Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

செய்ய வேண்டியதை நம் முதலமைச்சர் சரியாகச் செய்வார் !

1.கே : தீபாவளியினால் ஏற்படும் அதிக அளவிலான மாசு மற்றும் உடல் நலன் கேடு பற்றி எழுதி, கேடற்றதாய் விழாக்களைக் கொண்டாட வழிகாண வேண்டும் என்று ‘‘இந்து தமிழ் திசை’’ எழுதியுள்ள தலையங்கம் (23.10.2025) பற்றித் தங்கள் கருத்து என்ன?

– எஸ்.சதீஷ், செங்கல்பட்டு.

ப: வரவேற்க வேண்டிய கருத்து. மக்களிடம் தீபாவளியால் ஏற்படும் கேடான விளைவுகள் எப்படி நமது வாழ்வினை – நலத்தினை – நாட்டு மக்களின் திட்டமிடாத வெற்று ஜம்ப ஆடம்பரத்தால் சேமிக்க வேண்டிய காசைக் கரியாக்கி சமூகத்துக்கும் கேடு ஏற்படுத்தும் மூடநம்பிக்கைகளை நிலைநாட்ட ஆட்சியரும் இதற்குத் துணை போவது அவலம் என்பது கட்சிக் கண்ணோட்டம்தான். அறிவியல் அணுகுமுறையோடு பரப்புரை செய்து விழிப்புணர்வை ஏற்படுத்த முன்வர வேண்டும்.

2.கே : தனியார் பல்கலைக் கழகச் சட்டத் திருத்தம் ஏழை மாணவர்களின் உயர்கல்வியைத் தடுக்கும், இடஒதுக்கீடு, அரசின் உதவி போன்றவற்றை ஒழிக்கும் என்று சமூக நீதியில் அக்கறையுள்ளவர்கள் எச்சரிக்கும் நிலையில் திராவிடர் கழகம் சட்டத் திருத்தத்திற்கு எதிராய்ப் போராடுமா?

– க.அறிவழகன், மதுரை.

ப: வாதாட வேண்டியவைகளை மறந்திடாது எடுத்துரைப்பதன் மூலமும், போராட வேண்டியதற்கு போராடுவதற்கும் பக்குவப்பட்ட இயக்கமாம் நம்முடைய இயக்கம். எல்லா அம்சங்களையும் சீர்தூக்கி இதனைச் செய்ய வேண்டும்.அரசே முழுமையாகக் கல்வி நிலையங்களை நடத்தும் அளவுக்கு நிதி, நிர்வாகம் முதலிய இலக்கு என்றாலும், தவறுகளைச் சுட்டிக்காட்டி திருத்தம் கோரலாம்.

3.கே : தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் தேர்தல் பணியில் ஈடுபட ஆர்.எஸ்.எஸ். ரகசிய குழுக்களை அமைத்துச் செயல்படப் போவதால், இந்தியா கூட்டணி அதை எதிர்கொள்ள, மக்களுக்கு விழிப்பூட்ட திட்டமிட வேண்டியது கட்டாயமல்லவா?

– ஹெச்.மகிழ்மதி, அறந்தாங்கி.

ப: கேள்வியும் நீங்களே; பதிலும் தாங்களே!

4.கே : பி.எம்.ஸ்ரீ திட்டம் ஏழை மாணவர்களுக்கு நன்மை செய்யும் என்பதால் தமிழ்நாடு அரசு அதை ஏற்கவேண்டும். கேரளா ஏற்றுள்ளதைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்று பா.ஜ.க. கூறுவதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

– எம்.அறிவழகன், விழுப்புரம்.

ப: சில விஷயங்களில் கேரள அரசின் பார்வையும் நிலைப்பாடும் வேறு. அதனை தமிழ்நாடு அரசு ஏற்க வேண்டியதில்லை. எடுத்துக்காட்டு எத்தனையோ உள்ளன. ஓர் உதாரணம் ‘நீட் தேர்வு’ – தமிழ்நாடு திராவிட மாடல் ஆட்சி – அதன் கூட்டணி மார்க்சிஸ்ட் கட்சி உள்பட தமிழ்நாட்டில் ஏற்பதில்லையே புரிந்துகொள்ளுங்கள்.

5.கே : பீகாரில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களே எதிர்எதிராய் 12 தொகுதிகளில் போட்டியிடுவது ஆதிக்கவாதிகளுக்கு சாதகமாகாதா? இந்தியா கூட்டணித் தலைவர்கள் உடனடியாக இதற்குத் தீர்வுகாண நம் முதல்வர் வலியுறுத்தினால் என்ன? எதிரிகளை வீழ்த்துவதைக் காங்கிரஸ் முதன்மை இலக்காகக் கொள்ள வேண்டியது கட்டாயமல்லவா?

– எல்.வெங்கடேஷ், தாம்பரம்.

ப: ஆம். எப்போது எதைச் சரியாகச் செய்ய வேண்டுமோ! அதை நம் முதல் அமைச்சர் செய்வார் என்பது உறுதி!

6.கே : எத்தனையோ இராமாயணம் இருப்பினும் நோக்கம் ஒன்றுதான் என்று டாக்டர் சுதா.சேஷையன் கூறுவது சரியா?

– ஜெ.செண்பகவள்ளி, தென்காசி.

ப: ஆம். நோக்கம் ஒன்றுதான். நோக்கம் – திராவிடரை வீழ்த்துவது. சம்பூகன்களை – பக்தர்களானாலும் விசாரணை இல்லாமல் தலையை வீழ்த்துவது.பெண்ணடிமையை – கற்பு சோதனையால் தீக்குளித்தல் மூலம் நிரந்தரப்படுத்துவது. அந்த அம்மையாரிடம் அதைக் கேளுங்கள்.  (இக்கதையே 56 இராமாயணங்களிலும் மூலவேறாகும்).

7.கே : தமிழ்நாடு மீனவர் பிரச்சனைப் பற்றி இலங்கை அரசு பரிசீலிக்கும் நிலையில், சாதகமான முடிவுகளைப் பெற தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து போராட்டம் மூலம் ஓர் அழுத்தம் தந்தால் என்ன?

– வை.கலைமதி, அரக்கோணம்.

ப: தேர்தல் அரசியல்தான் மலைபோன்ற தடுப்பு. என் செய்வது?

8.கே : தனியார் பள்ளிகளைவிட அரசுப் பள்ளிகளில் முழுக் கல்வித் தகுதியுடைய ஆசிரியர்கள் இருந்தும், கல்வித் தரம் தனியார் பள்ளிகளில் அதிகம் என்ற கருத்து எப்படி வருகிறது? அரசு ஆசிரியர்கள் தங்கள் பணியை முழுமையாக செய்கிறார்களா? என்பதைக் கண்காணிக்கத் திட்டமில்லை என்பதால், கண்காணிப்புக் குழுக்களை அமைக்க அரசை வலியுறுத்துவீர்களா?

– ப.பாரதி, அரவக்குறிச்சி.

ப: பள்ளிக் கல்வி அமைச்சர் எல்லா விஷயங்களையும் முறையாகக் கவனித்துப் பரிகாரம் தேடுவார். காலதாமதம் செய்பவரல்ல.வலியுறுத்த வேண்டிய அவசியமில்லை; சுட்டிக்காட்டினாலே போதும்; செயல்படுவார்.