், அறிவியல், நிருவாக இயல், தத்துவவியல், தர்க்கவியல், புராணம், இதிகாசம் என்று பல்துறை சார்ந்த அறிவையும் அவர் மக்களுக்கு வழங்கி வருகிறார். எனவே அவரை, “திரு நிறை ஊருணி” என்று அழைப்பது சாலப் பொருந்தும்.

பத்து வயதில் முத்திரை பதித்தவர்

1943ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27ஆம் தேதி, கடலூர் பழைய பட்டினத்தில், செட்டிக்கோயில் திடலில், அண்ணாவின் ‘திராவிட நாடு’ இதழுக்கு நன்கொடை திரட்டியளிக்கும் நிகழ்வில் 10 வயதுச் சிறுவனான இவரை மேடையில் மேஜைமீது ஏற்றி முதன்முதலாகப் பேசச் செய்தார் அவரது ஆசிரியர் திராவிடமணி அவர்கள். அப்போது “தட்டுத் தடங்கலின்றிச் சரளமாக, பார்ப்பன ஆதிக்கத்தையும், ஏமாற்றையும், புராணப் புளுகுகளையும், ஆபாசங்களையும், கடவுள்களையும் கிழி கிழியென்று கிழிப்பதை வாய்பிளந்துகொண்டு நானும் பார்த்தேன் – கேட்டேன்!” என்று எழுத்தாளர் ஜெயகாந்தன் வியந்து பாராட்டியுள்ளார் என்றால் அது வியப்புக்குரிய சிறப்பல்லவா?

11.06.1944இல் கடலூர் மாலுமியார் பேட்டையில் காவேரிப்பட்டினம் மாரிமுத்து
புதல்வி ஞானாம்பாளுக்கும், மாலுமியார்பேட்டை கோவிந்தசாமி புதல்வன் சின்னத்தம்பிக்கும் நடை
பெற்ற மணவிழாவில் பத்தரை வயதுச் சிறுவனாக இருந்த நிலையில் கி.வீரமணி உரை
யாற்றினார். இதை 17.06.1944 ‘குடிஅரசு’ ஏடு தெரிவிக்கிறது.

பேசுவதற்குப் பெரியாரே அழைத்தார்!

நாமக்கல் அருகில் பொட்டிரெட்டிப் பட்டியில்
நடைபெற்ற கூட்டத்தில்
கலந்துகொள்ளப் புறப்பட்ட பெரியாரை வழியனுப்ப மாணவர்களோடு நின்றபோது, “நீ கூட்டத்திற்கு வருகிறாயா?’’ என்று வீரமணியைப் பெரியார் அழைத்தார். வீரமணிக்கு தாங்கமுடியாத மகிழ்ச்சி! பெரியாரே அழைத்த பெருவியப்பில் திக்குமுக்காடினார். ஒருவாறு சமாளித்துக்கொண்டு காரில் ஏறி முன்பகுதியில் அமர்ந்து கொண்டார். நாமக்கல் கூட்டத்தில் 10 நிமிடங்கள் பேசினார்.

 பதினொரு வயதில் பொதுக் கூட்டத்திற்குத் தலைமை!

17.09.1944இல் நாகை வெளிப்பாளையம் அவுரித் திடலில் நடைபெற்ற தந்தை பெரியாரின் 66ஆம் பிறந்த நாள் விழாவில் 11 வயது நிரம்பாத சிறுவன் வீரமணி கலந்துகொண்டு முக்கால் மணிநேரம் உரையாற்றினார். 27.08.1944இல் நீதிக்கட்சி திராவிடர் கழகமாகப் பெயர் மாற்றப்பட்ட சேலம் மாநாட்டில் 15 நிமிடங்கள் நாற்காலி மீது நின்று பேசினார். வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த மாநாட்டில் 11 வயதுச் சிறுவன் பேசியது உலகில் கேட்டறியாத வியப்பிற்குரிய செயலாகும்!

பன்னிரு வயதில்
மாநாட்டுக் கொடியேற்றினார்!

06.01.1946இல் திருத்துறைப்பூண்டியில் இரண்டு மாநாடுகள். காலை 8 மணி முதல் பகல் 1 மணி வரை திராவிடர் மாணவர் மாநாடும் பகல் 2 மணி முதல் இரவு 10 மணி வரை கருஞ்சட்டைப் படை மாநாடும் நடைபெற்றன. இதில் முதல் நிகழ்வான திராவிடர் மாணவர் மாநாட்டின் தொடக்கமாக மாநாட்டுக் கொடியை ஏற்றிவைத்து உணர்ச்சியுரையாற்றினார் 12 வயதுச் சிறுவனான வீரமணி.

12 வயதில் மாநாட்டில் பேசும் வாய்ப்பே யாருக்கும் கிடைக்காது. ஆனால், மாநாட்டின் முக்கிய நிகழ்வான கொடியேற்றும் பொறுப்பைச் செய்த ஒரே ‘பகுத்தறிவுச் சிறுவன் வீரமணி’ என்பது வியப்பிற்குரிய செய்தியாகும்.

பதினான்காம் வயதில் படத்திறப்பாளர்!

21.09.1947இல் மதுரையில் பெரியார் பிறந்த நாள் விழா நாடார் வித்தியாசாலைத் தெருவில் மாலை 6 மணிக்கு படத் திறப்பு விழா நடைபெற்றது. அந்நிகழ்வில் பெரியாரின் படத்தைத் திறந்து வைக்கும் பெரும் பொறுப்பு. பதினான்கு வயதுச் சிறுவன் வீரமணிக்கு அளிக்கப்பட்டது. எத்தனையோ முதுபெரும் தலைவர்கள், அறிஞர்கள், களவீரர்கள் மத்தியில், 14 வயதுச் சிறுவன் அழைக்கப்பட்டு, அவரைக் கொண்டு படம் திறக்கப்பட்டது என்பது வியப்பிற்குரிய பதிவல்லவா?

கி.வீரமணி பேச்சை வியந்து
கேட்ட ஆசிரியர்கள்

பள்ளிப் படிப்பு படிக்கும் போதே, இவரது பள்ளியிலே தந்தை பெரியாரை அழைத்து நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் (கடலூரில்), இவர்                                                                              பேச்சைக் கூட்டத்தோடு நின்று கேட்ட ஆசிரியர்கள் பெரிதும் வியந்தனர்; ரசித்துக் கேட்டனர். அவ்வாறு வியந்து ரசித்துக் கேட்டவர்களில் பார்ப்பன ஆசிரியர்களும் உண்டு என்பது வியப்பிலும் வியப்பாகும்!

24 வயதில் கலைஞர் நடத்திய மாநாட்டில் 14 வயது கி.வீரமணி சிறப்புரை!

திருவாரூரில் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள், அரங்கண்ணல் உள்ளிட்ட நண்பர்கள் துணையுடன் தென் மண்டலத் திராவிட மாணவர் மாநாட்டினை 01.05.1948இல் நடத்தினார்.
அப்போது கலைஞருக்கு வயது 24.

அந்த மாநாட்டில், “போர்க்களம் நோக்கி!” என்ற தலைப்பில் சிறப்புரையாற்ற அழைக்கப்பட்டவர் கி.வீரமணி. அப்போது அவருக்கு வயது 14.

இளம் வயதிலேயே சாதித்தவரும் அறிவும், ஆற்றலும், துணிவும், கொள்கைப் பிடிப்பும், தன்மான உணர்வும், சமதர்ம வேட்கையும் ஒருசேரக் கொண்டவரான கலைஞர் அவர்களே, தான் ஏற்பாடு செய்த மாநாட்டில், 14 வயதுச் சிறுவன் வீரமணியைச் சிறப்புரை ஆற்றச் செய்தார் என்றால் இது எப்படிப்பட்ட வியப்புக்குரிய நிகழ்வு!

அது மட்டுமல்ல, 14 வயதுச் சிறுவன் வீரமணிக்கு இரயில் நிலையத்திலிருந்து மாநாட்டுப் பந்தல்வரை மேளதாளம் முழங்க, வாழ்த்தொலியோடு வரவேற்பு. உலகில் இவரைத் தவிர இப்பெருமை வாய்த்ததில்லை வேறு யாருக்கும்!

தடம் பிறழாத் தலைவர்

தொடக்கப்பள்ளியில் இவர் சேர்க்கப்பட்ட
போது இவருடைய ஆசிரியர் ஆ.திராவிடமணி அவர்களின் தொடர்பால், பயிற்சியால் பெரியாரின் கொள்கையின்பால் ஈர்க்கப்பட்டு, பத்து வயது முதலே பெரியார் தொண்டராய் இயக்கப் பணியில் ஈடுபட்டார். இன்றைக்கு அவருக்கு வயது 93. சற்றேறக்குறைய 83 ஆண்டுகளாய் பெரியாரின் கொள்கையிலிருந்து கிஞ்சிற்றும் தடம் பிறழாமல் தன் இயக்கப் பணிகள் மற்றும் வாழ்க்கை இரண்டையும் நடத்தி வருகிறார். அவரது பேச்சு, மூச்சு, எழுத்து, சிந்தனை செயல் எல்லாம் ‘பெரியார்’ ‘பெரியார்’ என்பதுதான். ‘சொந்தப் புத்தி வேண்டாம், பெரியார் தந்த புத்தி போதும்’ என்கின்ற அளவிற்கு அவர் பெரியார் வழியில் வாழ்பவர். சொந்த புத்திக்குச் சபலங்கள் உண்டு; பெரியார் தந்த புத்திக்கு அது இல்லை என்று தன் நிலைப்பாட்டிற்கான காரணத்தையும் விளக்கியிருக்கிறார். இப்படி வாழ்நாள் முழுவதும்
கொண்ட கொள்கையில் உறுதியாய் இருந்து, ஒரே தலைவர், ஒரே கொள்கையென்று வாழ்ந்து
வருபவர்கள் உலகில் அரிதினும் அரிது. அவர் ஆதரிக்கின்ற அரசியல் கட்சிகள் மாறி வருவதற்கு கொள்கைதான் காரணமே தவிர, சுயநல நோக்கு என்றைக்கும் இருந்ததில்லை.

உலகில் ஒப்பிலா பேச்சாளர்!

பத்து வயதில் தொடங்கிய அவரது மேடைப்
பேச்சு, 93வயது வரையில் ஒரு நாளும் ஓயாது
தொடர்ந்து கொண்டிருக்கிறது. தந்தை பெரியாரு
டன் சேர்ந்தும், தனியாகவும் அவர் ஆயிரக்கணக்
கான நிகழ்வுகளில் பேசி வந்திருக்கிறார். இயக்கப் பொது மேடைகள், அரசியல் கூட்டங்கள்,
திருமணங்கள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள்,
கருத்தரங்குகள், மாநாடுகள், அயல்நாட்டு நிகழ்வுகள் என்று பலவற்றில் பல்துறை சார்ந்த
கருத்துகளை ஆழமாக எடுத்து வைத்து வருகிறார்.
அவருடைய பேச்சுகள் அடுக்கடுக்கான ஆதாரங்
களுடன் அமைவது தனிச்சிறப்பு வாய்ந்தவை. அவரது பேச்சுகளைத் தொடர்ந்து ஒலிபரப்பினால்
அது மாதக் கணக்கில் ஒலிபரப்பாகும். அந்த
அளவிற்கு உலக சாதனைக்குரிய பேச்சு! எனவே,
உலக அளவில் தலைசிறந்த பேச்சாளர்களில் இவர் குறிப்பிடத்தக்கவர் என்ற பெருமையைப் பெற்றவர்.

பத்து வயதிலே இவர் பேச்சைக் கேட்டு அண்ணா அவர்களே பாராட்டியது வரலாற்றுச் சிறப்புடையது.

எழுத்தாளர்:

பேச்சாளர் என்ற வகையில் உலக சாதனைக்
குரியவர் என்பது போலவே, எழுத்தாளராயும் உயர்ந்து, சிறந்து விளங்குகிறார். பல நூல்களைத் தொடர்ந்து எழுதி வருகிறார். நாம் முன்னர் குறிப்பிட்ட அவரின் வாழ்வியல் சிந்தனைகள் பல்துறைச் சிந்தனைகளின் உள்ளடக்கம். இதுவரை 19 தொகுப்புகள் வெளிவந்துள்ளன. தொடர்ந்து அதை எழுதுவார். ‘விடுதலை’, ‘உண்மை’, ‘Modern Rationalist’ என்று இதழ்களிலும் அரிய கட்டுரைகளை எழுதி வருகிறார். ‘விடுதலை’யில் வரும் அவரது அறிக்கைகள் காலக் கண்ணாடியாக, வரலாற்றுக் கருவூலங்களாகத் திகழ்பவை.

பத்திரிகையாளர்:

தந்தை பெரியாரின் கட்டளையை ஏற்று ‘விடுதலை’ ஆசிரியராகப் பணியேற்ற நாள்முதல் இன்றுவரை 60 ஆண்டுகளுக்கு மேலாக அதன் ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். ‘உண்மை’, ‘Modern Rationalist’, ‘பெரியார் பிஞ்சு’ இதழ்களின் ஆசிரியராகவும் சிறப்பாகப் பணியாற்றி வருகிறார். ஒரு பத்திரிகையின் ஆசிரியராக 60 ஆண்டுகளுக்கும் மேலாக ஒருவர் பணியாற்றுவது உலக சாதனையாகப் போற்றப்படுகிறது. அதுவும் உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடான ’விடுதலை’ இதழுக்கு 60 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியராகப் பணியாற்றி வருவதென்பது வியப்பிற்குரியதாகும், செயற்கரியதாகும்.

ஆய்வாளர்:

பேச்சாளர், எழுத்தாளர், பத்திரிகையாளர் என்பதோடு, சிறந்த ஆய்வாளராகவும் திகழ்கிறார்.
பகவத் கீதையை ஆய்வு செய்து ‘கீதையின் மறுபக்கம்’ என்ற அரிய ஆய்வு நூலை எழுதியுள்ளார். 3 லட்சம் பிரதிகளுக்கு மேல் 30 பதிப்புகளாக இந்த ஆய்வு நூல் வெளிவந்து விற்பனையில் சாதனை படைத்துள்ளது.

கல்வியாளர்:

படிக்கும்போதே பள்ளிப் பருவத்தில் தன் படிப்பாற்றலுக்காக கல்வி அலுவலரிடம் பாராட்டும் கல்வி உதவித் தொகையும் பெற்றார். பல்கலைக்கழகத்தில் படித்தபோது தன் கல்வித் திறமைக்காக, உயர் மதிப்பெண்ணுக்காக தங்க மெடல் பெற்றார். அவர் பயின்ற ஆனர்ஸ் தேர்வில் மூன்று பரிசுகள்தான் உண்டு. அந்த மூன்று பரிசுகளையும் இவரே பெற்றார் என்பது பலராலும் இன்றளவும் வியந்து பாராட்டப்படும் சிறப்புக்குரியதாகும்.

சமூக நீதி காப்பாளர்:

பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டு உரிமை பெற அவர்களின் ஆண்டு வருமான வரம்பு ரூ.9,000க்குள் இருக்க வேண்டும் என்று
எம்.ஜி.ஆர். தமிழ்நாடு முதலமைச்சராக இருந்தபோது கொண்டுவந்த அரசாணைக்கு எதிராகக் கடும் கண்டனங்களைத் தெரிவித்து, பெரும் போராட்டங்களையும் நடத்தினார்.
எம்.ஜி.ஆர். முன்னிலையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் வருமான வரம்பு கூடாது என்பதைத் தெளிவாக விளக்கினார். அதன்மூலம் தெளிவு பெற்று, தன் தவற்றை உணர்ந்த
எம்.ஜி.ஆர், ரூபாய் 9 ஆயிரம் வருமான வரம்பை நீக்கினார்; பிற்படுத்தப்பட்டோரின் இடஒதுக்கீட்டை 50% ஆக உயர்த்தினார்.

மண்டல் குழுப் பரிந்துரையை அமல்படுத்த மாநாடுகள், போராட்டங்கள் நடத்தி, மத்திய அரசுக்கு அழுத்தங்கொடுத்து அதை நடைமுறைக்குக் கொண்டுவரச் செய்தார்.

69% இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க, முதலமைச்சராய் இருந்த ஜெயலலிதா அவர்கள் மூலம் சட்டமன்றத்தில் 31c சட்டம் இயற்றி நிறைவேற்றி, இந்திய அரசியல் சாசனத்தின் 9ஆம் அட்டவணையில் சேர்க்கும்படிச் செய்தார்.

ஜாதி ஒழிப்புப் போராளி

1995ஆம் ஆண்டு, இருபத்தைந்து ஜாதி ஒழிப்பு மாநாடுகளை நடத்தினார். ஜாதி ஒழிப்புப் பிரச்சாரப் பெரும்பயணத்தை 12.12.1998 முதல் 19.12.1998 வரை மேற்கொண்டார். 1313 கி.மீட்டர் பிரச்சாரப் பயணம் மேற்கொண்ட அவர், 48 இடங்களில் ஜாதி ஒழிப்பு உரை நிகழ்த்தினார். 20.03.1999 முதல் 29.03.1999 வரை இரண்டாம் கட்டமாகத் திருத்தணியிலிருந்து திருச்சி வரை பயணம் மேற்கொண்டு 59 இடங்களில் பிரச்சாரம் செய்தார். 29.07.1999இல் திருச்சியில் ஜாதி ஒழிப்புக்கு 10 அம்சத் திட்டங்களை வெளியிட்டார்.

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக, தொடர்ந்து போராட்டங்களையும் நீதிமன்ற வழக்குகளையும் முன்னெடுத்தார். தமிழ்நாடு அரசின் சட்டத்தின் மீதான உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுத்து வெற்றியும் பெற்றார். ஜாதியை ஒழிப்பதில் அவர் ஓயாது அனைத்துத் தரப்பு மக்களையும் ஒருங்கிணைத்துப் போராடி வருகிறார். ஜாதி மறுத்து மணம் புரிகின்றவர்கள் கொலை செய்யப்படுவதை வன்மையாகக் கண்டித்துப் போராட்டங்களை நடத்துவதோடு, அவர்களுக்கு உரிய பாதுகாப்புத் தரவேண்டும் என்றும், கொலையாளிகளைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும் என்றும் போராடி வருகிறார்.

எடைக்கு எடை தங்கம் பெற்ற
ஒரே தலைவர்!

தொண்டர்கள் கொண்ட அன்பின், காரணமாக,
எடைக்கு எடை தங்கம் ஒரு தலைவருக்கு வழங்கப்பட்டது என்றால் அது இவருக்கு மட்டும்தான்.

01.02.1998இல் தஞ்சை நகரில் ஆயிரக் கணக்கானோர் பங்கேற்ற பெருவிழாவில் இவரின் எடைக்கு எடை தங்கம் தொண்டர்
களால் வழங்கப்பட்டது. அன்றைய மதிப்பில் அவருக்கு வழங்கப்பட்ட தங்கத்தின் மதிப்பு 2 கோடி ரூபாய்.

சில பெண்கள் தங்கள் தாலியைக் கூட இதற்காகக் கொடுத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும்.

தனக்கு வழங்கப்பட்ட தங்கத்தை அப்படியே இயக்கத்தின் அறக்கட்டளைக்கே அளித்து, ‘‘திராவிடர் கழக அறக்கட்டளை’’ என்ற தனி அமைப்பினையே உருவாக்கிய பெருமைக்குரியவர் இவர். இதற்கு முன்பு புதுக்கோட்டையில் எடைக்கு எடை வெள்ளி இவருக்கு வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.

சிறை வாழ்வு

மக்கள் நலன் சார்ந்த சிக்கல்களுக்காக, உரிமைகளுக்காகப் போராடி, 52 முறை கைது செய்யப்பட்டுச் சிறை சென்று மீண்டவர்.

இராமர் பட எரிப்பு, தேசப்பட எரிப்பு, இராவண லீலா நடத்தியது, மிசா, மனுதர்ம எரிப்பு, ஈழப் பிரச்சினை, மீனவர் பிரச்சினை, இந்தி எதிர்ப்பு, காவிரி நீர்ப் போராட்டம், புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு, மண்டல் குழுப் பரிந்துரையை நிறைவேற்றப் போராட்டம், ஜாதி, தீண்டாமை ஒழிப்பு, இடஒதுக்கீடு, அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் ஆகப் போராட்டங்கள், நீதிபதிகளுக்கு எதிராய்ப் போராட்டம் என்று பல்வேறு காரணங்களுக்காகக் கைது செய்யப்பட்டார். சிறையிலும் அடைக்கப்பட்டார்.

‘மிசா’ கொடுமை

‘மிசா’ என்பது பிரதமர் இந்திராகாந்தியால்  1976இல் கொண்டு வரப்பட்ட இந்தியாவின் நெருக்கடி (இருண்ட)காலம். அதில் தாக்குண்டு துடிதுடித்து இறந்தவர்கள் ஏராளம். பெரும் பெரும் தலைவர்கள் எல்லாம் இருக்கும் இடம் தெரியாது சிறைகளில் பதுக்கப்பட்டனர். குறிப்பாகத் தமிழ்நாடு வஞ்சம் தீர்க்கப்பட்டது. அதிலும் குறிப்பாகத் தி.க.வும், தி.மு.க.வும் அதன் முதன்மைத் தலைவர்களும், தொண்டர்களும் குருதி தெறிக்கக் கொடுமைப்படுத்தப்பட்டனர். கி.வீரமணி அவர்கள் குறிவைத்துக் கொடுமைப் படுத்தப்பட்டார்.

கி.வீரமணி அவர்கள் கொண்டு சென்ற பெட்டி, படுக்கைகளை இரண்டு வாரகாலமாக அவருக்குத் தரவில்லை. பதினைந்து நாள்களும் ஒரே உடையைத்தான் அணிந்திருந்தார். வேறு வழியின்றிக் கொட்டடி திறக்கப்படும்போது உள்ளாடைகளை மட்டும் கசக்கிப் பிழிந்து காய வைத்து அணிந்துகொண்டார். வீரமணிக்குப் படுக்கையும் இல்லை; தலையணையும் இல்லை. பகலில்கூட அவர் அறைக்குள்ளே பூட்டப்பட்டிருந்தார். உணவு வேளையின்போது மட்டும் கொட்டடிக் கதவு சிறிது நேரம் திறந்திருக்கும். அங்கே ஆயுள் கைதிகளான கன்விக்ட் வார்டர்கள் காத்திருப்பர். அவர்கள் வீரமணியை மட்டுமல்ல, அனைவரையுமே ஒருமையில் தான் பேசுவார்கள். சிறை அதிகாரிகள் அவர்களுக்கு அப்படிப் பயிற்சி கொடுத்திருக்கிறார்கள்.

சிறையில் ஓர் இரவு…

இரும்புப்பூண் போட்ட தடிகள் வார்டர்களின் கரங்களில் சுழன்று கொண்டிருந்தன. வீரமணிக்குச் சரமாரியாக அடி விழுந்தது. அடித்தவர்கள் கைகள் ஓயும் மட்டும் உடம்பின் எல்லா உறுப்புகளையும் பதம் பார்த்தனர். மன உறுதியோடு கி.வீரமணி அந்தச் சித்திரவதைகளை ஏற்றுக்கொண்டார்.

“உள்ளே போடா” என்று வார்டர் விரட்ட,

கி.வீரமணி நடக்க முடியாது கொட்டடிக்குள் சென்றார். மிசா கொடுமையிலிருந்து அவர் மீண்டு உயிருடன் வந்தது அவரது உள்ள உறுதியாலும், துணிவாலுமேயாகும்.

வியக்கத்தக்க விரிவுரையாளர்!

ஒரு தலைப்பை, ஒரு செய்தியை, ஒரு கருத்தை எடுத்துக் கொண்டு அதை விளக்கி உரையாற்றுவதில் திறம் பெற்றவர் இவர். அய்.நா.வின் கிளை அமைப்பான யுனெஸ்கோ நிறுவனம், தந்தை பெரியாருக்கு,

Periyar – The Prophet of the New age;

The Socrates of South East Asia;

Father of the Social reform movement;

and Arch enemy of ignorance, superstitions,
meaningless customs and base manners”.

– UNESCO (27.06.1970)

என்று விருது வழங்கியது.

இதன் தமிழாக்கம்:

“பெரியார் – புது உலகின் தொலைநோக்காளர்;

தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரட்டீசு;

சமூகச் சீர்திருத்த இயக்கத்தின் தந்தை;

அறியாமை, மூடநம்பிக்கை, பொருளற்ற பழக்கவழக்கங்கள், இழிவான நடவடிக்கைகள் ஆகியவற்றின் கடும் எதிரி.”

விருதில் உள்ள இந்த நான்கு வரிகளை விளக்கி, நான்கு நாள்கள் இவர் தொடர் உரையாற்றியமை இவரது விரிவுரைத் திறனை வெளிக்காட்டி நிற்கிறது. இவரது உரையைக் கட்டணம் செலுத்தி ஏராளமானவர்கள் கேட்டனர்.

வி.பி.சிங் வியந்து பாராட்டிய கி.வீரமணி

“புரட்சி என்பதை வாளைத் தூக்கிக் கொண்டு
மட்டும் செய்ய முடியாது. மக்கள் மனதில் எழுகின்ற மலர்ச்சியை வைத்துதான் செய்ய
முடியும். அப்படிப்பட்ட பணியை, நாங்களெல்
லாம் செய்கின்ற பணியைவிட உயர்ந்த பணியை, நீங்கள் செய்து கொண்டிருக்கின்றீர்கள். எனவே, உங்களைப் பாராட்டுகிறோம்.

அரசியலிலே என்னுடைய தோழர் ராம்விலாஸ்
பஸ்வானிடமிருந்து நான் உணர்ச்சியைப் பெறுகிறேன். அதேபோல், சமுதாயப் பணியிலே
நண்பர் கி.வீரமணி அவர்களே உங்களிடமிருந்து நான் அந்த உணர்ச்சியைப் பெறுகிறேன்.”

– சமூகநீதிக் காவலர்  மேனாள் பிரதமர் வி.பி.சிங்

(திருச்சி – பெரியார் நூற்றாண்டு நினைவுக்

கல்வி வளாகத்தில் நடைபெற்ற பெரியார் நினைவு நாள்,

நாகம்மையார் குழந்தைகள் இல்ல

கட்டடத் திறப்பு விழா – 28.12.1992)

“இந்தச் சந்தர்ப்பத்தில் சகோதரர் வீரமணியவர்
கள், சமூகநீதி உரிமையின் இரண்டாம் கட்டப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் குறித்துச் சொன்னார். அதற்கான அமைப்பையும், இயக்கத்தையும், தலைமையேற்று நடத்த முன்வர அவரைக் கேட்டுக் கொள்கிறேன். தமிழ்நாட்டில் 69 சதவிகித இடஒதுக்கீட்டை அமல்படுத்தியிருப்பதன் மூலம் மக்கள் தொகை விகிதாச்சாரத்துக்கு ஏற்ப இடஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்ற கொள்கையை நீங்கள் அமல்படுத்தி இந்தியாவுக்கே வழிகாட்டியிருக்கிறீர்கள் என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அவருடைய வழிகாட்டலில், நாடு தழுவிய வகையில் நடத்தப்பெறும் சமூக நீதிக்கான இரண்டாம் கட்டப் போராட்டம் உறுதியாக வெற்றிபெறும் என்பதில் அய்யம் இல்லை” என்று மாண்புமிகு வி.பி.சிங் அவர்கள் பாராட்டினார்கள்.

– சமூக நீதிக் காவலர்  வி.பி.சிங் ஆற்றிய

உரையின் ஒரு பகுதி

(01.10.1994 சென்னை – திராவிடர் கழக

சமூகநீதி மாநாட்டில், – ‘விடுதலை’ 03.10.1994)

சிறந்த நிருவாகி

தஞ்சைக்கு அருகிலே வல்லம் பகுதியில் இவர் உருவாக்கிய கல்வி நிலையங்கள் இன்று பல்கலைக்கழகமாய் பரிணாமம் பெற்றுள்ளன. இன்றைக்குக் கண்கவரும் இயற்கைச் சூழலில் எழில் கொஞ்ச, மிஞ்ச பரவி விரிந்து நிற்கும் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் குண்டும், குழியும், காடும் கரம்பும், மேடும் பள்ளமும் நிறைந்த பயன்படுத்த முடியாத பொட்டல் வெளியாகும். அப்படிப்பட்ட இடத்தைத்தான், கடின உழைப்பால் கவினுறச் செய்து மக்கள் பல்கலைக்கழகமாக்கியவர் கி.வீரமணி அவர்கள்.

 நிறுவனங்களை உருவாக்கி
நிகரில்லாச் சாதனை!

தந்தை பெரியார் அவர்கள் சுயமரியாதை இயக்கத்தையும், திராவிடர் கழகத்தையும் தோற்றுவித்ததன் நோக்கம் – ஆரிய ஆதிக்கத்தினின்று தமிழினத்தை மீட்டு மானமும் அறிவும் உள்ளதாக ஆக்க வேண்டும் என்பதற்கேயாகும்.

என்றாலும், அதன் கூடுதல் பணிகளாக, ஆதரவற்ற குழந்தைகளைப் பராமரித்தல், மருத்துவமனைகளை, கல்வி நிறுவனங்களை நடத்துதல் போன்றவற்றையும் செய்தார்.

தற்போது 40க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இயக்கத்தால் நிருவாகம் செய்யப்பட்டு வருகின்றன.

பெரியாரை உலகமயமாக்கியவர்

‘‘பெரியார் உலக மயம்,’’ ‘‘உலகம் பெரியார் மயம்’’ என்று முழங்கி, உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பெரியாரின் சிந்தனைகளை, அமைப்புகள் மூலமும், மாநாடுகள், கருத்தரங்குகள் மூலம் ஆண்டுதோறும் பரப்பும்படிச் செய்து வருகிறார். காணொலி மூலமாகவும், நேரிலும் அனைத்து நிகழ்வுகளிலும் கலந்துகொண்டு கருத்துகளை வழங்கி வருகிறார்.

பெரியார் உலகம்

திருச்சிக்கு அருகிலுள்ள சிறுகனூரில் பெரியார் உலகை 100 கோடி மதிப்பீட்டில் உருவாக்கி வருகிறார். இதை உலக அளவில் பெரியாருக்கான வரலாற்றுச் சின்னமாக அமைத்து வருகிறார்.

திராவிட திசை காட்டி

“இந்தியாவைப் பொறுத்தவரை இருவேறு நிலைப்பாடுகள்தான். ஒன்று திராவிடம், மற்றொன்று ஆரியம். திராவிடம் மனிதத்தின் மறுவடிவம். சமத்துவம், சமூகநீதி, சம வாய்ப்பு, பகுத்தறிவு, மதச்சார்பின்மை போன்றவற்றை இலக்காகக் கொண்டது. ஆரியம், பிறப்பால் உயர்வு, தாழ்வு, ஆதிக்கம், மூடநம்பிக்கை வளர்ப்பு, மதச்சார்பு, பிற மதவெறுப்பு போன்றவற்றைக் கொள்கையாகக் கொண்டது. இந்த இரண்டுக்கும் இடையே நடக்கும் போராட்டம் ஆரியர்கள் இந்தியாவிற்குள் நுழைந்த காலந் தொட்டே பல்வேறு பரிணாமங்கள், பரிமாணங்கள் பெற்று வருகின்றது. ஆரியத்தின் அமைப்பாக ஆர்.எஸ்.எஸ்.; திராவிடத்தின் அமைப்பாக திராவிட இயக்கம். ஆயிரம் அரசியல் அமைப்புகள் இருந்தாலும் மய்ய அச்சாக இந்த இரண்டும்தான் நிற்கின்றன.

தந்தை பெரியாருக்குப் பின் திராவிட இயக்கத்தின் திசை காட்டியாக, வழிகாட்டியாக அய்யா கி.வீரமணி அவர்கள் இருந்து விழிப்போடு செயல்பட்டு வருகிறார். கலைஞர் அவர்களும், இன்றைய திராவிட மாடல் நாயகர் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் இந்த உண்மையை ஒத்துக்கொண்டு பெருமையோடு கூறவும் செய்தனர்.

எனவே, இந்தியா முழுமையும் உள்ள ஆரியர் அல்லாத அமைப்புகள் ஆசிரியரின் வழிகாட்டலை ஏற்று ஒன்றாக அணிவகுத்து நின்று வென்றாக வேண்டியது கட்டாயமாகும்.

வாழ்க பல்லாண்டு!

ஆசிரியர் தற்போது 92 வயதை நிறைவு செய்துள்ளார். உடலால் தளர்வுற்றாலும் உள்ளத்தில் உறுதி குலையாது நிற்கிறார். அவர் நூறாண்டு கடந்தும் வழிகாட்ட வேண்டும். நாம் அவருடன் அணிவகுத்து அதன்வழி செல்லவேண்டும்; சமத்துவ சமுதாயத்தை வெல்லவேண்டும். வாழ்க தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்!  ¦