Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

“வீர” சிவாஜியின் “கோழை” வரலாறு

ஜாதியக் கொடுமைகளும், ஜாதிய அடிப்படையில் வாய்ப்புகள் மறுப்பும் தீபகற்பத்தின் அனைத்துப் பகுதிகளிலும் நிலவி வந்த கொடுமையாகும். அடுத்த மனிதனைக் கீழானவனாகவும், பார்க்கக் கூடாதவனாகவும், தொடக்கூடாதவனாகவும், கற்கக் கூடாதவனாகவும் மாற்றி, வஞ்சித்த கொடுமை எல்லா இடங்களிலும் நிலவியது. அனைத்துக் கொடுமைகளுக்கும் அடிப்படை பார்ப்பனர்கள், அரசர்களிடம் பெற்றிருந்த செல்வாக்கும். அதன் காரணமாய் அரசர்களையே தங்கள் விருப்பப்படி ஆட்டி வைத்ததுமேயாகும்! அடங்கிக் கிடந்த மக்களின் எழுச்சி ஆங்காங்கு உருவாக பல தலைவர்கள் தூண்டுகோலாக அமைந்தனர். திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் வைகுண்டசாமி, சிறீ நாராயண குரு, அய்யன் காளி, மைசூர் சமஸ்தானத்தில் பொம்மான் பசவர் என்பதைப் பார்த்தோம்.

இதன் தொடர்ச்சி மற்ற பகுதிகளிலும் தொடர்ந்தது. தகவல் தொடர்பு இல்லாத காலகட்டத்தில் ஒருவரைப்பற்றி மற்றவர்க்கு தெரியாமலேயே, ஆனால், ஒரே வகையில் இவர்கள் அழுத்தப்பட்டவர்களை விடுவிக்க முயன்றார்கள்.

ஜாதியக் கொடுமைகளால் அதிகம் பாதிக்கப்பட்ட தீபகற்பத்தின் மற்றொரு பகுதி மேற்குக்கரை. மேற்குக் கரையில் மாவீரன் சிவாஜியால் உருவாக்கப்பட்ட மராட்டிய பேரரசு இந்திய உப கண்டத்தில் பெரும் பகுதியில் பரவி இருந்தது. சிவாஜியால் 1674இல் உருவாக்கப்பட்ட இப்பேரரசு முடிவில் 1818இல் பேஷவர் இரண்டாம் பாஜிராவ் காலத்தில் முடிவுற்றது. கிழக்கு இந்திய கம்பெனியோடு நடைபெற்ற போரில் பாஜிராவ் தோற்றதோடு பார்ப்பனர்களான பேஷ்வாக்கள் ஆட்சியும், அத்தோடு மராட்டிய பேரரசும் முடிவிற்கு வந்தது. மாவீரன் சிவாஜி காலத்தில் மொகலாய பேரரசை எதிர்த்து வளர்ந்த பேரரசு இது. 17ஆம் நூற்றாண்டில் மதத்தை அரசியலில் கலக்கும் நிகழ்வு பார்ப்பன பேஷ்வாக்களால் உருவாக்கப்பட்டது. மொகலாய பேரரசரான அவ்ரங்கசீப்பை எதிர்த்து, “ஹிந்தவி ஸ்வராஜ்யா (hindhavi swarajya” – meaning self rule of native hindhu) என்ற அடிப்படையில் மாவீரன் சிவாஜியால் தோற்றுவிக்கப்பட்ட அரசு “மராட்டிய பேரரசு” அடில்ஷா என்ற இஸ்லாமியரை எதிர்த்து இந்து அரசாங்கமாக சிவாஜியால் உருவாக்கப்பட்ட மராட்டிய பேரரசு. சிவாஜி தாக்கி வென்ற 300 கோட்டைகளை ஒருங்கிணைத்து மராட்டிய பேரரசு தோற்றுவிக்கப்பட்டது. ஆனால், அவ்வளவு கோட்டைகளை வென்று பேரரசனாக முடிசூட்டிக் கொள்வதில் சிவாஜிக்குச் சிக்கல் ஏற்பட்டது. சிவாஜி “சத்ரியன்” அல்லவென்றும், சத்ரியன்தான் முடிசூட்டிக் கொள்ள முடியும் என்று பார்ப்பனர்களால் தடுக்கப்பட்டார் சிவாஜி! ஜாதியக் கொடுமை 17ஆம் நூற்றாண்டிலேயே அந்தப் பகுதியில் இருந்த நிலையில் ஜாதியக் கொடுமையின் நிலைமையால் பதவி ஏற்க வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் சிவாஜி வெகுண்டெழுந்த வரலாறும், அதன் பின்  விளைவாகவே அம்மாநிலத்தில் சூத்திரப் புரட்சி தோன்றிய வரலாறு 17ஆம் நூற்றாண்டிலேயே தொடங்கியது. (மராத்திய பேரரசு, Maratha Empire என்ற பெயரில் வலைக்காட்சி).

மாவீரன் சிவாஜிக்கு முன்பு மராட்டிய பேரரசு என்று ஒன்று இருந்ததே இல்லை! இன உணர்வும் அம்மக்களிடம் இருந்ததில்லை. மராட்டிய நாடு, வடக்கில் இருந்து தெற்காக ‘கஹோயாத்ரி’ (gahoyadri) மலைத் தொடராலும், கிழக்கில் இருந்து மேற்காக “விந்திய, சாத்பூரா” மலைகளாலும் சூழப்பட்ட வறண்ட, கரடு, முரடானப் பகுதி. மக்கள் ஏழ்மையாகவே வாழ்ந்தனர். அவர்களில் பலர் வருமானத்திற்காக அருகில் ஆண்ட “அகமது நகர், பீஜப்பூர், கோல்கொண்டா” சுல்தான்களிடம் படை வீரர்களாக இருந்தனர். மராட்டியப் பார்ப்பனர்களோ சுல்தான்களிடம், ஆலோசகர்களாகவும், அமைச்சர்களாகவும், உயர்மட்ட அதிகாரிகளாகவும், படைத் தளபதிகளாகவும் கூட இருந்தனர். சத்ரியர்களுக்கு உரிய போர்த் தொழிலை (தங்களுக்குக் கீழ் வருணத் தொழிலை வருமானம் கருதி செய்தவர்களாக பார்ப்பனர்கள் அங்கிருந்தனர்.) பீஜப்பூர் சுல்தான் அடில் ஷாவிடம், “மதன் பண்டிட், யாசு பண்டிட்” போன்ற பார்ப்பனர்கள் அமைச்சர்களாகவும், கோல்கொண்டா அரசரிடம் அப்துல் ஹாசனிடம், “சூரிய பிரகாஷ் ராவ்” என்ற “மாதண்ணா” என்ற மராட்டியப் பார்ப்பான் முதல் அமைச்சனாகவும், அவனது உடன் பிறந்த சகோதரனான ‘அக்கண்ணா” பீஜப்பூரின் படைத் தலைவனாகவும் இருந்தான். இவர்களின் உறவினன் “காபண்ணா” பெரும் ரெவின்யூ அதிகாரியாகவும் இருந்தான். அகமது நகர் சுல்தானிடம் போர் வீரனாகச் சேர்ந்த “ஷாஜி போன்ஸ்லே” என்ற பார்ப்பான் பதவி உயர்வில் படைத் தலைவனாகவே உருப்பெற்றான். பின் பீஜப்பூர் சுல்தானிடம் உயர் பதவியில் சேர்ந்தான். பீஜப்பூர் சுல்தானிடம் ஒரு ஜாகிரைப் பெற்று “ஜாகிர்தான்” ஆனான். அவனுக்கும், ஜீஜாபாய்க்கும் 1627ஆம் ஆண்டு பிறந்தவன்தான் “சிவாஜி.” (ஆதாரம்: பார்ப்பனர்கள் சூழ்ச்சியும், மன்னர்கள் வீழ்ச்சியும், கோ.இமயவரம்பன்)

1627ஆம் ஆண்டு ஏப்ரல் 5 அன்று, தன் பெற்றோர்க்கு ஆறாவது மகனாகப் பிறந்தான் சிவாஜி. சிவாஜி சிறுவனாக இருந்த போதே தந்தை ஷாஜி, துக்காபாய் என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு, தனியாகச் சென்று விட்டார். அவன் தந்தை பெரும்பாலும் போர்க் களத்திலேயே இருந்ததால் சிவாஜியும், அவன் தாயும் தலைமறைவு வாழ்க்கையே வாழ வேண்டி இருந்தது. அவர்கள் குடும்ப நண்பர் தாதாஜி கொண்ட தேவ் என்பவர் பாதுகாவலில் அவர்கள் வசிக்க வேண்டி நேர்ந்தது. இவரும் ஜீஜிபாயும் சிவாஜிக்குத் தன்னம்பிக்கையும், வீரத்தையும், இந்து மத இதிகாச, புராணங்களையும் சொல்லிக் கொடுத்து ஓர் இந்து மத வீரனாகவே (வெறியனாகவே)வளர்த்தனர். (RSS சங்கிகள் அதனால்தான் 2000 கோடியில் சிலை வைக்க முயல்கின்றனர்). மராட்டியத்தைச் சுற்றி அனைத்துப் பகுதிகளிலும் முஸ்லிம்களே ஆண்டனர்.டில்லியில் மொகலாயர்களும், வங்காளத்தில் முஸ்லிம்கள் ஆட்சி, மராட்டியத்தைச் சுற்றி பீஜப்பூர், கோல்கொண்டா, அகமது நகர் போன்ற அனைத்துப் பகுதிகளிலும் சுல்தான்கள் ஆட்சி என்ற நிலையில் சிவாஜிக்கு இந்து மத வெறி ஏற ஒரு சரியான காரணமாக அமைந்தது. (ஆதாரம்: சிவாஜி முடிசூட்டலும் பார்ப்பனீயமும், சர். ஏ.இராமசாமி முதலியார்.)

சிவாஜியை இந்து மதத்தில் பற்றுள்ளனவாக வளர்க்க வேண்டும் என்பதில் குறியாக ஜீஜிபாயும், தாதாஜி கொண்டதேவும் தீவிரமாக முயன்றனர். ஜீஜிபாய் சிறுவன் சிவாஜிக்குப் பார்ப்பனர்கள் “பூ தேவர்கள்” என்றும், பசுக்கள் கடவுள்கள் என்றும், ஜாதிமுறை கடவுள் அமைத்ததென்றும், இந்து மதக் கோட்பாடுகள்தான் உலகின் சிறந்த வாழ்க்கை முறை என்றும் தினம் கூறி வந்தார். ராமதாசர் என்ற பார்ப்பன குருவை இந்து மதப் புராணங்களைச் சொல்லிக் கொடுக்க நியமித்தார். ராமதாசர், சிவாஜியிடம், “நீ, தேவர்கள், பசுக்கள், பார்ப்பனர்கள், இந்து தர்மம் ஆகியவற்றைப் பாதுகாக்கவே பிறந்தவன். அதற்காகவே கடவுள் உன்னைப் படைத்துள்ளார். இந்து மதத்தையும், சனாதன தர்மத்தையும் பாதுகாக்கவே கடவுள் உன்னைப் படைத்துள்ளார். இந்து மதத்தைப் பாதுகாக்க உன்னை விட்டால் வேறு ஆள் இல்லை” என்றெல்லாம் உபதேசம் தொடர்ச்சியாக செய்து வந்தார். தாதாஜியோ, இறக்கும் தருவாயில், சிவாஜியிடம், “நீ புகழுடன் விளங்கும் காலம் வரும்பொழுது, சனாதன தர்மத்தையும், அதன் சிறப்புக்களையும் பழையபடியும் நிலைநாட்ட வேண்டும்” என்று கட்டளையிட்டு உயிர் நீத்தான். இவை போன்ற தொடர்ச்சியான மத உபதேசங்கள், சிவாஜியை ஓர் இந்து மதத்தில் தீவிர பற்றாளனாகவே மாற்றி விட்டது. (ஆதாரம்: பார்ப்பனர்கள் சூழ்ச்சியும், மன்னர்கள் வீழ்ச்சியும். கோ.இமயவரம்பன்.)

மாவீரன் சிவாஜி, மதத்தில் தீவிரமாக இருந்தாலும், வீரத்திலும் குறைந்தவனில்லை. 19ஆம் வயதில் 1646ஆம் ஆண்டு பீஜப்பூர் சுல்தானின் “டோர்னா” கோட்டையை கைப்பற்றினான். அங்கிருந்த பெருஞ்செல்வத்தைக் கொள்ளையடித்து, அதற்கு அருகிலேயே “ராஜ்கார் கோட்டையைக் கட்டினான். பிறகு பீஜப்பூருக்குச் சொந்தமான “சக்கான்”, “கொண்ட்னா” கோட்டைகள் அவன் வசமாயின. 1646இல் நீலோஜி நீல்கந்த் என்பவனை வென்று “புரந்தர்” கோட்டையையும், சந்திரராவ் மூர் என்பவனை வென்று “ஜாவ்லி”யையும் கைப்பற்றினான். ஜாவ்லியில் கொள்ளையடித்த கணக்கற்ற பொருளைப் பயன்படுத்தி, “பிரதாப்கார்” கோட்டையைக் கட்டினான். அதில் தன் குலதெய்வமான “பவானி”க்கு கோயில் கட்டினான். அவ்ரங்கசீப்பின் “கல்யான்”, “பிவந்தி” கோட்டைகளையும், “ஜூனார்” கோட்டையையும் தனதாக்கிக் கொண்டான். “சாமர்குண்டா”, “ரெய்சின்” கோட்டைகளும் சிவாஜியின் கைவசம் வந்தது. இதுபோன்று மற்ற சமஸ்தானங்களின் 300 கோட்டைகளைக் கைப்பற்றி “மராட்டிய” அரசை ஒரு பெரும் பேரரசாக விரிவாக்கினான். தமிழ்நாட்டிலும் தஞ்சை, மதுரை போன்ற பகுதிகளும் மராட்டியப் பேரரசின் அங்கங்களாக மாறின.  (ஆதாரம்: பார்ப்பனர் சூழ்ச்சியும், மன்னர்கள் வீழ்ச்சியும். கோ.இமயவரம்பன்.)

பீஜப்பூர் சுல்தானின் ஆற்றல் மிக்க படைத் தலைவனான அப்சல்கான், சிவாஜியை ஒடுக்க பெரும்படையோடு பிரதாப்காருக்கு வெளியே வந்து முகாமிட்டிருந்தான். சண்டையின்றி சிவாஜியை வெல்ல திட்டம் தீட்டியவன், “கிருஷ்ணாஜி பாஸ்கர்” என்ற பார்ப்பன அதிகாரியை அழைத்து, சிவாஜியை வெல்ல சதித்திட்டம் தீட்டினான். சதித் திட்டம் வெற்றி பெற்றால் அவனுக்கு பெரும் பொருள் கொடுப்பதாகவும் கூறி சிவாஜியிடம் தூதனுப்பினான்.

(தொடரும்…)