Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

பாரதிதாசன் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் டாக்டர் பெ.ஜெகதீசன் அவர்களுடன் நேர்காணல் – மஞ்சை வசந்தன்

(தந்தை பெரியார் தலைமையில் சுயமரியாதைத் திருமணம்
செய்து கொண்ட, ஆசிரியர்களாகப் பணிபுரிந்த, பெற்றோருக்கு மகனாய் சுயமரியாதைக் கொள்கைக் குடும்பத்தில் பிறந்து, சுயமரியாதை,
பகுத்தறிவு உணர்வுடன் வளர்ந்து, கற்று, பல்கலைக்கழகத் துணைவேந்தர் என்ற உயர்நிலை பெற்று, ஓய்வு பெற்று இன்னமும் சுயமரியாதை, பகுத்தறிவு, சமூகநீதி சிந்தனையுடன் தன் செயல்பாடுகளைச்
செய்து வருகின்ற மானமிகு பெ.ஜெகதீசன் அவர்களை நேரில் சந்தித்து விடுத்த வினாக்களும் பெற்ற பதில் மற்றும்
விளக்கங்கள் உங்கள் பார்வைக்கு…)

கேள்வி: உங்கள் குடும்பம் பற்றி முதலில் கூறுவீர்களா?

பதில்: என் தந்தை பெயர் பெருமாள். அவர் திருவெறும்பூரை அடுத்துள்ள ஆதிகுடியில் பிறந்தவர். தாயார் பெயர் மருதாம்பாள்.  திருச்சி மாவட்டம் லால்குடிக்கு அருகில் உள்ள கூத்தைபாரில் பிறந்தவர்.

பெற்றோர் இருவரும் சுயமரியாதைக் கொள்கையில் பிடிப்புள்ளவர்கள். பகுத்தறிவுச் சிந்தனையுடனும், மூடச் செயல்களை விலக்கியவர்களாயும் வாழ்ந்தனர். ஆனால், கடவுள் நம்பிக்கை உடையவர்கள்.

1936ஆம் ஆண்டில் திருச்சி மாவட்டம் மாயனூரில் உள்ள மாவட்ட கழக பள்ளி வளாகத்தில், சில உறவினர்கள் சூழ, தந்தை பெரியார் அவர்கள் நடத்திவைக்க சுயமரியாதைத் திருமணம் செய்துகொண்டனர்.

திருச்சி நகருக்கு அடுத்துள்ள சோழமாதேவி என்னும் ஊரில் அமைந்திருந்த ஒரு லேபர் பள்ளியில் என் தந்தையார், தலைமை ஆசிரியராகவும், தாயார் அதில் ஆசிரியராகவும் பணி புரிந்து வந்த காலத்தில், ஒரே ஒரு தமக்கைக்குத் தம்பியாகவும், மூன்று தம்பிகளுக்கு அண்ணனாகவும் 1940 ஆண்டு பிறந்தேன்.

தொடக்க காலத்தில் அவர்கள் எனக்கிட்டிருந்த பெயர் ஸ்டாலின் ஜெகதீஷ் சந்திரபோஸ் என்பதாகும். பள்ளியில்கூட தொடக்க காலத்தில் ஸ்டாலின் என்று ஆசிரியர்களால் அழைக்கப் பட்டது நினைவிருக்கிறது. பின்னாளில் பெயர் நீளம் கருதி ஜெகதீசன் எனச் சுருக்கப்பட்டது.

கேள்வி: தங்கள் கல்வி எங்கெங்கு அமைந்தது?

பதில்: முதலாம் வகுப்பு முதல் ஏழாம் வகுப்பு வரை என் பெற்றோர் பணியாற்றும் லேபர் பள்ளிகளிலேயே படித்தேன். 1945 முதல் 1948 வரை திருச்சி வரகனேரிப் பகுதியிலுள்ள பாடிசன் லேபர் பள்ளியில் (Padison Labour School) படித்தேன். 1920களில் நிறுவப்பட்ட லேபர் ஆணையத்தின் முதல் ஆணையராக இருந்து சிறப்பாகப் பணியாற்றிய பாடிசன் என்பவரது பெயரால் அழைக்கப்படும் சிறப்புக்குரியது அப்பள்ளியாகும்.

1948இல் என் பெற்றோரின் பணி மாறுதல் காரணமாக, முசிறி வட்டத்திலுள்ள திருத்தலையூர் லேபர் பள்ளியில் என் படிப்பைத் தொடர்ந்தேன்.

மேற்படி திருத்தலையூரில் ஏழாம் வகுப்பு தேறிவிட்டு உயர்நிலைப் பள்ளிப் படிப்பைத் திருச்சி உறையூரில் உள்ள எஸ்.எம்.உயர்நிலைப் பள்ளியிலும், புத்தூர் பிஷப் ஹீபர் உயர்நிலைப் பள்ளியிலும் கற்றுத் தேறினேன்.

தொடர்ந்து திருச்சி தேசியக் கல்லூரியில் (1955-1957) FA (Fellow Art) என்னும் இண்டர்மீடியட் படித்தேன். இந்நிறுவனம் சில நடைமுறைகளில் சனாதனம் வழுவாத நிறுவனமாகத்
திகழ்ந்தது. குறிப்பாக மாணவர் விடுதியின்
பொது உணவிடத்தின் நடைமுறைகள், சேரன்மாதேவி குருகுலத்தை நினைவுபடுத்துவதாக இருந்தது.

தொடர்ந்து பட்டப்படிப்பை பெங்களூர் செயிண்ட் ஜோசப் கல்லூரியில் தொடர்ந்தேன். தென்னிந்தியாவின் எல்லா மாநிலங்கள் சார்ந்த மாணவர்களும் அந்தக் கல்லூரியில் விரும்பி சேர்ந்து படித்தார்கள். அதனால், ஆங்கிலமே கல்லூரியின் பேசும் மொழியாக விளங்கியது. ஆங்கிலத்தில் பேசும் ஆற்றல் எனக்கு அந்த சூழலிலேதான் வளர்ந்தது. அங்கே தமிழ்ப் பேராசிரியராகவும் எனக்கு உள்ளூர் பாதுகாப்பாளராகவும் (Local Guardian) இருந்தவர் பேராசிரியர் தண்.சீ.வேங்கடாசலனார். சிறந்த பகுத்தறிவாளர் அவர் மற்றும் சில பேராசிரியர்களின் முனைப்பால் 1958-1960களில் பெங்களூர் தமிழ்ச்சங்கம் உருவானது. பள்ளிப் படிப்பு காலத்திலேயே ஓவியம் வரைதல், சொற்பொழிவாற்றுதல், பாடல்கள் இசைத்தல் ஆகியவற்றில் இருந்த பழக்கமும் பயிற்சியும் இந்தக் காலகட்டத்தில் கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர் மத்தியில் பரவலான நல்ல அறிமுகத்தையும், பாராட்டையும் ஈர்த்திருந்தது.

தொடர்ந்து பட்டமேற்படிப்பை, அரசியல் பாடத்தில் (M.A. Politics) திருவனந்தபுரத்திலுள்ள கேரளா பல்கலைக்கழக ஆய்வுத் துறையில் பயின்றேன். அங்கு பட்டமேற்படிப்பையே ஆய்வு முறையில் கற்பித்ததால் எனது அறிவாய்வுத் திறன் வளர அது பெரும் வாய்ப்பாக அமைந்தது.

ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து முதன்முதலாய்ப்
படித்து வந்தவர்கள் என்பதும், கல்வி தரும் சமூக மரியாதை உரிமை மற்றும் பொருளாதார படிநிலை போன்றவற்றின் அருமை பெருமைகளை உணர்ந்திருந்த காரணத்தால், எம் பெற்றோர் மிகச் சிறந்த அளவில் தம் பிள்ளைகள் கல்வியில் மேன்மை பெறுவதை தங்களின் முதன்மை குறிக்கோளாகக் கொண்டிருந்தார்கள்.

கேள்வி: கல்வி பயிலும்போது தங்கள் இலக்கு என்ன?

பதில்: எனது பெற்றோரின் உந்துதலால் எனது எதிர்கால இலக்காக எம்.ஏ. பட்டப்படிப்பு வரை கற்று பேராசிரியராக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.

எம்.ஏ. (அரசியல்) பட்டம் பெற்றிருந்ததால், அதற்கான வேலைவாய்ப்பு தமிழ்நாட்டில் மிக அரிதாக இருந்தது. எனவே, 1963 முதல் 1969 வரை தொடர்ந்து அய்ந்தாண்டுகள், அரியலூர் பகுதியிலுள்ள அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பயிற்சி பெற்று ஆசிரியராகப் பணியாற்றினேன். ஊரும், நகரும் கலந்தியைந்த இடங்களில் பணியாற்றிடும் வாய்ப்பில் பல்வேறு வாழ்வியல் மற்றும் மானுடவியல் பற்றிய அறிவையும் அனுபவங்களையும் வளப்படுத்திக் கொண்டேன்.

அறிவார்ந்த நூல்கள், கட்டுரைகள் குறிப்பாக மனித மேம்பாடு, விடுதலை குறித்த தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் போன்ற சிந்தனையாளர்களின் நூல்கள் மற்றும் மனித சமூகம் பற்றிய வரலாறுகள் ஆகியவற்றை படித்து எனதாக்கிக் கொண்டு வளர்ந்தேன். எனவே ‘எந்தக் கட்டத்திலும் பின்தங்கிவிட்டேன்’ என்று நான் நினைக்கவில்லை. அந்தக் காலகட்டத்தில் ‘நான் தேங்கிவிட்டேன்’ என்று என்னோடு இருந்தவர்கள் யாரும் கருதவில்லை.

என் இலக்குக்கான அறிவையும் ஆற்றல்
களையும், வளர்த்துக் கொள்ளவும், சில தியாகங்களை, தாங்கிக் கொள்ளவுமான மன உறுதியையும் பக்குவத்தையும் நல்ல வண்ணம் வளர்த்துக் கொண்டேன்.

கேள்வி: தந்தை பெரியாரை முதலில் சந்திக்கும் வாய்ப்பு எப்போது அமைந்தது?

பதில்: 1951-1952ஆம் கல்வியாண்டில் திருச்சி, புத்தூரில் உள்ள பெரியார் மாளிகையின் பின் பகுதியில் ‘தொண்டு’ பத்திரிகை ஆசிரியர், திரு.கு.வீராசாமி அவர்கள் நடத்தி வந்த அம்பேத்கர் விடுதியில் தங்கி உறையூரில் உள்ள
எஸ்.எம். உயர்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தேன். ஆம். பெரியார் மாளிகையில் அம்பேத்கர் விடுதி. என்ன பொருத்தம்! மாளிகையின் இடதுபுறம் ஒரு மாமரம். அப்போது இருந்தது. சிலபோது கீழே விழுந்து கிடக்கும் மாங்கனிகளைச் சிறுவர்கள் நாங்கள் எடுத்து உண்போம். சிலபோது மாளிகையில் அய்யா அவர்கள் தங்கியிருக்கும்போது ஓய்வாக அந்தப் பக்கம் வருவார். அப்போது எங்களைப் பார்த்து தம் கைத்தடியை உயர்த்தி, “டேய் பசங்களா மாங்காய் திருடுறீங்களா?” என்று விரட்டுவார். அப்போது உலகு தொழும் பகுத்தறிவுப் பகலவனாய் அவரை அறிந்துகொள்ளும் முதிர்ச்சி எனக்கில்லை. நான் ஓர் அறியாச் சிறுவனாகத்தான் முதன்முதலில் அவரைப் பார்த்தேன். ஆனால், இது ஒரு சந்திப்பாகுமா?

1970களின் தொடக்கத்தில் குறிப்பாக அரசுப் பணியில் இருக்கும் நம் கொள்கையுடையவர்கள், தடையின்றி நமது கருத்துகளைப் பேச,
எழுத ஏதுவாக பகுத்தறிவாளர் கழக அமைப்புகளை உருவாக்கிக் கொள்ள பெரியார் ஏற்பாடு செய்தார்.

அந்த வகையில் தொடங்கப்பட்ட காரைக்குடி பகுத்தறிவாளர் கழகத்தின் பொருளாராக நான் பொறுப்பேற்றேன்.

மேற்படி பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பாக ஒரு நாடகம் எழுதி, நடிக்கத் திட்டமிட்டோம்.

ஒரு நாடகத்தை எழுதி, கேட்ட மாத்திரத்தில் காணத் தூண்டும் வகையில், “தீ… பரவட்டும்!” என்று அறிஞர் அண்ணாவின் தலைப்பைச் சூட்டினேன். நாடகம் நன்றாக இருக்கிறது என்று முடிவெடுத்து மார்ச் மாதம் அரங்கேற்றம் செய்ய திட்டமிட்டு பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தோம்.

அப்போது திரு.என்.ஆர்.எஸ். அய்யா மூலமான ஒரு தகவல் வந்தது. திருச்சி பெரியார் மாளிகையில் நடைபெறவிருக்கும் நமது இயக்க மாநாட்டில் நடந்த எங்கள் நாடகத்தைக் கேட்டிருக்கிறார்கள் என்பது.

அதன்படி மாநாடு முடிந்ததும் அய்யா அவர்கள் உறங்கச் சென்றுவிட்டார்கள். சுமார் 3 மணி நேரம் நாடகம் நடந்தது. தோழர்கள் வெகுவாக ரசித்தார்கள் – கொண்டாடினார்கள். ஆனால், மாநாடு முடிந்து உறங்கச் சென்ற அய்யா அவர்கள் மட்டும் நாடகத்தைப் பார்க்கவில்லை. ஆனால், நாடகம் முடியும் வரை அவர்கள் உறங்கவுமில்லை.

தொடர்ந்து காலையில் விடிந்தது. அண்ணன் ஆசிரியர் அவர்கள் எங்களிடம் வந்து, “அடுத்து இந்த நாடகத்தை எங்கே நடத்துறீங்களோ, அங்கு அய்யாவே தலைமை தாங்க விரும்புகிறார் என்று கூறினார்.

அதன்படி 1972 மார்ச் மாதம், காரைக்குடி காந்தை மைதானம், மேடைக்கு எதிரே படுக்கை மெத்தையை விரித்து அதில் அமர்ந்து நள்ளிரவு வரை ஆழ்ந்து பார்த்தார்கள். தொடர்ந்து ஒரு மணி நேரம் அய்யா அவர்கள் பேசினார்கள்.

(தொடரும்…)