Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

‘பெரியார் உலகம்’ நிறைவு பெற நன்றிப் பெருக்கை நன்கொடையால் பதிவு செய்வீர்-மஞ்சை வசந்தன்

சமூகப் புரட்சியாளரும், பகுத்தறிவுப் பகலவனுமான தந்தை பெரியாரின் தன்னலமற்ற வாழ்க்கைக்கும், தலைசிறந்த கொள்கைகளுக்கும் நிலையான, உறுதியான உறைவிடமாக, அடையாளமாக, ஆவணமாக அமையும் வகையில், சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையையொட்டி, திருச்சியிலிருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் உள்ள சிறுகனூரில் 27 ஏக்கர் நிலப்பரப்பில் உருவாகி வருகிறது ‘பெரியார் உலகம்’.

எவருக்கும் எதையும் பகுத்தறிந்து புரிந்துகொள்ளவும், புத்துலகம் படைப்பதற்கான ஊக்கம் பெறவும், சமூகச் செயல்பாட்டுக்குமான எழுச்சியைப் பெரியார் உலகம் உருவாக்கும். இதன் மய்யப் பகுதியில் 60 அடி பீடத்தின் மீது 95 அடி உயர சிலையுடன் தரையிலிருந்து மொத்தம் 155 அடி உயரத்தில் பெரியாரின் பேருருவச் சிலை காட்சியளிக்கும். இது ஒரு கட்டுமான அதிசயம் மட்டும் அல்ல; சமத்துவத்திற்காகவும், சமூகநீதிக்காகவும் சளைக்காமல் போராடிய தந்தை பெரியாரின் பெருஞ்சிறப்புகளை உலக அரங்குகளில் எதிரொலிக்கும் ஒரு பேருருவ நினைவுச் சின்னமாகவும் அடையாளமாகவும் திகழும்.

காண்போரைக் கவர்ந்திழுக்கும் கருத்துக் கருவூலமாகவும், பெரியாரைப் பற்றிய புரிதலை முழுமையாக அளிக்க கலைத்தன்மையுடன் எழுப்பப்பட்ட கலைக் களஞ்சியமாகவும் இது அமையும். கலை நிகழ்ச்சிகளும், சமூக நிகழ்வுகளும் நடக்கும் ஓர் எழிலார்ந்த திறந்தவெளிக் கலையரங்கமும் இங்கு அமைக்கப்படுகிறது.

தந்தை பெரியாரின் கொள்கைகளைப் பிரதிபலிக்கும் தற்காலக் கலைப் படைப்புகள் பார்ப்போரின் சிந்தனையைத் தூண்டும். “ஜஸ்டிஸ் பார்க்” என்ற பெயரில் நீதிப் பூங்காவும், நன்கொடை அளித்து உதவிய அன்பர்களின் பெயர்கள் பதிக்கப்பட்ட பளிங்குச் சுவர்களும் நன்றியுணர்வின் அடையாளமாகும். பெரியார் பேருருவச் சிலையை அடைவதற்கான பாதையில் தென்படும் அழகிய நீருற்று உங்கள் உள்ளத்தை உவகையும், உற்சாகமும் கொள்ளச் செய்யும்.
நடைபயிலும் இடம் நெடுக நற்சிந்தனைகள் உங்கள் அறிவுக்கு விருந்தாகும்.

உலகோர் கண்டு மகிழும் முதன்மையான சுற்றுலாத் தலமாக மட்டுமல்லாமல், இனி வரும் தலைமுறைகளையும் தந்தை பெரியாரின் கொள்கைகளை நோக்கி ஈர்க்கும் ஆற்றல்வாய்ந்த பல்கலைக்கழகமாக பெரியார் உலகம் விளங்கும்.

பெரியார் உலகத்திற்குள் வாருங்கள்! எங்களுடன் இணைந்து செயல்படுங்கள் என்று எல்லோரையும் அழைக்கிறோம்.

சுயமரியாதை ஒளியைப் படரச் செய்த கலங்கரை விளக்கம்: பெரியாரின் பெருஞ் சிறப்புகளை அறிய உதவும்.

தமிழ்நாடு அரசு, ஒன்றிய அரசின் பல துறைகளில் ஒப்புதல், தடையில்லாச் சான்றிதழ்கள் பெற்று. பணிகள் கடந்த 3 ஆண்டுகளுக்குமேல் சிறப்புடன், தக்காரின் கட்டுமானத் திட்டமிடுதல், வழிகாட்டல், மேற்பார்வையுடன் கட்டடப் பணிகள் மிகச் சிறப்பாகவும், விரைவாகவும் நடைபெற்று வருகின்றன!

மூன்றில் ஒரு பாகம் பணி நிறைவு!

‘பெரியார் அறக்கட்டளை’ நிருவாகக் குழுக் கூட்டத்தில், அதற்குரிய பொறுப்பாளர்களின் விளக்கமும், பணி வளர்ச்சியில் அடைந்துவரும் முன்னேற்றம் பற்றியும், ஆய்வுகள் பற்றியும் விரிவாக எடுத்துரைத்து, ஒப்புதலையும் மகிழ்வோடு பெற்று வருகின்றனர்; அப்பணிக்கான பொறுப்பாளர்களும், பொறியாளர்களும் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களது தலைமையில் ஒரு குழுவாகச் செயல்பட்டு வருகின்றனர்.

நமது இயக்கத் தோழர்களும், குடும்பத்த வர்களும். பெரியார் பற்றாளர்களும் தொடர்ந்து நம்மிடம் நாம் வேண்டுகோளை ஏற்று. நிதி தந்து ஊக்கமும், உற்சாகமும் ஊட்டி மகிழ்வது, நம்மால் இப்பணியை முடிக்க முடியும், “தந்தை பெரியாரால் பயனடைந்த நன்றி காட்டும் மக்கள் நம்மை ஒருபோதும் கைவிட மாட்டார்கள்” என்ற நம்பிக்கையைத் தொடர்ந்து அளித்து வருகிறது. பல துளி பெருவெள்ளம்; கூடி முயன்றால் கூடும் எல்லாம் என்பது அவர்களின் மூலம் உறுதி செய்யப்பட்டு வருகிறது.

நம் அறிவாசான் அய்யா வாழ்ந்த காலத்தில், சென்னை பெரியார் திடல் உருவாகும்போது கேட்டதை விட, மூன்று மடங்கு தந்து, தந்தையை ஊக்கமூட்டியது போன்று பெரியார் உலகம் அமையவும் பெரும் பங்களிப்பை நன்றி கூறும் நல் உள்ளங்கள் செய்து வருகின்றன.

அதன்மூலம் களைப்பு, சோர்வு, சலிப்பின்றி இப்பணி முடிக்க, புதிய வரலாற்றைப் படைக்க நாளும் ஊக்கமிகு உற்சாகத்தைப் பெறுகிறோம்.

நிதியின் தேவை பெரிதாகும் நிலையில், (விலையேற்றம், திட்டச் செயல்பாடு நிதிப் பற்றாக்குறை காரணமாக) தொண்டறம் தவறாமல் நடக்க உரிமையுடன் கூடிய நிதி நன்கொடை வேண்டுகோளைக் கனிவுடன் உங்கள் அனைவரின் முன் வைக்கப்படுகிறது.

பெரியார் தொண்டால் பெற்ற பயன் பெற்றோர், நன்றிகாட்ட இது ஒரு நல்வாய்ப்பு.

நாளைய பேரர்களும், கொள்ளுப் பேரர்களும் இதோ எங்கள் குடும்பத்தின் பங்களிப்பு இந்தப் “பெரியார் உலகத்தில்” உள்ளது என்று பெருமிதத்தோடு கூறி மகிழ, பெருமைகொள்ள இது வழிசெய்யும்.

27 ஏக்கர் நிலப் பரப்பில் உள்நாட்டவரும் சரி, வெளி நாட்டவரும் சரி கண்டு களித்து அறிவு மணம் நுகர்ந்து செல்லும் சுயமரியாதை, பகுத்தறிவு ஒளி பாய்ச்சும் சுற்றுலாத்தலமாகவும் உருவாகி வரும் பெரியார் உலகம், மக்கள் திரளின் மொய்ப்பாக வரலாற்றில் நிமிர்ந்து நிற்கப் போவது உறுதி!

‘பெரியார் ஒரு கால கட்டம் – ஒரு சகாப்தம் – ஒரு திருப்பம்!’ என்று சொன்னாரே அறிஞர் அண்ணா!

‘மண்டைச் சுரப்பை உலகு தொழும்’ என்றாரே நமது புரட்சிக் கவிஞர்.

‘இயற்கையின் புதல்வர்’ என்றாரே வ.ரா. (வ.இராமசாமி அய்யங்கார்)

‘தென் கிழக்கு ஆசியாவின் சாக்ரட்டீஸ்’ என்று விருது வழங்கியதே யுனெஸ்கோ மன்றம் – 1970!

அந்த மாபெரும் சிந்தனை ஊற்று – பேரிமயமாம்   தந்தை பெரியாரின் பெயரில் அமையவிருக்கும் பெரியார் உலகம் பெரியாரியலின் பொருளடக்கம் ஆகும்.

அய்யாவுக்கான அடையாளம்!

2500 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய கவுதமப் புத்தருக்கு  உலகின் பல்வேறு நாடுகளிலும் கம்பீரமான மிக உயர்ந்த சிலைகள் உண்டு – நினைவிடங்கள் உண்டு!

19ஆம் நூற்றாண்டில் பிறந்து, ஒரு நூற்றாண்டை நெருங்கும் அளவுக்கு வாழ்ந்து, ‘அவர் கால்படாத பிடிமண் கிடையாது’ என்று சொல்லும் அளவுக்குத் தமிழ் மண்ணை அளந்து  – மாலை நேரங்களில் மைதானங்களில் தமிழ்நாட்டின் முதல் பேராசிரியராக பகுத்தறிவுப் பாடம் நடத்தினாரே – ஜாதி ஒழிப்புச் சங்கநாதம் செய்தாரே – பெண்ணடிமை ஒழிப்புப் பீரங்கியாக முழங்கினாரே – சமூகநீதியின் போர்க்குரலோடு, பொங்கி எழுந்தாரே – பல்லாயிரம் ஆண்டு காலமாக பழைமைச் சீழ் பிடித்துக் கிடந்த மூடநம்பிக்கைகளின் ஆணி வேர் – சல்லி வேர் சகிதமாக வெட்டி வீழ்த்தினாரே – ‘‘அனைவருக்கும் அனைத்தும்’’ என்ற பொதுவுரிமை – பொதுவுடைமைச் சித்தாந்தப் பெரு மழை பொழிந்தாரே – உள்ளதைப் பங்கிட்டு உண்பது – உழைப்பை பங்கிட்டுச் செய்வது என்ற புது வெளிச்சத்தை  மானுடத்துக்குத் தந்து புரட்சிப் புதுப்பாதை அமைத்துத் தந்தாரே – ஆம் அந்தப் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாருக்கான – காலம்தோறும் நின்றுபேசும் நினைவகம்தான் இந்தப் ‘பெரியார் உலகம்!’

அய்யாவுக்குப் பின்னும், அன்னை மணியம்மையாருக்குப் பிறகும் – இந்த இயக்கம் இருக்குமா என்று ‘‘ஆரூடம்’’ கணித்துக் கிடந்த கிணற்றுத் தவளைகளை வாயடைக்கச் செய்து ‘பெரியார் உலகமயம் – உலகம் பெரியார் மயம்!’ என்ற நிலைக்கு மேல் எடுத்துச் சென்று கொண்டிருக்கிறாரே, நமது தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்களின் தொலைநோக்குச் சிந்தனையில் உருவான கருதான் இன்று பெரியார் உலகமாய் பெருமை மிளிர உருப்பெற்று வருகிறது.

அதனை வானளாவ உருவாக்கிக் காட்ட வேண்டாமா?

வருங்கால தலைமுறைக்கு
வழிகாட்டும் ஒளிவிளக்கு!

உலகம் உள்ள வரைக்கும் இந்த உலகத் தலைவரின் உயர் எண்ணங்களின் மணமும், ஒளியும் வீசிக் கொண்டிருக்க வேண்டாமா?

‘பெரியாருக்கு முன் – பெரியாருக்குப் பின்’ என்ற புத்தம் புதுபுரட்சி வரலாற்றை காலத்தின் பதிவாக வடிவமைக்க வேண்டாமா?

இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் திருக்குறளை யாத்த திருவள்ளுவர் குறித்துப் பெருமையுடன் பேசிக் கொண்டு இருக்கும் வள்ளுவர் கோட்டம், வள்ளுவர் சிலை போல, சிந்தனை வளர்ச்சிக்கு வகை செய்யும் பெரியாரின் ஒவ்வொரு சொல்லும் முனை மழுங்காமல் வடிவமைக்கப்படும் கூடமாக, புத்துலக சித்தாந்தத்தின் புத்தகமாகப் பூத்துக் குலுங்கும் அறிவு மலர்ச்சோலையாக வாடாமல் வளர்ந்து நிற்கும் வளாகமாக பெரியார் உலகம் அமைய வேண்டாமா?

அடங்கி ஒடுங்கிக் கிடந்த மக்களுக்குச் சுயமரியாதை என்னும் முதுகெலும்பைத் தந்த அவர் உழைப்பால் பயன் அடைந்தவர்கள் பங்காளிகளாய் ஆக அரிய வாய்ப்பை பெரியார்
உலகம் அளிக்கிறது. அதைத் தவற விடலாமா?

அவர் கொளுத்திய தீயால் தானே ஆதிக்கக் குப்பைகள் சாம்பலாயின! அவர் கொட்டிய உழைப்பின் வியர்வையால்தானே நம் கண்களுக்குக் கல்வி ஒளி கிடைத்தது!! அவர் கண்ட களங்கள்தானே பதவி படிக்கட்டுகளை மிதிக்கும் தெம்பை நம் கால்களுக்குக் கொடுத்தன!!!

எல்லா வீதிகளிலும் காலில் செருப்பணிந்து கம்பீரமாக வீறு நடை போட்டுச் செல்லுகிறோமே இந்த வீரம் – இந்த வெண்தாடித் தலைவரால் – அவரின் வீச்சால் கிடைத்த விருது தானே!

‘கும்பிடுகிறேன் சாமி!’ என்று குனிந்த நம் முதுகுகள் நிமிர்ந்தது எப்படி?

‘பொட்டச்சி’ என்று பெண்ணினத்தை மலத் துணியாக நினைத்த மமதையின் மண்டையைப் பிளந்த சம்மட்டி யார் கொடுத்தது? அவர் தந்த அறிவாயுதம் அல்லவா?

‘திராவிடம்’ ‘திராவிடன்’ என்ற தீரமான – தீர்க்கமான இன அடையாளத்தை போர் வாளாக நம் கையில் அவர் கொடுத்த ஆயுதம் தானே ஆரியத்தை அலற வைக்கிறது – துடிதுடிக்க வைக்கிறது.

வடக்கே தலை தூக்கும் ஸநாதன சித்தாந்தம் தெற்கே திரும்பிப் பார்க்க அஞ்சுகிறதே – அதற்கான போராயுதம்  திராவிடத்துவம் தானே!

ஆம் – இன்று நடப்பது இரு சித்தாந்தங்
களுக்கான போராட்டம் – எளிதாகச் சொன்னால் ஆரியர் – திராவிடர் போராட்டம்.

இராமாயண காலம் முதல் நடக்கிறது. இப்பொழுது திராவிட சித்தாந்தத் தீ வடக்குத் திசையிலும் வீச ஆரம்பித்து விட்டது.

வட நாட்டிலும் பார்ப்பன ஆதிக்கம் வீழ்ச்சி பெற திராவிட இயக்கம் தேவை என்று ‘தி டைம்ஸ் ஆப் இந்தியா’ எழுதியதை மறக்கலாமா? மனதில் பதிக்க வேண்டிய உண்மையல்லவா அது.

நன்றிப் பெருக்கை
நன்கொடையால் பதிவு செய்வீர்!

இவற்றை ஆணித்தரமாக நிலை நிறுத்த – நம் சந்ததிகளும் சுவாசிக்க – ‘சுதந்திரத்துக்கும், சுயமரியாதைக்கும் அதிக தூரம் இல்லை’ என்ற தந்தை பெரியாரின் மானுட உரிமை எக்காலத்திலும் நின்று நிலைக்க நிறுவப்படும் பெரியார் உலகத்தில் உடனே உங்கள் பங்களிப்பை நன்றிக் கடனாகச் செலுத்துங்கள்!

அவரால் பலன் பெற்ற நாம் ஒவ்வொருவரும் நன்றி உணர்ச்சியைக் காட்ட வேண்டாமா?

தமிழ்நாட்டின் மக்கள் தொகை 8.47 கோடி தலைக்கு 10 ரூபாய் என்றாலே காரியம் முடிந்து விடுமே!

அரசுப் பணியாளர்கள் அள்ளிக் கொடுக்கலாம் – (80G)  வரி விலக்கு உண்டு.

தமிழினச் செல்வந்தர்கள் இலட்சங்களைக் கொடுக்கலாம்.

கதவைத் தட்டுங்கள் தோழர்களே! தட்டுங்கள்
திறக்கட்டும் –  கேளுங்கள் கொடுக்கப்படும்.

நமது தமிழர் தலைவரின் சிந்தனைவோட்ட மெல்லாம் ஒவ்வொரு நொடியும் ‘பெரியார் உலகமாகவே’ இருக்கிறது!

அவரது எண்ணத்தை ஈடேற்றிக் காட்ட வேண்டியது நம் கடமையல்லவா?

பெரியார் உலகம் – ‘உலக மக்களின் உலகம்’ – ஒடுக்கப்பட்டோரின் உரிமை காக்கும், மீட்கும் உலகம்!

சமூகநீதியின் சரித்திரப் பதிவு அதில் உங்களையும் உடனே பதிவு செய்து கொள்ளுங்கள். ª