Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

ஊடுருவல்

70

ஆண்டுகளுக்கு முன் …

சிறுவனாக இருந்தபோது தான் செய்த செயல்களை நினைத்துப் பார்த்தார் கலைமணி.

கார்த்திகை மாதம் வந்து விட்டால் போதும். தனது நண்பர்களுடன் சேர்ந்து கார்த்திகை தீபம் நாளன்றும் அதையடுத்து தொடர்ந்து மூன்று நாட்களுக்கு கார்த்தி சுற்றுதல் என்ற நிகழ்வில் ஈடுபடுவார். அவருடன் அவரது நண்பர்களான வசந்தன், முருகன், சிங்காரவேல், பெருமாள் அனைவரும் தீபத்திற்குச் சில நாட்களுக்கு முன்பே கார்த்தி தயாரிப்பதற்கு வேண்டிய பொருட்களைச் சேகரிக்கத் தொடங்குவார்கள்.

காலையில் எழுந்தவுடன் பனை மரங்களை நாடிச் சென்று அதனடியில் விழுந்துகிடக்கும் பனம் பூக்களை பொறுக்கி எடுப்பார்கள். பிறகுகத்தியை எடுத்துக் கொண்டு புளிய மரத்தில் அதன் பட்டைகளைச் செதுக்கி எடுப்பார்கள். அவற்றைக் காயவைத்து எரித்து கரியாக்குவார்கள். அதை நன்கு அரைத்து தூளாக்கி அந்தத் தூளை ஒரு துணியில் வைத்து பரப்பி சுருட்டுவார்கள்.

“சிங்காரவேலு, அந்தக் கரியில் சீனி வெடியைப் பிரிச்சி உள்ளேயிருக்கும் மருந்தைக் கொட்டிக் கலந்தால் நல்லா பொறி வரும்”, என்பார் கலைமணி.

மற்றவர்களும் அதை ஏற்று தீபாவளிக்கு வாங்கி வைத்த வெடிகளில் மிச்சம் மீதி இருந்தவைகளை எடுத்துவந்து பிரித்து வெடி மருந்தைக் கொட்டிக் கலக்கி துணியில் பரப்பி வைத்து சுருட்டுவார்கள். பிறகு கள்ளிச் செடியின் தண்டுகளை இரண்டு அடி நீளத்திற்கு வெட்டி அதில் மூன்று துண்டுகளை எடுத்து மேலும் கீழும் கட்டி அதற்கிடையில் கரித்தூள் சுருட்டிய துணியை வைத்து விடுவார்கள். கள்ளித் தண்டுகள், சுருட்டப்பட்ட துணியை, கெட்டியாகப் பிடித்துக்கொள்ளும்.

கார்த்திகைத் தீப நாளன்று நண்பர்கள் அனைவரும் கள்ளித்தண்டுகளின் மேல் பக்கம் ஒரு நீண்ட கயிரைக் சுட்டுவார்கள். கரி சுற்றிய துணியின்மேல் எரியும் கரித்துண்டுகளை வைத்து, துணியில் உள்ள கரி பற்றிக் கொண்டபின் கயிற்றைப் பிடித்து சுழற்றினால் பொறி பறக்கும். விதம் விதமாக மாறி மாறி மேலும் கீழும், உடம்பைச் சுற்றியும் சிலம்ப விளையாட்டு போல் சுழற்றுவார்கள்.

மூன்று நாட்களுக்கு இந்த விளையாட்டு தொடரும். சுமார் பத்து நாட்களுக்கு புத்தகங்களைக் கையால் தொடமாட்டார்கள்.

பெற்றோர்கள் கண்டித்துப் பார்ப்பார்கள். ஆனால் நண்பர்கள் அதெற் கெல்லாம் கட்டுப்பட மாட்டார்கள்.

காலை எழுந்தவுடன் கோலிக் குண்டு விளையாடுவது, கோட்டிப் புள் விளையாடுவது, போன்றவைகள் தான் அவர்களுக்கு முக்கிய விளையாட்டு. அப்போது வாழ்ந்த கிராமத்து வாழ்க்கையை தொடர்ந்து நினைத்துப் பார்த்தார் கலைமணி.

பள்ளி இறுதித் தேர்வு முடிக்கும் வரை பெரிய நகரங்களுக்குச் சென்றது கிடையாது. விதவிதமான உணவினைச் சுவைத்தது கிடை
யாது. காலையில் பெரும்பாலும் பழைய சோறும்,
ஊறுகாயும் தான். பகலில் சாப்பிட்டதைத் தான் இரவிலும் சாப்பிட வேண்டும். அமாவாசைக்கு அமாவாசை தான் இட்லி அல்லது தோசை கிடைக்கும்.

கலைமணியும் அவரது நண்பர்களும் சுமாராகத்தான் படிப்பார்கள். அவர்களது கவன
மெல்லாம் பண்டிகை கால நினைவுகளிலேயே இருக்கும். அய்ப்பசி மாதம் வந்து விட்டால் தீபாவளி பற்றியே பேசிக் கொண்டிருப்பார்கள்.

“தீபாவளிக்கு இன்னும் எத்தனை நாட்கள்
இருக்கு”, என்று நண்பர்களைப் பார்த்துக்
கேட்பான் வசந்தன்.

“இன்னும் அய்ந்து நாட்கள் இருக்கு”, என்பார்கள் நண்பர்கள்.

நாள்தோறும் இப்படிக் கேட்டுக் கொண்டே
யிருப்பார்கள். தீபாவளி வந்தவுடன் பட்டாசு
களைக் கொளுத்தி ஆர்ப்பாட்டம் செய்வார்கள். சுற்றுச் சூழலைப் பற்றிய விழிப்புணர்வு எல்லாம் அப்போது கிடையாது.

அதையெல்லாம் நினைத்துப் பார்த்தார் கலைமணி. முன்பை விடவும் அதிக அளவில் பட்டாசுகளைக் கொளுத்தி சுற்றுச் சூழலை இப்போதும் கெடுத்துக் கொண்டிருக்கும் நிலையையும் எண்ணிப் பார்த்தார். தலை நகரமே
வாழத் தகுதியற்றதாகிவிட்டது. சுவாசிக்க நல்ல காற்று இல்லை. அதன் காரணமாக பல நோய்கள் மக்களை வாட்டி வதைக்கின்றன.

தீபாவளிதான் இப்படி மோசமான, மூடத்தனமான பண்டிகை யென்றால் அடுத்து வரும் கார்த்திகை மாதத்திலும் சுற்றுச் சூழலை மாசுபடுத்தும் நிகழ்வுகளே நடைபெறுகின்றன.

‘சொக்கப்பானை’ கொளுத்துதல் என்ற பெயரில் ஊரின் முக்கியத் தெருவில் பனை மட்டைகளைக் கூம்பு வடிவில் அடுக்கி, அதைக் கொளுத்தி விடுவார்கள். சிறுவர்களுக்கு அந்நிகழ்வு பெரும் உற்சாகத்தைக் கொடுக்கும்.

சுற்றுச் சூழலைக் கெடுத்து நமக்கு நாமே தீங்கு செய்து கொள்கிறோம் என்று சிறுவர்களாக இருந்த போது நினைத்ததில்லை. ஒரு முறை கார்த்தி சுற்றும் போது தவறுதலாக காலில் அடித்துக் கொண்டு தீக் காயம்பட்டு அலறியதையும், நண்பன் ஒருவனின் கார்த்தியின் கயிறு பிய்த்துக் கொண்டுபோய் வைக்கோல் போரில் விழுந்தததையும், அந்த வைக்கோல் போர் தீ பற்றி கொழுந்து விட்டு எரிந்தததையும் நினைத்துப் பார்த்தார்.

எதைப் பற்றியும் கவலைப்படாமல் கிராமத்தில்
வசித்துக் கொண்டு பலரும் குறைவான அளவே படித்து, ஒரு சிலர் பட்டப் படிப்பையும் முடித்து கிடைத்த வேலையில் சேர்ந்தார்கள்.

ஆனால் தற்போதைய நிலைமை அப்படி அல்ல. இளைஞர்களுக்குப் படிக்கப் பல வாய்ப்புகள் உருவாகி விட்டன. கிராமத்து இளைஞர்களும் படித்துப் பட்டம் பெற்றுப் பல்வேறு நாடுகளுக்குச் சென்று பணி செய்கின்றனர். பகுத்தறிவோடு பலர் செயல் பட்டாலும் கூட மதவாதிகள் தங்களின் கோரப் பிடிகளில் பலரைச் சிக்கவைத்து விடுகின்றனர்.

“மதப் பண்டிகைகளைக் கொண்டாடுங்க. தீபாவளியைச் சிறப்பாக கொண்டாடுங்க. நிறைய
பட்டாசுகளைக் கொளுத்துங்க. அரசாங்கம் எது வேண்டுமானாலும் சொல்லட்டும். அதையெல்லாம் காதில் வாங்க வேண்டாம்”, என்று ஒரு மதவாதி வெளிப்படையாக அறிக்கை விடுகிறான்.

பல இளைஞர்கள் பெரிய பதவியில் இருந்தாலும் கூட மதவாதிகளின் பிடியில் சிக்கி சீரழிகிறார்கள்.

அந்த மதவாதிகள் சிறுவர்களையும், இளைஞர்களையும் சீரழிக்க பல்வேறு வழிகளைக்
கையாளுகின்றனர். பெரிய பதவியில் இருக்கும் சிலருக்கு ஆசை வார்த்தை கூறி பதவியை விட்டு விலகச் செய்து மதவாதியாக மாற்றி தகாத வழிகளில் பணத்தை ஈட்டவும் வாய்ப்பினை ஏற்படுத்தித் தருகிறார்கள். திரைப்படத் துறையில் தோற்றுப்போன, பேச்சுத் திறமையுள்ள சிலரையும் பணத்தாசை காட்டி மதவாதச் செயல்களில் ஈடுபடுத்துகின்றனர். மதவாதக் கட்சிகளிலும் சேர்ந்து பதவிகளையும் வாங்கித் தருகின்றனர்.

அது மட்டுமல்லாமல் விளையாட்டுத் துறைகளிலும் ஊடுருவி, விளையாட வரும் இளைஞர்களையும், சிறுவர்களையும் மெல்ல மெல்ல நச்சுக் கருத்துகளை ஊட்டி மதத்தில் உழலச் செய்கின்றனர்.

கலைமணி இப்போது தாத்தாவாகிவிட்டார். கிராமத்தில் இருந்ததால் அதிகம் செய்திகளை அறிந்து கொள்ள முடியாமல் போய், எப்படியோ படித்து ஓர் அரசுப்பணியில் சேர்ந்து பணி ஓய்வும் பெற்று விட்டார். அவரது மகன் அழகரசனும் படித்து நல்ல அரசுப்பணியில் உள்ளான். அவனைவிடவும் பத்து வயது நிரம்பிய தனது பெயரன் அறிவொளி நன்குபடித்து உயர்பதவிக்குச் செல்லவேண்டு மென விரும்பினார்.

மேலும் கலைமணி நல்ல எழுத்தாளர். நல்ல கருத்துகளைப் பத்திரிகைகளில் எழுதியும் வந்தார். நல்ல உடற்பயிற்சிகளையும் செய்து உடலைக் கட்டுக் கோப்பாகவும் வைத்திருந்தார்.

அதுபோல் தனது பெயரனும் நல்ல உடற் பயிற்சி செய்வதோடு மட்டுமல்லாமல் தற்காப்புக் கலையும் கற்றுக்கொள்ள வேண்டுமென விரும்பினார். அவரது மகன் அழகரசனும், அறிவொளியைச் சிலம்பம் கற்றுக் கொள்ள ஏற்பாடு செய்தான்.

“மணி வேல் சிலம்பாட்டப் பள்ளி” என்ற பள்ளியில் சேர்ந்தான் அறிவொளி.

சில மாதங்கள் கடந்த பின் ஒரு நாள் தாத்தா கலை மணியிடம் வந்தான் அறிவொளி.

“தாத்தா, பழந்தமிழர் கலைகள் எல்லாம் அழிஞ்சிகிட்டு வருதா தாத்தா”, என்று கேட்டான்.

“அப்படியெல்லாம் இல்லையே. நல்ல கலைகள் எல்லாம் இப்பவும் இருக்குதே” என்று பதில் சொன்னார் கலைமணி.

“இல்லை தாத்தா,
கார்த்திகை மாதம் கார்த்தி
சுத்துவாங்களாம். இப்ப
அதெல்லாம் இல்லை
யாமே” பெயரனின் இந்தக்
கேள்வியைக் கேட்டதும்
சற்றே வியப்படைந்தார் கலைமணி.

“அதெல்லாம் இப்போ
தேவையில்லாத விளையாட்டு, தீபாவளியைக் கொண்டாடுவது, பட்டாசு கொளுத்துவது, கார்த்தி சுற்றுவது எல்லாமே இப்போ தேவையில்லை. அதனால் காற்று மாசுபடும். நமக்கும் நேரம் விரயமாகும். முன்னேறி வரும் தொழில் நுட்பங்களைத்தான் நாம் கற்றுக் கொள்ள வேண்டும். பழந்தமிழர் விளையாட்டு என்ற பெயரில் தேவையில்லாத செயல்களைச் செய்யக் கூடாது. அது சரி, உனக்கு யார் கார்த்தி சுற்ற வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தது”.

“எங்க சிலம்ப வாத்தியார்தான் சொன்னார்” என்று பதிலளித்தான் அறிவொளி.

அதற்குப் பிறகுதான் அந்தச் சிலம்பப்
பள்ளியைப் பற்றி விசாரித்தார் கலைமணி.

அந்தப் பள்ளியை நிறுவிய மணிவேல் ஒருகாலத்தில் பொதுவுடமை பேசியவர். அவரை மதவாதிகள் பணத்தாசைக் காட்டி தங்கள் வழிக்குக் கொண்டுவந்து விட்டனர். இப்போது மெல்ல மெல்ல சிறுவர்களையும், இளைஞர்களையும் தமிழர் பண்பாடு மீட்பு என்ற பெயரில் அவர்களைப் படிக்க விடாமல் தடுத்து அற்றுப் போன மதச் சம்பந்தப்பட்ட விளையாட்டுகளை விளையாட ஊக்கப் படுத்துகின்றனர்.

“தீபாவளிக்கு நிறைய பட்டாசு கொளுத்துங்க”

“கார்த்திகை மாதத்தில் கார்த்தி சுற்றுங்க”

“சொக்க பானை கொளுத்துங்க”

“கோட்டிப் புள், கோலிக் குண்டு விளையாடுங்க”

“பங்குனி மாதம் காவடி எடுத்து ஆடுங்க. அது நல்ல உடற்பயிற்சி”

“இதையெல்லாம் பகுத்தறிவாதிகள் என்பவர்
கள் சிலர், தமிழர் பண்பாட்டை அழித்து விட்டார்
கள். அதையெல்லாம் நாம் மீட்கவேண்டும்”

இப்படியெல்லாம் பேசி இளைஞர்களைத் தவறான பாதைக்குத் திசை திருப்புகின்றனர்.

அதற்கு சிலம்பம் போன்ற தற்காப்புக் கலை பயிற்சியைத் தேர்ந்தெடுத்து, அதில் சேரும் சிறுவர்கள் நெஞ்சில் மத உணர்வை ஊட்டுகின்றனர்.

”அறிவொளி, சிலம்பம் வேண்டாம். படிப்பில் கவனம் செலுத்து”, என்றார் கலைமணி.

”தாத்தா, படிக்காமலேயே நிறைய பணம் சம்பாதிக்கலாமாம். எல்லோரும் படிச்சி டாக்டர்
ஆயிட்டா நோயாளிகளுக்கு எங்கே போறது? டாக்டருக்கு டாக்டர் மாறி மாறி ஊசி போட்டுப்பாங்
களா? ஆடு, மாடு வளர்த்தா நிறைய பணம் கிடைக்குமாம். இதையெல்லாம் ஒரு நாள் அந்தச் சிலம்பப் பள்ளியை நிறுவிய மணிவேல் அய்யா வந்துபேசினார்” என்றான் அறிவொளி.

இதையெல்லாம் அறிந்த அழகரசன் அந்தச் சிலம்பப் பள்ளிக்கு நேரில் சென்று பிற்போக்குத் தனமான செயல்களில் ஏதுமறியா சிறுவர்களை ஈடுபடுத்த வேண்டாம் என எச்சரிக்கை செய்து விட்டு வந்தான். கலையை உண்மையிலேயே வளர்க்கும் தற்காப்புக் கலைப் பள்ளியைத் தேடலானான்.

இந்தக் கருத்தைச் சமூக வலைத்தளங்களில் மதவாதிகளின் ஊடுருவலைத் தடுப்பது பற்றிய கருத்துகளைப் பதிவிடவும் செய்தான் அறிவொளி. மதவாத சக்திகளின் ஊடுருவலைத் தடுக்க வேண்டியதின் அவசியத்தை மக்களிடையே பரப்பும் பணியில் ஈடுபட்டான் அழகரசன். v