Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

இந்தியாவை உலுக்கிய ஜாதி ஒழிப்புப் போராட்டத்தின் பொன்விழா! இயக்க வரலாறான தன் வரலாறு – 369 – கி.வீரமணி

ஜாதியைப் பாதுகாக்கும் இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவைக் கொளுத்திய போராட்டத்தின் 50ஆம் ஆண்டு பொன்விழாவை 26.11.2007 அன்று லால்குடியில் கொண்டாடினோம்.

தந்தை பெரியார் 26.11.1957 அன்று ஓர் போராட்டத்தை நடத்திட ஆணையிட்டார்.

உலகில் எங்கும் இல்லாத கேவலம் இந்தக் கேவலமான ஹிந்து மதத்தில்! பிறப்பின் அடிப்படையில் பேதம் கற்பிக்கும் ஜாதிய முறை என்பது ஹிந்து மதத்துக்கு மட்டுமே உள்ள ஏகபோக ஏற்பாடாகும்.

பிறவி முதலாளித்துவம் பிறவி தொழிலாளித்துவம் என்ற ஒன்று கிடையாது. ஆனால், ஹிந்து மதத்தின் வருணாசிரம சமூக அமைப்பில், பிறக்கும்போதே இந்த ஆண்டான் -அடிமைத் தத்துவம் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்டுவிட்டது.

வேதம் சொன்னது – கீதையிலே பகவான் கிருஷ்ணன் சொன்னான் – மநுதர்மத்தில் கூறப்பட்டுள்ளது என்ற இந்த அநாகரிக முறையைக் காப்பாற்றும் ஏற்பாட்டுக்கு இந்திய அரசமைப்புச் சட்டத்திலும் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றால், அதனை மானுட உரிமைக் காவலர் தந்தை பெரியார் ஏற்பாரா? மனித உரிமையையும், சமத்துவக் கோட்பாட்டையும் விரும்பும் எவரால்தான் ஏற்க முடியும்?

மக்களால் தேர்வு செய்யப்படாத – பெரும்பாலும் பார்ப்பனர் ஆதிக்கம் கொண்ட ஓர் அமைப்பினால் இந்திய அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது. இது மநுதர்மத்தின் மறுபதிப்பு என்று தொடக்கமுதலே அடையாளம் காட்டியவர் தந்தை பெரியார்தான்.

அரசமைப்புச் சட்டத்தில் ஜாதிக்குப் பாதுகாப்பு ஏற்பாடு என்ற நிலையில், அந்தப் பகுதியைக் கொளுத்தும் போராட்டத்தை. தஞ்சையில் இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்ற ஓர் சிறப்பு மாநாட்டில் அறிவித்தார்கள். ஜாதியைப் பாதுகாக்கும் பகுதியை அகற்ற வேண்டுகோளும் வைத்தார் வைக்கம் வீரர்.

இந்திய அரசு மாற்றத்தைக் கொண்டு வர விரும்பவில்லை; மாறாக ஜாதியை ஒழிக்கப் போராட்டம் நடத்திய திராவிடர் கழகத் தோழர்களைச் சிறையில் தள்ளிட அவசரச் சட்டம் ஒன்று கொண்டு வரப்பட ஏற்பாடு செய்யப்பட்டது. மூன்றாண்டு கடுங்காவல் தண்டனையாம்! தந்தை பெரியாரா அஞ்சுவார்? கருஞ்சட்டைப் பட்டாளமா முன்வைத்த காலைப் பின் வைக்கும்?

பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட கழகத் தோழர்கள் குடும்பம் குடும்பமாகப் போராட்டத்தில் ஈடுபட்டாலும் மூவாயிரம் பேர்களை மட்டும் கைது செய்து, சிறையில் வைக்கப்பட்டனர்.

எதிர் வழக்காட வேண்டாம் என்று அறிவித்து விட்டார் அய்யா. எந்த ஒரு நியாயமான உரிமைகளையும் கஷ்ட நஷ்டம் என்னும் விலை கொடுத்துப் பெறவேண்டும் என்பதுதானே தந்தை பெரியார் அவர்களின் கோட்பாடு?

சிறையிலேயே தோழர்கள் சிலர் செத்தார்கள்;சிறையில் நோய்வாய்ப்பட்டு, அநேகர் விடுதலையான சில நாள்களில் – சில மாதங்களில் மரணத்தைத் தழுவிக் கொண்டார்கள். சிறையில்தந்தை பெரியார் இருந்தார். போராட்டத்தில் பங்கேற்ற வீரர்களைச் சிறையில் சந்தித்தும் அவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்தும் அன்னை மணியம்மையார் பயணம் மேற்கொண்டார். அவருடன் நாமும் தந்தை பெரியார் அறிவுரைப்படி சென்றோம்.

வருமானம் ஈட்டும் குடும்பத் தலைவன் சிறைக்குச் சென்றதால். வறுமையின் கோரப்பிடியில் தவித்த குடும்பங்கள் எண்ணற்றவை.

ஓர் உள்ளங்கை அளவு காகிதத்தில் இந்திய அரசமைப்புச் சட்டம் என்று எழுதி கொளுத்தியதற்காக மூன்றாண்டு கடுங்காவல் தண்டனை பெற்றவர்கள் உலக வரலாற்றில் கருஞ்சட்டைத் தொண்டர்களைத் தவிர வேறு யாரே இருக்க முடியும்?

இந்தத் தியாகத்துக்கு இணையான ஒன்றை வேறு எங்கேதான் தேடிக் கண்டுபிடிக்கவும் முடியும்?

இன இழிவு ஒழிய இன்னுயிர் ஈந்த அந்தத்தியாகச் சுடர்களுக்கும். கடுங்காவல் தண்டனை என்ற கொடுமையை அனுபவித்த அந்தக் கொள்கை மாவீரர்களுக்கும். மரியாதை செலுத்தும் வகையில் அப்போராட்டத்தின் பொன்விழா ஆண்டில். அதே நாளாகிய 26.11.2007 அன்று அதன் பொன்விழா மாநாட்டை ஜாதி ஒழிப்பு மாநாடாக லால்குடியில் நடத்தினோம்.இலால்குடி, ஜாதி ஒழிப்புக்கான சட்ட எரிப்புப் போராட்டத்தில் பெருவாரியான (இருபால்) தோழர்கள் பங்கேற்ற பகுதியாகும்.

தஞ்சையிலிருந்து இவ்விழாவிற்குச் சென்றோம். அதே உணர்வுடன் தாளக்குடி, கீழவாளாடி, ஆங்கரை, பூவாளூர், மணக்கால் ஆகிய இடங்களில் உற்சாக வரவேற்புகளை அளித்தனர். ஒவ்வொரு ஊரிலும் 1957 போராட்டத்தில் பங்கேற்ற முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர்களைச் சந்தித்து, பாராட்டிக் கொண்டே சென்றோம்.

காலை 10 மணியளவில் லால்குடி பரமசிவபுரம் – பேரறிஞர் அண்ணா திருமண மண்டபத்தில் காலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. காலை நிகழ்ச்சிகளுக்குக் கழகச் செயலவைத் தலைவரும் ஜாதி ஒழிப்புப் போராட்டத்தில் பங்கேற்றுச் சிறை சென்ற வருமான ராஜகிரி கோ.தங்கராசு அவர்கள் தலைமை வகித்தார். கழகப் பொதுக்குழு உறுப்பினர் லால்குடி இ.ச.இராவணன்(தேவசகாயம்) திறந்து வைத்து உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் ஆல்பர்ட் அவர்கள் அறிக்கை வாசிக்க மாவட்ட தலைவர் அட்டலிங்கம் வரைவேற்புரையாற்றினார். தொடர்ந்து நடைபெற்ற ஜாதி ஒழிப்புக் கருத்தரங்கத்திற்கு கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் டாக்டர் பிறைநுதல்செல்வி தலைமை வகித்தார். ‘ஜாதி ஒழிப்புத் தடைகளைத் தகர்ப்போம்’ என்னும் தலைப்பில் கழகத் துணைப் பொதுச் செயலாளர் துரை. சந்திரசேகரன் அவர்களும், ‘சாஸ்திரங்கள்’ என்னும் தலைப்பில் நாகை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் பெரியார் முரசு அவர்களும், ‘சட்டம்’ என்னும் தலைப்பில் கழக வழக்குரைஞர் அணித் தலைவர் கி.மகேந்திரன், ‘சட்ட எரிப்பு வீரர்கள்’ பற்றி வழக்குரைஞர் பூவை.புலிகேசி அவர்களும் உரையாற்றினர். அவ்வரங்கிற்கு ஜாதி ஒழிப்புப் போராட்ட வீரர்களான நன்னிமங்கலம் கணேசன், கீழவாளாடி பெரியசாமி ஆகியோரது பெயர்கள் சூட்டப்பட்டன. பின்னர் ஜாதி ஒழிப்புப் போராட்டப் பொன் விழா எழுச்சிப் பேரணி நடைபெற்றது.

மாலை நிகழ்ச்சி வடக்கு வீதியில் நடைபெற்றது. அமைக்கப்பட்ட மாநாட்டு அரங்கிற்கு ஜாதி ஒழிப்புக்காகச் சட்ட எரிப்பில் ஈடுபட்டு திருச்சி சிறையில் தண்டனை அனுபவித்த நிலையில் மரணம் அடைந்த மணல்மேடு வெள்ளைச்சாமி, பட்டுக்கோட்டை இராமசாமி ஆகியோரின் பெயர்கள் மிகப் பொருத்தமாகச் சூட்டப்பட்டிருந்தன.

மாலை நிகழ்ச்சிகளுக்கு சட்ட எதிர்ப்புப் போராட்டத்தில் 12 மாதங்கள் கடுங்காவல் தண்டனை அனுபவித்த பெரியார் பெருந்தொண்டர் து.மா.பெரியசாமி தலைமை வகித்தார்.

1957ஆம் ஆண்டு நவம்பர் 26 அன்று, ஜாதியைப் பாதுகாக்கும் இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவைக் கொளுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறை சென்ற தோழர்கள் மாநாட்டுப் பார்வையாளர்கள் வரிசையில் முன்பகுதியில் அமர வைக்கப்பட்டு இருந்தனர்.

வாலிப வயதில் அப்போராட்டத்தில் ஈடுபட்ட அந்தக் கருப்பு மெழுகுவத்திகள் இப்பொழுது முதுமையின் முற்றத்தில் நின்று கொண்டிருந்தனர். சிலர் தடியூன்றி வந்தனர். பலர், பிறர் துணையுடன் வந்தனர். நடக்க முடியாத நிலையிலும் இம்மாநாட்டில் பங்கு கொண்டே தீருவது என்ற வைராக்கியத்துடன் 110 தோழர்கள் வந்திருந்தனர்.

பல்வேறு இடர்ப்பாடுகளுக்குப் பிறகும் இன்றுவரை கொள்கையில் கொஞ்சமும் நழுவாது, வழுவாது எவ்வித சபலங்களுக்கும் ஆளாகாமல், நடுங்கும் உடல் – ஆனால், நடுங்காக் கொள்கையுடன் முதுமையின் வாசலில் தள்ளாடிக் கொண்டிருந்த அவர்கள் எல்லாம் மேடைமீது ஏறுவதோ அல்லது ஏற்றுவதோ மிகச் சிரமமான காரணம் என்பதால், நாம் அந்தக் கருப்பு மெழுகுவத்திகள் அமர்ந்திருந்த பகுதிக்கே சென்று, ஏற்கெனவே தயாரிக்கப்பட்டு இருந்த பட்டியலில் இடம்பெற்ற ஒவ்வொரு தோழரையும் அணுகி அவர்களை ஆரத் தழுவி சால்வை அளித்து, நினைவுப் பரிசு அளித்து மகிழ்ந்தோம்.

போராட்டத்தில் பங்கேற்றுச் சிறை சென்ற லால்குடி வட்டம், இடையாற்றுமங்கலம் முத்துச்செழியன் அனைவர் சார்பில் ஏற்புரை வழங்கி, தாங்கள் சிறையில் இருந்த போது அன்னையாரும் நாமும் சென்று அவர்களையும், அவர்களது குடும்பத்தவரையும் சந்தித்ததை நினைவு கூர்ந்தார்.

கழகப் பொதுச் செயலாளர்களான கவிஞர் கலி.பூங்குன்றன், சு.அறிவுக்கரசு, பொருளாளர் கோ.சாமிதுரை, தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என்.நேரு, தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் செல்வராஜ் ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் நமக்கு பெரியார் பெருந்தொண்டர் இ.ச. தேவசகாயம் அவர்களின் பேரனும் தே.வால்டர் அவர்களின் மகனுமான  பெரியார் பிரைன் எமக்கு எடைக்குஎடை நாணயம் வழங்கினார். மாவட்டக் கழக அமைப்பாளர் தே.வால்டர் ரூ.ஒரு லட்சம் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்துக்கு வழங்கினார். மாநாட்டில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் 3ஆம் தீர்மானமாக, “மொழிப்போர் தியாகிகளுக்கு அரசு உதவித்தொகை அளித்து வருவது போலவே, ஜாதி ஒழிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறை ஏகிய தீரர்களுக்கும் உதவி செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது. இதை பொருளாதார உதவி என்பதை காட்டிலும் அவர்தான் தன்னல மறுப்புத் தொண்டுக்கு அரசு வழங்கும் அங்கீகாரம் என்ற பெருமிதம் அவர்களுக்கு ஏற்பட அது பெரிதும் உதவிடும் என்பதால் தான் இம்மாநாடு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.’’ என்ற தீர்மானத்தையும் நிறைவேற்றினோம்.

திராவிடர் கழகத் தோழர்கள் அரசிடமிருந்து பட்டம் பதவிகளை எதிர்பார்க்கக் கூடியவர்கள் அல்லர். தன்னல மறுப்புக்காரர்கள் என்பது ஊருக்கும் உலகுக்கும் தெரியும். அவர்கள் வாழ்க்கையின் இறுதிக் காலத்தை நிம்மதியாகக் கழிக்கவும் அவர்களது போராட்டத்திற்கு – தியாகத்திற்கு அரசின் அங்கீகாரமாகவும் இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றினோம்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் 49 நீதிபதிகளில் ஏழு பேர் பார்ப்பனர்களாக இருந்த நிலையில் இந்த ஆதிக்கத்தைக் கண்டித்தும், கொலிஜியத்தில் தமிழர் நீதிபதி இடம்பெற வேண்டும் என்று வலியுறுத்தியும் 27.11.2007 அன்று காலை சென்னை மெமோரியல் ஹால் முன்பாக எமது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை உயர்நீதிமன்றத்தில் 49 நீதிபதிகளில் 45 நீதிபதிகள் இருக்கின்ற நிலையில் அதில் ஏழு பேர் பார்ப்பனர்களாக இருந்தனர். காலியாக உள்ள நான்கு இடங்களுக்கு இரண்டு பார்ப்பனர்களின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டிருந்ததைச் சுட்டிக்காட்டி இவ்வாறு நியமிக்க கூடாது என்று உரையாற்றினோம். மேலும் அப்பொழுது தலைமை நீதிபதி  இந்தியா முழுவதும் பரிந்துரைத்திருந்த 69 நீதிபதிகளையும் நியமிக்கக் கூடாது என்றும், கொலிஜியத்தில் தமிழர் நீதிபதி இடம் பெற வேண்டும் என்றும், ஆர்.எஸ்.எஸ். ஷாகா பயிற்சி பெற்றவருக்கு நீதிபதி பரிந்துரையை ரத்து செய்ய வேண்டும் என்றும் முழக்கமிட்டோம்.

அன்று மாலை சென்னை மயிலையில் நடைபெற்ற நமது திராவிட இயக்கத்தின் தலைவர் திருமதி. ஓவியம் எழுதிய “சேதுக்கால்வாய் திட்டம் விளக்கக் கையேடு” வெளியீட்டு விழாவில் பங்கேற்று நூலை வெளியிட்டோம், இலக்கியத் திறனாய்வாளர் கொடைக்கானல் காந்தி பெற்றுக்கொண்டார். வழக்குரைஞர் இந்திரஜித், கோவி. கண்ணன், ஜோமல்லூரி, பாரதி பாஸ்கரன், கே. இரகுபதி ஆகியோர் பங்கேற்றனர்.

திருப்பூரில் ‘பெரியார்’ திரைப்படம் வெற்றிகரமாக ஓடக் காரணமாக இருந்தவர்களுக்கான பாராட்டு நிகழ்வு 29.11.2007 அன்று நடைபெற்றது. நாம் பங்கேற்று பெரியார் திரைப்படம் வெற்றிகரமாக ஓடக் காரணமாக இருந்த தோழர்கள் திருப்பூர் நகர்மன்றத் தலைவர் க.செல்வராஜ், பெரியார் படக்குழுச் செயலாளர் வி.டி. சுப்பிரமணியம், யுனிவர்சல் திரையரங்கப் பங்குதாரர் பழனிச்சாமி ஆகியோரைப் பாராட்டி நினைவுப் பரிசினை வழங்கினோம்.

மலேசியாவில் தங்களுக்கு சமவாய்ப்பு, குடி உரிமை வாய்ப்பு, வேலை வாய்ப்புகள் போன்றவற்றுக்காகவும், வாழ்வுரிமை பெறவும். அறவழியில் அறப்போர் நடத்திய மலேசியத் தமிழர்கள் மூர்க்கத்தனமாகத் தாக்கப்பட்டு, சிறையில் தள்ளப்பட்டனர். இந்த நிகழ்வு குறித்து அறிந்து கவலை தெரிவித்த நாம், முதலமைச்சர் கலைஞர் பார்வைக்குக் கொண்டு சென்று, பிரதமரை இதில் தலையிட்டு அவர்களை விடுதலை செய்திட வலியுறுத்துமாறு வேண்டினோம். இதுகுறித்து ‘முதலமைச்சர் கலைஞர் அவர்கள் அரசியல் நெறிமுறைக்கேற்ப, மலேசியத் தமிழர்கள் நடத்தப்பட்ட விதம்பற்றிய தனது நியாயமான கவலையை இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் அவர்களுக்கு முறைப்படி கடிதம் எழுதி, தனது கடமையை ஆற்றினார்.

இதுகுறித்து மலேசிய அமைச்சர் ஒருவர் முதலமைச்சர் கலைஞர் அவர்களை விமர்சித்திருந்தார். அதனைக் கண்டித்து 01.12.2007 அன்று சென்னையில் நடைபெற்ற திராவிடர் கழக தலைமைச் செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றினோம். அதில், “இதுபற்றி நாடாளுமன்ற இரு அவைகளிலும் மலேசியத் தமிழர்கள் உரிமையைப் பாதுகாக்க இந்திய மூத்த அரசியல் தலைவர்கள் தெரிவித்துள்ள கருத்துகள் மிக முக்கியமானவை. முதலமைச்சர் கலைஞர்மீது விமர்சனம் செய்த மலேசிய அமைச்சரின் நடவடிக்கைக்குக் கண்டனமும் தெரிவித்துள்ளனர். கட்சி வேறுபாடின்றி, கருத்துத் தெரிவித்துள்ள அனைத்துத் தலைவர்கள், வெளியுறவுத் துறை அமைச்சர், பிரதமர் ஆகியோரைப் பாராட்டுவதுடன். மலேசியத் தமிழர்களின் வாழ்வுரிமையைக் காக்க அனைத்து முயற்சிகளையும் மத்திய அரக எடுக்கவேண்டும் என்பதை இச்செயற்குழு வற்புறுத்துகிறது” என்று தெரிவித்திருந்தோம். மேலும் மலேசியத் தமிழர்கள் இந்துத்துவா, மதவாதம் ஆகியவற்றைப் பரப்பிவரும்ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகளின் கண்ணி வெடியில் சிக்காமல் தங்களது வாழ்வுரிமையைக் காக்க முயல்வது முக்கியம் என்பதையும் திராவிடர் கழக தலைமைச் செயற்குழு மலேசியத் தமிழர்களுக்குச் சுட்டிக்காட்டியது.

மேலும் ஒரு முக்கிய தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. குன்னூர் பாஸ்டியர் இன்ஸ்டிடியூட் 1807 இல் ஆங்கிலேயர்களால் தோற்றுவிக்கப்பட்ட ஒன்றாகும். இந்தியாவில் உள்ள இரண்டு நிறுவனங்களில் (ஒன்று புனேயில் உள்ளது) இது ஒன்றாகும். நீலகிரி மாவட்டத்தில் உள்ள மூன்று அரசுத் தொழில் நிறுவனங்களுள் இது முக்கியமானதாகும்.

இதில் 300 தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர் என்றால், அவர்களில் 120 பேர்தாழ்த்தப்பட்டோரும், மலைவாழ் மக்களுமாவர். பெண்கள் 50 பேர்கள்; மருத்துவர்கள் அய்ந்து பேர்.

இந்த நிறுவனம் ஏதோ தமிழ்நாட்டுக்குமட்டுமல்ல; தென் மாநிலங்களுக்கே உயிர் காக்கும்மருந்துகளைத் தயாரித்துக் கொடுக்கிறது.

கோடிக்கணக்கான ரூபாய் முதலீட்டில் நடைபெற்றுவரும் இந்த மருத்துவ நிறுவனம் இலாபகரமானதும் கூட!

இத்தகைய புகழ்வாய்ந்த நிறுவனத்தை நலிந்த நிறுவனமாக (Sick Unit) ஆக்கும் சூழ்ச்சி அண்மைக்காலமாக நடைபெற்று வந்ததுடன், இதற்கு மூடுவிழா செய்வது அல்லது வேறு இடத்திற்கு மாற்றுவது என்ற ஒரு திட்டம் இதன் பின்னணியில் இருப்பதாகத் தெரிந்தது.

T.T. (வில்வாத ஜன்னி தடுப்பு மருந்து) DPT (முத்தடுப்பு ஊசி), நாய்க்கடி தடுப்பூசி (ARV) ஆகியவையும் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. இளம்பிள்ளைவாதம் தடுப்பு மருந்தும் உற்பத்தி செய்யப்படுகிறது. ரூபெல்லா (Rubella) என்னும் பெண் குழந்தைகளைத் தாக்கும் நோயினைத் தடுக்கும் முயற்சிகளும் ஆய்வில் இருந்தன.

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு இங்கிருந்து இந்த நிறுவனத்திலிருந்துதான் மருந்துகள் அனுப்பப்படுகின்றன.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த – உயிர் காக்கும் மருந்துகனை உற்பத்தி செய்யும் இந்த நிறுவனத்தில் உற்பத்திப் பணிகள் நிறுத்தப்பட்டிருந்தன. அதனால் நாய்க்கடி தடுப்பூசி மருந்து தட்டுப்பாடு ஏற்படுமோ என்னும் நிலையும் ஏற்பட்டது.

இத்தகைய ஆபத்துகளிலிருந்து நாடு காப்பாற்றப்படவும், 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வாழ்வுரிமை காப் பாற்றப்படவும், இந்த நிறுவனம் காப்பாற்றப்பட வேண்டும் என்றும், எக்காரணத்தைக் கொண்டும் இந்நிறுவனத்தை இட மாற்றம் செய்யவோ அல்லது மூடிவிடவோ கூடாது என்பதை வலியுறுத்தியும் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டதுடன்,

10.12.2007 அன்று குன்னூரில் திராவிடர் கழகத் துணைப் பொதுச்செயலாளர் மானமிகு துரை. சந்திரசேகரன் தலைமையில் திராவிடர் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவது அறிவிக்கப்பட்டது. அதன்படி ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.

(நினைவுகள் நீளும்)