Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

பெரியார் பேர் பார் நிலைக்கும் ! – செல்வ மீனாட்சி சுந்தரம்

ரிபாதி மானுடமாய்த் தாமி ருந்தும்

சலியாதே உழைத்துழைத்துப் பயன்சு ரந்தும்

நரியாணின் தன்னலம்பேண் தந்தி ரத்தால்

நலிந்தாரே நாதியற்றுப் பெண்ணி னத்தார்!

உரியார்தம் உரிமைகளை மீட்ட தற்காய்

உளம்வரித்தே ஓய்வின்றி உழைத்த தற்காய்ப்

பெரியாரென் றன்பொழுக விருத ளித்தார்!

பெண்ணுரிமை வரலாற்றின் பெருநாள் இந்நாள்!

நாணுதலை நடுங்குதலை தூய்மை யற்று

நல்லறிவை நாடாத மடமை தன்னை

ஈனுதலை இரங்குதலை அடுக்க ளைக்குள்

எரிந்துணவைச் சமைப்பதனைப் பெண்ணின் பண்பாய்

ஊனுழைப்பை அறியாத ஆரி யத்தார்

ஓதிவைத்த சாத்திரத்தால் ஒடுக்கி வைத்தார்!

தானுதிர்ந்த நாள்வரைக்கும் தன்கூர் கொண்டு

தளையறுத்த தந்தையர்தான் பெரியார் ஆனார்!

கற்பென்னும் கற்பிதத்தைப் பெண்மேல் ஏற்றிக்

காலமெல்லாம் காலொடித்து வீட்டுள் பூட்டி

அற்பரெனக் கல்வியறி வில்லா ராக

அடிமையென ஆக்கிவைத்தார் ஆரிய த்தார்!

விற்கணையாய் வெகுண்டெழுந்து பெரியார் வந்தார்!

விலங்கொடித்துப் பெண்களுக்கு விடியல் தந்தார்!

நற்பணிகள் செய்தவர்க்குப் பெண்கள் தந்த

நற்சான்றுப் பத்திரந்தான் பெரியார் பட்டம்!

சொத்தாகக் கைமாறும் பெண்க ளுக்குச்

சொத்துரிமை வேண்டியதால் பெரியார் ஆனார்!

கொத்தடிமை போலிழிந்த பெண்கள் உய்யக்

கொள்கைகண்ட காரணத்தால் பெரியார் ஆனார்!

புத்தகத்தைப் பெண்கையில் கொடுத்த னுப்பிப்

புத்தெழுச்சி நிகழ்த்தியதால் பெரியார் ஆனார்!

மொத்தத்தில் பெண்ணடிமை மாய்க்கும் போரில்

முன்சென்ற மறத்தாலே பெரியார் ஆனார்!

நிராகரித்தார் முன்பெண்ணின் நிலையு யர்த்தி

நிராகரிக்க முடியாத இடத்தில் சேர்த்தார்!

புரோகிதத்தார் மறுதலித்த மறும ணத்தைப்

பூக்கவைத்துக் காய்க்கவைத்துக் கனிய வைத்தார்!

சிலாகித்தார்! கண்சுவைக்கப் பார்த்து வந்தார்!

சிறுமியெல்லாம் பள்ளிசெல்லும்

காட்சி தன்னை!

திராவிடத்தின் தத்துவத்தால் சமத்து வத்தைச்

சிற்பியெனச் செதுக்கிவைத்துப் பெரியார் ஆனார்!

உரனாகி ஊக்கமளி ஊற்று மாகி

ஊர்பயக்கும் ஊரணியின் தொண்டு மாகி

அறனாகி அறிவளிக்கும் ஆசா னாகி

அடக்குமுறை வெல்லுபடை அணியு மாகி

அரணாகி ஆரியத்தின் கூற்று மாகி

அடிமைவிலங் கறுத்தகற்றும் அரமு மாகித்

திறனாகிச் சமத்துவத்தின் தீர்ப்பு மாகித்

தீதறுத்த பேராளர் பெரியார் ஆனார்!

நிகரில்லார் எம்பெரியார்! நீர்மை பொங்கும்

நெஞ்சத்தைத் தொண்டிற்காய் நேர்ந்த தாலே!

இகல்வென்றார் எம்பெரியார்! வேதி யத்தைப்

புராணத்தைச் சாதியத்தைப் பொடித்த தாலே!

பகல்தந்தார் எம்பெரியார்! இழிவி ருட்டைப்

பகுத்தறிவுப் பகலவனாய்த் தூர்த்த தாலே!

புகழ்நெய்தார் எம்பெரியார்! பொட்டுப் பூச்சி

போலுழல்பெண் உரிமைகொள உழைத்த தாலே!

மண்ணிதிலே பெண்ணிருக்கும் நாள்வ ரைக்கும்

மாமனிதர் பெரியாரின் பேரி ருக்கும்!

புன்மைசெய் தீண்டாமைப் பாம்பி ருக்கும்

புற்றெல்லாம் பெரியாரின் தடிசி தைக்கும்!

பன்மையினைப் பகுத்தறிவைப் பரப்பு தற்குப்

பாடேற்ற பெரியார்பேர் பார்நி லைக்கும்!

நன்மையினைச் செய்யத்தன் நாள்வ ரைக்கும்

நலிவேற்காப் பெரியாரை நிலம்வ ணங்கும்!   v