நம் அறிவு ஆசான் தலைவர் தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் ஆகியோரின் அளப்பரிய தொண்டறத்தால் வளர்ந்த, திராவிடர் சமுதாய பாதுகாப்பு அரணாம்
இந்த மனிதநேய, சுயமரியாதைச் சூரியக் கதிரொளி யான திராவிடர் கழகத்தினை நடத்திடும் மிகப்பெரிய பொறுப்பைச் சுமக்கும் பெருங்கடமை
இந்த எளிய தொண்டனின் தோள்மீது அன்னையார் மறைவுக்குப்பின் திணிக்கப்பட்டது.
இந்தக் குருவியால் அந்தப் பனங்காயைச் சுமக்க முடியுமா என்ற அச்சம், மற்றவர்களுக்கு மட்டுமல்ல, இந்தக் ‘குருவிக்கே” இருந்தது! ஆனால், அந்தக் குருவி தனிக் குருவியாக இல்லாமல், லட்சோப லட்சக் கருஞ்சிறுத்தைப் பட்டாளம் தனது வலிமைமிக்க தோள்கள்மீது அக்குருவியைத் தூக்கி வைத்துக் கொண்டதால், அதற்குச் சுமை ஒரு பாரமாகத் தெரியாமல், சுகமான கடமையாகவே எப்போதுமே தெரிகிறது!

பவள விழாவில் புத்தகங்களை வெளியிடும் இனமானப் பேராசிரியர்
தலைமை பொறுப்பேற்றாலும் இயக்கத் தொண்டர்களின் முதல்வனாக மட்டுமே எண்ணி பணிகளை மேற்கொண்டு வந்தோம். எனவே நேரடியாக நம் பிறந்தநாளை கொண்டாடுவதில்லை என்பதோடு, பிறந்தநாள் அன்று எந்த நிகழ்விலும் பங்கேற்பதில்லை, வீட்டிலும் இருப்பதில்லை.
சில இடங்களில் தோழர்கள், ‘இனமானப் பெருவிழா’ போன்ற வேறு பெயர்களில் விழாக்களை நடத்தி வந்தார்கள். (21.6.2007 அன்று) சென்னை கலைவாணர் அரங்கத்தில் உலகத் தலைவர் பெரியார் புத்தக வெளியீட்டு விழா நிகழ்வின் பொழுது முதலமைச்சர் கலைஞர் அவர்களிடம் திராவிடர் கழகத்தின் சார்பில் அன்றைய பொதுச் செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களால் ஒரு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. வருகின்ற டிசம்பர் மாதம் 2ஆம் தேதி கழகத்தின் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு 75ஆம் ஆண்டு பிறந்த நாள் அவ்வளவு விழா. அவர் எப்பொழுதும் பிறந்த நாளைப் புறக்கணித்து கொண்டாடுவதில்லை. இந்த 75ஆம் ஆண்டு பிறந்த நாளில் அவர் அவசியம் பங்கேற்க கலைஞர் அவர்கள் உதவிட வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.

கலைஞர் அகமகிழ்ந்து அவசியம் பங்கேற்க வேண்டும் என்று நமக்கு ஆணையிட்டு, அனைவரும் வருகை தர வேண்டும் என்று தோழர்களையும் கேட்டுக்கொண்டார்.
எப்போதும் இந்த விழாக்களில் சிக்காத நாம் கலைஞர் அன்பின் பிடியில் சிக்கிக் கொண்டோம். 75ஆம் ஆண்டு பவள விழா இரண்டு நாட்கள் சென்னையில் நடைபெற்றது.
முதல் நாள் (1.12.2007) நிகழ்வில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் நிதி அமைச்சருமான இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் பங்கேற்று பாராட்டுரை வழங்கினார். அப்போது தந்தை பெரியார் அவர்களுக்கு பின் நடைபெற்ற இயக்கப் பணிகளைப் பாராட்டி நாம் ஆயிரம் வெற்றிகளைப் பெற்றிருக்கலாம் ஆனால் ஆரியத்திடம் இருந்து அவ்வளவு சுலபமாக வெற்றி பெற்று விட முடியாது என்று கூறினார். முதல் நாள் நிகழ்வில் தொகுத்த பெரியார் களஞ்சியம் மதம் மூன்றாம் பாகம் இனமான பேராசிரியர் அவர்களால் வெளியிடப்பட்டது பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவர் நீதிபதி எம்.எஸ்.ஜனார்த்தனம் பெற்றுக் கொண்டார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் கே.எம்.காதர் மொய்தீன், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சமூகநீதியை உயர்த்திப் பிடித்துக் கொண்டிருக்கும் மூத்த வழக்கறிஞர் ரவிவர்மகுமார், பாமக மாநிலத் துணைத் தலைவர் திருக்கச்சியூர் ஆறுமுகம், ஆந்திர மாநில உயர்நீதிமன்ற நீதிபதி பி.எஸ்.ஏ.சாமி, காங்கிரஸ் கட்சியின் சார்பில் உ.பலராமன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தோழர் தா.பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்று பாராட்டுவதை வழங்கினர்.

இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் 2.12.2007 அன்று காலை தொடங்கின. முதல் நிகழ்வாக பெரியார் திடலில் இயங்கி வரும் பெரியார் பகுத்தறிவு ஆய்வு நூலகத்தில் விரிவாக்கப்பட்ட பகுதி திறப்பு விழா நடைபெற்றது. அன்றைய உள்ளாட்சித் துறை அமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் அதனை திறந்து வைத்தார். பின்னர் ஒளிப்பட கண்காட்சி திறக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தோழர்கள், தலைவர்கள், மருத்துவர்கள், நீதித்துறையினர், பல்வேறு பெருமக்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். புத்தக கண்காட்சியைச் செய்தி விளம்பரத் துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி திறந்து வைத்தார்.

ஒளிப்படக் காட்சியைப் பார்வையிடும் உள்ளாட்சித் துறை அமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின்
அன்று மாலை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் முதலமைச்சர் பங்கேற்கும் பவள விழா நிகழ்ச்சி நடைபெற்றது. கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கிய விழாவிற்கு திராவிடர் கழகப் பொருளாளர் கோ.சாமிதுரை வரவேற்புரை ஆற்றினார். திராவிடர் கழக பொதுச் செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன் அறிமுக உரையாற்றினார். மற்றொரு பொதுச் செயலாளர் சு.அறிவுக்கரசு விழாவிற்கு தலைமை ஏற்க முதலமைச்சர் கலைஞர் அவர்களை முன்மொழிந்து உரையாற்றினார். கழகத் துணை பொதுச் செயலாளர்
துரை.சந்திரசேகரன் வழிமொழிந்து உரையாற்றினார்.

மோடியின் ‘கர்மயோக்’ புத்தகம் எரிப்பு
இனமுரசு சத்யராஜ், ஒன்றிய அமைச்சர்கள் ஆ.இராசா, டி.ஆர்.பாலு, டாக்டர் சோம.இளங்கோவன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நாம் ஏற்புரையாக நன்றியுரையாற்றி, இரண்டு கோரிக்கைகளை முன்வைத்தோம். ஒன்று, தந்தை பெரியார் அவர்களுக்கு அரசு சார்பில் 95 அடி உயர பேருருவச் சிலை அமைக்க வேண்டும். மற்றொன்று, ஜாதி ஒழிப்புக்காகச் சட்ட எரிப்புப் போராட்டத்தில் சிறை சென்ற கழகப் போராளிகளுக்கு அரசின் அங்கீகாரத்தை வழங்கும் வகையில் அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கிட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தோம். முதலமைச்சரும் இதற்கு முயல்வதாகக் கூறி உறுதியளித்தார். (பின்னர் நாடு முழுவதும் 95 சிலைகள், சமத்துவபுரங்கள் அமைத்தார்.)
இந்த நிகழ்வில் முதலமைச்சர் கலைஞர் அவர்கள் எமது பொது வாழ்க்கையில் தோன்றாத் துணையாக என்றும் விளங்கும் என் வாழ்விணையர் மோகனா அவர்களுக்கும், எமக்கும் பொன்னாடை போர்த்தி பாராட்டி, 10க்கும் மேற்பட்ட புத்தகங்களை வெளியிட்டு, சிறப்புரையாற்றினார். அவரது உரையில், “வீரமணி அவர்கள் கொள்கைப் பிடிப்பிலே எவ்வளவு அழுத்தமானவர், எந்த அளவிற்கு பெரியாருடைய அறிவுரைகளைக் கண்ணை மூடிக் கொண்டு பின்பற்றியவர் என்று அனைவரும் அறிவோம், பெரியார் பச்சையாகச் சொல்வார், “நான் ஒன்று சொல்கிறேன் என்றால், நான் ஆராய்ந்து, அறிவைப் பயன்படுத்தி எதைச் சொல்லலாம் என்று தெளிந்த பிறகு சொல்லுகிறேன், அதைக் கேட்பவன் என்னோடு இருக்க, கேட்க மறுப்பவன் போய்விடலாம்.” இது பெரியார் – அன்பான கட்டளையாக அடிக்கடி எங்களுக்கெல்லாம் சொல்லப்பட்டதுண்டு. அந்தப் பெரியார் எதைச் சொன்னாலும் அதை அப்படியே பின்பற்றுகிற மாணவனாக – அவருடைய உண்மைத் தளபதிகளிலே ஒருவராக – என்னுடைய இளவன் வீரமணி அவர்கள் இருந்திருக்கிறார்கள்” என்று குறிப்பிட்டார்.

மோடியின் ‘கர்மயோக்’ புத்தக எரிப்புப் போராட்டத்தில் பங்கேற்ற தோழர்கள்
அன்று (2.12.2007) மதியம் சென்னை மாவட்ட திராவிடர் கழக மேனாள் தலைவரும் பெரியார் பெருந்தொண்டரும் சென்னை மாநகராட்சி மேனாள் உறுப்பினருமான சென்னை தேனாம்பேட்டை தே.மு.சண்முகம் தமது 84ஆம் வயதில் மறைந்தார். திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன் மற்றும் தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகப் பொறுப்பாளர்களுடன் சென்று எமது இறுதி மரியாதையைச் செலுத்தினோம்.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் கருணானந்தன் நிறுவிய பெரியாரியல் அறக்கட்டளைச் சொற்பொழிவில்.
பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் சார்பில் 7.12.2007 அன்று நடைபெற்ற கிராமப்புற இளைஞர்களுக்கான மருத்துவம், வேளாண்மை மற்றும் பொதுவியல் தொழில்நுட்பங்கள் சார்ந்த வேலை வாய்ப்பு அளிக்கும் கல்வி மற்றும் பயிற்சி வகுப்பு தொடக்க விழாவிற்கு தலைமை வகித்தோம். அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். அமெரிக்க பெரியார் பன்னாட்டமைப்பின் பொறுப்பாளர்களான டாக்டர் சோம. இளங்கோவன், டாக்டர் இலக்குவன் தமிழ், பேராசிரியர் அரசு.செல்லையா ஆகியோர் பங்கேற்றனர்.
இன்று பிரதமராக உள்ள நரேந்திர மோடி 2007இல் குஜராத் முதலமைச்சராக இருந்தார். உச்சநீதிமன்றத்தால் மிகக் கடுமையாக விமர்சிக்கப்பட்ட முதலமைச்சர் அவர்தான். அப்போது அவர் ஒரு புத்தகம் எழுதினார். அதற்கு பெயர் கர்மயோக் (Karmayog).இந்த நூலை அவர் தனிப்பட்ட முறையில் வெளியிடவில்லை குஜராத் மாநில அரசின் செய்தித்துறை அதை வெளியிட்டிருந்தது. அந்த நூலில் அவர் எழுதி இருந்த செய்தி நாடெங்கும் கொந்தளிப்பை உருவாக்கியது.
‘“மலம் அள்ளுவது. சாக்கடைகளையும், குப்பைகளையும் அகற்றும் பணியில் ஈடுபடுவோர் யோக நிலையை அடைவார்கள்.

தமிழ்நாடு வரலாற்று மாநாடு நிகழ்வில் ஆசிரியர்
அந்தப் பணியைச் செய்வோர்கள் ஒன்றை எண்ணிப் பார்க்க வேண்டும். அந்தப் பணியை அவர்கள் கடமையாகச் செய்வதன் மூலம் ஒட்டு மொத்தமான சமூகத்திற்கும். கடவுள்களுக்கும் மகிழ்ச்சியைக் கொடுக்கின்றனர்!” என்று ஒடுக்கப்பட்ட மக்களின் நாக்கில் தேன் தடவி எழுதியிருக்கிறார். இதனை கண்டித்து இந்த நூலை எரிக்கும் போராட்டத்தை திராவிடர் கழகம் முன்னெடுத்தது. 11.12.2007 அன்று சென்னை ஒயிட் மெமோரியல் ஹால் எதிரில் நம் தலைமையில் நடைபெற்றது. திராவிடர் கழகத்துடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் இணைந்து கொண்டது. அக்கட்சியின் தலைவர் தோழர் தொல்.திருமாவளவன் நம்முடன் கலந்து கொண்டார். அவர் ஆற்றிய கண்டன உரையில், ‘“எந்த மண்ணில் வர்ணாசிரம தர்மம் வந்துவிடக்கூடாது என்று தந்தை பெரியார் அவர்களும், புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களும் கூறினார்களோ அந்த மண்ணில் மீண்டும் மனு தர்மத்தை நிலைநாட்டப் பார்க்கிறார் நரேந்திர மோடி. நமது ஆசிரியர் அய்யா கி.வீரமணி அவர்கள் அவருக்கு எடுக்கப்பட்ட டிசம்பர் ஒன்றாம் தேதி பிறந்த நாள் விழாவில் மனுதர்மத்தை வலியுறுத்தும் நரேந்திர மோடியின் புத்தகம் கொளுத்தப்படும் என்பதைப் பிரகடனப்படுத்தினார். அந்தப் புத்தகத்தை எரிக்கும் போராட்டத்திற்காக நாமெல்லாம் கூடி இருக்கிறோம். மனுதர்மம் இந்த நாட்டிலே எந்த விதத்தில் வந்தாலும் அதனை அனுமதிக்க மாட்டோம்” குறிப்பிட்டு கண்டன உரையாற்றினார்.

கிராமப்புற இளைஞர்களுக்கான மருத்துவம் வேளாண்மை மற்றும் பொதுவியல் தொழில்நுட்பங்கள் சார்ந்த
வேலைவாய்ப்பு அளிக்கும் கல்வி மற்றும் பயிற்சி வகுப்பு தொடக்க விழா
போராட்டத்திற்கு தலைமை வகித்து நாம் ஆற்றிய உரையில், “குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி அவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களைக் கேவலப்படுத்தும் வகையில் கர்மயோகி என்ற புத்தகத்தினை எழுதியுள்ளார். காலம் காலமாக எங்களுடைய ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களே மலம் அள்ளும் பணியைச் செய்து வருகிறார்கள்.
இந்த நிலையிலே இந்த நாட்டிலே மதவாதத்தை வன்முறையைத் தூண்டி விடும் வகையில் தொடர்ந்து ஒரு சர்வாதிகாரர் போல செயல்பட்டு வருகின்றவர் நரேந்திர மோடி. அவர் ஆளும் குஜராத் மாநிலத்தில் ஒன்பதாம் வகுப்பு பாடத்திட்டத்தில் வர்ணாசிரம தர்மத்தை நியாயப்படுத்தி பள்ளி மாணவர்களின் பாடத்திட்டத்தில் எழுதப்பட்டுள்ளது.
அந்த அளவுக்கு மனுதர்மத்தை வலியுறுத்தக் கூடியவர். அவர் நாம் 21ஆம் நூற்றாண்டில் வாழுகிறோமா? அல்லது கி.மு. 2ஆம் நூற்றாண்டில் வாழுகிறோமா?
மலம் அள்ளும் கேவலமான நிலை அகற்றப்படும் என்று தி.மு.க. ஆட்சியில் நிதி நிலை அறிக்கையிலே அறிவித்துள்ளது.
மலம் அள்ளித்தான் எங்களுடைய தோழர்கள் வாழ வேண்டுமா? இந்தியா முழுக்க துப்புரவு தொழிலாளர்கள் 676 இலட்சம் பேர் உள்ளனர்.
இந்த நாட்டிலே இன்னமும் எங்களுடைய தோழர்கள் தலையில் மலத்தை சுமந்து செல்லக் கூடிய இழிவான நிலையில் இருக்கிறார்கள். நவீன கழிப்பிடம் 96 லட்சம் கட்டப்பட்டிருக்கிறது.
மலம் கழிவு நீர் உள்ள பகுதியில் இன்றைக்கும் இறங்கி சுத்தம் செய்கிறவர்கள் எங்களுடைய சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் சாக்கடைக்குள்ளே இறங்கி விஷ வாயு தாக்கி இறந்த எங்களுடைய தோழர்களுடைய எண்ணிக்கை மட்டும் 22,327 பேர். மலத்தையும் தலையில் சுமக்கிறார்கள். மரணத்தையும் தலையில் சுமக்கிறார்கள்.
இந்த நிலை அடியோடு ஒழிக்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான் வர்ணாசிரம தர்மத்தைக் காப்பாற்றுகின்ற நரேந்திர மோடி நூல் இன்று கொளுத்தப்படுகிறது” என்று தெரிவித்து அந்த புத்தகத்தினை எரித்தோம்.
பின்னர் நாமும், எழுச்சித்தமிழர் திருமாவளவன்
மற்றும் திராவிடர் கழக தோழர்களும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் காவல்துறையினர் கைது செய்யப்பட்டு மாலை விடுதலை செய்யப்பட்டோம்.
விவேகானந்தர் கல்லூரியில் வரலாற்றுத்
துறைப் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்ற பேராசிரியர் முனைவர் ஏ.கருணானந்தம் அவர்கள் ரூபாய் 50 ஆயிரம் நன்கொடை அளித்து பெரியாரியல் அறக்கட்டளை ஒன்றைச் சென்னை பல்கலைக் கழகத்தில் நிறுவியுள்ளார்.
அதன் சார்பில் முதல் சொற்பொழிவு 12.12.2007 அன்று சென்னை பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது. நாம் “பெரியார் ஈ.வெ.ரா. அவர்களும், சமூக மாற்றமும்” என்னும் தலைப்பில் முதல் சொற்பொழிவு ஆற்றினோம்.
இந்த நிகழ்வில் அறக்கட்டளையின் நிறுவனர் பேராசிரியர் ஏ. கருணானந்தம் கூறிய தகவல் ஒன்று தமிழர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்றாகும்.
முனைவர் பொற்கோ அவர்கள் துணைவேந்தராக சென்னைப் பல்கலைக் கழகத்தில் இருந்தபோது தந்தை பெரியார். வடலூர் இராமலிங்க அடிகள் பேரில் இரு இருக்கைகளை, பல்கலைக்கழகத்தில் உருவாக்க பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு எழுதப்பட்டது. ஆனால், அதற்கான
அனுமதி கிடைக்கப் பெறவில்லை. எந்த இடத்திலோ ஒரு ‘வக்கிரம்’ நடந்திருக்கிறது என்பதை மிகுந்த ஆதங்கத்துடன் அவர் குறிப்பிட்டார்.
இதனைப் பார்க்கும்பொழுது தந்தை பெரியார் பெயரால் அமைந்துள்ள இந்த
அறக்கட்டளைகூட ஒரு போர்க் குணத்தோடு
தான் (பெரியார் என்றால் அதுதானே) உருவாகியிருக்கிறது என்பது குறிப்பிடத்
தக்கதாகும்,
தமிழ்நாடு வரலாற்று காங்கிரசும் சென்னைப் பல்கலைக் கழக வரலாற்றுத் துறையும் இணைந்து நடத்தும்
தமிழ்நாடு வரலாற்று காங்கிரசின் 14 ஆவது ஆண்டு விழா 14-12-2007 வெள்ளி அன்று காலை 10 மணியளவில் சென்னை பல்கலைக்கழக செனட் ஹவுஸில் சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர்
எஸ்.ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
நாடாளுமன்ற உறுப்பினரும், சட்டம், நீதி, பணியாளர் நலன் மற்றும் குறைகளுக்கான நாடாளுமன்றக் கூட்டுக் குழுத் தலைவருமான டாக்டர் ஈ.எம்.சுதர்சன நாச்சியப்பன் தொடங்கி வைத்தார், தஞ்சாவூர், வல்லம், பெரியார் மணியம்மை பல்கலைக்கழக வேந்தர் என்ற முறையில் நாம் சிறப்புரையாற்றினோம். தமிழ்நாடு உயர் கல்விக் குழுத் துணைத் தலைவர் டாக்டர் ஏ.ராமசாமி 13ஆவது மாநாட்டு மலரை வெளியிட்டார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத் துணை வேந்தர் டாக்டர் டி.விஸ்வநாதன், டாக்டர் சி.வெங்கடேசன், ஆகியோர் பாராட்டுரை வழங்கினர்.
(நினைவுகள் நீளும்…)





