Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

தலையங்கத்தால் வெளிப்படும் ஆரியத்தின் அறிவீனம்! … கி.வீரமணி …

ிராவிட முன்னேற்றக் கழக இளைஞர்களின்
முதல் மாநில மாநாடு திருநெல்வேலியில் 2007, டிசம்பர் 15, 16 தேதிகளில் நடைபெற்றது. மாநாட்டில் முதல் நாள் மாலை நிகழ்ச்சியில் பங்கேற்று ‘காவியக் கலைஞர் 84’ என்னும் ஒலி ஒளிக் காட்சி நிகழ்ச்சியைத் நாம் தொடங்கி வைத்தோம். 10 லட்சம் இளைஞர்கள் பங்கேற்ற நம் மாநாடு தி.மு.க. வரலாற்றில் ஒரு புதிய மைல் கல்லாக திகழ்ந்தது.

இந்நிகழ்வில் பாராட்டு உரை வழங்கிய நாம், ‘“மிசா கொடுமையில் ஓர் ஆண்டு சிறையில் இருந்தது பெரிய தியாகம் அல்ல. என்னைக் காப்பாற்ற தன் வாழ்க்கையை இழந்தாரே சிட்டிபாபு அது தான் பெரிய தியாகம்’’ என்று அன்றைய இளைஞரணி செயலாளர் தளபதி மு.க.ஸ்டாலின் கூறிய பேட்டியைப் பாராட்டி, ‘‘ஸ்டாலின் ஒரு சிறந்த தலைவர் என்பதற்கு இது தான் எடுத்துக்காட்டு’’ என்று பாராட்டுரை வழங்கினோம். மேலும் நெல்லை தி.மு.க., இளைஞரணி மாநாட்டை விஞ்சிட இன்னொரு முறை மு.க.ஸ்டாலின்தான் முயற்சிக்கவேண்டும் என்றும், மாநாட்டின் நேர்த்தியைக் கண்டு தாய்க்கழகம் பூரிக்கிறது என்றும், சமுதாயக் கொள்கை உள்ள அரசியல் கட்சி தி.மு.க.வே என்றும், இந்தியாவில் ஜனநாயக முறையில் இயங்கும் கட்சியும் அதுவே என்றும் இளைய கலைஞராக உயர்ந்திருக்கிறார் மு.க.ஸ்டாலின், என்றும் கூறி, வயிற்றெரிச்சல்காரர்கள் இனிமேலாவது திருந்தட்டும்! என்று தெரிவித்தோம்.

சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்ட இம்மாநாட்டினை ‘தினமணி’ ஏடு கடுமையாக விமர்சனம் செய்திருந்தது. விமர்சனத்தில், ‘‘மாநாடு பேரணி என்ற பெயரில் பறக்க விடப்படும் துணிகள் இருந்தால் உடுக்க உடை இன்றி அவதிப்படும் தெருவோரவாசிகளின் அவசர தேவை பூர்த்தி செய்யப்படும் என்றும், போஸ்டர்களுக்காக செலவிடப்படும் காகிதம் ஆயிரக்கணக்கில் குழந்தைகளின் பாடப் புத்தகத்திற்கு பயன்படும் என்றும், டிஜிட்டல் பேனர்களுக்குப் பயன்படும் பேனர்களின் செலவிடும் பணத்தில் மாதந்தோறும் இளைஞர்கள் உடற்பயிற்சி மய்யம் அமைத்து ஆரோக்கியமான வருங்காலத்துக்கு வழிகாட்டலாம்’’ என்றும் கூறியிருந்தது.

இதற்குப் பதிலடி தந்த நாம், இப்படி இதோபதேசம் செய்யும் கூட்டத்தாரை நோக்கி சில கேள்விகளை எழுப்பினோம்.

‘‘இந்த “இதோபதேசத்தை” பல லட்சம் மக்கள் கூடும் மகாமகத்திற்குச் செய்வார்களா?

அய்யப்பனுக்கு மாலை போட்டுப் படையெடுக்கும் பக்தர்களை (பரிதாபமாக சிலர் விபத்துக்குள்ளாகி பலியாவது மேலும் வேதனை) நோக்கி அறிவுரைப்பார்களா?

திருவண்ணாமலை தீபத்திற்காக கொட்டப்
படும் நெய் பற்றி ‘தினமணி’ எழுதுமா?

‘திருவண்ணாமலை தீபம்’ என்ற பெயரில் எத்தனை டன் நெய், எண்ணெய், திரிகளுக்குச் செலவிடும் சிறு துண்டு துணிகள் இவைகளைத் தடுத்து, (3000 கிலோ நெய், ஓராயிரம் மீட்டர் காடா துணி) கோவணம், காலுடை இல்லாத இளைஞர்களுக்குத் தாருங்கள் என்று எழுதியதுண்டா? இனியாவது எழுதுமா?

திருப்பதிக்குச் சென்று திருப்பதி கடவுளை மகா பெரிய முதலாளிக் கும்பல் பணம் கொட்டுவதைப்பற்றிச் சொன்னதுண்டா? இனிமேலாவது சொல்லுவார்களா?

வேலூரில் 300 கோடி ரூபாயில் தங்கத்தையே வைத்து, தங்கத்திலேயே கதவுகள், ஸ்குரு ஆணிகள், வழிப் பாதைகள் உள்பட செலவழித்து கட்டிக் கும்பாபிஷேகம் நடத்தியபோது, “தினமணி”யார் தலையங்கம் தீட்டினாரா? வறுமைக்கோட்டில் வாழும் மக்களைப் ”படைத்துவிட்டு” ஆண்டவன் மட்டும் தங்கக் கோயிலைத் தனது வாசமாக்கிக் கொள்வது நியாயமா? என்று கேட்டதுண்டா “தினமணி?”

அத்வானி உள்துறை அமைச்சராக இருந்தபோது, டில்லியில் சுமார் 700 கோடி ரூபாய் செலவழித்து ஒரு கோயில் கட்டினாரே, அதன் பயன்பாடு இன்றைக்கும் என்ன? எப்போதாவது கேட்டதா தினமணி?

சிதம்பரத்தில் தங்கக் கூரை நடராஜருக்கு எதற்கு?

மக்கள் ஓட்டைக் குடிசை, கூரையில்லாத வீடுகளில் அல்லவா ஆலாய்ப் பறக்கிறார்கள்? அது “தினமணி”யார்களுக்குத் தெரியாதா?

“பேசுநா இரண்டுடையாய் போற்றி” என்று அண்ணா சொன்ன ஆரிய மாயை என்பது இதுதான்!

தீபாவளி கொண்டாடி, பட்டாசு வெடித்து காசைக் கரியாக்கி வீணாக்காதீர் என்று மனித சக்தி வீணாகக் கூடாது என்று கூறியதுண்டா? இனியாவது கூறத் தயாரா?

பா.ஜ.க.வின் அரசியல் கூட்டங்கள். அது கமிட்டிக் கூட்டம்கூட எவ்வளவு ஆடம்பரத்
துடன் நடைபெற்றன – நடைபெறுகின்றன. என்கிறபோது, அது கூடாது, எல்லோரும் “சுதேசி முறையில்”-“விதேசியை” விரட்டிவிட்டு ஏற்பாடுகள் இருக்கட்டும் என்று கூறியதுண்டா? இனியாவது கூறுவார்களா?’’ என்று கேட்டோம்.இன உணர்வோடும், மொழி உணர்வோடும்,
தமிழர் பண்பாட்டு ரீதியாகவும் தமிழர்களுக்காக
எது நடந்தாலும் அதனை எந்த வகையிலாவது
கொச்சைப்படுத்துவது என்பது பார்ப்பனர்
களுக்கே உரிய உடன் பிறந்த நோயாகும்.

அதேபோல், ‘‘தமிழ் மொழியைச் செம்மொழி
யாக்கச் சட்டம் கொண்டு வந்தால் – என்னென்ன பயன்?’’ என்ற கேள்விக்கு,

‘தினமலரின்’ (13.6.2004) பதில் என்ன தெரியுமா?

“காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும்… ஏழை நெசவாளர் வீட்டுத் தறி நிற்காமல் இயங்கும். ஒருவேளை வயிற்றுக்கே கஞ்சி இல்லாதவருக்கு மூன்று வேளையும் மட்டன் பிரியாணி கிடைக்கும்” என்பது.

“தினமலர்” இப்படி அன்று எழுதியது. இப்பொழுது “தினமணி” இப்படி எழுதுகிறது. சமஸ்கிருத ஆண்டு என்று ஓர் ஆண்டையே அறிவித்து, பா.ஜ.க., ஆட்சியில் பணத்தைக் கொட்டி அழுதார்களே – அப்பொழுது இதே பாணியில் “தினமலர்கள்” எழுதியதுண்டா?

தொழில் ரீதியாகப் பார்ப்பனர்கள் போட்டி போட்டுக்கொண்டாலும், இன ரீதியாக – தமிழின எதிர்ப்பு ரீதியாக நூல் பிடித்ததுபோல ஒரே மாதிரி சிந்தனையில் பார்ப்பனர்கள் இருப்பதைத் தமிழர்கள் கருத்தில் கொண்டு சிந்திக்கவேண்டும்.

தி.மு.க.வை, கலைஞரைத் தனது பரம்பரை எதிரி என்று கூறிய ஆரியத் தலைமை அம்மாநாட்டினைத் தடுக்க (மதுரை) உயர்நீதி மன்றம் சென்று முட்டிப் பார்த்து மூக்குடைந்து நிற்கும் நிலையில், இப்படிப் பல “மூளி முயற்சிகள்” முளைத்துக் கிளம்புகிறது!

இன உணர்வற்ற தமிழர்களுக்கு இதன்மூல
மாவது புரிதல் ஏற்பட்டால் சரி!

இப்படி தலையங்கங்கள் எழுதியதன்மூலம் உண்மையில் வெளிப்படுவது தி.மு.க.,வின் பலவீனம் அல்ல; ஆரியத்தின் அறிவீனம், அகங்காரம் என்பதை நாடும், நல்லவர்களும் அறிவார்கள்“ என்று எழுதியிருந்தோம்.

சிங்கப்பூர் பெரியார் சேவை மய்யத்தின் பொறுப்பாளர்களுள் ஒருவரும், சங்கம் துணியக உரிமையாளரும், இலக்கிய ஆர்வலருமான எம்.இலியாஸ் அவர்களின் புதிய இல்லத்தின் இனிய புகுவிழா 16.12.2007 ஞாயிறு மதியம் 12 மணிக்கு மயிலாடுதுறை வட்டம் அரங்கக்குடியில் (வடகரை) சிறப்பாக நடைபெற்றது.

புதிய இல்லத்தை நாம் திறந்து வைத்தோம்.
அதனைத் தொடர்ந்து சிறப்பாக அமைக்கப்பட்ட
விழா மேடையில் நிகழ்ச்சிகள் நடந்தன.
புதிய இல்லத்தின் புகுவிழா, சமூக ஒற்றுமைப் பெருவிழா, கல்வி உதவி வழங்கும் விழா, நூல் வெளியீட்டு விழா ஆகிய விழாக்கள் சிறப்பாக நடைபெற்றன.

தொடக்கத்தில் எம்.இலியாஸ் வரவேற்புரை
யாற்றினார்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்
தலைவர் பேராசிரியர் ஜவஹருல்லா விழாவுக்குத்
தலைமை வகித்தார்.

தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், இசை முரசு இ.எம்.அனீபா, திரைப்படப் பாடலாசிரியர் யுகபாரதி ஆகியோர் உரையாற்றிய பின் நாம் உரையாற்றினோம்.

சுயமரியாதைச் சுடரொளி திருச்சி ஆளவந்தார் நினைவு அறக்கட்டளை சொற்பொழிவு
நிகழ்ச்சி 17.12.2007 அன்று மாலை 5 மணியளவில்
அருண் ஓட்டல், சுமங்கலி மகாலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பெரியார் களஞ்சியம் மதம் (பாகம்-3) “வாழ்வியல் சிந்தனைகள்” (பாகம் – 4), ‘சிங்கப்பூரில் தமிழர் தலைவர்” ஆகிய நூல்களின் வெளியீட்டு நிகழ்வுகள் நடைபெற்றன.

நிகழ்ச்சியில், பகுத்தறிவாளர் கழக திருச்சி மாநகரத் தலைவர் பா.லெ.மதிவாணன் வரவேற்புரையாற்றினார்.

பெரியார் பன்னாட்டு மய்யத்தின் இயக்குநர் டாக்டர் சோம.இளங்கோவன் தலைமை வகித்தார்.

“வாழ்வியல் சிந்தனைகள்” (பாகம்–4) நூலைத் திருச்சி கலைக்காவேரி நிறுவனர் அருள்திரு ஜார்ஜ் அடிகளார் அறிமுகம் செய்து வைத்து வெளியிட்டார் அதனைக் கல்வி வள்ளல் “வீகேயென்” கண்ணப்பன் அவர்களின் சார்பாக “வீகேயென்” பாண்டியன் 150 வாழ்வியல் சிந்தனை நூல்களை ரூ.10,000 கொடுத்து பெற்றுக் கொண்டார்.

பெரியார் களஞ்சியம் – மதம் எனும் தொகுப்பு
நூலைத் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநில துணைத் தலைவர் கவிஞர் நந்தலாலா அறிமுகம் செய்து வெளியிட, கல்யாணசுந்தர படிப்பகத்தின் தலைவர், தொழிலதிபர்
மேகா பிச்சை பெற்றுக் கொண்டார்.

சிங்கப்பூர் எம்.இலியாஸ் அவர்கள் தொகுத்த “சிங்கப்பூரில் தமிழர் தலைவர்” நூலை அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் இரா.தி.சபாபதி மோகன் அறிமுகம் செய்து வெளியிட, பெரியார் பெருந்தொண்டர் ஞான.செபஸ்தியான் பெற்றுக் கொண்டார்.

இதில் பங்கேற்று உரையாற்றிய நாம், திருச்சி ஆளவந்தார் அவர்கள் இயக்கத்திற்கும், “விடுதலை”க்கும் ஆற்றிய அரும் பணிகளை நினைவு கூர்ந்ததுடன், அவர் பணிகள் என்றைக்கும் போற்றத்தக்கதாகும் என்றும். ஆளவந்தார் அவர்களுடைய நிருவாகத் திறன், நாணயம் போன்றவற்றை விளக்கி, மாநாடுகளில் நுழைவு நன்கொடை வசூலிக்கும் பணியினைத் தந்தை பெரியார் அவர்கள் ஆளவந்தாரிடம்தான் ஒப்படைப்பார் என்பதையும் எடுத்துக் கூறினோம்.

இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் நம்பியூரில்
நடைபெற்ற சம்பவம் ஒன்றை இளைஞரணி தோழர் மு.சென்னியப்பன் (தற்போதைய கோபி மாவட்டத் தலைவர்) நம் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

அவ்வூரில் கற்பக விநாயகர் காமாட்சி அம்மன் திருமண மண்டபம் தனியாருக்குச் சொந்தமான மண்டபத்தில் மாரியப்பன் என்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த தோழர், தன் மகளின் காதணி விழாவை நடத்துவதற்காக முன்பணமாக ரூபாய் ஆயிரம் கட்டி அதற்கான பற்றுச் சீட்டையும் பெற்றுக்கொண்ட நிலையில், தோழர் மாரியப்பன் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்று தெரிந்தவுடன். அவர் மகள் காதணி நிகழ்ச்சியை அங்கே நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

தோழர் மாரியப்பன், நம்பியூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில்,
காவல்துறையினரும் விசாரித்து. ஒப்புக்
கொண்டபடி கல்யாண மண்டபத்தில் காதணி நிகழ்ச்சியை நடத்திட அனுமதிக்கவேண்டும் என்று கல்யாண மண்டப உரிமையாளரிடம் எழுத்துமூலமாக ஒப்புதல் பெற்றுள்ளனர்.

இதற்குப் பிறகும் உயர்ஜாதிக்காரர்கள் ஒன்று சேர்ந்து தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவரின் வீட்டு நிகழ்ச்சியை உயர்ஜாதிக்
காரர்களுக்குச் சொந்தமான மண்டபத்தில் நடத்தவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர். உயர்ஜாதிக்காரர்கள் எட்டுப்பேர்மீது வன்கொடுமைச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டாலும். அதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

இந்த பச்சையான சட்ட விரோத, மனித உரிமை மீறலை ‘விடுதலை’யில்  கண்டித்ததுடன் தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு கொண்டுச் சென்றோம். மாவட்ட ஆட்சியரும் காவல் துறையும் இதில் தலையிட்டு நல்லிணக்கத்தை ஏற்படுத்த வலியுறுத்தினோம். அப்போது ஈரோடு மாவட்ட ஆட்சியராக இருந்தவர்  உதயச்சந்திரன் அய்.ஏ.எஸ். அவர்கள். அவர் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுத்தார். பின்னர் தோழர் மாரியப்பன் அந்த மண்டபத்தில் நிகழ்ச்சியை நடத்தினார்.

கோவையில் 21.12.2007 அன்று மாலை கோவை அரசு கலைக்கல்லூரி பேராசிரியர் பெ.தாமோதரன் எழுதிய டாக்டர் கலைஞர் பற்றிய ஆங்கில நூலான ‘‘Dr.Kalaignar The Beacon Light of The Dravidians’’ என்னும் நூலின் வெளியீட்டு விழாவில் பங்கேற்று வெளியிட்டோம். பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் திருவாசகம் பெற்றுக்கொண்டு உரையாற்றினார். நிகழ்வுக்கு சி.டி.தண்டபாணி அவர்களின் சகோதரி
சி.டி.சிவகாமி வரவேற்றார். பூ.சா.கோ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசிரியர். சம்பத்குமாரி தலைமை வகித்தார்.

பகுத்தறிவாளரும் பெரியார் நூலக வாசகர் வட்ட உறுப்பினரும், கவிஞருமான
மு.வே.கங்காதரன் (வயது 65) அவர்கள் 22.12.2007 அன்று விடியற்காலை மறைவுற்றார். அவர் தென்சென்னை பகுத்தறிவாளர் கழகத்தின் பொறுப்பில் இருந்தவர். அசோக் நகரில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினோம்.

மறுநாள் (23.12.2007) காலை புதுச்சேரி என்.டி. மகாலில் நடைபெற்ற புதுவை சிவம் அவர்களின் பெயர்த்தியும், சிவ.இளங்கோ அவர்களின் மகளுமான இள.சாலினி – ஸ்டாலின்
ஆகியோர் திருமணத்தை நடத்தி வைத்தோம். அன்று மாலை புதுச்சேரி திராவிடர் கழகம், பெரியார் படிப்பக அமைப்புக் குழு சார்பில் பெரியார் படிப்பகம் அடிக்கல் நாட்டு விழா சமூகநீதி பேரவையின் தலைவரும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசியக் குழு உறுப்பினருமான இரா.விசுவநாதன் தலைமையில் நடைபெற்றது. கழகப் பொதுக் குழு உறுப்பினர் சிவ.வீரமணி (தற்போதைய  புதுவை மாநிலத் தலைவர்) வரவேற்றார். புதுவை கழக அமைப்பாளர் கே.குமார். திருமூர்த்தி ஆகியோர் இயக்கப் பாடல்களைப் பாடினர். கட்டடக் குழு செயலாளரும்.
தி.க., தலைவருமான வ.சு.சம்பந்தம் தொகுப்புரை
வழங்கினார்.

திராவிடர் கழகப் பொருளாளர் கோ.சாமிதுரை, தி.மு.க., புதுவை மாநில அமைப்பாளர்
ஆர்.வி.ஜானகிராமன், நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் மு.இராமதாசு, முனைவர் முத்து, கழகத் துணைப் பொதுச் செயலாளர்
துரை.சந்திரசேகரன் ஆகியோர் உரையாற்றிய
பின் கட்டட அடிக்கல் நாட்டு விழா கல்வெட்டைத்
திறந்து வைத்து உரையாற்றினோம்.