Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

பச்சைப் பொய் ‘டீப் பேக்’

செயற்கை நுண்ணறிவு எத்தனையோ வசதிகளை நமக்கு ஏற்படுத்திக் கொடுத்துக்கொண்டிருந்தாலும்,அதனால் விளையும் சில தீமைகளும் சமூகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.அப்படிப்பட்ட ஒன்றுதான் ‘டீப் பேக்’(DeepFake) என்னும் செயலி.

ஒருவர் சொல்லாததை,செய்யாததை அவர் சொன்னதாக, செய்ததாகப் பச்சைப்பொய்யாகச் சொல்வது, செய்வதுதான் டீப்பேக்.

திக்கித் திக்கி ஒருவர்  பேசுகின்றார்  அவர் சரளமாக மேடையில் அழகுறப் பேசுவதுபோலக் காட்டவேண்டும் என்று சொன்னால் திக்கிக் திக்கிப் பேசுபவரின் முகம் இப்படியும் அப்படியும்
அசைவதுபோல இருக்கும் சில வீடியோ பிரேம்கள், மிக நன்றாகப் பேசியவரின் ஒலிப்பதிவு
பேச்சு, இரண்டையும் ‘டீப் பேக்’ செயலியில் கொடுத்துவிட்டால், ஒலிப்பதிவில் இருப்பவரின் பேச்சுக்கு ஏற்ப வீடியோவில் முகபாவனைகளை மாற்றி, உதட்டின் அசைவினைப் பொருத்தி பொய்யாக ஒரு வீடியோவை ‘டீப் பேக்’ தயாரித்து
விடும். திக்கித்திக்கிப் பேசியவர் பேசிய பேச்சு இதுவல்ல என்று அந்த வீடியோவைப் பார்ப்பவரால் கண்டுபிடிக்கவே இயலாது.

மறைந்த கிருபானந்தவாரியார் அவர்கள் பேசிய வீடியோவை எடுத்துக்கொண்டு, அவரது பேச்சுக்குப் பதிலாகத் தந்தை பெரியார் அவர்கள் பேசிய ஆடியோவை அதோடு இணைத்துவிட்டால், தந்தை பெரியார் பேசிய பேச்சை, கிருபானந்தவாரியார் பேசுவதுபோல ‘டீப் பேக்’ காட்டும். தந்தை பெரியாரின் பேச்சுக்கு
ஏற்ப கிருபானந்தவாரியார் அவர்களின் முகபாவனைகள், உதடு உச்சரிப்பு போன்ற
வற்றை மாற்றிவிடும். இதே நிகழ்வை மாற்றியும் காட்டலாம்.

இந்தத் தொழில் நுட்பம் மிகப்பெரிய பிரச்சனை
யாக உலகம் முழுவதும்  உருவெடுத்துள்ளது.

சாதாரண மனிதர்களை மட்டுமல்ல, பெரிய பெரிய பொறுப்புகளில் இருப்பவர்களையும் இந்தத் தொழில்நுட்பம் பாதிக்கிறது. எடுத்துக்காட்டாக இத்தாலி பெண் பிரதமர் ஜார்ஜியா மெலோனியின் முகத்தை, ஆபாச திரைப்படத்தில் உள்ள நடிகையின் உடலுடன் பொருத்தி வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்தனர். அவர் இழப்பீடு கேட்டு வழக்குத் தொடர்ந்துள்ளார் (மார்ச் 21,2024, தினத்தந்தி)

தி.மு.க. குழுத் தலைவர் திரு. டி.ஆர்.பாலு அவர்கள், ‘‘மக்களவையில் ‘டீப் பேக்’ தொழில் நுட்பத்தைத் தடுத்து நிறுத்த மத்திய அரசு எடுத்
துள்ள நடவடிக்கைகள் என்னென்ன?’’ என்ற கேள்வியை நாடாளுமன்றத்தில் எழுப்பினார்.

அதற்கு ஒன்றிய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்
அவர்கள்,  நடவடிக்கைகள் எடுப்பதற்கான முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகின்றது என்று பதில் அளித்துள்ளார். விரைவில் சட்டம் வருகின்றது என்று செய்திகள் வருகின்றன.

குற்றவாளிகளை அடையாளம் காணவும், கைது செய்யவும் கேமராக்கள் உதவுகின்றன. ஆனால், கணினிக்கு முன்னால் அமர்ந்து குற்றச்செயல்களைச் செய்பவர்களை எப்படிக் கண்டுபிடிப்பது? நாளும் புதிய புதிய தொழில் நுட்பங்கள் வருகின்றன. புதிய புதிய முறையில் குற்றவாளிகள் குற்றங்களைச் செய்கிறார்கள். இது மிகப்பெரிய சவாலாகத்தான் ஆட்சியாளர்களுக்கு, மக்களுக்கு உள்ளது.

சீனாவில் ‘டீப் பேக்’கை முறைப்படுத்தும் சட்டம் 2023 ஜனவரி மாதம் அமல்படுத்தப்
பட்டுள்ளது. அது செயற்கையாக உருவாக்கப்
பட்ட  அல்லது திருத்தப்பட்ட படங்கள், வீடியோக்கள் அல்லது உரைக்கு உண்மையான அல்லது உண்மையானதாக உணரக்கூடிய வெளிப்படையான லேபிள்கள் தேவை என்று சட்டம் இயற்றப்பட்டுள்ளது.குற்றம் இழைப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கையையும் சீனா எடுத்து வருகிறது.

கனடா நாடு  மூன்று விதமாக இந்த ‘டீப் பேக்’ பிரச்சனையைக் கையாளுகிறது. ‘டீப் பேக்’ பற்றிய முறையான விழிப்புணர்வை ஏற்படுத்தும் பரப்புரையை அரசே மேற்கொள்கிறது. ‘டீப் பேக்’குகளைக் கண்டறிய அரசாங்கம் ஆராய்ச்சி மய்யங்களைத் திறந்
துள்ளது. தீய நோக்கத்துடன் ‘டீப் பேக்’குகளை
உருவாக்குபவர்கள் மற்றும் விநியோகிப்பவர்
களைக் கட்டுப்படுத்தும், தண்டனை கொடுக்கும் சட்டங்களை இயற்றியுள்ளது.

இதைப்போல உலகில் உள்ள பல நாடுகள்  இந்த ‘டீப் பேக்’கைக் கட்டுப்படுத்தும் சட்டங்களை  இயற்றியுள்ளன. இயற்றிக்கொண்டு வருகின்றன.

‘டீப் பேக்’ பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும் என்று பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடந்த சர்வதேச உச்சி மாநாட்டில் இந்திய ஒன்றியப் பிரதமர் மோடி அவர்கள்  பேசியிருக்கிறார். ஆனால், போலி பெயர்களை வைத்துக்கொண்டு, எதிர்க்கட்சியைச் சார்ந்த தலைவர்களை, தலைவிகளை மிக மோசமாக வசை பாடுவதையே இந்துத்துவா தொழில் நுட்ப அணியினர் தொடர்ச்சியாகச் செய்துவருகின்றனர். இந்துத்துவா அமைப்பு
களின் அலுவலக முகவரியைப் போட்டு, இலட்சக்கணக்கான தொலைத் தொடர்புத் துறை சிம்களை இந்துத்துவா தொழில் நுட்ப அணியினர் வாங்குகின்றனர். அந்தச் சிம்களைப் பயன்படுத்திப் புனைப்பெயர்களில் கெட்ட வார்த்தைகளால், சொல்ல முடியாத பொய்ச்செய்திகளைத் தொடர்ச்சியாகப் பரப்புரை செய்து வருகின்றனர். ஏறத்தாழ 1.5 இலட்சம் பேர் இப்படிப் புனைபெயர்களில், சில அய்.பி.முகவரிகளில் மட்டும் இயங்குகின்றனர். ஒரே வீட்டு எண்ணில் 600,700 வாக்காளர்கள் இருப்பதுபோலப் போலி வாக்காளர்களைத் தயார்செய்து, வோட்டுத் திருட்டு செய்வதுபோல, ஒரே முகவரி கொடுத்து பல ஆயிரம்
அய்.பி. எண்ணைத் தயார் செய்து இணையத்தில் ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனை செய்து தவறு  இழைக்கின்றனர். தவறு செய்யும் தனி நபர்களைக்  கண்டுபிடிக்க இயலாத சூழலை, ஒன்றிய அரசின் உதவியோடு  உருவாக்கி வைத்துள்ளனர்.

அதைப்போல இந்த ‘டீப் பேக்’ தொழில் நுட்பம், இந்தியாவில் யார் யாரை என்ன பாடுபடுத்தப்போகிறது என்று தெரியவில்லை. ஒரு காலத்தில் கைரேகைச் சட்டம் என்ற ஒன்று, தமிழ்நாட்டில் இருந்தது. இவர்கள் குற்றம் செய்வார்கள் என்று ஆட்சியாளர்களாகத் தீர்மானித்துச் சில சாதியைச் சார்ந்தவர்களைக் குற்றப்பரம்பரைகள் என்று முத்திரை குத்தி, கைரேகையை வைக்கச்சொன்னார்கள்.பின்னர் சட்டத்தின் மூலமாக அக்கொடுமை நீக்கப்பட்டது. ஆனால், இன்று கணினிக்குள் நுழைந்தாலே கைரேகை வைக்கவேண்டும் என்பதைப் போல நமது கணினி, அல்லது அலைபேசியில் இருந்து செய்தியோ, ‘டீப் பேக்’ வீடியோவையோ வெளியிட்டால் நமது
அடையாளத்தையும் (கைரேகை, விழிகள் அடையாளம் போன்றவற்றையும் இணைத்து அனுப்பவேண்டும்) என்னும் கோரிக்கையை நாமே எழுப்பவேண்டிய அளவிற்குத் தொழில்
நுட்பம் நம்மைக் கொண்டு வந்து விட்டிருக்கிறது. இதற்குக் காரணம் பணம் பெற்றுக்கொண்டோ அல்லது ஒரு பாசிச கொள்கைக்கு அடிமையாக இருப்பதன் காரணமாகவோ, பொய்யைப் பரப்புவதை, அவதூறாக எழுதுவதையே தங்கள் வாழ்க்கையாகக் கொண்டிருப்பவர்களைப் பாசிச அமைப்பினர் இந்தியாவில் உருவாக்கி வைத்திருக்கும் காரணம்தான்..

‘எவர் சொன்னாலும்,எதைச்சொன்னாலும், நானே சொன்னாலும், உன் அறிவு கொண்டு சிந்தி. உன் அறிவுக்குச் சரியென்று பட்டால் ஏற்றுக்கொள், தவறென்று பட்டால் விட்டுவிடு’ என்று தந்தை பெரியார் சொன்னதை ஒவ்வொரு நிலையிலும் கடைப்பிடிக்க வேண்டிய தேவை,
இன்றைய செயற்கை   நுண்ணறிவு உலகில்  ஏற்பட்டு
இருக்கிறது. என்ன டீப்பேக் வீடியோ ஆடியோ வந்தாலும்,இவர் இப்படிப் பேசி இருக்கமாட்டார், இவர் இதைச் செய்திருக்கமாட்டார் என்னும் நம்பிக்கையே எதிர்காலத்தில் மிகவும் தேவைப்
படும். ‘கண்ணால் பார்ப்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரித்து உண்மை அறியும் அணுகுமுறையே’ நாம் பார்க்கும் ஒவ்வொரு இணையதள வீடியோவுக்கும் ஆடியோவுக்கும் தேவை. v