Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

பைசன் எனும் சமூகப் பாடம்

ஏன் எதற்கு எனப் புரியாமலே காலம் காலமாக வேரூன்றியிருக்கும் ஜாதியக் கட்டமைப்புகளால் ஏற்பட்டிருக்கும் பகை. பின்புலத்தில் இரு தனி நபர்கள் இடையிலான பிரச்சினைகள் எப்படி இரு சமூகத்தினரின் பிரச்சனையாக மாறுகிறது.

சமூக மாற்றத்திற்காக வன்முறையை கையில் எடுக்கும் முன்னோடிகளை வெறும் கதாநாயக பிம்பத்துடன் மட்டும் பின்தொடர்வோர் பார்த்தால், முன்னோடிகளின் கொள்கைகளை மறந்து இவர்கள் என்னவாக மாறுகிறார்கள் என்பதையெல்லாம் சுட்டிக் காட்டும் காளமாடனாக இருக்கிறது பைசன்.

மிக நேர்த்தியான திரைக்கதை, கைதேர்ந்த நடிகர்கள், திட்டமிட்ட காட்சியமைப்பு, இயல்பான இசை என பைசன் எல்லா துறைகளிலும் சரியாக வேலை செய்திருக்கிறது.

தந்தையாக தனக்கு இருக்கும் பாசத்தையும், பயத்தையும் தனது வசனங்கள் மூலம் மட்டுமல்லாமல் தனது நடிப்பு மூலம் மிக அருமையாக வெளிக்கொணர்ந்து இருக்கிறார் பசுபதி. தான் வியந்து பார்த்த ஒரு கபடி வீரனைப் போல் தன் மகனையும் ஆக்க வேண்டும் எனக் கனவு கண்ட தந்தை. அந்த வீரனின் மீசை மயிர்கள் பிடுங்கப்பட்டு ஓடையில் பிணமாக கிடப்பதைக் கண்டு தன் மகனுக்குக் கபடி ஆசை வந்துவிடக் கூடாது, அவனைக் கபடியில் இருந்து வெளியேற்றி விட வேண்டும் எனும் தவிப்பில் தந்தை வேலுச்சாமியாக மிளிர்கிறார் பசுபதி.

ஆடு மூத்திரம் போனதுக்கே அந்த ஆட்டைக்குத்திக் கிழிச்சு பகையாக்கி விட்டுருக்காங்க சார். ஒரு பக்கம் கபடியையும் இன்னொரு பக்கம்
கத்தியையும் தூக்க வச்சிடுவாங்க சார். அவனுக்கு கபடி வேண்டாம் சார் எனச் சொன்ன தந்தை, தனது மகனின் கபடி ஆட்டத்தைக் கண்டு அவனுக்கு உறுதுணையாகக் கடைசி வரை நின்று, அவனது வெற்றி தன்னைப் போல் இருக்கும் ஒவ்வொரு தந்தைக்கும் கிடைக்கும் விடுதலை என்பதை உணர்த்துகிறார்.

பள்ளியில் காலை வழிபாட்டின்போது 10 பேர் உணவைச் சாப்பிடும் ஒருவனைக் கண்டிக்கும் விளையாட்டு ஆசிரியர், பின்னர் அவனின் கபடி வேட்கையைக் கண்டு அவனை எப்படியும் கபடியில் ஊர் போற்றும் ஒரு விளையாட்டு வீரனாக மாற்ற வேண்டும் என அவர் எடுக்கும் முயற்சிகளும், அதனால் அவர் சந்திக்கும் இழிவுகளையும் தாண்டி அந்த மாணவனின் தந்தையின் மனதை மாற்றி அவனின் கபடி கனவுக்கு உறுதுணையாக நிற்க வைத்து தானும் உறுதியாக நின்று வழிகாட்டும் சந்தனராஜ் ஆசிரியராக அனைவரின் மனதிலும் நின்றிருக்கிறார் அருவி மதன்குமார். விளையாட்டின் போது ஜாதிக் கயிறுகளை நறுக்கும் காட்சி சொல்லாமல் சொல்லும் பாடம்.

“யாரும் நமக்கு மேலானவங்களும் இல்லை, கீழானவங்களும் இல்லை எனக்கூறி தான் நாம் சண்டைப் போட ஆரம்பிச்சோம். ஆனால், அதையே நம்ம ஆளுங்க மறந்திட்டு வேறப் பாதைக்கு போறாங்க”

“கூட ஒன்னா விளையாண்டவங்களையே பிச்சக்காரன்னு சொல்ற புத்தி எங்கிருந்து வருது?” எனக் கூறும் பாண்டியராஜாவாக வரும் அமீரும், “சில விசயத்தை விட்ரலாம்ன்னு நினைச்சாலும் முடியலடே.. அந்தக் கால பகை. நானே நினைச்சாலும் விடமுடியாது.. அதான் நெசம்.

உன் திறமையை மட்டும்தான் நான் பாத்து எங்க டீம்ல ஆடவச்சேன். இப்ப சூழல் சரியில்லை. நான் தாழையூத்து பேப்பர் மில் டீம்ல பேசிட்டேன்.
மறுக்காம அங்க போய் விளையாடு. நாம சந்திக்கிறது இதான் கடைசியா கூட இருக்கலாம். கபடில நீ இன்னும் ரொம்ப உயரம் போகணும். அந்தச் செய்தியை நான் கேட்டா போதும்.”

எனக் கூறும் கந்தசாமியாக வரும் லாலும் அப்பகுதியில் வாழ்ந்த இருவரை மீட்டுருவாக்கம் செய்திருக்கின்றனர்.

தம்பியின் கனவுக்கு எப்போதும் துணையிருக்கும் அக்கா, தன் உயிர்த்தோழி தன் தம்பியைக் காதலிக்கிறாள் என்று தெரிந்த பின்னர் அவர்கள் இருவரும் அதை எப்படி கையாளுகிறார்கள் என்பதையும் அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.

உண்மையில் துருவ் விக்ரம் கூறுவது போல,துருவுக்கு இதுதான் முதல் படம் எனக் கூறலாம்.விளையாடுவதால் முறுக்கேறும் உடலையும், வாலிபத் தினவுகளாலும், சிந்திக்காமல் வெளிகாட்டும் கோபத்தினால் ஏற்படும் விளைவுகளை, அதன்மூலமே கற்றுக் கொள்ளும் கபடி வீரனாக வாழ்ந்திருக்கிறார் துருவ்.

பாம்புக் கடியால் தாயை இழந்த வனத்தி கிட்டான், ஓடத் தொடங்குகிறான். சிறு வயது முதலே தன் ஊருக்காக கபடி ஆட வேண்டும் என்பதையே நோக்கமாக வைத்திருந்தாலும், சொந்தப் பகையால் அந்த அணியின் தலைவர் கிட்டானை விளையாட விடாமல் தடுத்துக் கொண்டே இருக்கிறார். உடற்கல்வி ஆசிரியர் சந்தனராஜிடம் அவனது விருப்பத்தைத் தெரிவிக்கிறான்.

ஒவ்வொரு சூழலிலும் தப்பி ஓடிக் கொண்டிருக்கும் வனத்தி கிட்டான், கந்தசாமி வீட்டில் நடந்த வன்முறைக்குப் பிறகு, கந்தசாமியைத் தவிர அவர் வீட்டில் உள்ள அனைவரும் கிட்டானைப் பார்க்கும் பார்வை வீட்டிற்கு வந்து தந்தை வேலுச்சாமியிடம், “அது எப்படிப்பா, நான் பிறக்கிறதுக்கு முன்னாடியே, நீங்க பிறக்கிறதுக்கு முன்னாடியே ஏன் நம்ம தாத்தனுக்கும் தாத்தன் பிறக்கிறதுக்கு முன்னாடியே நமக்கு இங்க ஒரு பகையும் பழியும் இருக்கிறத எப்படிப்பா புரிஞ்சுக்கிறது? எவனோ ஒருத்தன் வர்றான் நம்ம ஆளுங்கனு சொல்லி கட்டி பிடிக்கிறான், இன்னொருத்தன் வர்றான் வேற ஆள்னு சொல்லி கத்தி எடுத்து குத்த வர்றான்ப்பா இங்க நான் யார்கிட்ட பேசுறது? யார பார்த்து சிரிக்கிறது? யார்கிட்ட போய் பழகிறது? எதுவுமே எனக்கு புரியலப்பா” எனக் கேட்பது சமூகத்தைப் புரிந்துகொள்ள முடியாத சாதிக்கத் துடிக்கும் இளைஞனின் வலி வனத்தி கிட்டான் மூலம் வலிமையாகக் கடத்தப்படுகிறது.

ஓர் அணியைத் தேர்வு செய்யும்போது அதிலுள்ள ஜாதிய, வர்க்க, இன அரசியல் எவ்வாறு செயல்படுகிறது என்பதை மிக நுணுக்கமாக காட்சியமைத்து இருக்கிறார் இயக்குநர். ஊருல உனக்கும், எனக்கும் இடையே என்ன காரணங்களால் பிரச்சினை என்று தெரியாமலே மோதல் நடக்குதுல அதே மாதிரிதான் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே என்கிற பொருளில் இந்திய அணிக்கும், பாகிஸ்தான் அணிக்கும் இடையேயான போட்டிகள் ஏன் விரோதமாகப் பார்க்கப்படுகிறது என்பதைக் கபடி அணியின் தலைவர் கிட்டானிடம் சொல்லும் காரணமே வெறுப்பு உணர்ச்சி எப்படி கட்டமைக்கப்படுகிறது என்பதையும் விளக்குகிறது.

துருவ்வின் கபடி கனவுக்கு ஏற்படும் இடையூறுகள், அவன் கனவினை நனவாக்க உதவும் நபர்கள், ஊர்ச்சூழல்கள், கபடி அரசியல் ஆகியவற்றை அனைவரும் புரிந்துகொள்ளும் படி திரைக்கதைகளும், காட்சிகளும் மிகப் பொருத்தமாக பொருத்தியிருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ்.

ஒரு சில காட்சிகள் வந்தாலும், இயக்குநர் லெனின் பாரதி, அழகம்பெருமாள் மற்றும் விளையாட்டு வீராங்கனை மற்றும் நடிகை ஹரித்தா ஆகியோரின் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருக்கிறது.

இந்தப் படம் கொண்டாடப்படுவதற்கு முக்கியமான காரணம் ஒளிப்பதிவு. ஒளிப்பதிவாளர் எழிலரசு மிக நேர்த்தியாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார். குறிப்பாக கபடி போன்ற விளையாட்டுகளில், உடல் அசைவுகள் மிக முக்கியம். பார்வையாளர்களின் பார்வை திரையை விட்டு அகலாமல் தனது எழில்மிகு காட்சிப் பதிவால் திரையிலேயே நிலைத்திருக்கச் செய்திருக்கிறார்.

கபடி விளையாட்டே ஒருவர் கையை இன்னொருவர் பற்றிக் கொண்டு விளையாடுவது தான். சமூகத்தில் அனைவரும் ஒன்றிணைந்து தான் வாழ வேண்டும் என்பது தான் பைசன் காளமாடன் சொல்லும் பாடம்.

மிக சிக்கலான கதைகளத்தை மிக நுட்பமாக கையாண்டிருக்கிறீர்கள்! வாழ்த்துகள் மாரி செல்வராஜ்!

மணத்தி கணேசன் முதல் கண்ணகி நகர் கார்த்திகா வரை பல தடைகளைத் தாண்டி சாதனைகள் புரிந்து கொண்டு தான் வருகிறார்கள். ஜாதி, மத எண்ணங்களைத் தகர்த்து மனிதர்களாய் வாழ்ந்து அனைவரையும் வாழ்த்தி வாழப் பழகுவோம்.

சமத்துவம், சமவாய்ப்பு, சமூகநீதியைப் பரப்பி
மானுடத்தைச் செழிக்கச் செய்வோம். è