பெரியார் திடலில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளிலும் தவறாமல் பங்கேற்பவர் புலவர் வெற்றியழகன். பெரியார் நூலக வாசகர் வட்டம், புதுமை இலக்கியத் தென்றல் தமிழ்நாடு மூதறிஞர் குழு ஆகியவற்றின் சார்பில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளிலும் பங்கேற்பதுடன், பெரியார் திடலில் தொல்காப்பியச் சொற்பொழிவு, இராவண காவியம் சொற்பொழிவு, திருக்குறள் தொடர்பொழிவுகள் உட்பட 200க்கு மேற்பட்ட நிகழ்வுகளில் உரையாற்றியிருப்பவர் புலவர் வெற்றியழகன்.
இவர் ஏறத்தாழ 40க்கும் அதிகமான நூல்களைப் படைத்தவராவார்.
4ஆம் வகுப்பைக் கூட முடிக்காமல் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு, சென்னை வந்து மளிகைக் கடையில் பணி செய்தவர் அங்கு வந்த ஒரு புத்தகத்தின் பக்கத்தைப் படித்து தமிழ் ஆர்வம் கொண்டு, பின்னர் 1961இல் புகுமுகத் தேர்வு, 1971இல் இடைநிலைத் தேர்வு, 1973இல் இறுதி நிலைத் தேர்வு எழுதி வெற்றி கண்டவர். 1973இல் புலவர் பட்டம் பெற்றவுடன் ஆசிரியர் பயிற்சி முடித்து ஆசிரியராகச் செல்ல நினைத்தாலும், தாம் பணிபுரிந்த அச்சகத்தின் பணியால் அவ்வாய்ப்பை இழந்தார். பகுதி நேரப் பணியாகத் தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனத்தில் 1973 முதல் 1976 வரை பிழை திருத்தும் பணியை மேற்கொண்டார். அன்று தொடங்கி இன்று வரை பிழை திருத்தும் பணியையே தம் வாழ்க்கைக்குரிய பணியாக ஏற்றுச் செய்து வருகின்றார். இவ்வகையில் ஆயிரக்கணக்கான நூல்கள் இவர் கண்பார்வையால் உயிர்பெற்றுள்ளன.

இன்றும் இளமையாக விளங்கும் புலவர் வெற்றியழகன் அய்யாவின் 90ஆம் பிறந்த நாளை 13.10.2025 அன்று பெரியார் திடலில் ‘புதுமை இலக்கியத் தென்றல்’ அமைப்பினர் மிகச் சிறப்பாகக் கொண்டாடினார்கள்!
புதுமை இலக்கியத் தென்றல் பொருளாளர் மாணிக்கம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவிற்கு அமைப்பின் துணைத் தலைவர் கோ.பிச்சை வள்ளிநாயகம் அவர்கள் வரவேற்புரையாற்றினார். புதுமை இலக்கியத் தென்றல் தலைவர் பாவலர் செல்வ மீனாட்சி சுந்தரம் புலவர் அவர்களின் நூல்களை அறிமுகப்படுத்தி உரையாற்றினார். பொருளாளர் வீ.குமரேசன்நிறைவாக வாழ்த்துரை வழங்கினார்.
புலவர் தனது ஏற்புரையில் தமிழ் தன்னை வாழ வைக்கிறது என்றும், தமிழர்கள் தன்னை வாழ வைக்கிறார்கள் என்றும், தமிழுக்காக தனது இறுதி மூச்சு வரை வாழ்வேன் என்றும் தெரிவித்தார்!
90 வயது வரை ஒருவர் தனது கொள்கையிலிருந்து மாறாமல் எந்தச் சூழலிலும் தந்தை பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கைகளை இறுக்கமாகப் பற்றிக் கொண்டு தனது பயணத்தைத் தொடருவது என்பது நாம் கற்றுக் கொள்ள வேண்டிய வாழ்க்கைப் பாடம்.
– க. கலைமணி





