Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

சட்டத்தின் மீது வீசப்பட்ட ஸனாதனச் செருப்பு

கடந்த வாரத்தில் அதிர்ச்சி தரத்தக்க செய்தி – இந்திய நாட்டின் மீயுயர் நீதி அமைப்பான உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி மாண்புமிகு கவாய் அவர்கள் மீது செருப்பு வீசப்பட்டது.

செருப்பை வீசியவர் வழக்குரைஞர் ராகேஷ் கிஷோர் என்னும் ஸனாதனச் சாக்கடையில் உழன்று வாழும் புழு மூளை மனிதர். இவர் பார்ப்பனர். இதற்கு இவர் சொன்ன காரணம் இன்னும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

தலைமை நீதிபதி ஸனாதன தர்மத்தை இழிவுபடுத்தி விட்டார் எனவே, இதனைத் தம்மால் ஏற்க முடியவில்லை என்று தெரிவித்திருந்தார்.

வடமாநிலங்களில் சங்பரிவார்களும், ஆளும் பிஜேபியும் எந்தவிதமான மதவெறி நஞ்சை ஊட்டியுள்ளனர் என்பதுதான் கவலைக்குரிய ஒன்றாகும்.

வழக்குத் தொடுக்க உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி விரும்பவில்லை என்பது கூறி வழக்கு எதுவும் தொடுக்கப்படவில்லை, பார் கவுன்சிலால் கிஷோர் மீது இடைக்கால நடவடிக்கை மட்டும் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வுக்குப் பிறகு பேட்டி அளித்துள்ள ராகேஷ் கிஷோர், கடவுள் கூறியதால் தான் காலணி வீசினேன் என்றும், அதற்காக வருந்த வில்லை என்றும், மன்னிப்பு கேட்க மாட்டேன் என்றும் பார்ப்பனத் திமிரோடு தெரிவித்துள்ளார்.

மிருகங்களுக்குத் தரும் உயிர்நேய அடிப்படை உரிமைகளைக் கூட சகமனிதனுக்குத் தர மனம் இல்லாத மனிதத்தன்மையற்ற கும்பலிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்?

பார்ப்பனரல்லாத ஒருவர் அதிலும் ஒடுக்கப்பட்ட பட்டியலினத்தைச் சார்ந்த ஒருவர் இத்தகைய உயர்ந்த பொறுப்பில் இருப்பதை அவர்களால் எப்படி ஏற்க முடியும்?

அப்படி என்ன அவமதித்து விட்டார் ஸனாதனத்தை –  தலைமை நீதிபதி அவர்கள்.

உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு பொது நல வழக்காகத் தாக்கல் செய்யப்பட்டது. கஜுராேஹாவில் உள்ள விஷ்ணு கோயிலில் ஒரு சிலை சிதிலமடைந்து கிடக்கிறதாம். அதனை நீதிமன்றம் தலையிட்டு செப்பனிட வேண்டுமாம். (அந்த இடம் ஒன்றிய அரசின் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது) கோவிலின் சிலை சீரமைப்புக்கு உத்தரவிடக் கோரிய அந்த மனுவை விசாரித்தபோது, “இது முற்றிலும் விளம்பர நோக்குடைய பொதுநல வழக்கு. நீங்கள் விஷ்ணுவின் தீவிர பக்தர் எனச் சொல்கிறீர்கள். அதனால், தெய்வத்திடமே சென்று ஏதாவது செய்யும்படி கேளுங்கள்.

அது தொல்லியல்துறையின் கீழ் இருக்கும் தலம். எனவே, ஏ.எஸ்.அய்.யிடம் அனுமதி கேட்டு, கடிதம் கொடுக்க வேண்டும்” எனக் கருத்து தெரிவித்து மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார் நீதிபதி கவாய்.

இது ஸனாதன தர்மத்தை அவமதித்து விட்டதாம். இதனால் மனம் புண்பட்டு நீதிபதியை நோக்கிக் காலணியை அந்த வழக்குரைஞர் வீசினாராம். விஷ்ணுவுக்குச் சக்தியில்லை என்று ஒப்புக் கொள்வதால் ஏற்பட்ட கோபமோ!

கடவுள் சர்வ சக்தி வாய்ந்தவராயிற்றே! ஒவ்வொரு கோயிலுக்கும் தல புராணத்தை எழுதி வைத்து, அக்கோயிலின் சக்தியைப் பற்றி எல்லாம் அளந்து கொட்டும் இவர்கள் கடவுளிடம் இதைக் கோருங்கள் என்றால், இவ்வளவு ஆத்திரம் அடைகின்றனர்.

அந்த இடம் தொன்மையான சிற்பங்களைக் கொண்ட ஒரு சுற்றுலாத் தலம். அது சைவம், வைணவம், சமணம், பவுத்தம் ஆகியவற்றுக்குப் பொதுவான இடமாகவே உள்ளது. அந்த இடத்தை ஒரு குறிப்பிட்ட கடவுளுக்கான வழிபாட்டுத் தலமாக்க ஒரு போதும் இயலாது.

இது மதவெறி பிடித்த அந்த ஸனாதனப் பார்ப்பனருக்கும் தெரியும்.

ஸனாதனத்தை இழிவுபடுத்துவதைச் சகிக்க முடியாது என்று இவர்கள் கூவுகிறார்கள். ஆனால், இவர்களின் ஸனாதனம் தான் உண்மையில்
பெரும்பான்மை மக்களை இழிவுபடுத்துகிறது.

பிரம்மாவின் நெற்றியில் பிறந்தவன் பிராமணன்; தோளில் பிறந்தவன் சத்திரியன்; இடுப்பில் பிறந்தவன் வைசியன்; காலில் பிறந்தவன் சூத்திரன்; பிரம்மா இந்த உலகத்தைப் பிராமணர்களுக்காகவே படைத்தார்; சூத்திரன் பிராமணனுக்கு அடிமைத் தொண்டூழியம் செய்யவே படைக்கப்பட்டவன் – விபசாரி மகன்’’ என்று கூறும் மநுதர்மம்தானே ஸனாதனத்தின் முக்கிய சாஸ்திரம்?

வைசியர்களும், சூத்திரர்களும், பெண்களும் பாவ யோனியில் பிறந்தவர்கள் என்று ‘பகவான் கிருஷ்ணன்’ எனச் சொல்லப்படும் கிருஷ்ண பகவானாலேயே அருளப்பட்டதே – இதுதானே ஸனாதனத்தின் இலக்கணம்?

‘‘நம் தேசத்தில்கூட பண்புக் குறைவான போக்கு, கிளர்ச்சி, ‘டெமான்ஸ்ட்ரேஷன்ஸ் புரட்சி’ ஆகிய எல்லாம் கடந்த 40,50 ஆண்டுகளாகத்தான் உண்டாகி இருக்கின்றன. அதாவது, மற்ற தேசங்கள் மாதிரி நாமும் வெளியில் சமத்துவம் கொண்டாட வேண்டும் என்று ஆரம்பித்த பிறகுதான் உண்டாகியிருக்கின்றன’’ என்று கூறியிருப்பவர் யார் தெரியுமா? சாட்சாத் காஞ்சிப் பெரியவாள் என்று பார்ப்பனர்களாலும், அடி வருடிகளாலும் பல்லக்கில் வைத்துக் கொண்டாடப்படும் மூத்த சங்கராச்சாரியார், சந்திரசேகரேந்திர சரஸ்வதி தான் (‘கல்கி’ 4.4.1976).

இதற்கெல்லாம் என்ன சொல்வார்கள்?

கவாய் அவர்கள் பதவி ஏற்ற காலத்தின்போது அவருக்கு நேர்ந்த அவமானங்கள் பல. முதல் முறையாக மகாராஷ்டிரா சென்றபொழுது இந்தியாவில் மூன்றாவது பெரிய பதவியான உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாய் இருக்கும் அவருக்குத் தரவேண்டிய மாநில அரசு மரியாதையைக் கூட தரவில்லை.

காரணம், ஸனாதனம் என்பது ஆரிய ஆதிக்கத்தை அனைத்துத்துறையிலும் மீட்டெடுக்க
வும், நிலைநிறுத்தவும் பார்ப்பனர்களால் பாதுகாக்கப்படும் வாழ்வியல் ஆகும். அதை ஏற்பவர்களால் சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் ஏற்கவே முடியாது.

இதன் வெளிப்பாடுதான் இந்த ஸனாதன வெறியரின் செருப்பு வீச்சு!

இந்தியாவின் உயர்ந்த பட்ச அமைப்பு என்று கூறிக் கொள்ளப்படும் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மீது செருப்பு வீச்சு நடந்துள்ள சூழலில், ”அவர் அதை பெரிது படுத்தவில்லை” ”நாகரிகமாக நடந்து கொண்டார்,” ”விசாரணையின் போது கூட பிரச்சனையைத் திசை திருப்புகின்ற முயற்சிகளில் நாம் பலியாக வேண்டாம்” என்று கேட்டுக் கொண்டார் என்றெல்லாம் இந்த நிகழ்வை
மென்மையாகக் கடந்து செல்வது எப்படி சரியானதாக இருக்கும்? இந்திய சமூக அமைப்பின்
கீழ், ”பிறப்பால் மேல் ஜாதி என்று கூறிக் கொள்ளும்
பார்ப்பனர்கள் மற்றும் வைசிய, சத்திரிய வர்ணங்
களைச் சார்ந்த நபர்களுக்கும், சூத்திர, பஞ்சம ஜாதிகளைச் சார்ந்த மக்களுக்கும் கொடுக்கப்படும் தண்டனைகள் இழிவுபடுத்தப்படுதல்கள், அவமானங்கள் ஆகியவை வேறு வேறு தான்” என்பதை நிரூபித்துள்ளனர்.

எனவே, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி மீது வீசப்பட்டுள்ள செருப்பானது இந்திய சமூக
அமைப்பின் மீதும், அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும் வீசப்பட்டுள்ள செருப்பு வீச்சு என்றே புரிந்து
கொள்ள வேண்டும். நீதிபதிகள் எந்த வர்க்கத்தைச்
சார்ந்தவர்கள்; அவர்கள் மீது இப்படிப்பட்ட நிகழ்வுகள் நடந்தால் நமக்கு என்ன? என்றெல்லாம், வர்க்கம் என்பதையே கொச்சையாகப் புரிந்துகொண்டு உளறித் திரிவது மேலும் பல பயங்கரவாத நடவடிக்கைகளை நிகழ்த்துவதற்கு ஊக்கத்தை தான் ஏற்படுத்திக் கொடுக்கும்.

இதனைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமைணி சிறப்புக் கூட்டங்களை ஏற்பாடு செய்துள்ளார். மேலும் தமிழ்நாடு முழுவதும் 26 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.   ©