Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

அறிவும் மானமும் மாந்தர்க்கழகு!

ல்லாத ஒன்றினையே இருப்ப தாக

ஏமாற்றிப் பிழைப்போனைமுட்டாள்என்றார்!

பொல்லாத நரிக்குணத்தார் புரட்டை எல்லாம்

புரியாமல் பரப்பிடுவோன் கயவன் என்றார்!

கல்லாதான், சிலைவடிவை வணங்கு வோனைக்

காட்டுவிலங் காண்டியெனக் கடிந்தார் அய்யா!

நல்லெண்ணச் சிந்தனைகள் பெரியா ராலே

நாடெங்கும் பரவியதால் விழிப்பைப் பெற்றோம்!

 

அறிவார்ந்த தமிழுக்குமுகம் அமைதல் வேண்டி

அய்யாவும் அண்ணாவும் கலைஞர் தாமும்

நெறிசார்ந்த பகுத்தறிவை மக்கள் மன்றில்

நிலைக்கின்ற பரப்புரையை எழுத்தில் பேச்சில்

குறிக்கோளாய்க் கொண்டிருந்தார்! மடமை நோயால்

கோயில்குளம் எனச்சுற்றி அலைய வைக்கும்

வெறிக்கூட்டம் கற்காலம் நோக்கி நம்மை

வீரியமாய் இழுத்துச்செல் கின்றார் என்போம்!

 

பிற்போக்குச் சனாதனச் சேற்றில் மூழ்கிப்

பேதைமையின் வயப்பட்டோர் உணரார் உண்மை!

கற்சிலைக்குப் பாலூற்றி மாலை யிட்டுக்

கனியாவும் முன்வைப்பார்! துன்பம் நீங்க

நற்காலம் எதிர்காலம் சிறக்க வேண்டி,

நாளெல்லாம் கணியர்முன் காத்து நிற்பார்!

பற்றுடனே பரிகாரம் யாவும் செய்வார்!

பரலோக மோட்சத்தை எண்ணி மாய்வார்!

பகுத்தறிவே இல்லாதான் என்றும் தேரான்!

பண்பாட்டு நல்வாழ்வைத் தொலைத்தே வீழ்வான்!

வகுத்துரைத்த ஆன்றோர்சொல் மறந்தோ னாகி

வன்மமிகு ஆரியத்தின் பிடியில் சிக்கித்

தகுதியினை முற்றாக இழந்தான்! மூடத்

தமிழனுமே ஆத்திகத்தின் மடியில் வீழ்ந்தே

உகுக்கின்ற கண்ணீரோ மக்கள் தம்மின்

உயர்வான தன்மான வாழ்வை நல்கா!

அறிவோடு மானமுமே மாந்தர்க் கெல்லாம்

அழகென்றே அய்யாவும் உரக்கச் சொன்னார்!

நெறியோங்கும் சமூகத்தின் நீதி வாழ்வில்

நிலைபிறழ்ந்து போகாமல் இருப்ப தற்கே

குறிக்கோளை மனத்திருத்தி வாழ்வில் மேன்மை

குவிந்திடவே எண்ணாமல் சாலை ஓரம்

குறிசொல்வோர் முன்நிற்பார்! மொட்டை போட்டுக்

கோயிலிலே நேர்த்திக்கடன் செய்தேன் என்பார்!

விதியென்பார்! மறுபிறவிப் புளுகை நம்பி

விரும்புகிற சொர்க்கத்தில் வாழ்வ தற்கே

திதிதருவார்! இராசிபலன் நாளும் பார்ப்பார்!

தெளிவின்றிக் கைகளிலே கயிற்றைக் கட்டிப்

புதிதாக நற்பயன்கள் கிடைக்கும் என்பார்!

பூசைகளைப் பூரிப்பாய்ச் செய்வார்! பொல்லாச்

சதிக்கெல்லாம் கால்முளைத்தால் சாதி யாகும்!

சழக்கெல்லாம் ஒருங்கிணைத்தால் இமயம் தோற்கும்!

பொய்யளக்கும் புல்லரையே நம்ப வேண்டா!

புராணங்கள் புரட்டுகளை ஏற்க வேண்டா!

மெய்யெங்கும் சாம்பலினைப் பூசல் வேண்டா!

மீட்சிக்குத் தடையாகும் மடமை வேண்டா!

உய்வதற்கே வழிகாட்டாக் கல்வி வேண்டா!

உதவாத நம்பிக்கை நமக்கு வேண்டா!

செய்யும்நற் கடமையிலே தவற வேண்டா!

சிந்தனையின் மலடாக இருத்தல் நன்றோ? v