கண்ணகி நகர் கார்த்திகா!
சில நாட்களாக கொண்டாடப்பட்டு வரும் பெயர்.
பெரிய ஊடகங்கள் முதல் சமூக ஊடகங்கள் வரை போற்றி புகழும் பெயர்! தம் விடாமுயற்சியால், கடும் உழைப்பால் புகழின் உச்சிக்கே சென்று கார்த்திகா எக்ஸ்பிரஸ் என்று விளையாட்டு விரும்பிகளால் புகழப்படும் வீராங்கனை.
பஹ்ரைன் நாட்டில் நடந்த ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டிகளில், 18 வயதுக்குட்பட்டோருக்கான கபடி இறுதிப் போட்டியில் ஈரானை 75-க்கு 21 புள்ளிக் கணக்கில் வீழ்த்தித் தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தது இந்திய மகளிர் அணி.
இந்திய அணியைத் துணை கேப்டனாக வழிநடத்தியவரும், இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தவரும் சென்னை கண்ணகி நகர் கார்த்திகா. ஏழ்மையான குடும்பப் பின்னணியில், வறுமையின் பிடியிலும் இடைவிடாத பயிற்சியால் இந்திய அணியில் இடம்பிடித்த கார்த்திகா, தனது அபாரமான ரைடு மூலம் ஒட்டுமொத்த, ஈரான் அணியைத் தெறிக்க விட்டதோடு, ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் திரும்பிப் பார்க்க வைத்தார். இவர் கண்ணகி நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்புப் படித்துக் கொண்டிருக்கிறார்.
சென்னை மாவட்டம் துரைப்பாக்கம் ஒக்கியத்தில் உள்ளது கண்ணகி நகர். வாழ்வாதாரத்திற்காக அதிகாலை முதல் இரவு வரை சென்னைக்கு வந்து பணி செய்து திரும்பும் எளிய மக்கள் வாழும் பகுதி. அடிப்படை வசதிகள் குறைவாக உள்ள பகுதி.

சென்னை கண்ணகி நகர் என்றாலே பல்வேறு விளையாட்டுக்களில் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைகளை கொண்ட நகராக மாற்றமடைந்துள்ளது.
இவர்களின் அற்புதமான விளையாட்டுத் திறனால் இந்த அணிக்கு தமிழ்நாடு முழுவதும் பெருமளவில் ரசிகர்கள் உள்ளனர். சமூக ஊடகங்களில் இவர்களது விளையாட்டுக் காட்சிகள் பரவிக் கொண்டேயிருக்கும்.
கபடி பயிற்சியாளர் ராஜி அவர்களால் பெண்கள் கபடி அணி உருவாக்கப்பட்டு, தற்போது மாநிலம் முழுவதும் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.
இந்திய பள்ளி விளையாட்டுகள் அமைப்பு தேசிய அளவில் நடத்திய கபடிப் போட்டியில் (SGFI) 2023இல் தமிழ்நாடு அணி முதன்முறையாக தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தது.
இந்த அணியின் கேப்டனாக தலைமையேற்று விளையாடி, சிறந்த ஆட்ட வீராங்கனையாக தேர்வுபெற்வர் கார்த்திகா. தமிழ்நாடு அணி தங்கப்பதக்கம் வெல்வதற்கு கார்த்திகாவின் ஆட்டம் முக்கியமானது.
இவரின் தந்தை ரமேஷ் சென்டரிங் அடிக்கும் கட்டடத் தொழிலாளி. தாயார் சரண்யா தூய்மைப் பணியாளராக பணியாற்றி, தற்போது ஆட்டோ ஓட்டுகிறார். 6ஆம் வகுப்பு பள்ளி மாணவியாக படிக்கும்போதே கபடி களத்தில் இறங்கியவர்.
தந்தையின் காலணிகளைப் போட்டுக்கொண்டு பயிற்சித்தவர். தற்போது சர்வதேச அளவில் சாதனை படைத்துள்ளார்.
மாநில மற்றும் தேசிய அளவில் பதக்கங்களை வென்றுள்ளனர்.
தேசிய அளவிலான போட்டிகளில் தமிழ்நாட்டிற்கு 11 முறை விளையாடி, 8 முறை தங்கப் பதக்கம் பெற்றுத் தந்துள்ளார். இதில் 5 முறை கேப்டனாகவும் விளையாடி இருக்கிறார்.
2021, 2022ஆம் ஆண்டுகளில் இளையோர் அளவில் விளையாடி வெள்ளிப்பதக்கம், 2024ஆம் ஆண்டில் கேலோ இந்தியா (KHELO INDIA) போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார். 2024இல் வெள்ளிப்பதக்கம் வென்ற தேசிய இளையோர் (ஜூனியர்) அணியில் இடம் பெற்றிருந்தார்.
2025இல் தேசிய அளவிலான இளையோர் மற்றும் மூத்தோர் பயிற்சி முகாமில் பங்கேற்றார். இதில் 18 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய பெண்கள் கபடி அணியில் தமிழ்நாட்டின் சார்பில் கார்த்திகா இடம்பெற்று பக்ரைன் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தச் சாதனை புரிந்துள்ளார்.
வறுமை ஒரு தடை இல்லை; திறமையும் விடாமுயற்சியும் இருந்தால் எந்த உயரத்தையும் எட்டலாம் என்பதை நிரூபித்துள்ள தங்க மகள் கார்த்திகாவுக்கு வாழ்த்துகள்!
அவரது பயிற்சியாளர் ராஜி மற்றும் மூத்த வீராங்கனை சுஜி ஆகியோருக்குப் பாராட்டுகள்! ª





