Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

பெரியாரின் மனிததர்மம்- ரா.செந்தில்குமார். தோக்கியோ, ஜப்பான்

வர்ணங்களின் பெயரால், முன் ஜென்ம பாவபுண்ணியத்தால் விளைவதே குடிபிறப்பும், ஜாதியும் என்று ஜாதிய இழிவை, மானுட அநீதியை, தீண்டாமையை நியாயப்படுத்தியது ஸனாதன தர்மம். தீண்டாமை ஒழிப்பில் மகாத்மா காந்தி காட்டிய அர்ப்பணிப்பு குறைகூற முடியாத ஒன்று. ஆனால், அடிப்படையில் வருணாசிரம தர்மத்தைக் கேள்விக்குள்ளாக்க காந்தியார் முயலவில்லை. அந்தந்த வருணத்திற்கு உட்பட்ட தருமங்களை முறையாகச் செய்வதன் மூலம், அவர்கள் உயர்கிறார்கள் என்று அவர் சொன்னார். காந்தியார் ஹிந்துக்களின் ஒற்றுமையை நோக்கமாகக் கொண்டிருந்தார். ஆலயப் பிரவேசம் போன்ற சமதர்மங்களை, ஜாதி ஹிந்துக்கள் கொடையாக ஆதிதிராவிடர்களுக்குக் கொடுக்கவேண்டும் என்று அவர் கூறினார்.

காந்தியார் நம்பியது தவறென்பதைக் காங்கிரஸில் இருந்த பார்ப்பனர்கள் பல நேரங்களில் மெய்ப்பித்துக் காட்டினார்கள். காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான
எஸ்.சத்தியமூர்த்தி அய்யர் குழந்தைத் திருமண எதிர்ப்பு போன்ற அடிப்படைக் கொள்கைகளைக் கூட ஏற்கவில்லை. அது ஹிந்து தர்மத்தின் ஒரு பகுதி என்று சத்தியமூர்த்தி கூறினார். ப.சுப்பராயன் அவர்கள் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில், டாக்டர் முத்துலெட்சுமி (ரெட்டி)கொண்டு வந்த தேவதாசி முறை ஒழிப்புத் தீர்மானத்தை, அது ஆகம விதிகளுக்கு எதிரானது என்று எதிர்த்தவர் எஸ்.சத்தியமூர்த்தி அய்யர்.

வ.வே.சு.அய்யர், தேசியத்தைப் பரப்பவேண்டி தாம் நடத்திய சேரன்மாதேவி பாலபாரதி தமிழ் குருகுலம் பரத்வாஜ் ஆசிரமத்தில், பார்ப்பனப் பிள்ளைகளுக்கு உப்புமாவும், பார்ப்பனர் அல்லாதாருக்குப் பழைய சோறும் போட்டார். தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரின் மகன் அந்தக் குருகுலத்தில் படித்தான். அந்தப் பையன் பார்ப்பனர்கள் குடிக்கும் தண்ணீர்ப் பானையில் இருந்து தண்ணீர் மொண்டு குடித்ததற்காகத் தண்டிக்கப்பட்டான். இத்தனைக்கும் காங்கிரஸ் கொடுத்த நன்கொடையில்தான் அந்தக் குருகுலமே நடந்து வந்தது. பாலக்காட்டுக்கு அருகிலுள்ள கல்பாத்தியில் பார்ப்பனத் தெருக்களில் ஈழவர்கள் நடக்க தடையிருந்தது. அந்தத் தடையை எதிர்த்து தாழ்த்தப்பட்ட நியமன உறுப்பினர் ஆர்.வீரய்யன் சென்னை சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தபோது, அதை எதிர்த்தவர் காங்கிரஸின் சுயராஜ்யக் கட்சியைச் சேர்ந்த நரசிம்மார்ச்சலு என்கிற பார்ப்பன உறுப்பினர். இன்று தெருக்களில் நடக்க வேண்டுமென்பார்கள், நாளை ஆலயப் பிரவேசம் கேட்பார்கள், கலப்புத் திருமணம் செய்யவேண்டும் என்பார்கள் என்று வாதிட்டு அவர் எதிர்த்தார். கலவரம் வரக்கூடாது என்பதற்காகத்தான், கல்பாத்தியில் ஈழவர்கள் ரதம் செல்ல அனுமதிக்கவில்லை என்று அப்போது மந்திரியாக இருந்த சர்.சி.பி.ராமசாமி அய்யர் கூறினார்.

நீதியாகப் பெறவேண்டிய சமதர்மத்தை, கொடையாக ஒருபோதும் யாரும் யாரிடமிருந்து பெறவேண்டியதில்லை என்பதைக் காந்தியார் புரிந்துகொள்ளவில்லை. எனவேதான், பெரியார் காந்தியாரிடமிருந்து விலகத் தொடங்கினார். “என்றைக்கு காந்தியார் வருணங்கள் நான்கு உண்டு. அவை பிறவியிலேயே ஏற்பட்டது. சூத்திரராகப் பிறந்தவர், அடுத்த ஜென்மத்தில்தான் பிராமணனாய்ப் பிறக்கலாம்” என்று தீர்ப்பளித்தாரோ அப்போதே “ஸ்ரீமான் காந்தியாரை விட்டு முழுவதுமாக விலகிவிட்டேன்” என்று அறிவிக்கிறார் தந்தை பெரியார்.

பெரியார், வருணாசிரம தர்மத்தின் அடிப்படையை ஆட்டம் காண வைத்தவர். அவருடைய கேள்விகள் யாவும், அதன் அடித்தளத்தைத் தகர்க்கத் தொடங்கின. எனவேதான், பெரியாரின் மீதும், சுயமரியாதை இயக்கத்தின் மீதும் தொடர்ச்சியாக அவதூறுகள் பரப்பத் தொடங்கினார்கள். 1924ஆம் ஆண்டு கேரளாவின் வைக்கத்தில் தீண்டாமைக்கு எதிராகத் தொடங்கப்பட்ட போராட்டம் வெற்றி அடைவதற்கு மிக முக்கியக் காரணமாக விளங்கிய தந்தை பெரியாரின் பெயரை, தொடர்ந்து இருட்டடிப்பு செய்யத் தொடங்கினார்கள். இன்றளவிலும், வைக்கம் போராட்டத்தில் பெரியாரின் முக்கியத்துவத்தைக் குறைக்கும் முயற்சிகள் நிகழ்ந்துகொண்டே தான் இருக்கின்றன.

1924ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒன்றாம் நாள், கேரளா மாநிலம், கோட்டயம் மாவட்டம் வைக்கம் என்னும் ஊரிலுள்ள சிவன் கோவிலைச் சுற்றியுள்ள தெருக்களில் ஈழவர் மற்றும் புலையர்கள் நடமாட இருந்த தடையை எதிர்த்து, கேரள காங்கிரஸ் கமிட்டியின் செயலாளர் கே.பி.கேசவமேனன் போராட்டத்தைத் தொடங்குகிறார்.

ஒரு மாத காலத்துக்குள், அதாவது ஏப்ரல் 7ஆம் தேதி, ஈழவர்கள் மற்றும் புலையர்களை அந்தத் தெருக்களில் நடமாட அழைத்துச் சென்றதாகக் குற்றம் சாட்டப்பட்டு கே.பி.கேசவமேனன் மற்றும் தேசாபிமானி டி.கே.மாதவனும் ஆறு மாத காலம் சிறைத்தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்படுகின்றனர்.

ஏப்ரல் 13ஆம் தேதி பெரியார் அந்தப் போராட்டத்தைத் தொடர அழைக்கப்பட்டு, அவர் வைக்கத்திற்கு வந்து சேருகிறார்.மே மாதம் 3ஆம் தேதி வரை பல்வேறு கூட்டங்களில் உரை நிகழ்த்தி அந்தப் போராட்டத்திற்கு ஆதரவு திரட்டுகிறார்.

மறுபடியும் மே மாதம் 15ஆம் தேதி தன்னுடைய துணைவியார் நாகம்மையாருடன் வைக்கம் வந்து சேரும் பெரியார் மீது காவல்துறை வழக்குத் தொடர்கிறது.  இந்த நீதிமன்றம் நியாயம் செய்யும் என்று தான் நம்பவில்லையென்றும், எவ்விதத் தண்டனையையும் ஏற்கத் தயார் என்றும் அறிவிக்கிறார் தந்தை பெரியார். ஒரு மாத காலம் வெறுங்காவல் தண்டனை தந்தை பெரியாருக்கு அளிக்கப்படுகிறது. தந்தை பெரியாரின் மனைவி நாகம்மையார் பெண்களுடன் சேர்ந்து, அந்தப் போராட்டத்தைத் தொடர்கிறார்.

ஜூன் மாதம் சிறையிலிருந்து தந்தை பெரியார் விடுதலையாகி, மீண்டும் போராட்டத்தில் கலந்துகொள்கிறார். இந்த முறை நான்கு மாதம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு மீண்டும் ஜூலை மாதம் 19 தேதியன்று சிறையில் அடைக்கப்படுகிறார்.

ஆகஸ்ட் மாதம் விடுதலையாகும் பெரியார் மீண்டும் தொடர்ந்து போராட்டங்களில் கலந்துகொள்கிறார். 1925ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி பெரியார் மீது விதிக்கப்பட்டிருந்த போராட்டக் கள பிரவேசத் தடை உத்தரவை அரசு விலக்கிக்கொள்கிறது. நவம்பர் மாதம் 27ஆம் தேதி நீண்ட நாட்கள் நடந்த வைக்கம் சத்யாகிரக போராட்டம் முழு வெற்றி பெறுகிறது. கோவிலைச் சுற்றியுள்ள தெருக்கள் அனைத்து ஜாதிகளுக்கும் திறந்துவிடப்பட்டன.

ஏறக்குறைய ஒரு வருட காலம் நடந்த போராட்டத்தில் 114 நாட்கள் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட தந்தை பெரியார் 74 நாட்கள் சிறையில் வாடியிருக்கிறார். இதன் முக்கியத்துவத்தைத்தான் குறைத்துக்காட்ட இன்றளவும் முயற்சிகள் நடக்கின்றன. ஆனால், பெரியார் எங்கும் – எதிலும் – என்றும் வென்றுகொண்டே இருக்கிறார்.è