Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

‘டியூட்’ – Genz தலைமுறையின் மொழியில் பெரியாரின் குரல் !

2

025ஆம் ஆண்டின் அக்டோபர் மாதத்தில் வெளியான “Dude” எனும் தமிழ்த் திரைப்படம் genz தலைமுறையின் பெரியாரிய குரலாக ஒலித்து இருக்கின்றது.

இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு, சரத்குமார், ரோகிணி ஆகியோரின் நடிப்பில் வெளியாகி வெற்றிப்பெற்று இருக்கும் படம் “டியூட்”. இயக்குநர் கீர்த்தீஸ்வரன் அவர்களுக்கு இது முதல் படம்.

முதல் படத்திலேயே ஜாதி எதிர்ப்பு, அகமணமுறை எதிர்ப்பு, பெண்ணடிமை எதிர்ப்பு, மூடநம்பிக்கை எதிர்ப்பு, மிக முக்கியமாக ஜாதி ஆணவக்கொலைக்கு எதிரான வலுவான கருத்து என தனது முத்திரையைக் கீர்த்தீஸ்வரன் பதிவு செய்து இருக்கிறார். பிரதீப் ரங்கநாதன் – இன்றைய இளம் தலைமுறையான  Genzகளால் கொண்டாடப்படும் நடிகராக / இயக்குநராக இருக்கிறார். அவரது கோமாளி, லவ் டுடே, டிராகன் ஆகிய மூன்று படங்களும் இன்றைய இளம் தலைமுறையால் கொண்டாடப்பட்ட படம். ட்ராகன் படத்தில் “படிப்பின்” முக்கியத்துவத்தை Genz மொழியில் எடுத்துரைத்திருந்தனர். அவரது அடுத்த வெற்றிப்படமாக “Dude” வெளியாகி கொண்டாடப்பட்டு வருகின்றது.

முற்போக்கு அம்சங்கள் கொண்ட இன்னொரு படம் இது என கடந்து போய் இருக்கலாம். ஆனால், இந்தப் படத்திற்கு “கலாச்சார காவலர்களால்” எழுப்பப்பட்ட கண்டன குரல்களே இந்தக் கட்டுரையை எழுதவேண்டிய தேவையை உணர்த்தியது.

ஏன் இந்தப் படம் முக்கியமானது?

ஏன் இந்தப் படம் எதிர்க்கப்படுகிறது?

இரண்டிற்குமான விடையில் சில ஒற்றுமைகள் இருக்கின்றன.

ஜாதி எதிர்பைப் பேசும், மூடநம்பிக்கை எதிர்பைப் பேசும், முற்போக்கு கருத்துகளைப் பேசும் படங்கள் நிறைய வந்தவண்ணம் இருக்கின்றன. இதே சில மாதங்களில் வெளியான மாரிசெல்வராஜ் அவர்களின் “பைசன் – காளமாடன்” திரைப்படமும், அருண் பிரபு அவர்களின் “சக்தி திருமகன்” திரைப்படமும் ஜாதி எதிர்ப்பைப் பேசும் முற்போக்கு படங்களே. குறிப்பாக சக்தி திருமகன் நேரடியாக பெரியாரை, சுவரெழுத்து சுப்பையா அவர்களை ஒரு கதாபாத்திரமாக்கி பேசுகின்றது.

ஆனால், இந்தப் படங்களில் இருந்து “Dude”
திரைப்படம் எங்கே வேறுபடுகின்றது என்றால், அது ஜாதி எதிர்ப்பை, ஜாதி ஆணவக்கொலை எதிர்ப்பை, மூடநம்பிக்கை எதிர்ப்பை, பெண்ணடிமைத்தன்மை எதிர்ப்பை ஒரு பிரச்சார
மாக செய்யாமல் ஒரு பகடியாக செய்கின்றது.

படத்தின் முதல் காட்சியிலேயே, பிரதீப் தனது முன்னாள் காதலியின் திருமணத்திற்கு வருகிறார். திருமணம் முடிந்து அந்தப் பெண்ணும் அவரது கணவரும் இருக்கிறார்கள். பிரதீப் தன்னை ஏன் அந்தப் பெண் வேண்டாம் என்று சொன்னார் என அவரிடமே கேட்கிறார். பேசிக்கொண்டு இருக்கும் போதே தவறுதலாக அந்தப் பெண்ணின் தாலி அறுந்து பிரதீப்பின் கையில் வந்து விழுகிறது. அதன் பிறகு ஒரே களேபரம் நடக்கிறது. இவை அனைத்தும் படத்தைப் பார்க்கும் பார்வையாளர்களால் விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறது.

படம் முழுவதும் இந்தத் தாலி என்னும் விஷயத்தை நகைச்சுவையாக கொண்டு சென்று இருக்கிறார்கள். படத்தின் பிற்பகுதியில் ஒரு காட்சியில் பிரதீப் மீண்டும் அந்த முன்னாள் காதலியைச் சந்திக்கும்போது, அதே தாலி குறித்து பேச்சு வரும் போது, அந்தப் பெண்ணின் கணவன், இந்தா உன் தாலி, பெட் ரூமிலேயே விட்டுட்டு வந்துட்ட என்று எடுத்து வந்து கொடுப்பார். அதற்கும் பார்வையாளர்கள் அரங்கம் அதிர சிரித்தார்கள்.

இப்படியாக பழமைவாதிகள் பல்லாண்டு காலமாக பாதுகாத்து வந்த தாலி சென்டிமென்ட்டை நகைச்சுவையாக கடந்து செல்கிறது இப்படம். நிஜ வாழ்விலும் இன்றைய பெண்கள் தாலி என்பதை ஒரு நகையாக மட்டுமே அணிகிறார்கள் என்பதால்தான் தமிழ் மக்களால் இந்தக் காட்சிகளை இயல்பாகச் சிரித்துக் கடக்க முடிகிறது என்பதும் உண்மை.

இப்படி படம் முழுக்க பல காட்சிகள் பகடியாக இருப்பதால்தான், பழமைவாதிகளால் இப்படம் எதிர்க்கப்படுகிறது. அவர்களால் திரையரங்கில் பெரும்பான்மை மக்களால் இந்தக் காட்சிகள் ரசிக்கப்படுவதையும் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

படத்தின் நாயகி ‘குறள்’ எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மமிதா மற்றும் ‘அகன்’ எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பிரதீப். இருவரும் உறவினர்கள். சிறு வயதில் இருந்தே நண்பர்களாகப் பழகுகிறார்கள். அகனின் நிறுவனத்தில் தான் குறளும் பணிபுரிகிறார். மமிதாவின் தந்தை சரத்குமார், பால்வளத்துறை அமைச்சராக இருக்கிறார். குறள், அகனை ஒருதலையாக காதலிக்கிறார். அவரிடம் தன் காதலையும் சொல்கிறார். ஆனால், அகன் தன்னால் குறளை நண்பராக மட்டுமே பார்க்க முடிகிறது, காதலியாக பார்க்க முடியவில்லை என்று சொல்லிவிடுகிறார். குறள் காதல் தோல்வியில் உடைந்துவிடுகிறார். அகன் தான் பணிபுரியும் நிறுவனத்தில் இருந்து வெளியேறி, ஊரை விட்டு வெளியேறி விடுகிறார்.

குறளை விட்டு சென்ற சில மாதங்களுக்குப் பின் தான், அகன் குறள் மீதான தனது காதலை உணர்கிறார். தனது மாமா சரத்குமாரிடம் சென்று சொல்கிறார். சரத்குமார் தான் குறளிடம் பேசுவதாகச் சொல்கிறார்.

திருமணம் ஏற்பாடு செய்யப்படுகிறது. குறள் மீண்டும் வருகிறார். வந்தவர், தான் இன்னொருவனை விரும்புவதாகச் சொல்கிறார். அந்த இன்னொரு பையனுக்காக உயிரை விடவும் குறள் தயாராக இருக்கிறார் என்பதைப் பார்த்த அகன், குறளின் காதலைச் சேர்த்துவைக்க நினைக்கிறார். நீயே சென்று உன் தந்தையிடம் சொல்லி திருமணத்தை நிறுத்தி, உனக்குப் பிடித்தவனைத் திருமணம் செய்துக்கொள் என அகன் சொல்கிறார்.

அதன்படி, குறள் தன் தந்தையிடம் சென்று பேசும்போதுதான், தந்தையின் இன்னொரு கொடூர முகம் தெரிகிறது. ஜாதிக்காக தன் தங்கையையே கொன்று அதன் மூலம் அரசியலில் செல்வாக்கு பெற்று அதிகாரத்தில் இருக்கும் ஒரு கொடூரமான ஜாதிவெறியன்தான் குறளின் தந்தை சரத்குமார் என்னும் உண்மை குறளுக்கும், அகனுக்கும் தெரிகிறது. அங்கிருந்து அகன் எப்படி குறளை அவரது காதலரோடு சேர்த்துவைக்கிறார் என்பது தான் கதை.

ஒரு சராசரியான தமிழ்ப் படத்தில் இத்தனை காலம் நாம் பார்த்த பல பிம்பங்களை இப்படம் உடைத்து இருக்கிறது.

கே.பாக்கியராஜின் பிரபலமான வசனமான “என் காதலி உங்கள் மனைவியாகலாம், உங்கள் மனைவி என் காதலியாக முடியாது” என்பதை உடைத்து…

தாலி முக்கியமில்லையா மாப்ள என சரத்குமார் கேட்கும் போது, தாலியை விட, அதை தாங்கி நிற்கும் பெண்ணின் உணர்வு தான் முக்கியம் என பிரதீப் பேசும் வசனம் தானே நூறாண்டுகளுக்கு முன்னால் பெரியாரின் குரலாக இருந்தது? இந்த வசனத்திற்கு எழும் கைத்தட்டு பெரியாருக்கான வெற்றி தானே!!

குடும்பமானம், ஊர் பேச்சு, நாலு பேர் நாலு விதமாகப் பேசுவார்கள் என இங்கே கட்டி வைக்கப்பட்டிருக்கும் வெத்து பிம்பங்களைச் சுக்குநூறாக உடைத்து இருக்கிறது “டியூட்” திரைப்படம்.

இந்த 2025லும் லவ் பண்ணா, தன் பெண்ணை வெட்டுவேன்னு சொல்ற அப்பாவும் அம்மாவும், அதைப் பார்த்து சும்மா இருக்கும் இந்தச் சமூகமும்தான் ஆபாசமானது என்று பிரதீப் பேசும்போது அரங்கமே கைதட்டலால் அதிர்கிறது.

குறிப்பாக, “சொந்தம் விட்டுப் போகணும் மாமா”, வெளிய போய் புது சொந்தங்களைக் கொண்டு வரணும் மாமா’ – (ஜாதி மறுப்புத் திருமணங்களால்) ‘கவுரவம் கெடுகிறது என்றால் நீங்க சாவுங்கடா” போன்ற வசனங்கள் சூப்பர்.

திருமணம் ஆன உடன் பிரதீப்பின் தாயான ரோகிணி, “பெண்ணை அனுசரித்து போ” என திருமணம் ஆன ஆணுக்கு அறிவுரை கூறும் அந்த முழு ஷாட்டும் தமிழ் சினிமாவுக்கே புதிது.

படத்தில் சில குறைகளும் இருக்கின்றன. சில இரட்டை அர்த்த வசனங்களைத் தவிர்த்து இருக்கலாம். ஆனால், genz மொழியில் ஜாதி எதிர்ப்பை, ஆணவக்கொலைக்கு எதிரான குரலை, அகமணமுறை – தாலி சென்டிமென்ட்டிற்கு எதிரான குரலை, முற்போக்கு பெரியாரிய கருத்துகளைக் கொண்டு சேர்த்ததற்காகவே இந்தத் திரைப்படத்தை நாம் எவ்வளவு பாராட்டினாலும் தகும். இந்தப்படம் இன்னும் பல ஆண்டுகளுக்குப் பேசுபொருளாக இருக்கும். வாய்ப்பிருப்பவர்கள் அவசியம் இத்திரைப்படத்தைப் பார்க்கவும்.

படத்தின் வெற்றிவிழாவில் பேசிய இயக்குனர் கீர்த்தீஸ்வரன் – இந்தப் படம் பற்றி நிறைய விவாதங்கள் உருவாகியிருக்கு. இதுவரை பேசாத விஷயம் சொல்லி இருக்காங்க… அப்படின்னு.

இது தமிழ்நாடு, இந்தத் தமிழ்நாட்டில் நிறைய பெரியவங்க இருந்திருக்காங்க. பெரியாரும் இருந்திருக்காங்க. அவங்க வழியிலதான் நாங்களெல்லாம் பேசிட்டு இருக்கோம். தமிழ்நாட்டில் இதைப் பேசுவது புதிது இல்லை, இதற்கு முன்னும் பேசியிருக்காங்க. நாங்க அடுத்த தலைமுறைக்கு சொல்லுவோம்.

இதை எவ்வளவு பொழுதுபோக்கா, சினிமா மொழியில, பார்வையாளர்களுக்கு ஏத்துக்கிற மாதிரி, பெரிய ஸ்கேல்ல சொல்ல முடியுமோ அப்படி சொல்ல முயற்சி பண்ணிட்டு இருப்பேன்.” எனப் பேசியுள்ளார்.

படத்தின் இயக்குநர் கீர்த்தீஸ்வரன் அவர்களையும், இப்படத்தில் நடித்த நடிகர் நடிகைகளையும் பாராட்டுவோம் ! v