தென்னிந்தியாவில் சமூக மறுமலர்ச்சிக்கு வித்திட்ட மாநாடு செங்கல்பட்டு சுயமரியாதை இயக்க மாகாண மாநாடாகும்.
முதலாவது சுயமரியாதை மாநாடு தொடர்பான செய்திகளும் கட்டுரைகளும் ‘குடிஅரசு’ இதழில் தொடர்ந்து வெளிவந்தன.
மாநாட்டுக்கு 46 நாட்களுக்கு முன்பே 06.01.1929 நாளிட்ட ‘குடிஅரசு’ இதழில் மாநாடு குறித்து தலையங்கம் இடம் பெற்றது. “வாருங்கள்! வாருங்கள்! பதினாயிரக்கணக்கான மக்கள் கூடத் தகுந்த ஆடம்பரமான பலத்த ஏற்பாடுகள் இப்போதிலிருந்தே நடைபெற்று வருகின்றன” என்ற பெட்டிச் செய்தி, தோழர்களை உற்சாகமூட்டியது!
இதற்கு அடுத்த இதழான 13.01.1929 நாளிட்ட ‘குடிஅரசு’ இதழிலும் மாநாடு தொடர்பான தலையங்கம் காணப்பட்டது. “சுயமரியாதை இயக்கம் தோன்றி மூன்று வருடங்களுக்குப்பின் தமிழ் மாகாண சுயமரியாதை மாநாடு நடைபெற உள்ளது. சுமார் 25,000 பேர் கூடுவார்கள்; 10,000 ரூபாய் நிதி வசூலிக்கப்படும். உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் மாநாடு தொடர்பாக நடைபெற்று வரும் பிரச்சாரம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன; இது கூடிக் கலைகின்ற மாநாடு அல்ல; மாறாக மாநாட்டில் நம் எதிர்கால வேலைத் திட்டம் குறித்து விவாதித்து முடிவெடுக்கப்படும்; வாலிபர்களே, பெண்களே, தாழ்த்தப்பட்ட மக்களே, விதவைகளே! மாநாட்டிற்கு புறப்படத் தயாராகுங்கள்” என்ற அறிவிப்புகள் அந்தக் ‘குடிஅரசு’ இதழில் இடம் பெற்றன.
“பிப்ரவரி 2 அல்லது 3ஆவது வாரத்தில் சென்னை அடுத்த செங்கற்பட்டில் மாநாடு நடைபெறும். சென்னையில் இருந்து மாநாட்டுப் பந்தல் வரை 36 மைல் தொலைவு வரை வரவேற்பு ஊர்வலம் நடைபெறும். ஊர்வலத்தில் 6 யானைகள், குதிரைகள் அணிவகுத்து வரும்; மாநாட்டை ஒட்டி சங்கீத மாநாடும் நடைபெறும்; மைசூர், லாகூர், பம்பாய், ஆந்திரா, கல்கத்தா ஆகிய நகரங்களில் இருந்தும், மலேசியாவிலிருந்தும் தோழர்கள் மாநாட்டுக்குத் திரண்டு வருகிறார்கள்” என்னும் அறிவிப்புகளும் அந்த வார ‘குடிஅரசு’ இதழில் இடம் பெற்றன.
அதனைத் தொடர்ந்து வெளியான 20.1.1929 நாளிட்ட ‘குடிஅரசு’ இதழில் தியாகராயர் நகரில் பானகல் அரசர் மண்டபத்தில் மாநாடு நடைபெற உள்ளது; அஞ்சல் நிலையம், வங்கி, பூங்கா வாசகசாலை, மருத்துவமனை, சிற்றுண்டி நிலையம் ஆகியன மாநாட்டில் ஏற்படுத்தப்படும். மதுரையில் இருந்து 12 பெட்டிகள் கொண்ட தனி ரெயிலில் 750 தோழர்கள் புறப்பட்டு மாநாட்டிற்கு வருகிறார்கள். விருதுநகரில் இருந்து 50 தோழர்கள் தனி வாகனத்தில் (special tourist car) வருகிறார்கள்; திருவனந்தபுரத்தில் இருந்து 100 தோழர்கள் விரைவு ரெயில் மூலம் வருகிறார்கள். மாநாடு பிப்ரவரி 17, 18 ஆகிய நாட்களில் நடைபெறும் என்ற அறிவிப்புகள் வெளியானதைக் கண்டு தோழர்கள் குதூகலம் அடைந்தார்கள்.
இதனைத் தொடர்ந்து வெளிவந்த 10.02.1929 ‘குடிஅரசு’ இதழில் “செங்கற்பட்டு ஜில்லாவும் சுயமரியாதை மாநாடும்” என்ற தலைப்பில் கைவல்யம் எழுதிய கட்டுரையும் “மாகாண சுயமரியாதை மாநாடு” என்ற ‘ஜஸ்டிஸ்’ ஏட்டின் ஆங்கில மொழி தலையங்கத்தின் தமிழ் மொழிபெயர்ப்பும் இடம் பெற்றன.
மாநாடு நடத்துவோர் ஆள் வலியும் தோள் வலியும் பொருள் வலியும் நிரம்பப் பெற்றவர்கள். எனவே, மாநாடு மிகச் சிறப்பாக அமையும். சுயமரியாதைக் கொடியைச் சுற்றி திரளாக வந்து ஆரவாரம் செய்யுங்கள். ஆனந்த முழக்கமிடுங்கள், பிரதிநிதிகளுக்கு 2000 டிக்கெட்டுகள் மட்டுமே உள்ளன. அதனைப் பெற முந்துங்கள். கிடைக்கவில்லையே என்று பின்னர் வருந்தாதீர்கள்” என்ற தகவலும் அந்த வார இதழில் வெளிவந்தது.
மாநாட்டு வரவேற்புக் குழுத் தலைவர் எம்.கே.ரெட்டியார், சுயமரியாதைக் கொடி ஏற்றுபவர் பி.டி.ராஜன், மாநாட்டுத் திறப்பாளர் முதலமைச்சர் டாக்டர். சுப்பராயன், பானகல் அரசர் படம் திறப்பாளர் எம்.கிருஷ்ணன் நாயர், மாநாட்டுத் தலைவர் W.P.A.சவுந்தரபாண்டியன், தொண்டர் படைத் தலைவர் சுரேந்திரநாத் ஆர்யா என மாநாட்டு நிகழ்ச்சி நிரலும் “குடிஅரசு” இதழில் வெளியாயின.
மாநாடு நடைபெறும் 17.02.1929 நாளிட்ட ‘குடிஅரசு’ இதழிலும் மாநாடு தொடர்பான தலையங்கம் இடம் பெற்றிருந்தது. “சுயமரியாதை மாநாடு இன்று” என்ற தலைப்பில், நம் மீது சுமத்தப்படுகின்ற அவதூறுப் பிரச்சாரம், பார்ப்பனத் துவேஷம் ஆகியவைகள் அடிக்க அடிக்க பந்து எழுவது போல நம்மை உற்சாகப்படுத்தவே பயன்படும் என விளக்கியது.
அதனைத் தொடர்ந்து 24.02.1929 அன்று வெளியான “குடிஅரசு” இதழில்,
தென்னிந்தியா இதுவரை கண்டிராத காட்சி; 36 மைல் நீள மோட்டார் பேரணி; மகாராஜாக்கள், பாமரர்கள், பண்டிதர்கள், அதிகாரிகள், தாழ்த்தப்பட்ட மக்கள், பெண்கள் எனச் சகல தரப்பு மக்களும் திரண்டு வந்தார்கள். மஞ்சள் ஆறு ஓடுவதைப் போல மாநாட்டுத் திடல் மலர்க் குவியலால் நிறைந்திருந்தன. பல்லாயிரக்கணக்கான கொடிகள், தோரணங்கள் அலங்கார வளைவுகள், ஆயிரக்கணக்கான விளக்குகள், ஆங்காங்கே இடம் பெற்ற லாந்தர் விளக்குகள், நான்கைந்து இடங்களில் ஒலிப்பெருக்கிகள் என மாநாட்டுக் காட்சிகளைக் “குடிஅரசு” காவியமாய்த் தீட்டிப் பதிவு செய்தது.
செம்மண் தரையில் தென்னைமரங்கள் நட்டு வைத்திருந்தார்கள். அது பட்டாளத்துச் சிப்பாய் கம்பீரமாய் நிற்பது போல் காட்சி அளித்தது. மாநாட்டில் 500 நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. பெண்கள், பிரதிநிதிகள், தலைவர்கள் வரிசையாய் அமர்ந்திருந்தது – அரண்மனையில் நடைபெற்று வரும் முடிசூட்டு விழா போல் இருந்தது. 4 அடி உயரத்தில் “D” வடிவத்தில் மேடை கம்பீரமாய் அமைக்கப்பட்டிருந்தது என்று ‘குடிஅரசு’ இதழ் மாநாட்டை வர்ணித்து எழுதியது.
17.02.1929 அன்று காலை 8 மணிக்கு சென்னை தியாகராயர் நகர் “ஜஸ்டிஸ்” அலுவலகம் அருகிலிருந்து ஊர்வலம் புறப்பட்டது. கிராஸ் ரோடு அருகில் ஜில்லா போர்டு சிப்பந்திகள் ஊர்வலத்தை வரவேற்றார்கள். ஆலந்தூர், பல்லாவரம், இரும்புலியூர், வண்டலூர், கூடுவாஞ்சேரி, சிங்கப்பெருமாள் கோவில், தம்பிரான்வளைவு, மேலமையூர் என வழி நெடுக ஊர்வலத்தினர்க்கு வரவேற்பளிக்கப்பட்டது தாரை, தப்பட்டை, பாண்டு வாத்தியம், கொம்பு முழங்க எழுச்சி நடைபோட்டு வந்த ஊர்வலம் 12 மணிக்கு அரண்மனை போன்ற மாநாட்டுப் பந்தலை அடைந்தது.
தியாகராயர், நாயர், தந்தை பெரியார் படங்களுடன் கதிர்பரப்பும் உதய சூரியன் காட்சி தரும் சுயமரியாதைக் கொடியை பி.டி.ராஜன் ஏற்றினார். கண்காட்சியை அமைச்சர் முத்தையா முதலியார் திறந்து வைத்தார். பானகல் அரசர் படத்தைச் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் திறந்து வைத்தார். தந்தை பெரியார் அவர்களின் நன்றியுரையுடன் பகல் உணவு இடைவேளைக்காக மாநாடு நிறைவடைந்தது.
பிற்பகல் 4.45 மணிக்கு செங்கல்பட்டு ஜில்லா போர்டு தலைவர் கிருஷ்ணசாமி அவர்களின் வரவேற்புரையுடன் மாநாடு மீண்டும் தொடர்ந்தது. சென்னை மாகாண பிரீமியர் என அழைக்கப்பட்ட முதலமைச்சர் உள்ளாட்சி, கல்வி, சட்டம் ஆகிய துறைகளின் அமைச்சர்கள், மேலவை உறுப்பினர், இந்தோனேசிய நாட்டின் தூதர், மத்திய அரசின் போக்குவரத்துத்துறை அமைச்சர், மகாராஷ்டிர மாநில ஆளுநர், மக்களவை மாநிலங்கள் அவை நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதலான பொறுப்புகளை அலங்கரித்த டாக்டர் சுப்பராயன் அவர்கள் மாநாட்டைத் திறந்து வைத்து உரையாற்றினார். மாநாட்டுத் தலைவர் W.P.A. சவுந்தரபாண்டியனார் உரையாற்றிய பின்னர், அமைச்சர் சேதுரத்தினம் உரையாற்றினார். இதனைத் தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு செயற்குழுக் கூட்டமும், அதன் பின்னர் நிறைவு நிகழ்ச்சியாக ‘சந்திர – கமலா அல்லது சுயமரியாதையின் வெற்றி’ என்ற நாடகமும் நடைபெற்றது.
18.02.1929 காலை 8.30 மணிக்கு மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் துவங்கின. இசை நிகழ்ச்சியைத் தொடர்ந்து. மகளிர் விடுதலை, ஜாதி ஒழிப்பு, சமூக நீதி முதலான நம் கொள்கைகளைப் பறைசாற்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. திருவண்ணாமலையில் இருந்து, வந்திருந்த ஏழு வயதுச் சிறுமி லலிதா அப்போது அனைவரும் பாராட்டத்தக்க வகையில் உரையாற்றினார்!
அதனைத் தொடர்ந்து சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்களைத் தலைவராகக் கொண்டு, வாலிபர் மாநாடு தொடங்கியது. “தலைவரின் பெருமைகளை இங்கே பேசுவது என்பது, பகலில் சூரியனைக் காட்ட, தீவட்டி பிடிப்பதைப் போன்றது; உயர்ந்த குணங்களைக் கொண்டவர்; இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய பெருமைக்குரியவர் ஏ.டி.பன்னீர்செல்வம் என்று தந்தை பெரியார் தலைவரை முன்மொழிந்து அப்போது உரையாற்றினார்.
சுயமரியாதை இயக்கத்தின் தலைவராக சவுந்தரபாண்டியன், துணைத் தலைவர்களாக ஏ.டி.பன்னீர்செல்வம், பெரியார்; செயலாளராக எஸ்.இராமநாதன் எம்.ஏ.பி.எல்., பொருளாளராக காரைக்குடி வை.சு.சண்முகம் ஆகியோர் மாநாட்டில் அறிவிக்கப்பட்டார்கள். இவ்வளவு பணிகளையும் தந்தை பெரியார் அவர்களே முன்னின்று செய்தாலும் கூட, துணைத் தலைவர்களில் ஒருவராக தன்னைப் பின்னுக்குத்தள்ளி மற்றவர்களை முன்நிறுத்தும் தந்தை பெரியாரின் ”தலைமைப்பண்பு” நம்மை வியக்கச் செய்கிறது.
92 பக்கங்களில் 2 வண்ணங்களில் 20,000 பிரதிகள் அச்சடிக்கப்பட்ட மாநாட்டு மலர் ஒரு ரூபாய் அடக்க விலை என்றாலும், பிரதிநிதிகளுக்கு 8 அணா விலையில் விற்பனை செய்யப்பட்டது செங்கற்பட்டு மாநாட்டையும், மதுரையில் நடைபெற்ற பார்ப்பனர் அல்லாதார் மாநாட்டையும் சிறப்பாக நடத்தப் பாடுபட்ட கருப்பையாவுக்கு பெரியார் தங்க மோதிரமும் தங்கச் சங்கிலியும் அணிவித்துப் பாராட்டினார். உண்டியல் வசூல் மூலம் 3000 ரூபாய் வசூலானதாக அறிவிக்கப்பட்டது. மாநாடு முழுவெற்றி அடைந்துவிட்ட மகிழ்ச்சியாலும் திருப்தியாலும் என்னாலும் பேச முடியவில்லை என்று பெரியார் நிறைவாகப் பேசினார். அன்னை நாகம்மையார் உள்ளிட்ட மாநாடு சிறக்கப் பாடுபட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்து ஏ.ஆர்.இராமசாமி உரையாற்றினார். அடுத்த மாநாடு இரண்டாவது சுயமரியாதை மாநாடாக ஈரோட்டில் நடைபெறும் என
ஈ.வெ.கிருஷ்ணசாமி அறிவித்தார். மாநாடு சிறக்கப் பாடுபட்டவர்களுக்கு அய்யாசாமி வள்ளலார் வீட்டில் விருந்தளித்து, பாராட்டும் நன்றியும் தெரிவிக்கப்பட்டது.
மாநாட்டு நிகழ்வுகள், மாநாட்டில் தலைவர்கள் ஆற்றிய உரைகள், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் ஆகிய அனைத்தும் 24.02.1929, 03.03.1929 ஆகிய நாளிட்ட ‘குடிஅரசு’ இதழ்களில் முழுமையாக இடம் பெற்றுள்ளன.
95 ஆண்டுகளுக்கு முன்பு செங்கற்பட்டில் நடைபெற்ற முதலாவது சுயமரியாதை இயக்க மாநாட்டு நிகழ்வுகளை ‘அரிமா நோக்கில்’ சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு
விழாவில் கலந்துகொண்டதை நினைவு கூர்ந்திடும் போது, மகிழ்ச்சியிலும் பெருமிதத்திலும் அவை நம்மைத் திளைக்க வைக்கின்றன! ©





