| ந |
வம்பர் 1 மற்றும் 2 தேதிகளில் ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் மாநகரில் நான்காவது சர்வதேச மனிதநேய மாநாடு நடைபெற்றது. அதில் ஆஸ்திரேலியா மற்றும் பல்வேறு உலக நாடுகளில் இருந்தும் கருத்துறையாளர்கள் கலந்துக்கொண்டு விழாவினைச் சிறப்பித்திருந்தார்கள்.
ஆஸ்திரேலியா பூர்வகுடிகளுக்கு மரியாதை செய்யும் நன்றியுரையுடன் நிகழ்ச்சி துவங்கியது. அரங்கமே நிரம்பி வழிந்தது. பல்வேறு நாட்டைச் சேர்ந்த இந்தியர்கள் என்ற போதும் சிந்தனைகள் ஒத்துடையதாய் இருந்ததினால் அரங்கத்தில் இருந்தவர்கள் தங்களைத் தாங்களே அறிமுகப்படுத்திக் கொண்டு பேசிக் கொள்ள எளிதாகவே இருந்தது.
நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்திய பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டத்தின் தலைவர், அண்ணாமலை மகிழ்நன் வரவேற்புரை வழங்கியதை அடுத்து, தமிழ்
நாட்டின் முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி
ஸ்டாலின் அவர்கள் நிகழ்ச்சியைக் காணொளி
மூலம் துவக்கி வைத்தார். அதில் வெளிநாடு
களில் தந்தை பெரியாரையும், திராவிட சித்தாந்தத்
தையும் தமிழர்கள் கொண்டு சேர்ப்பதைப் பட்டியலிட்டுப் பெருமையாக பேசினார். அதனைத்
தொடர்ந்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தன் வாழ்த்தைப் பதிவு செய்தார்.
ஆசிரியர் அய்யா கி.வீரமணி அவர்களின் முன்பதிவு செய்த காணொளி மூலம் வாழ்த்தினைத்
தெரிவித்து, மாநாட்டின் சிறப்புக் குறித்து உரையாற்றினார். ஆஸ்திரேலியா அரசியல் பிரமுகர்களும், பிற பேச்சாளர்களும் மிகச்
சிறப்பாக தங்கள் உரையை விளக்கக்
காட்சியுடன் முன் வைத்தனர்.
மாநாட்டிற்கு வந்திருந்த நாத்திகவாத அமைப்பும், மனிதநேய அமைப்பும் இரண்டு நாட்களும் நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து பார்த்து குறிப்புகளை எடுத்துக் கொண்டார்கள். இந்திய ஜாதி முறை பற்றிய குழப்பம் அவர்களுக்கு மாநாடு முடியும் வரை கூட புரிந்து கொள்ள சற்று கடினமாகவே இருந்ததை அறிய முடிந்தது. நிகழ்ச்சி முடிந்து கடுமையான சட்டங்கள் இயற்றினால் ஜாதிப் பாகுபாட்டை ஒழிக்க வாய்ப்பிருக்கிறது என்றவர்களிடம், அந்தச் சட்டத்தை உருவாக்கும் இடத்திலும், அதை நடைமுறைப்படுத்தும் இடங்களிலும் பார்ப்ப
னர்களே இருக்கிறார்கள் என்று நாம் சொன்னது அவர்களுக்கு எந்த அளவிற்கு புரிந்தது என்று தெரியவில்லை.
மாநாட்டில் ஜாதி குறித்து மட்டுமல்லாமல் சட்டம், மருத்துவம், ஊடகம், பகுத்தறிவு, சமூக நீதி மற்றும் உளவியல் பூர்வமான மானுடத்தைப் பற்றிய தலைப்புகளில் அந்தந்த துறையைச் சார்ந்த வல்லுநர்கள் பேசினார்கள். ஒவ்வொரு தலைப்பும் ஒன்றிற்கு ஒன்று சளைக்காமல் இருந்தன. நேரம் போதாமை மட்டுமே பெரும் குறைபாடாக இருந்தது.
மாநாட்டில் தந்தை பெரியார் உருவப் படத்தை ஆ.இராசாவும், அண்ணல் அம்பேத்கர் படத்தை சுப.வீரபாண்டியனும் திறந்து வைத்தனர். மேலும் மருத்துவர் கவுதமனின் ‘Death’, வழக்கறிஞர் அருள்மொழியின் ‘ஆஸ்திரேலியாவில் பெரியார்’ நூல்கள் வெளியிடப்பட்டன.
தற்பொழுது ஆஸ்திரேலியாவை ஆட்சி செய்யும் லேபர் கட்சியின் முதல் தமிழ்ப் பெண் பாராளுமன்ற உறுப்பினரான மிஷால் ஆனந்த ராஜா, மருத்துவத் துறையில் லேபர் கட்சியின் சாதனைகளைப் பட்டியலிட்டார். பின்பு பேச வந்த PATCAவின் துணைத் தலைவர் டாக்டர் ஹாரூன், லேபர் கட்சி தவறவிட்ட இடங்களைப் பட்டியலிட்டுப் பேசினார்.
கடல் கடந்து பல்வேறு நாடுகளுக்குச் செல்லும் இந்தியர்கள், தாங்கள் பெட்டிகளில் முதன்முதலில் எடுத்து வைத்துக் கொள்வது ஜாதியைத்தான். அதெல்லாம் இல்லை என்று சொல்பவர்களுக்காகவே ஆஸ்திரேலியா வாழ் இந்தியர்கள் எப்படி ஜாதி ஒடுக்குமுறைக்கு உள்ளாகிறார்கள் என்பதைப் பறைச்சாற்ற ஒரு குறும்படமும் வெளியிடப்பட்டது.
ஜாதிப் பாகுபாட்டிற்கு எதிரான தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. இறுதியாக ஆசிரியர் அய்யாவின் நிறைவுரையை அடுத்து நன்றியுரையுடன் இரண்டு நாள் நிகழ்ச்சி நிறைவுபெற்றது.
மாநாடு வெற்றி என்பதை எப்படி அறிந்து கொள்வது? தினமலர் தம் வலைத்தளப் பக்கத்தில் இந்த மாநாட்டை குறிப்பிட்டு, இதனாலே இந்தியர்களிடையே பிரிவினைவாதமும், அச்சமும் விதைக்கப்படுகிறது என்று புலம்பியதே மாநாடு வெற்றி பெற்றதற்கான சான்று! v


