உலகெங்கிலும் வலதுசாரி அரசியல் அசுர பலம் கொண்டு எழுந்து நிற்கிறது. பல நாடுகளும் இன்று பாசிச அரசுகளின் பிடியில் சிக்கித் தவிக்கின்றன. இந்தியாவைத் தாண்டி உலக வல்லரசாகிய அமெரிக்கா, ரஷ்யா, இஸ்ரேல், ஹங்கேரி என்று பட்டியல் நீளும். பாசிச அரசுகளின் முதல் ஆயுதம், ஒரு கற்பனை எதிரியைச் சித்திரிப்பது. அதை மக்கள் மனதில் விதைத்து, அந்த எதிரிகளிடம் இருந்து காக்க வந்த காப்பாளர்தான் தான் என்று நிறுவுவது. பிஜேபிக்கு இஸ்லாமியர்கள் என்றால், ட்ரம்பிற்கு குடியேறிகள்.
அண்மைக் காலமாக வெளிநாடு வாழ் இந்தியர்கள் தாக்கப்படும் நிகழ்வுகள் தொடர்கின்றன. அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி போன்ற நாடுகளில் குடியேறிகளுக்கு எதிரான போராட்டங்கள், பெரும் அளவில் நிகழ்த்தப்பட்டன. இவர்களது கோரிக்கைகள் குடியேறிகள் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டும் என்பதாக இருந்தாலும், மறைமுகமாக குடியேறிகளின் மீதான வன்முறை தூண்டிவிடப்படுகிறது.

இந்தப் போராட்டங்களைத் தொடர்ந்து, வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள், தங்கள் கலாச்சாரத்தை வீட்டிற்குள்ளோ அல்லது ஒரு மண்டபத்திலோ வைத்துக் கொள்ளாமல், தெருக்களில் ஊர்வலமாகச் செல்வதுடன் மட்டுமில்லாமல், தெருக்கள், நீர்நிலைகளை அசுத்தப்படுத்துவது, அதிக இரைச்சலை ஏற்படுத்துவது மற்றும் பொது இடங்களில் நாகரிகமற்ற முறையில் நடந்து கொள்வது அங்கிருக்கும் குடிமக்களை வெறுப்புக் கொள்ள வைக்கிறது போன்ற காணொலிக் காட்சிகளைக் காண முடிகிறது. அது உண்மையும் கூட! வாழ்வாதாரம் தேடி வெளிநாடுகளுக்குச் செல்லும் இளைஞர்களில் சிலர் அங்கு வசிக்கும் அந்நாட்டு மக்களை விட தாங்கள் உயர்ந்தவர்கள் என்பதைப் போல நடந்து கொள்வதையும் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் காணலாம். ஆனால், குடியேறிகளுக்கு எதிரான இந்தப் போராட்டங்கள் எல்லாம் இவற்றை மட்டுமே வைத்து நடப்பதில்லை.
சில வாரங்களுக்கு முன்னர் குடியேறிகளுக்கு எதிரான போராட்டம் ஆஸ்திரேலியாவின் முக்கிய நகரங்களில் நடந்தது. ஒருபக்கம் போராட்டம் என்றால் மறுபக்கம் குடியேறிகளுக்கு ஆதரவான பல குரல்களும் எழுந்தன. அதில் குடியேறிகள் இல்லையென்றால், நாடு இவ்வளவு முன்னேற்றத்தைக் கண்டிருக்காது என்றும், குடியேறிகள் ஒன்றும் இங்கே சொகுசாக வாழ்ந்துவிடவில்லை, தங்களுக்குரிய கல்வி தகுதிக்கு ஏற்பத்தான் வேலைகளில் இருக்கிறார்கள் என்றெல்லாம் பதிவிட்டார்கள். இப்படி ஆதரவு மற்றும் எதிர்ப்புக் குரல்கள் எழுந்தாலும், இவை எல்லாம் முற்றிலுமாகக் குடியேறிகளின் நாகரிகமற்ற செயல்களில் அல்ல என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
குடியேறிகளை எதிர்த்துத் துவங்கப்பட்ட முதல் பிரபலமான இயக்கம் என்றால் அது KKK எனப்படும் Ku Klux Klan தான். 1865இல் துவங்கப்பட்ட அமைப்பு. அதன் வீரியம் எப்படி இருந்தது என்பதை அந்தக் காலகட்டத்தில் வாழ்ந்த கருப்பின மக்களைக் கேட்டால் தெரியும். வாய்ப்பிருப்பவர்கள் ‘அமெரிக்கன் ஹிஸ்டரி’ திரைப்படத்தைப் பார்த்தால் புரிந்து கொள்ளமுடியும். KKK அமைப்பு எப்படி இளைஞர்களை மூளைச் சலவை செய்து தாங்கள் நினைத்ததைச் சாதித்துக் கொள்கிறார்கள் என்பதையும், அதில் இருந்து மீண்டு வரும் இளைஞர்கள் எப்படி குறிவைக்கப்படுகிறார்கள் என்பதையும் மிக சுவாரஸ்யமாக விளக்கும் திரைப்படம். இவை எல்லாம் 1990 காலகட்டங்களில் என்றால், தொழில்நுட்ப வளர்ச்சி நான்கு கால் பாய்ச்சலில் பாயும் காலகட்டங்களில் இந்த வெறுப்பு காட்டுத் தீயாய்ப் பரவிக்கொண்டிருக்கிறது.
ஆணாதிக்க மனோபாவம் உள்ள இளைஞர்கள், சிறை சென்று வரும் இளைஞர்கள், தனிமையில் இருக்கும் இளைஞர்கள், லேசான மனநோய் இருக்கும் இளைஞர்கள், போதைக்கு அடிமையான இளைஞர்கள், போருக்குச் சென்று திரும்பிய இளைஞர்கள் என்று குறி வைத்து இந்த வலைக்குள் இழுக்கப்படுகிறார்கள். இன்றைய இளைய தலைமுறைகள் என்றில்லை, முதியவர்களே அதிக நேரம் இணைய தளத்தில் தங்கள் நேரத்தைச் செலவிடும் பொழுது, இளைஞர்களுக்கு அந்த வாய்ப்பு அதிகமாகக் கிடைக்கிறது. மேற்சொன்ன ஏதோ ஒரு புள்ளியில் இணையும் இளைஞர்கள், ‘online’இல் ஒன்று திரட்டப்பட்டு, அவர்களது மூளையில் விஷ ஊசி ஏற்றப்படுகிறது. அதில் பெரும்பான்மையானவர்கள் வேலையற்ற இளைஞர்கள்.
குடியேறிகளுக்கு எதிரான போராட்டம் என்று கூறிக்கொண்டாலும், அது நிறவெறிப் போராட்டம் தான். அவர்கள் கருப்பு, மாநிறம் மற்றும் மஞ்சள் நிற மக்களுக்கு எதிராகத்தான் இந்தப் போராட்டத்தை முன்னெடுக்கிறார்கள். குடியேறிகளால் தங்கள் வேலை, வீடு வாங்கும் உரிமை, மருத்துவத்தை இழக்கிறோம் என்று அவர்கள் கூறுவதில் சிறிதளவும் உண்மை இல்லை என்பதை, குடியேறிகள் மற்றும் kudimakkalin கல்வித் தகுதி விளக்கும்.
இவையெல்லாம் ஒருபுறம் இருக்க, முன்பு குறிப்பிட்டதைப் போல, இந்தியக் கலாச்சாரத்தை நான்கு சுவருக்குள் வைக்காமல் தெருக்களை அசுத்தம் செய்வதில் முன்னணியில் இருப்பவர்கள் வடஇந்தியர்களே. போலிக் கடவுச் சீட்டு, போலி விசா, போலிக் கல்விச் சான்றிதழ் என்று வடஇந்தியர்கள் செய்யும் அடாவடித்தனங்கள் உலகப் பிரசித்தி. ஆனால், வெளிநாட்டவருக்கு நாம் அனைவரும் இந்தியர்கள் தாம். ஆனால், இவை எல்லாம் இந்தியர்களோ மற்றக் குடியேறிகளோ தாக்கப்படுவதற்கான காரணங்களாக அமையாது.
தாங்கள் குறிவைத்துத் தாக்கப்படுகிறோம் என்று கூப்பாடு போடும் இந்தியர்களில் பலர், இந்தியாவில் அதையே மற்ற சிறுபான்மை மக்கள் மீதும் ஜாதியால் ஒடுக்கப்பட்ட மக்கள் மீதும் அதே தாக்குதல்களைத் தான் பல ஆயிரம் ஆண்டு காலமாக நிகழ்த்துகிறார்கள் என்பதை உணர மறுக்கிறார்கள்.
வலியவர்கள் எளியவர்களை ஒடுக்குவது ஒன்றும் புதிதில்லை. தளங்களும் வடிவங்களும் தான் மாறுபடுகின்றன. இறுதியில் எப்போதும் சமத்துவம் வென்றிருப்பதைத்தான் வரலாறு நமக்கு உணர்த்துகிறது. è





