Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

வாஸ்து ஒரு மூடநம்பிக்கை!

வாஸ்து, சாஸ்திரம் என்ற வார்த்தைகள் தமிழ் அல்ல என்பதால் இவை தமிழர்க்கு உரியன அல்ல என்பது எளிதில் விளங்கும். இவை சமஸ்கிருதச் சொற்கள்.
என்னே, இந்த ஆரியப் பார்ப்பனர்களின் புனைவு!

வழக்கம்போல தங்கள் கருத்துகளை மக்கள் மத்தியில் பதியச் செய்யவும் மக்களை ஏற்கச் செய்யவும் ஒரு புராணக் கதையை எழுதி மக்களிடம் பரப்புவதே அவர்களின் யுக்தி, தந்திரம் ஆகும். அப்படி வாஸ்துவுக்கும் ஒரு புராணக் கதையைப் புனைந்து மக்களிடம் பரப்பி வருகின்றனர்.

வாஸ்து புருஷன்

வாஸ்து புருஷன் என்பவர் ககண்டி முனிவருக்கும் பூமாதேவிக்கும் பிறந்தவர் என்கிறது புராணம்.

மானசாரா, மாயாமாதா, ப்ரிகு, மேதை வராக மிகிரர் மற்றும் பல ரிஷிகளால் உருவாக்கி, செழுமைப்படுத்தப்பட்டது வாஸ்து சாஸ்திரம் என்கின்றனர்.

வாஸ்து புருஷன், தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் ஓர் அச்சுறுத்தலாக, ஒரு கட்டத்தில் விஸ்வரூபம் எடுத்தார் என்கிறது புராணக்கதை! அதன் ஆபத்தை உணர்ந்து பிரம்மா உள்பட 81 தேவர்கள், அசுரர்கள் வாஸ்துவை அடக்கி, நிலத்தில் படுத்த நிலையில் அமுக்கிவிட்டார்களாம். அப்படி அமுக்கப்பட்ட வாஸ்து மூன்று நிலைகளில் பூமி முழுவதும் படர்ந்து படுத்திருக்கின்றாராம்! அந்த மூன்று நிலைகள் இவை:

  1. ஸ்திரா நிலை

மலர்ந்த நேர்முக வாக்கில் வடகிழக்கு மூலையில் மனையில் தலைவைத்து தென்மேற்கு
மூலையில் கால் சேர்த்து அமுக்கப்பட்டு வாஸ்து படுத்திருப்பது ஸ்திரா நிலை.

  1. சாரா நிலை

அமுக்கப்பட்டுப் படுத்திருக்கிற நிலையில் மூன்று மாதத்திற்கு ஒரு முறை வாஸ்து தலை, கால், பார்வைத் திசை மாற்றுவது சாரா நிலை.

  1. தினா முறை

தலை, கால்களைத் தினசரி பகலில் 8இல் 1 முறை அதாவது 1:30 மணிக்கு ஒருமுறை திசை மாறிப்படுப்பது தினா முறை.

இப்படி சாரா நிலையிலும், தினா முறையிலும்,
ஏன் வாஸ்து புருஷர் திசை மாறுகிறார்? எவரிடத்தும் விளக்கம் இல்லை. ஒருக்கால் ஒரே நேரத்தில் 81 தேவ அசுரர்கள் அமுக்குகின்ற
போது, வாஸ்து அசைகின்றாரோ என்னவோ தெரியவில்லை. அடிக்கடி மாறும் சாரா நிலையையும், தினா நிலையையும் அனுசரித்து ஒரு நிலையான கட்டடத்தையோ – வீட்டையோ,
கட்ட முடியாது. கட்டிய பிறகு மாற்றி வைக்க
முடியாது. நடைமுறைக்கு உகந்தது என்ற வகையில் வாஸ்துவின் ஸ்திரா நிலையே வழக்கில்
அடிப்படையாக எடுத்துக் கொள்ளப்படுகின்றது.

வாஸ்து புருஷன் இருப்பு

வாஸ்து சாஸ்திரம் உருவான காலம், பூமி – தட்டை என்று நம்பிய காலம். எனவே, வாஸ்து புருஷன் பூமி முழுவதும் படர்ந்து படுத்திருப்பதாக நம்பினர். இன்று பூமி உருண்டை மட்டுமல்ல, 23½0 சாய்வான கோண அச்சில் தற்சுழற்சியால் சுழன்று வருகின்றது என்று அறிவியல் அறுதியிட்டுக் கூறுகின்றது. இது குழந்தைகளுக்கும் தெரியும்! வாஸ்து புருஷர் வடகிழக்கு மூலையில் தலைவைத்து தென்மேற்கு மூலையில் கால்குவித்து படர்ந்து படுத்திருக்கின்றார் என்பது கேலிக்குரியதாக இல்லையா?

உருண்டையான பூமியில் வடதுருவத்தில் வடகிழக்கு மூலையில் தலையும் கால்களும் ஒன்று சேர்கின்ற வகையில் வட்டவடிவில், வளைந்து படுத்திருக்கத்தான் முடியும். இந்த நிலையில் வடகிழக்கு மூலை – ஜல மூலை என்று எதைத் தேடுவது? மேற்கு, கிழக்கு, தெற்கு ஆகிய மூன்று திசைகளிலும் கடல் சூழ்ந்த தீபகற்பம் தென்னிந்திய நிலப்பகுதி. தென்புலத்தில் உள்ள நமக்கு எது ஜல மூலை? மூன்றும்தானே? வடகிழக்கு மூலையில் ஜல மூலையை எப்படித் தேடுவது? என்ன அறிவுடைமை?

பூமி உருண்டையானது என்ற உண்மையை அறியாத காலத்தில், பூமி தட்டை என்று எண்ணிக் கொண்டிருந்தவர்களால் உருவாக்கப்பட்ட வாஸ்து சாஸ்திரம், எப்படி அறிவியல் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாக இருக்க முடியும்?

வாஸ்து பூஜை

வாஸ்து சாஸ்திரத்தில் மிக முக்கியமானது – பூமி பூஜை – வாஸ்து பூஜை! வாஸ்து மகாபுருஷர் கண் விழிக்கும் நேரம்தான் பூமி பூஜைக்கு உரிய நேரம், உத்தமமான நேரம் என்கின்றனர். அந்த உத்தமமான நேரத்தில் பூமி பூஜை செய்தால்தான் வீட்டில் செல்வமும் வளமும் கொழிக்கும், வாழ்வு சிறக்கும் என்கின்றனர்.

வாஸ்து கண்விழித்தல்

வாஸ்து கண்விழிக்கும் நேரம் எது? மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே வாஸ்து கண் விழிப்பாராம்! அதுவும் மூன்றே முக்கால் நாழிகை (1:30 மணி நேரம்) மட்டும்தான் கண்விழிப்பாராம். அப்போது அந்த மகாபுருஷர் அய்ந்து மகத்தான பணிகள் செய்வாராம்!

  1. பல் துலக்குதல்-16 நிமிடம் – போதிய பலன் தரும்.
  2. குளித்தல் – 16 நிமிடம் – நற்பயன் விளையும்.
  3. பூஜை செய்தல் – 16 நிமிடம் – உத்தம பலன் தரும்.
  4. உணவு உட்கொள்ளல் – 16 நிமிடம் – மிக உத்தமமான நேரம்.
  5. தாம்பூலம் தரித்தல் – 16 நிமிடம் – மிகுந்த யோக நேரம்.

இந்த மகத்தான அய்ந்து பணிகளையும் முடித்து விட்டு மீண்டும் வாஸ்து தூங்கச் சென்று விடுவார். அதற்குள் பூமி பூஜை முடிக்க வேண்டுமாம்! அதுவும் கடைசி 16+16=32 நிமிடங்கள் மிக மிக உத்தமமான நேரம் அதற்குள் முடிக்க வேண்டுமாம்! மாதம் 30 நாள்களில் அதாவது 24 x 30 = 720 மணி நேரத்தில், 1:30 (ஒன்றரை) எமணி நேரம் மட்டுமே கண் விழித்திருக்கின்ற – மாதத்தில் மீதி 718.5 மணி நேரமும் தூங்கிக் கழிக்கின்ற – ஓர் உலக மகாச் சோம்பேறி கண் விழிக்கின்ற 1:30 மணி நேரம்தான் உத்தமமான நேரமாம். அதுவும் கடைசி 32 நிமிடம்தான் மிக மிக உத்தமமான நேரம் என்பது எவ்வளவு வேதனையான வேடிக்கை? இப்படிப்பட்ட சோம்பேறியை நினைத்து, வழிபட்டு, பூமி பூஜை போட்டால், பூமிதான் விளங்குமா? வீடும் நாடும்தாம் விளங்குமா?

தேவர்களால் பூமியில் அழுத்தப்பட்டு, படுத்த நிலையில் புதைந்துபோனவன் வாஸ்து என்று புராணம் சொல்லியுள்ளது. அப்படியிருக்க அவர் எப்படி எழுந்திருந்து பல் துலக்குதல், குளித்தல், பூஜை செய்தல், உணவு உட்கொள்ளல், வெற்றிலை பாக்கு போடுதல் போன்றவற்றை எப்படிச் செய்ய முடியும்? ஆக புராணம் என்பதும், வாஸ்து என்பதும் முரண்பட்டுக் கூறப்பட்ட பொய் மூட்டைகள் என்பது புரிகிறதல்லவா?

வாஸ்து பூஜைக்கு உரிய மாதங்கள்

வைகாசி (ஏப்ரல்-மே) : நல்ல பலன்

ஆவணி (ஜூலை-ஆகஸ்ட்): மிகவும் நல்ல பலன்

கார்த்திகை (செப்டம்பர்-அக்டோபர்): பெரும் செல்வம்.

மாசி (ஜனவரி-பிப்ரவரி): குடும்பத்துக்கு நன்மை

பங்குனி (பிப்ரவரி-மார்ச்): எல்லா நலன்களும் தரும்.

இவை அய்ந்தும் எல்லா நலன்களும் தரும் மாதங்கள். மீதமுள்ள 7 மாதங்கள் பாதகமான மாதங்கள்:

  1. சித்திரை (மார்ச்சு – ஏப்ரல்) : தன நஷ்டம், பயம் ஏற்படும்.
  2. ஆனி (மே-ஜூன்): மரண பயம்.
  3. ஆடி (ஜூன்-ஜூலை): வாகன நஷ்டம், பண நஷ்டம்.
  4. புரட்டாசி (ஆகஸ்ட் – செப்டம்பர்) : நோய் நொடிகள், செலவுகள் அதிகம்.
  5. அய்ப்பசி (செப்டம்பர்-அக்டோபர்): குடும்பத்தில் சண்டை.
  6. மார்கழி (நவம்பர்-டிசம்பர்): பயம், தோல்வி மிகும்.
  7. தை (டிசம்பர்-ஜனவரி): அக்னி பயம், கவலை மிகும்.

வாஸ்து வளம் நலம் தந்ததாய் வரலாறு உண்டா?

வாஸ்து சாஸ்திரம் உருவான காலத்திலாவது – இதிகாச காலங்களிலாவது வாஸ்து சாஸ்திரத்தைப் பின்பற்றி நடந்தவர்களுக்கு வளமும், நலமும் வந்ததாய் வரலாறு உண்டா?

இதிகாச காலத்தில் வாழ்ந்ததாகச் சொல்லப்
படுபவர் மாபெரும் கட்டடக் கலைஞர் மாயா என்பவர். அவர்தான் அந்நாள்களில் வாஸ்துப்படி அரண்மனைகள், மாட மாளிகைகள்,
கூட கோபுரங்கள் கட்டியவர் என்பர். மகாபாரதத்தில் வரும் அஸ்தினாபுரத்தில் அரண்மனையைக் கட்டியவர் அவர்தான் என்று கூறுவர். பாண்டவர்களும், கவுரவர்களும் அமைதியாக – இன்பமாக வாழ்வதற்காக அரண்மனை கட்டினார். அரண்மனை கட்டி முடித்து பாண்டவர்கள் ஒரு மாதம் கூட
அங்கு வாழவில்லை; வனவாசம் சென்றனர். கவுரவர்களாவது வாழ்ந்தார்களா என்றால் அதுவும் இல்லை. குருச்சேத்திர யுத்தம் நடந்தது.
அரண்மனையில் வாழ்ந்த அத்தனை கவுரவர்களும் போரில் மாண்டு போனார்கள். வாஸ்து சாஸ்திரப்படி, மாயா கட்டிய மாளிகையில்
பாண்டவரும் வாழ முடியவில்லை, கவுரவர்களும்
வாழ முடியவில்லை. அயோத்தி மாநகரமும் மாயா உருவாக்கியதுதான் என்பர். அதில் ராமர் பட்டாபிஷேகத்திற்கு என ஒரு மாளிகை கட்டினார். அந்த மாளிகையில் ராமர் ஒரு மணி நேரம்கூட தங்க முடியவில்லை. தம்பி லட்சுமணனுடனும், மனைவி சீதையுடனும் ராமர் 14 ஆண்டு காட்டுக்குச் சென்றுவிட்டார்.

தேவ – அசுரர்கள் மாயாவை வெறுத்தனர்.  மாபெரும் சிற்பி புகலிடம் தேடி தெற்கே ஓடிவந்தார். விந்திய மலையைத் தாண்டி வந்தார்.
திரிபுரிகள் என்னும் மூன்று நகர்களைக் கட்டினார்
என்கின்றனர். ஆனால், அந்த நகரங்கள் இருந்ததற்
கான தடயமே இன்று காணப்படவில்லை. அது மட்டுமல்ல, அவர் மகள்தான் மண்டோதரி.
ராவணன் மனைவி. அவனுக்கும் அவர்தான் இலங்கையில் மாபெரும் அரண்மனை கட்டித் தந்தார். அந்த மாவீரன் இராவணனும் தனது ஆள்பெரும் படையோடு தோற்று வீழ்ந்தான், மாண்டான்.

வாஸ்து பயன் தரவில்லை என்பதற்கு இராமாயணமும், மகாபாரதமுமே சான்று.

ஆந்திர மேனாள் முதலமைச்சர் என்.டி.ராமாராவ்,
இரண்டாவது முறை தேர்தலுக்கு நிற்பதற்கு முன்னால் நிரந்தர முதலமைச்சர் ஆகிவிட எண்ணினார். ஆந்திரத்தில் தலைசிறந்த வாஸ்து மேதையை அழைத்து, முதலமைச்சர் மாளிகைக்குச் செல்லும் பாதையை மாற்றி அமைத்தார். அதற்கு மக்கள் பணம் ரூ. 1 கோடிக்கு
மேல் செலவும் ஆனது. அந்தப் பாதை வழியாக மாளிகைக்குச் சென்று குடியேறிய ஒரு வாரத்திலேயே முதலமைச்சர் பதவி பறிபோனது. சொந்த மருமகன் சந்திரபாபு நாயுடுவாலேயே பதவியையும் இழந்தார் என்.டி.ராமாராவ்!

பெங்களூரில் மிகப் புகழ் பெற்ற வாஸ்து மேதை பி.என்.ரெட்டி என்பவர், பல அடுக்குமாடி ஒன்றை முற்றிலும் வாஸ்து சாஸ்திரப்படி பல கோடி செலவில் கட்டி முடித்தார். திறப்பு விழா நடப்பதற்கு முன்பே அக்கட்டடம் இடிந்து தரை மட்டம் ஆனது. இந்திய மேனாள் பிரதமர் தேவகவுடா பிரதமர் ஆன பின்னாலே தொடர்ந்து பதவியில் நீடிக்க விரும்பினார். வாஸ்து மேதைகள் அறிவுரைப்படி வீட்டுப் படியை மாற்றி அமைத்தார். அடுத்த மாதமே அவர் வகித்த பிரதமர் பதவி பறிபோனது.

இன்றைய சமூகத்தின் முதுகெலும்பான – உழைக்கும் மக்கள் எங்கு மனையிடம் இருக்
கின்றதோ, மனைப்பட்டா இலவசமாகக் கிடைக்
கின்றதோ அங்கெல்லாம் இரவோடு இரவாகக் குடியேறுகின்றனர். அவர்கள் யாரும் வாஸ்து பார்த்து வீடு அமைப்பதில்லை. என்றாலும், கெட்டழியாது நன்றாகத்தான் வாழ்கிறார்கள்!

வாஸ்து சாஸ்திரம் வர்ணாசிரம தருமத்தை வலியுறுத்த உருவானது; நால்வகை வர்ண அடிப்படையில் மனை இடம் தேர்வு செய்ய நிலத்தை வகைப்படுத்துகின்றது. ஒவ்வொரு வர்ணத்திற்கும் உரிய உத்தமமான நிலம் எது என்று வாஸ்து சாஸ்திரம் பாகுபாடு செய்கின்றது.

(தொடரும்…)