பூமியினைப் பாயாகச் சுருட்டி – அசுரன்
புகுந்தானாம் ஆழ்கடலின் இருட்டில்!
சாமியொன்று பன்றியாகிப் பூமியினை மீட்டதுவாம்!
கோமியத்தைக் குடிப்பார்பொய் உருட்டில் – தமிழர்
கெட்டழிந்தார் தீபாவளிப் புரட்டில்!
பூமியென்ன தட்டையான பாயா? கடலும்
பூமிகொண்ட பாகமில்லை யாடா?
பூமியினைச் சுருட்டுகையில் புரட்டியவன் எங்குநின்றான்?
பூகோளம் அறியாத மூடா! பெரியார்
கேள்விகட்குப் பதிலளிக்க வாடா!
கடவுள்செய்த வேலையினைப் பாரு! – முகத்தில்
காரியுமிழ்ந்(து) ஏசிடுமே ஊரு!
ஜடப்பொருளாம் பூமியுடன் பன்றிக்கடவுள் புணர்ந்ததுவாம்!
உடன்பிறந்தான் நரகாசுரன் என்று – பார்ப்பான்
ஓதிவைத்தான் புனைசுருட்டை அன்று!
மகாவீரர் இறந்துபட்ட நிகழ்வை – பார்ப்பான்
மாற்றிவிட்டான் தீபாவளிக் கதையாய்!
தகுமுறையோ பிறனிறப்பைக் கூடிக்கொண் டாடுவது?
பகுத்தறிவால் ஆய்ந்தறிவாய் புனைவை! – பார்ப்பான்
பார்ப்பதெலாம் தான்பிழைக்கும் வழியை!
திராவிடரை அசுரரென்று பழித்தான்! – பார்ப்பான்
தமிழர்களின் பிறப்பினையே இழித்தான்!
பிறருழைப்பில்தான்செழித்தான்! பேதமைக்கே ஊட்டமிட்டான்!
நரகாசுரன் கதைபுனைந்து கொடுத்தான்! – தமிழர்
நல்வாழ்வை பண்பாட்டைக் கெடுத்தான்!
புத்தாடை வாங்கக்கடன் வாங்கி – ஏழை
புதைந்திடுவான் கடன்சுமையைத் தாங்கி!
மத்தாப்பு வெடியென்று பணம்கரியாய்ப் போனபின்னே
பத்தியமாய்ப் பசிதின்றே ஏங்கி – ஏழை
பதைபதைப்பான் கடன்பெருக வீங்கி!
தைமுதல்நாள் தமிழருக்குத் திருநாள்! – பொங்கல்
தமிழரெல்லாம் கூடிமகிழ் பெருநாள்!
பைநிறைக்கப் பார்ப்பனியம் பற்றவைத்த தீபாவளிப்
பொய்ப்புனைவை கிழித்தெறிவோம் அறிவால்! – அதற்குப்
புதுக்கிடுவோம் பகுத்தறிவு அரிவாள்! ©





