Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

திருவள்ளுவ மாலை எனும் தில்லுமுல்லு மாலை !

தி

ருவள்ளுவ மாலை எனும் நூல் திருக்குறளின், திருவள்ளுவரின்   பெருமை
களைப் புகழ்ந்து எழுதப்பட்ட பாடல்களின் தொகுப்பு. இதில், அய்ம்பத்தைந்து பாக்கள் உள்ளன. அய்ம்பத்து மூன்று புலவர்கள் பாடியுள்ளனர். இரண்டு குறட்பாவிலும் அய்ம்பத்து மூன்று வெண்பாவிலும் உள்ளன.  ஆதாரம்: (https://ta.wikipedia.org/s/ai2)

திருதராட்டிர ஆலிங்கனம்

மகாபாரதக் கதையில் “திருதராஷ்டிர ஆலிங்கனம்” என்றொரு தொடர் வரும். இறுதிப் போரில் தன்மகன் துரியோதனனைக் கொன்ற பீமனைக் கொல்ல, திருதராட்டிரன்,  கண்பார்வையற்ற தன்னால் அவனுடன் போரிட்டுக் கொல்ல முடியாது என்பதால், பீமனை அருகில் அழைத்து, இரு கரங்களாலும் நெருக்கி அணைத்தே கொல்லத் திட்டமிடுவான். இதனை உணர்ந்த கண்ணன், தந்திரமாகத் தடுத்து விடுவான் என்றாலும், இப்படி “நெருக்கி அணைத்தே கொன்றுவிடத் திட்ட மிடுவது” என்னும் பொருளில் “திருதராட்டிர ஆலிங்கனம்” என்னும் தொடர், இன்றும் மக்கள் உரையாடலில் உள்ளது.

திருவள்ளுவ மாலைக்கும் இந்தத் தொடர் பொருந்தும்! அதாவது குறளில் இல்லாததையும் பொல்லாததையும் இருப்பதாகச் சொல்லி, புகழ்ந்தே திருக்குறளின் புகழைக் கெடுப்பது!

திருவள்ளுவ மாலை என்னும்
பொய் மாலை

திருவள்ளுவ மாலையில், (நாலடி வெண்பா  53, குறட்பா 2 சேர்த்து) மொத்தம் 55 வெண்பாக்கள் உள்ளன.

இதில்-

முதல் வெண்பா அசரீரி! (ஆளற்ற ஒலி)யாக உள்ளது!

2ஆம் வெண்பா – கலைமகள் எழுதியதாம்!!

3ஆம் வெண்பா – இறையனார் எழுதியதாம்!!

இதிலிருந்தே இது எந்த அளவிற்கு மிகையானது என்பது புரியும்! நான்காம் வெண்பா – உக்கிரப் பெருவழுதி எனும் மன்னன் எழுதியதாம். ஆனால், இவன் எழுதியதாகச் சங்க இலக்கியத்தில் இரண்டு பாடல்கள் உள்ளன. இரண்டுமே அகப்பாடல்கள்! எனில், இதையும் நம்புவதற்கில்லை!

அப்படியே வைத்துக் கொண்டாலும், அந்தச் சங்கப் புலவர்கள் 49 பேர், மற்றும் இந்த நால்வர் ஆக 53 தானே வரவேண்டும்? 55 பேர் திருவள்ளுவ மாலையில் எழுதியது எப்படி? ஏனெனில், அந்த நூலில் உள்ள “கடைச்சங்கப் புலவர்கள்” பட்டியலில் உள்ள பலர் பெயர் இந்த திருவள்ளுவ மாலையில் இல்லை! அதில் இல்லாத பலர் பெயர்கள் இதில் உள்ளன! அட என்னடா! இந்த மதுரைக்கு (நகரில் அரங்கேற்றப்பட்ட திருவள்ளுவ மாலை நூலுக்கு) வந்த சோதனை!

இந்த நூல், பல பெயர்களில் ஒருவர் அல்லது ஒரு குழுவினர் பல பெயரில் எழுதியிருக்கலாம் என்பதற்கான   ஆதாரங்கள் – வள்ளுவர் பாடாததையெல்லாம் பாடியதாகப் புகழும் பாடல்கள் பல!

(1) வள்ளுவர்  முப்பாலே பாடியிருக்க, அவர் பாடாத வீடும் குறளில் உள்ளதாகப் புகழ்வது –

“அறம் முதலாகிய மும்முதற் பொருள்” என, தொல்காப்பிய (செய்யுளியல் நூற்பா 102) தமிழ்நெறியில் எழுதப்பட்ட திருக்குறளில், வடமொழியில் உள்ள (தர்ம, அர்த்த, காம, மோட்சம் எனும்) நான்காவது பொருளான   வீடுபேறு இல்லை! ஆனால், திருக்குறள் வீடுபேற்றையும் பாடி இருப்பதாகப்  பாராட்டும் பத்து வெண்பாக்கள் உள்ளன. (திருவள்ளுவ மாலை பாடல் எண்கள்- 7,8,19,20,22,33,38,40,44,50! பத்துப் பொய்களில் குத்து மதிப்பாய் ஒரு பொய்யைப் பார்ப்போம் –

அறம்பொருள் இன்பம்வீ  டென்னும்அந்  நான்கின்

திறம்தெரிந்து செப்பிய தேவை – மறந்தேயும்

வள்ளுவன் என்பானோர் பேதை, அவன்வாய்ச்சொல்

கொள்ளார் அறிவுடை யார் (பாடல் எண்-8)

இதற்கு விளக்கம் தேவையில்லை

(2) வடமொழி வேதம் சொன்னதையே வள்ளுவர் பாடினார் என்பது –

வர்ண தர்மத்தை வலியுறுத்தியே வேதமும், மனு(அ)தர்ம நூலும், பகவத் கீதையும் பாடியிருக்க, இவற்றுக்கு எதிரான “உயிரின சமத்துவத்தை” வலியுறுத்தி வாழ்வியல் பாடிய வள்ளுவரை “வேதம் சொன்னபடி” தமிழில் பாடியவர் என்பது அவருக்கு எவ்வளவு பெரிய இழுக்கு?

இப்படி ஒன்பது வெண்பாக்கள் உள்ளன.  -2,4,15,18,28,30,32,37,42) ஓர் உதாரணம் பார்ப்போம் –

அறமுப்பத்து எட்டு, பொருள் எழுபது, இன்பத்

திறம்இருபத் தைந்தால் தெளிய – முறைமையால்

வேத விழுப்பொருளை  வெண்குறளால் வள்ளுவனார்

ஓத அழக்கற்றது உலகு (பா.எண்37)

(3) வள்ளுவர் மனிதரே அல்ல, தெய்வத்தன்மை வாய்ந்தவர் என்பது –

“மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதப் பாடல் அல்ல! அல்ல!! அல்ல!!!” என்ற, கமல் போல, இதில் 9 பாடல்கள் உள்ளன!

பாடல் எண்கள் – 1,3,6,21,28,36,39,41,49

“…தெய்வத் திருவள்ளுவர் செப்பிய குறளால்

வையத்து வாழ்வார் மனத்து (பாடல் எண்-49)

(4) ஒருசில அருமையான
பாடல்களும் உள்ளன.

வெறும் பொய்யைச் சொன்னால் எப்போதுமே பருப்பு வேகாதல்லவா? எனவே பொய்யைக் கொஞ்சம் உண்மை கலந்தும் தருவதுதானே உலக நடப்பு! இதற்கேற்ப நல்ல பாடல்களும் உள்ளன.

கபிலர் பாடலைப் பாருங்களேன்

தினையளவு போதாச் சிறுபுல் நீர்நீண்ட

பனையளவு காட்டும் படித்தால் – மனையளகு

வள்ளைக்கு உறங்கும் வளநாட வள்ளுவனார்

வெள்ளைக் குறட்பா விரி  (பாடல்எண்-5)

எவ்வாறாயினும் மூலக்கருத்துகள் வள்ளுவ மாலையாலும்,  உரைகளாலும் காலந்தோறும் மாறி மாறிப் போய் நூற்றாண்டு வரிசையில் தமிழ் இலக்கிய வரலாறு எழுதியுள்ள அறிஞர் மு.அருணாசலம் அவர்களும் திருவள்ளுவ மாலை பொய்யாகத் தொகுக்கப்பட்டது என்னும் பொருளிலேயே கருத்து உரைக்கிறார். ஆக, மிகையாகப் புகழ்வதும் தவறு, பழிதூற்றுவதும் தவறு என்பதை,  திருக்குறளையும் திருவள்ளுவ மாலையையும் ஒப்பிட்டுப் பார்த்தால்தான் புரியும்.  v