உலகிலுள்ள அனைத்து நாடுகளும் கொண்டாடும் நாள்களாக பல நாள்கள் அய்.நா. மன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளன. சிட்டுக் குருவிகளைப் பாதுகாக்கவும் – அவற்றிடம் அன்பு காட்டவும் – அழிந்துவிடாது அந்தப் பறவை இனத்தைப் பாதுகாக்கவும் சிட்டுக்குருவிகள் நாள் கொண்டாடப்படுகிறது. இதைப்போல் பல்வேறு நாள்கள் உலக அளவில் கொண்டாடப்படுகின்றன.
அய்.நா.மன்றம் அறிவித்துள்ள அந்த வரிசையில், “உலக உணவு தினம்” என்று அக்டோபர் திங்கள் 16ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. இந்நாள் உணவின் தேவை – உற்பத்தி – பயன் – பாதுகாப்பு எனப் பல கோணங்களில் உலக மக்கள் உணவின் சிறப்புகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ளப் பயன்படும் வகையில் கொண்டாடப்படுகிறது.
உணவுப் பொருள்கள் நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றன. எனினும், உணவுப் பொருள்களை உற்பத்தி செய்யும் வேளாண் தொழில் உலகெங்கும் முதன்முதல் மக்கள் தொடங்கிய தொழிலாக உள்ளது.
வேளாண்மை செய்யத் தொடங்கிய பின்புதான் உணவுப் பொருள்கள் விளைவிக்கப்பட்டன. அதற்கு முன் இயற்கையில் கிடைத்திட்ட பழம் – கிழங்கு – கீரைகள் (இலை) – தண்டு –
காய்கறிகள் எனத் தாவரங்களிலிருந்து கிடைக்கும் உணவுப் பொருள்களை உண்டு உயிரினங்கள் வாழ்ந்தன. வேளாண்மை மூலம் பலவிதமான உணவுப் பொருள்கள் பயிரிடப்பட்டன. அவற்றிலிருந்து உணவு கிடைத்தது.
“உடல் வளர்த்தேன் உயிர் வளர்த்தேன்” என்று திருமூலர் கூறுகிறார். ஆங்கிலத்தில் “A sound body” என்று கூறுகிறார்கள். “உழுதுண்டு வாழ்வாரே வாழ்வர்” என்று திருவள்ளுவர் கூறுகிறார். உழவர்கள் உலகிற்குத் தேவையான உணவினைத் தங்களது உழைப்பால் வழங்குகிறார்கள்.
பழங்கால வேளாண் முறை உலக மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப விளைச்சல் தராது என்பதால், இன்று நவீன வேளாண் சாகுபடித் திட்டம் அறிவியல் வளர்ச்சியால் உருவாக்கப்பட்டு பல மடங்கு உணவுப் பொருள்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
எனினும், இன்னும் பசியின் கொடுமையால் வாடும் மக்கள் இருக்கிறார்கள். இச்சூழலில் உணவின் தேவை – பற்றாக்குறை இவற்றைக் கருத்தில் கொண்டு உணவுப் பொருள் சேமிக்கப்படுகின்றன. மிக அதிக விளைச்சல் மூலம் சேமித்து – மிகக் குறைந்த விலை மற்றும் இலவசமாக உணவுப் பொருள்கள் வழங்கப்படுகின்றன.
வளர்ந்த நாடுகள் உணவுப் பொருள்களை ஏழை நாடுகளுக்கு வழங்குகின்றன. போர்க்காலச் சூழல் – இயற்கைப் பேரிடர் போன்ற காலங்களில் உணவுப் பொருள்களை உலக நாடுகள் அய்.நா.மன்றம் மூலம் அனுப்புகின்றன.
இந்திய ஒன்றியமும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறது. என்றாலும், உணவுப் பொருள்களைப் பாதுகாப்பது – சிக்கனமாகப் பயன்படுத்துவது – வீணாகாது காப்பது என்ற கோணத்தில் மிகப் பெரும் குறைபாடு நம் நாட்டில் உள்ளது என்பதே உண்மையான நிலையாகும்.
உணவுப் பொருள்களை வீணடிப்பது – பாழாக்குவது என்பது மதம் – பழக்க வழக்கம் – சாஸ்திர சடங்குகள் – மூடநம்பிக்கை என்று பல வழிகளில் வீணடிக்கப்படுவது “உலக உணவு தினத்தில்” மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்க ஒன்றாகும்.
மக்கள் பலகோடி பேர்கள் இருக்கும் ஒரு நாட்டில் பசியால் இறக்கும் குழந்தைகள் – நோயாளிகள் பல்லாயிரம் பேர் இருக்க, மத மூடத்தனத்தால் பாலாபிஷேகம் – பழங்கள் அபிஷேகம் – நெய் அபிஷேகம் – வெண்ணெய் அபிஷேகம் – தேன் அபிஷேகம் என்ற பெயரில் டன் கணக்கில் உணவுப் பொருள்கள் அழிக்கப்படுவது நியாயமா?
கோயில்களில் கல் சிலைக்குப் பால், வெண் ணெய், நெய், பழங்கள், தேன் போன்ற உயர் சத்துள்ள உயிர் காக்கும் அரிய வகை உணவுப் பொருள்களை வீணடிப்பதை ‘கிரிமினல் குற்றம்’ என்றார் அய்யா தந்தை பெரியார்.
உலகில் டென்மார்க் போன்ற பால் உற்பத்தி செய்யும் நாடுகள் வெளிநாடுகளுக்குப் பாலைப் பவுடராக்கி விற்பனை செய்து பொருளாதாரத்தைப் பெருக்குகின்றன. பல நாடுகள் பழங்களை அனுப்பிப் பொருளாதாரம் பெருக்குகின்றன. நம் நாட்டில் வீணடிக்கிறோம்.
ஆடு, மாடு, பன்றி என கோயில்களுக்கு ஆயிரக்கணக்கில் வெட்டப்படுகின்றன. மக்கள் தேவைக்கு அதிகமாய் உண்டு உணவு நஞ்சாகிச்(Food Poison) சாகிறார்கள். சோற்றினை டன் கணக்கில் தயாரித்துக் கொட்டும் நிலை ஒரு பக்கம்; மறுபக்கம் பட்டினிச் சாவு.
சிக்கனமாக உணவுப் பொருள் கையாளப்பட வேண்டும். உணவுச் சத்துக் குறைபாடுள்ளோர்க்கும் – பசித்தோர்க்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். சிறு வயதில் உணவுப் பற்றாக்குறையால் வளர்ச்சி பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உணவு அளிக்கப்படல் வேண்டும்.
இக்காரியம் செய்யாது மூடத்தனத்தால் – சாஸ்திர நம்பிக்கையால் உணவுப் பொருளை வீணடிப்போர் மீது வழக்குத் தொடுக்க வேண்டும். அரசு தண்டனை தர வேண்டும்.
அறிவாசான் தந்தை பெரியார் திருமணம் போன்ற நிகழ்வுகளில் 100 பேர்களுக்கு மேல் சாப்பாடு போட்டால் அவர்கள்மீது கிரிமினல் வழக்குப் போட வேண்டும் என்கிறார். சாப்பிடுவோர் உணவினை மீதம் வைக்காது சாப்பிட வேண்டும் – சாப்பிடும் அளவிற்கு உணவைப் பயன்படுத்தப்பட வேண்டும். வீணடிக்கக் கூடாது என்று வாழ்வியல் வழியை, தந்தை பெரியார் கற்பித்துள்ளார்.
ஆரியப் பார்ப்பனர்களோ, உழவுத் தொழில் சூத்திரத் தொழில் என்று இழிவுபடுத்தினர். மன்னார்குடிக்கு அருகிலுள்ள வடுவூர் என்ற கிராமத்தில் ஏர் பிடித்து உழுதார்கள் என்பதற்காக பார்ப்பனர்களே இரண்டு பார்ப்பனர்களை ஜாதி விலக்கம் செய்தார்கள். இக்கொடுமையை இரண்டு பார்ப்பனர்களும், தமிழ்நாட்டுக்கு வந்த காந்தியாரிடம் முறையிட்டு நீதி கேட்டார்கள் என்பது கடந்த கால வரலாறு. மநுநீதியை ”மகாத்மா’’வால் என்ன செய்யமுடியும்?
கோயில் பெருச்சாளிகளாக உண்டு கொழுக்கும் ஒரு கூட்டம் உழவர்களை – உழவுத் தொழிலைச் சூத்திரர் தொழில் என்று இழிவு செய்கிறது. மநுதர்மம் அப்படித்தான் கூறுகிறது.
மற்றொரு மன்னிக்கமுடியாத கொடுமை ஒன்று என்னவெனில், சங்கர மடத்தில் பார்ப்பனர்கள் உண்ண சமைக்கப்படும் உணவின் மீதியைப் பிறர்
உண்ணக்கூடாது என்று, மண்ணில் புதைக்கப்படு
கிறது என்ற செய்தி மனிதர்களின் மீது வீசப்பட்ட அணுகுண்டைவிட ஆபத்தான மநுநீதிக் குண்டு என்பதை எண்ணும்போது நெஞ்சம் பதைக்கிறது.
எனவே, ஆரியர் கொடுமையை – அதன் விளைவாக மூடத்தனத்தால் உணவுப் பொருள்கள் சீரழிக்கப்படுவதைப் பற்றி உலக உணவு நாளில் நம் மக்கள் சிந்திக்க வேண்டும். அரசு தீர்க்கமாய் முடிவெடுக்கவேண்டும்.
அறிவாசான் தந்தை பெரியார் கூறுகிறார், நான் ஒரு நாளைக்கு, 3 வேளை சாப்பிடுகிறேன். அதற்காக நான் உழைக்க வேண்டும். மக்கள் உழைப்பை உண்ணும் நான் அந்த உழைக்கும் மக்களுக்கு என் உழைப்பைத் தர வேண்டாமா? என்று கூறி, தனது 95ஆம் வயதிலும் – மூத்திர வாளியைத் தூக்கிக் கொண்டு – ஊரெங்கும் பயணம் செய்து மக்களுக்காக உரையாற்றி – போராடி
வாழ்நாள் எல்லாம் மக்களுக்காக உழைத்தார் என்ற வரலாறு எப்பேர்ப்பட்ட தலைவர் பெரியார் என்பதை உலகிற்குப் பறைசாற்றுகிறது!
மனிதர்களை – மனிதர்களுக்கான உணவினை – மனிதர்களின் உயிரினை – மனிதர்களின் உயர்வினைப் போற்றிய தந்தை பெரியாரின் அறிவுரையை உலக உணவு நாளில் அசை போடுவோம். அவர் காட்டிய அறிவு வழியில் சிந்தித்து மனிதர்களின் வாழ்நாளை நீட்டிக்கும் – உறுதியான உடலைத் தந்து வளமான அறிவை வளர்க்க உலக உணவு நாளில் சிந்திப்போம்.
உணவு உயிர் காக்க – உயிர் மனித நேயம் காக்க – மகத்தான அறிவுலகம் படைக்க என்று உலக உணவு நாளில் உறுதி ஏற்போம்! ©





