Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

புராணப் பொய்களும், வாழ்வியல் வள்ளுவமும்!

தமிழ் இலக்கியப் பரப்பில் பொ.ஆ.பி. (கி.பி.) பத்தாம் நூற்றாண்டின் பக்தி இலக்கியக் காலத்தில், தமிழகத்தில் பரவியிருந்த சமண பௌத்த மதங்களை ஒழித்து, அந்த இடத்தை இந்துத்துவவாதிகள் பிடிக்க, ஏராளமான புராணங்கள் வடமொழித் தழுவித் தமிழில் எழுதப்பட்டன.

ஏற்கெனவே பரவியிருந்த சமண, பௌத்தக் கருத்துகளை உள்வாங்கி, விழுங்கி, வேத – வைதீகக் கருத்துகளைப் பரப்பியவர்கள், அப்புராணங்களைப் பரப்பினர். அப்படியான பதினெண் புராணங்களிலிருந்து தான் இராமாயண, மகாபாரத இதிகாசங்கள் எழுந்தன என்றும் எழுதி வைத்தார்கள்! (இதில் காலக் குழப்பம் உள்ளதை வசதியாக மறைத்து  விட்டார்கள்!)

தமிழர்களிடையே வேத ‘வைதீக’ கருத்துகளைப் புகுத்தவே, இங்கு ஏற்கெனவே இருந்த பக்தி நூல்களைத் தொகுக்கும் வேலையைத் தொடங்கினர். இதுதான் பெருந்தெய்வ வழிபாட்டுக்குத் தமிழர்களை இட்டுச் சென்றது. தமிழகத்தில் இந்துத்துவக் கட்டமைப்பின் தொடக்கமாக, சிவனை வழிபடும் சைவ சமயம் சார்ந்த, 18,000+ பாடல்களைக் கொண்ட “பன்னிரு திருமுறைகள்” நூல் தொகுப்பு வேலையை, ராஜராஜ சோழன் காலத்தில் நம்பியாண்டார் நம்பி தொடங்கினார்.

‘ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்’ என்னும் திருமந்திரத்தையும்,  ‘ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்” என்ற அப்பர் தேவாரத்தையும், சைவத்தைப் போற்றி மற்ற மதங்களைத் தூற்றும் ‘பெரிய புராணத்தையும் சேர்த்து, அடுத்த நூற்றாண்டில் ‘பன்னிரு திருமுறை’ என்ற பெயரில் நடந்த, திருகு தாள வேலை இது!

இன்னொரு பக்கம் பன்னிரண்டு ஆழ்வார்களின்பாசுரங்களைத் தொகுத்து, ‘நாலாயிர திவ்வியப் பிரபந்தம்” எனும் வைணவ சமயத் தொகுப்பு வேலை நாத முனியால் கிட்டத்தட்ட இதே காலத்தில்தான் தொகுக்கப்பட்டது. (சைவ – வைணவர் இடையே கடும் சண்டை நடந்தது போக, பிற்காலத்தில் இரண்டையும் இணைத்து, ‘இந்து மதமென்ற ஒட்டுவேலை’ சில நூற்றாண்டுக்கு முன்தான் நடந்தது).

‘பக்தி இலக்கியம், ஜாதியை மீறிக் கட்டப்பட்ட சைவ சமயம்’ என்பதான தோற்றத்தை ஏற்படுத்தியது. இந்தச் சமூக ஒற்றுமைப் பார்வை, சமண பவுத்தத்தி
லிருந்து மக்களை இழுக்கும் முயற்சியே அன்றி உண்மையில் ஜாதி ஒற்றுமை நோக்கமில்லை என்பதைப் பெரிய புராணத்தின் ‘திருநாளைப் போவார்” (நந்தனார்) கதை முதலானவற்றை ஆழ்ந்து படித்துப் பார்த்தால் தெரியும். (நந்தனார் கதையிலும்  சிவபெருமான், நந்தியைத்தான் விலகச் சொன்னாரே அன்றி, தனது பக்தனான நந்தனாரைக் கூட தனது கோவிலின் உள்ளே வரச்சொல்ல வில்லை எனும் நுட்பத்தைக் கவனியுங்கள்)

தமிழில் ‘புராணம்’ என்று வருவதெல்லாம், பொய்க்கதை தான்! வாழ்வியல் அல்ல என்று புரிந்து கொள்ள வேண்டும்!

‘வேதம் தமிழ்செய்த மாறன்’ என்று நம்மாழ்வாரைப் புகழ்ந்தனர். திருவாசகத்தில் 93 புராணக் கதைகள் உள்ளனவாம்! பெரிய புராணத்தில் ‘பாழ்செய் அமண் குண்டர்’ என்று சமணத்தை இழித்துரைக்கும் வரிகள் நிறைய உள்ளன. சம்பந்தர் தேவாரத்தில் பத்துப் பாட்டுக்கு ஒன்று வீதம் சமணரைத் திட்டும் கருத்து அமைந்திருக்கும்!

அப்படியான ஒரு புராணக் கதைதான் அரிச்சந்திர புராணம்! இது வடமொழி நூலைத் தழுவி, 16ஆம் நூற்றாண்டில் நல்லூர் வீர கவிராயரால் எழுதப்பட்டது. இக்கதைகளின்படி அரிச்சந்திரன் சூரிய குலத்தின் 28ஆவது அரசனாம்! (‘திருவுடை மன்னனைக் காணில் திருமாலைக் கண்டேன்’ – என்பது நம்மாழ்வார் பாசுரம்!)

‘ஒரு பொய்யாவது சொல் கண்ணே!” என்று தமிழ்த் திரை நாயகன் பாடுவது போல விசுவாமித்திரர் அரிச்சந்திரனிடம் கெஞ்சாத குறையாகக் கேட்பார். அரசை இழந்து, மனைவி மக்களை விற்று, மனைவி சந்திரமதியை மயானத்தில் பலியிட நேரும்போதும் ‘பொய் சொல்ல மாட்டேன்’ என்று உறுதி காட்டியதும் முனிவர் மறைய, இறைவன் தோன்றி அருளினான் என அரிச்சந்திரன் கதை கட்டப் பட்டது!

பதிஇ ழந்தனம் பாலனை இழந்தனம் படைத்த

நிதிஇ ழந்தனம் இனிநமக் குளதென நினைக்கும்

கதிஇ ழக்கினும் கட்டுரை இழக்கிலேம் என்றார்

மதிஇ ழந்துதன் வாயிழந்(து) அருந்தவன் மறைந்தான். –

நல்லூர் வீர கவிராயர் எழுதிய “அரச்சந்திர புராணம்“ பாடல் எண்–1106

சரி…. ஒரு புருஷனின் கடமை என்ன?

-மனைவி மக்களைக் காப்பாற்றுவது.

ஓர் அரசனின் கடமை என்ன?

-நாட்டு மக்களைக் காப்பாற்றுவது.

அரசனின் கடமையையோ, புருஷனின் கடமையையோ சரியாகச் செய்யாத அரிச்சந்திரன்  எடுத்துக்காட்டுவதற்குத் தகுதியானவனா?

தன் கடமைகளைக் காப்பாற்றாதவன்,                                                                             வாய்மையை மட்டும் காப்பாற்றி என்ன செய்யப் போகிறான்?

இந்த இடத்தில் எதார்த்த வாழ்க்கையை
மய்யப்படுத்தி வள்ளுவர் சொன்னதுதான்
சரியாகப்படுகிறது.

“பொய்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த

நன்மை பயக்கும் எனின்“ – குறள் எண் – 292

இதை விட்டு வாய்மையைக் காப்பாற்றுகிறேன் பேர்வழி என்று  நாட்டையும் மக்களையும் மனைவியையும்  விற்றுத் தொலைத்த அரிச்சந்திரன் செயல் எவ்வகையில் நேர்மை, அறம்? அவர் கொடுத்த வாக்குகூட தேவையற்றது. சிந்திக்காமல் செய்யப்பட்டது.

மகாத்மா காந்திக்கு வேண்டுமானால், அரிச்சந்திரன் கதை உதாரணமாகத் தோன்றியிருக்கலாம். சாதாரணமான நம் குழந்தைகளுக்கு, அரிச்சந்திரன் பொய்க்கதை தானே? இந்தப் புராணப் புளுகுகளைத் தவறான வாழ்வியலைப் பள்ளிப் பாடத்தில் வைப்போரை என்னவென்று சொல்வது?

ஆக, புராணம் எனவரும் அனைத்தும் பொய்க்கதையே!!

வள்ளுவரின் குறள்தான் வாழ்வியல்!

‘வழக்கம் என்பதில் ஒழுக்கம் இல்லையேல்

கழுத்துப் போயினும் கைக்கொள வேண்டா”

என்ற பாரதிதாசன் வரிகள் சிந்தனைக்குரியது;  கைக்கொள்ள உகந்தது!