Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளி மநு – பொ. நாகராஜன், பெரியாரிய ஆய்வாளர்

நூல் : ‘தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளி மநு’
ஆசிரியர் : மஞ்சை வசந்தன்,
வெளியீடு : திராவிடர் கழகம்
முதல் பதிப்பு 2024
பக்கங்கள் : 112 – நன்கொடை : ரூ.120/-

காவிக் கூட்டத்தைச் சேர்ந்த ஸனாதன எழுத்தாளர் செண்பகப் பெருமாள் என்பவர் மனித தர்மத்திற்கே எதிரான, பிற்போக்குத் தனமான ‘ மநு தர்மம்’ நூலை ஆதரித்து தனது போலியான வாதங்களால்  முட்டுக் கொடுத்து எழுதி வெளியிடப்பட்ட  நூல் தான் – குற்றவாளிக் கூண்டில் மநு!

அந்த நூலின் பொய்யுரைகளுக்கு நெத்தியடி யாக பதிலடி தந்து விளக்கம் தரும் இந்த மறுப்புரை நூலை பகுத்தறிவாளர், எழுத்தாளர் மஞ்சை வசந்தன் மிகக் கச்சிதமாக எழுதி அதற்குப் பொருத்தமாகப் பெயரும் சூட்டியுள்ளார் – ‘தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளி மநு’ என்று!

நூலின் முன்னுரையைச் சிறப்பான விளக்கவுரையாகத் தந்துள்ளார் ஆசிரியர் கி.வீரமணி அய்யா அவர்கள். “மநு நீதியை சுயராஜ்யம் வந்தால் அரசமைப்புச் சட்டமாகவே ஆக்க வேண்டும் – ஆக்குவோம் என்று கூறியவர் தான் இந்துத்துவாவின் முன்னோடிகளில் ஒருவரான மராத்திய சித்பவன் பார்ப்பனர் பால கங்காதர திலகர். அந்தக் கருத்துதான் இன்றைய ஆர்.எஸ்.எஸ்ஸின் கருத்து! ”

“ஆர்.எஸ்.எஸ்ஸின் அரசியல் பிரிவான பிஜேபியின் பத்து ஆண்டுகால அரசியல் மீண்டும்’ விஸ்வகர்மா யோஜனா ‘ என்ற பெயரில் மறுபடியும்  குலக்கல்வியைக் கொண்டு வர
முயல்கின்றன. பிஜேபி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மநு தர்மத்தை அரசியலமைப்புச் சட்டமாக்கி நடைமுறை படுத்திவிடும் ஆபத்தான சூழ்நிலை இன்றும் உள்ளது. இப்படிப்பட்ட சூழலில் மக்களுக்கு வழிகாட்ட இந்நூல் கட்டாயம் தேவையாகும்!” – என்று பரிந்துரைத்துள்ளார்!

நூலாசிரியர் மஞ்சை வசந்தன் தனது விரிவான உரையில் இந்த நூலுக்கான தேவையையும் அதற்கான விளக்கத்தையும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். செண்பகப் பெருமாளின் நூலைப் பற்றி, “மநு தர்மம் மனித குலத் திற்கே எதிரான அநீதியின் மொத்த உருவம். அப்படிப்பட்ட மநு தர்மத்திற்கே ஒருவர் முட்டுக் கொடுத்து அதை நியாயப்படுத்த முயலுகிறார் என்றால், அவர்தான் முதல் குற்றவாளி! எனவே, குற்றவாளிக் கூண்டில் முதலில் நிறுத்தப்பட வேண்டியவர் செண்பகப்
பெருமாள் தான் ! “….என ஓர் அறிவார்ந்த வழக்குரைஞராக வாதாடுகின்றார்!

நூலில் தரப்பட்டுள்ள பிரிவுகளுக்கு வைக்கப்பட்ட தலைப்புகளில் இருந்தே ஆசிரியர் நமக்கு எந்த உண்மையைச் சொல்ல வருகிறார் என்றும், எந்த உண்மையை மறைக்கச் சதி செய்கிறார்கள் என்றும் விளங்கி விடுகின்றது. தலைப்புகளை நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்:

1)  வர்ண பேதம் பிறப்பாலா? குணத்தாலா?

2)  உபநயனம் செய்யும் முன் எல்லோரும் சூத்திரர்களா?

3) மநு சாஸ்திரம் ஆபத்துக் காலத்துக்கு மட்டும் உரியதா?

4) மநு சாஸ்திரம் பெண்களுக்கு எதிரானது
இல்லையா?

5) சூத்திரர்கள் வேதம் கற்க மநு தர்மம்
அனுமதிக்கிறதா?

6) பிராமணர்களுக்கு அடிமை வேலை செய்யவே
சூத்திரர்கள் என்று மநு சொல்லவில்லையா?

7)  பிராமண நலனுக்கும் மேன்மைக்கும் ஆதிக்கத்திற்கும் எழுதப்படவில்லையா மநு சாஸ்திரம்?

8)  மநு தர்மம் கலப்பு மணத்தை ஆதரிக்கிறதா?

9)  தீண்டாமையை மநு தர்மம் கூறவில்லையா?

10)   பிராமணன் என்பது வர்ணமா? பட்டமா?

11) மக்கட் பேறும் மநு சாஸ்திர மடமையும்

12) மநு தர்மம் சமய நூலா? சமூக நூலா? ஜாதி நூலா?

13) அம்பேத்கர் மநு தர்ம சாஸ்திரத்தை எதிர்க்கவில்லையா?

14) தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளி மநு.

* நூலாசிரியர் மஞ்சை வசந்தன் அவர்கள் இந்த 14 குற்றங்களையும் விளக்கிச் சொல்லி, அதற்குக் காரணமான மநு ஒரு தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளி என ஆணித்தரமாகத் தனது வாதங்களை முன் வைத்து இந்த நூலை ஒரு நல்லதொரு மறுப்புரை நூலாக வழங்கியுள்ளார்.

* நூலாசிரியருக்கு எனது பாராட்டுகளும் வணக்கங்களும். இது போன்ற நூல்களே இன்றைய கட்டாயத் தேவை! ©