Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

சுயமரியாதை இயக்க நூற்றாண்டில் கருப்புச்சட்டைத் தந்தைகளுக்கு “சல்யூட்”!

சிறைப்படுத்தப்பட்டிருந்த அடிமைக் கூண்டை உடைத்து நம்மையெல்லாம் சுதந்திரப் பறவைகளாய்ப் பறக்கச் செய்தவர் தந்தை பெரியார்.

அவர் கண்ட சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு நிறைவு மாநாட்டிற்குச் சென்று வந்ததிலிருந்து பழைய நினைவுகளை நினைத்து, நினைத்து மனம் சிறகடித்துப் பறக்கிறது.

இன்னும் மறைமலை நகரைச் சுற்றிச் சுற்றியே… எண்ணங்கள் பறந்து வலம் வந்து கொண்டிருக்கின்றன.

அந்நாளில், சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் சமூக நீதிக்கான சரித்திர நாயகர் தமிழ்நாடு முதலமைச்சர் மானமிகு, மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள், பகுத்தறிவுச் சிந்தனையும் சுயமரியாதை உணர்வும் கொண்ட ஒரு கருப்புச் சட்டைக்காரர் ஓர் ஊரையே முன்னோக்கி இழுத்துச் செல்லும் ஆற்றல் பெற்றவர். அந்த ஆற்றல்மிக்க கருப்புச் சட்டைக்காரர்களுக்கு ஒரு “சல்யூட்’’ என்றார்.

அவர் சொன்ன வார்த்தைகள் எவ்வளவு உண்மையானவை. இங்கே ஒவ்வொரு கருப்புச் சட்டைக்காரரும் பெரியாரின் மானுடத் தத்துவத்தை ஏற்று, கருப்பு மெழுகுவத்தியாக எரிந்து, தங்களை உருக்கிக் கொண்டு தன் குடும்பம், சமூகம் முன்னேற வாழ்ந்தவர்கள்.

எனவே, முதலமைச்சர் அடித்த சல்யூட்டை அப்படியே ஏற்று, (மாநாடு முடிவுற்று இல்லம் வந்து சேர்ந்தபோது இரவு 3.00 மணி. உடனே உறங்கச் செல்லாமல், செல்லமுடியாமல் இல்லத்தில் ஒளிப்படமாகக் காட்சி அளித்துக் கொண்டிருந்த என் தந்தை மற்றும் தந்தை பெரியாரின் முன் நின்று, நான் ஏற்று வந்த முதலமைச்சரின் சல்யூட்டை திருப்பி அடித்து அவர்களுக்கு மரியாதை செய்தேன்.

ஆம், இது இந்த நேரத்தில் நன்றி மறக்காமல் செய்ய வேண்டிய செயல் இது என்பதை உணர்ந்து. நமது முதலமைச்சர் நெஞ்சை நிமிர்த்தி, உண்மை உணர்வு பீறிட்ட பெருமிதத்துடன் சொன்னாரே, அந்த உண்மையுணர்வுடன், நன்றி மறக்காமல் அவர்களுக்குச் செய்தேன்.

பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியது இந்த மனித சமூகம். சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழ் மொழி தோன்றி, அவை தமிழ் இனக்குழுக்களாக உருவான காலந்தொட்டு, இச்சமூகத்தை ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் யாரும் இந்த மனித சமூகத்தைச் சமத்துவமாக நடத்தவில்லை.

ஆட்சி செய்பவர்களின் அதிகாரத்திற்கு, அவர்களின் சுக போக வாழ்க்கைக்கு மக்களை அடிமைப்படுத்தி, அடக்கித்தான் ஆட்சி செய்துள்ளார்கள்.

அப்படி அடிமைப்படுத்தப்பட்ட மனிதராக, தான் இச்சமூகத்தில் என் தந்தை மு.பெருமாள் அவர்களும் வாழ்ந்து அவருக்கென்று ஒதுக்கப்பட்ட குலத் தொழிலைச் செய்து கொண்டு அதில் வரும் சொற்ப வருவாயில் எங்களை (பெண்கள் 5 பேர், ஓர் ஆண் – நான்) எல்லோரையும் வளர்த்தவர்.

தந்தை பெரியார் என்ற ஆற்றல்மிகு “அணு” அவருக்கு அறிமுகம் ஆகும் வரை, இங்கே காலம் காலமாக நம்முடைய வாழ்க்கை ஆண்டவனால் விதிக்கப்பட்டது என்றும், பூர்வ ஜென்மத்தில் செய்த பாவ, புண்ணியங்களால் உருவானது தான் இந்த வாழ்க்கை என்றும், இங்கே ஆதிக்க சமூகத்தால் மனித மனங்களில் விதைக்கப்பட்டிருந்ததை நம்பி, எல்லாம் விதிப்படி தான் நடக்கிறது என்று வாழ்ந்தவர் தான் அவர்.

அவரது 25ஆம் வயதில் தந்தை பெரியார் அறிமுகம் ஆகிறார். அணு வெடிப்பாக நிகழ்ந்த அவர் உரைகளைக் கேட்டு, அவர் ஊட்டிய சுயமரியாதை உணர்ச்சியால், அறிவு விடுதலை பெற்று பகுத்தறிவு என்ற வெப்பத்தால், அவர்மீது படிந்திருந்த மூடநம்பிக்கை அழுக்குகள் எல்லாம் சூரிய ஒளி பட்ட பனி போல் கரைந்து ஓடுகின்றன.

இங்கே உருவாக்கி வைத்திருப்பது எல்லாம் ஆண்டவன் செயல் இல்லை. ஆண்டவன் பெயரால் உருவாக்கிய அயோக்கியர்களின் செயல் என்று உணர்கிறார். அதன் விளைவாக காலம் காலமாகத்தான் செய்து வந்த குலத்தொழிலை தன் பிள்ளைக்குச் சொல்லித்தர வேண்டும் எண்ணத்தையும், அடுப்பு ஊதும் பெண்களுக்குக் கல்வி எதற்கு? என்று பெண்களைப் படிக்க வைக்க கூடாது என்ற நிலையிலிருந்து, பெண்கள் ஆண்களுக்கு அடிமைகள் அல்லர்!

அவர்களும் சுதந்திரமான மனிதர்கள் தாம்; அவர்களுக்கு என்று வாழ்க்கை இருக்கிறது. அந்த வாழ்க்கையை உருவாக்கி உள்ள அவர்களுக்குக் கல்வி தேவை என்பதை உணர்ந்து, அனைவரையும் கல்வி கற்க வைத்தார்.

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் குறிப்பிடுவது போல, பதவியாசை, புகழாசை என்ற ஏதும்அறியாது, தந்தை பெரியார் ஆணை எதுவோ அது நிறைவேற்றப்படவேண்டும் என்ற ஒரே ஆசையைப் பெற்று, பருவம் பாராமல், தன் சுகங்களை எல்லாம் துறந்து, தனக்குக் கிடைக்கும் சொற்ப வருமானத்தில், கடன் வாங்காமல், பெரியார் கற்றுக் கொடுத்த சிக்கன வாழ்க்கையை வாழ்ந்து, கருப்பு மெழுவத்தியாகக் கரைந்து, எங்கள் அனைவரையும் படிக்க வைத்ததன் விளைவாக (அவர் செய்கின்ற செயலுக்கு எல்லாம் உறுதுணையாக இருந்த என் தாயையும் இந் நேரத்தில் மறக்க முடியாது) அவர் ஈன்று எடுத்த பெண் பிள்ளைகள் அனைவரும் அரசு உயர் பதவிகளிலும், தொழில் துறையிலும் மேலோங்கி இருக்கிறார்கள். இவரின் பேரப் பிள்ளைகள் மாவட்ட ஆட்சியராக, மருத்துவராக, பொறியாளராக, இவர்களோடு இணைந்த வாழ்விணையர் குடும்பங்களும் பல்வேறு துறை
களில் எல்லை கடந்து, ஜாதி, மத பேதம் கடந்து உலகளவில் பரந்து விரிந்து இருக்கிறார்கள்.

என் தந்தை “தந்தை பெரியாரை” – அவர் கொள்கையை – வாழ்வியல் தத்துவத்தை உள்வாங்கியதால் ஏற்ற மாற்றம். இது ஏதோ என் குடும்பத்திற்கு மட்டும் ஏற்பட்ட மாற்றம் அல்ல. பெரியாரை ஏற்ற ஒவ்வொரு குடும்பத்திலும் உருவான மாற்றம். மாநாட்டிற்கு வந்திருந்தவர்களின் ஒவ்வொருவரின் முகத்திலும் அதைக் காணமுடிந்தது.

சொட்டு.. சொட்டு.. என்று மழைத்துளிகள் ஒழுகிக் கொண்டேயிருக்கும் கூரைவீட்டில், தண்ணீர்த் துளிகள் டொக்கு… டொக்கு…  என்று பாத்திரங்களில் விழும். அதையும் இசையாக செவிகளில் கேட்டுக் கொண்டே அரைத் தூக்கமாகவேதான் தூங்கியிருப்போம். நம்மில் பல பேருக்கு அரிசி சாப்பாடு அரிது, கறிச் சோறு அரிதிலும் அரிது! ஒவ்வோர் ஆண்டும் வரும் விழாக்காலங்களில் கிடைக்கும் புதிய உடை. செருப்பு இல்லாத கால்கள், மரியாதை இல்லாத, பிறரிடம் கைகட்டி வாழ்ந்த நம் தந்தை காலத்து வாழ்க்கை.

இன்று மாட மாளிகை, நினைத்தால் பிரியாணி, தேவைப்படும் போதெல்லாம் உடைகள், கால் களுக்கு விதவிதமான ஷூக்கள், வாகனங்கள் என்று வாழ்க்கைத் தரம் மாறி உள்ளது என்றால், யாரால்?

ஆண்டவனாலா! அல்ல அல்ல! பகுத்தறிவுப் பகலவனால் தானே இந்த மாற்றம்!

இந்தப் பலனை அனுபவிக்கும் நாம், இந்தப் பலனைத் தக்க வைக்க, நம் வாழ்க்கையை – நம் முன்னோர்களின் வாழ்க்கையை அடுத்த தலைமுறைக்கும் கடத்த வேண்டும்.

இல்லையென்றால் நன்றி மறந்தவர்களாக அவர்கள் மாறி விடக் கூடும்.

‘உப்பு இல்லாத பண்டம் குப்பையிலே’ என்பது போல,சுயமரியாதை இல்லாத வாழ்க்கையும் குப்பையிலே என்பதை உணர்ந்து நாம் அனைவரும் தந்தை பெரியாரின் சுயமரியாதை உப்பை (உணர்வை) நம் வாழ்க்கையில் சேர்த்துக் கொண்டே வருவோம்.

உலகத் தந்தையாம் சுயமரியாதை உப்பிட்ட தந்தை பெரியாருக்கும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் திராவிட மாடல் அரசுக்கும்  நன்றி மறக்காமல் அடிப்போம் “சல்யூட்”. ©