| ‘வ |
னப்பேச்சி என்கிற பேரண்டச்சி’ நாடக உருவாக்க முகாமிற்காக வெளியூரில் ஒரு வாரம் தங்கியிருக்கவேண்டிய நிர்பந்தம். ஆனால், எனக்கோ சென்னையில் பணிகள் இருந்ததால் போக இயலவில்லை. முகாமிற்குச் செல்லவில்லை என்பதால் வனப்பேச்சியில் இந்த முறை நடிக்கவில்லை எனச் சொல்லிவிட்டேன். ஆனால், உருவாக்கம் முடிந்து ஒத்திகையில் இணைந்துகொள்ள, நாடகத்தை இயக்கிய தோழர் பிரளயன் வாய்ப்பளித்தார். அதன்பின்னர் ‘நல்லவேளை! வந்து சேர்ந்தோம்’ என நினைத்துக் கொண்டேன். அந்தளவிற்கு நாடகம் எனக்குள் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது.
தோழர் பிரளயன் இருபதாண்டுகளுக்கு முன்னால் ‘உபகதை’ நாடகத்தைத் தமிழுக்கு
அளித்தார். ராமாயணத்தையும், மகாபாரதத்தை
யும் மறுவாசிப்பு செய்யும் விதத்தில் அமைந்த ’உபகதை’ நாடகத்தைப் போன்றே வனப்பேச்சியும் தாடகையின் பாத்திரத்தை மறுவரையறை செய்கிறது.
வனங்களின் தலைவி
தாடகையின் அழகைச் சிதைத்
தால், அவள் ஆளுமையையும் ஆதிக்கத்தையும் குலைத்து
விடலாம் என சூழ்ச்சி செய்கிறார்
கள் அகத்தியனும் விசுவாமித்திரனும். அவர்களின் கதாபாத்திரங்கள் நாடகத்தில் மறுவாசிப்பு செய்யப்படுகின்றன. தொல்காப்பியரை இருட்டடிப்பு செய்து
அகத்தியர் முன்னிறுத்தப்படும் காலகட்டத்தில்
அரங்கேறியுள்ள இந்நாடகம் அரசியல் முக்கியத்துவம் பெறுகிறது.
அய்ந்து வயது குழந்தை டெஸா நாடகம் பார்க்க வந்திருந்தாள். ரோகிணி என்னவாக நடித்திருக்கிறார் எனும் கேள்வியை அவளிடம்
முன்வைத்தபோது அவள் ‘ராட்சசியாக’ என பதிலுரைத்தாள். ஒரு குழந்தையிடம் ராட்சசியைக்
கதையின் நாயகியாகக் கொண்டு சேர்த்து
விட்டிருக்கிறது நாடகம். ஒரே வார்த்தையில் நாடகத்தின் மையக்
கருவை அவள் சொன்ன
தாகவே உணர்ந்தேன். ராட்சசியைப் பற்றிய பொதுச்சமூகத்தின் பிம்பத்தை உடைத்து நொறுக்கியிருக்கிறது வனப்பேச்சி. தாடகை எனும் பெயர்கொண்ட வனம் காக்கும் ராட்சசியைப் பார்வையாளர்களைச் சரியான கோணத்தில் உள்வாங்க வைத்திருக்கிறது நாடகம். ராட்சசி என்பவள் காவல்காரி எனும் பொருளைக் கடத்தி இருக்கிறது.
இசைப்பாடலும் நடனமுமாக வந்து கதைசொல்லும் மூப்பன், பேச்சியின் சககுடிகள், அகத்தியன், விசுவாமித்திரன், லோபமுத்ரா என காட்டுக்குள் பயணிக்கும் கதைமாந்தர்களும் சரி, வனத்திற்கு வெளியே பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், வனத் துறை அதிகாரிகள் என நடித்த ஒவ்வொரு கலைஞரும் சிறப்பான பங்களிப்பைச் செய்துள்ளனர். வனப்பேச்சியாக வரும் ரோகிணியின் மேடையிருப்பும் நடிப்பும் அத்தனை நளினமும் ஆவேசமும் கொண்டதாக ஒருசேர அமைந்திருந்திருக்கிறது.
தொடக்கத்தில் வரும் பள்ளி மாணவர்கள் தொடர்பான காட்சிகளில், தனியார் பள்ளி நிருவாகங்களின் சுயநலம் காட்டப்படுவது தொடங்கி தாடகையை மாணவர்கள் சந்தித்தபின்
விரியும் உரையாடலின் வழி வரலாறு நெடுகிலும்
பார்ப்பன சூழ்ச்சி எவ்வாறு நம்மை வீழ்த்த முனைந்தது என்பதை உறைக்கும் வண்ணம் சொல்கிறது நாடகம். பர்ணசாலைகள் அமைத்து வனத்தினுள் தீ வளர்த்ததே முதன்முதலில் காட்டுக்குள் நடந்த மனித அத்துமீறல் எனும் வரலாற்றாய்வாளர் ரொமிலா தாப்பரின் கூற்றுதான் இந்த நாடகம் உருவாக ஒரு பொறி
யாக இருந்ததாக பிரளயன் கூறுகிறார். புத்தன் சென்றதும் காட்டுக்குள்தான் எனும்போது யாகம் வளர்க்கும் ரிஷிகளுக்கும் தவசிகளுக்குமான வேறுபாட்டையும் சொல்கிறது நாடகம்.
பழங்குடிகளின் இயற்கையோடு இயைந்த பண்பாட்டைக் காக்க, தங்கள் வனத்தைக் காக்க கம்பீரத்தோடு போரிடும் வனக்குடிகளின் சித்திரம்தான் வனப்பேச்சி. இன்றைய தேதி வரை வன அழிப்பு யாரால் எதன்பேரால் நடத்தப்படுகிறது என்பதை தாடகையின் உடலில் பாய்ந்த அம்புகள் மூலம் சொல்கிறது நாடகம். இயற்கைக்கு மனிதர்களால் விளைவிக்கப்பட்ட சேதாரத்திற்கான விலையைத் தந்து கொண்டிருக்கும் காலகட்டத்தில் அரங்கேறி இருக்கிறது வனப்பேச்சி.
மிகக் கூர்மையான வசனங்கள், அவற்றை நேர்த்தியோடு வெளிப்படுத்தும் கலைஞர்கள், எளிய அரங்க வடிவமைப்பு, காட்சிகளுக்குப் பக்கபலமாக உள்ள ஒளியமைப்பு, மியூஸிக் அகாடமி அரங்கின் ஒலித் தரம், பொருத்தமான பின்னணி இசை, குரலிசை என அனைத்தும் சிறப்பானதாக அமைந்த நாடகம் இது.
நாடு இக்கட்டான சூழலில் இருக்கையில் தங்கள் கலை வாயிலாக எதிர்ப்பை வெளிக்காட்டுதலே கலைஞர்களின் தலையாயப் பணி. அதைத் தோழர் பிரளயனும் சென்னை கலைக் குழு கலைஞர்களும் தொடர்ந்து செய்து வருகின்றனர். வனப்பேச்சியிலும் இப்பணியை வெற்றிகரமாக செய்திருக்கின்றனர். v


