Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

உறுதுணையாக இருப்போம்!

மக்களுக்கு அறிவை ஏற்படுத்தவேண்டும் என்று நினைப்பவர்கள் போலவே மக்கள் அறியாமையிலேயே இருக்கவேண்டும் என்றும், அவர்கள் விழிப்புணர்வு பெற்று விடக்கூடாது என்றும் நினைப்பவர்கள் காலந்தோறும் இருக்கிறார்கள். அதிலும் மதம் சார்ந்து இருப்பவர்களுக்கு, உண்மையை எடுத்துரைக்கும் நூல்கள் மீது ஒவ்வாமை – வெறுப்பு இருக்கிறது. அவற்றை அழிக்க வேண்டும் என்னும் வெறியும் இருக்கிறது.

உலகம் மதவாதிகள் சொல்வதுபோல தட்டையாக இல்லை. பூமியைச் சூரியன் சுற்றவில்லை. சூரியனைப் பூமிதான் சுற்றுகிறது என்று ஆராய்ந்து சொன்ன அறிவியல் அறிஞர் புரூனோ, அவர் எழுதிய நூல்களோடு சேர்த்துவைத்து எரிக்கப்பட்டார்.

தான் பிறந்த ஆரிய இனமே பெருமை மிகு இனம் என்று கொக்கரித்த ஹிட்லர், நாஜி இயக்கத்தை நிறுவி யூதர்களுக்கு எதிராக மிகப்பெரும் கொடுமைகளை இழைத்தான்.கொலைகளைச் செய்ய வதைமுகாம்களை அமைத்து, கொத்துக் கொத்தாக மனிதர்களைக் கொன்று குவித்தான். அதோடு யூதர்களின் அறிவுச்சொத்துகளையும் அழிக்கவேண்டும் என்று நினைத்தான். அதற்கு நாஜி மாணவர் அமைப்பை ஏவினான். மே 1933இல் ஜெர்மனி நாடு முழுவதிலும் 20 பல்கலைக்கழகங்கள் மற்றும் நகரங்களில் புத்தக எரிப்புகளை நடத்தி இருக்கின்றனர். எரிக்கப்பட்ட புத்தகங்களில் யூத எழுத்தாளர்களின் புத்தகங்கள், போரை விமர்சித்து எழுதப்பட்ட புத்தகங்கள், சோசலிச, கம்யூனிசம் சார்ந்த புத்தகங்கள்,இடதுசாரி அரசியலைப் புகழ்ந்து எழுதப்பட்ட புத்தகங்கள் என்பவை அடங்கும் என்று குறிப்பிடுகிறார்கள். நாஜி மாணவர்கள் இந்தப் புத்தகங்களை எரித்தபோது, இவை ஜெர்மன் அல்லாதவை என்று முத்திரை குத்தி எரித்திருக்கிறார்கள்.

நூல்களை மட்டுமல்ல, நூல்களின் களஞ்சிய மாகத் திகழும் நூலகங்களை எரித்தவர்களும், அழித்தவர்களும் வரலாறு முழுக்க இருக்கிறார்கள். முதன்முதலில் அழிக்கப்பட்ட நூலகமாக ஜிம்ரி-லிம் நூலகம் குறிப்பிடப்படுகிறது. பண்டைய மெசபடோமியா நாட்டில் இருந்த இந்த நூலகம், கி.மு.1761இல் அழிக்கப்பட்டு இருக்கிறது.பழைய பாபிலோனியப் பேரரசின் ஹமுராபி என்னும் மன்னன் முழு நகரத்தையும் அழித்தபோது அங்கு இருந்த நூலகமும் முழுமையாக எரிக்கப்பட்டு அழிக்கப்பட்டு இருக்கிறது.

பண்டைய காலத்தில் எகிப்தில் இருந்த நகரம் அலெக்ஸாண்டிரியா. இதில் ஒரு நூலகம் மிகப்பெரிய அளவில் இருந்திருக்கிறது. பலரும் பயன்படுத்தும் நூலகமாக, அறிஞர்களை, படித்தவர்களை உருவாக்கும் நூலகமாக இருந்திருக்கிறது, பல படைப்பாளிகள் கூடும் இடமாகவும் பல படைப்புகள் வெளிவரக் காரணமாகவும் இந்த நூலகம் இருந்திருக்கிறது.இந்த நூலகத்தை மீண்டும் மீண்டும் எரித்திருக்கிறார்கள். கி.பி.640ஆம் ஆண்டில் மீண்டும் இந்த நூலகம் படையெடுப்பால் எரிக்கப்பட்டிருக்கிறது. இந்த நூலகம் ஆறுமாத காலம் எரிந்து சாம்பலானது என்று வரலாற்றில் குறிப்பிடுகிறார்கள். புத்த சமயத்தின் அறிவு ஊற்றாக இருந்த நாளந்தா பல்கலைக்கழகம் படையெடுப்பால் எரிக்கப்பட்டிருக்கிறது. நூலகங்கள் எரிக்கப்பட்ட வரலாற்றைப் பார்த்தால் பெரும்பாலும் கிறித்துவர்கள் நிறுவிய நூலகங்களை இஸ்லாமியர்கள் எரித்து இருக்கிறார்கள். இஸ்லாமியர்களின் நூலகங்களை கிறித்துவர்கள் எரித்து இருக்கிறார்கள். நூற்றுக்கணக்கான நூலகங்கள் இவ்வாறு மாறி மாறி எரிக்கப்பட்டிருக்கின்றன, அழிக்கப்பட்டிருக்கின்றன.

1981ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் இருந்த யாழ் நூலகம் எரிக்கப்பட்ட கொடுமையை நாம் அனைவரும் அறிவோம்.சிங்கள அரசால் திட்டமிடப்பட்டு, எரிக்கப்பட்ட யாழ் நூலகத்தில் இருந்த பழமையான ஓலைச்சுவடிகள், அரிய நூல்கள் பலவும் எரியூட்டப்பட்டன. ஓர் இனத்திற்கு எதிராக வெறுப்பை விதைப்பவர்கள் எப்போதும் நூல்களை, நூலகங்களை எரிப்பதைத் தங்கள் வழக்கமாக வைத்திருந்திருக்கின்றனர்.

இப்போதும் கூட சனாதானவாதிகள் தங்கள் மதத்திற்கு எதிரான அறிவுசார் நூல்கள் நடமாடக்கூடாது என்று நினைக்கிறார்கள்.அதற்குத் தடை விதிக்கிறார்கள்.

தந்தை பெரியார் அவர்கள் எதிர்க் கருத்துகளுக்கும் மதிப்பு கொடுத்தவர்.மாற்றார்களின் புத்தகங்களைப் படித்துவிட்டு அதில் இருந்து கேள்விகளை எழுப்பியவர்.இன்றைக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் புத்தகங்களின் மேல் பெரும் விருப்பம் உள்ளவர். நாள்தோறும் நல்ல நல்ல நூல்களை, பல்துறை சார்ந்த நூல்களை விரும்பித் தேடித் தேடிப் படிப்பவர். தான் படித்த நல்ல புத்தகங்களை எல்லாம், ஆங்கிலத்தில், தமிழில் இருப்பதையெல்லாம் உள்வாங்கி, சுவைபட அதனைப் பற்றி தனது ‘வாழ்வியல் சிந்தனைகள்’ பகுதியில் குறிப்பிட்டு பலரும் நல்ல புத்தகங்களைப் படிப்பதற்கு தூண்டுபவர், ‘நடமாடும் நூலகமாய்’ நமக்கெல்லாம் வழிகாட்டுபவர்.

அறியாமை இருட்டில் இருப்பவர்களுக்கு பெரும் விளக்காய் ஒளி காட்டுபவை புத்தகங்களே.’பகவத்  கீதை’யைப் பற்றி பல நூறு புத்தகங்கள் ஆஹோ,ஓஹோ என்று புகழும்போது, அதன் உண்மைத் தன்மையை வெளிச்சமிட்டுக் காட்டும் அய்யா ஆசிரியர் கி.வீரமணி எழுதிய ‘கீதையின் மறுபக்கம்’ போன்ற புத்தகங்களை ஒரு நம்பிக்கையாளர் வாசிக்கும்போது அவர் மனதில் எழும் பல நூறு கேள்விகள் அவரின் வாழ்க்கையைப் புதிய பாதைக்கு அழைத்துச் செல்கிறது. உண்மையைத் தேடும் மனதைத் தருகிறது. ‘எவர் சொன்னாலும், எதைச் சொன்னாலும் ஆராய வேண்டும்’ என்னும் விழிப்பைத் தருகிறது.

சமூக  நீதிக்கான சரித்திர நாயகர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் அமைந்திருக்கும் திராவிட மாடல் அரசு, பொது நூலகங்களுக்குக் கொடுக்கும்
முக்கியத்துவம் நமக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. கலைஞர் நூற்றாண்டு நூலகம் போல இன்னும் மூன்று நூலகங்கள் கோயம்புத்தூர், திருச்சி, திருநெல்வேலி போன்ற நகரங்களில் அமைய இருக்கின்றன. பெரிய நூலகங்கள் போல சின்னச்சின்ன நூலகங்கள் சின்னச்சின்ன ஊர்களில் கூட இந்த அரசால் ஏற்படுத்தப்படுகின்றன. பொது நூலக இயக்ககம் ஒரு தனிப்பிரிவாக இயங்குகிறது. இன்னும் இந்தத் துறையில் இருக்கும் பணியாளர்கள் குறைபாடு போன்றவை நீக்கப்பட்டு இன்னும் தீவிரமாக இயங்கவேண்டும் என்பது நம்மைப் போன்றவர்களின் எண்ணமாகும்.

பெரிய நூலகங்களில் மட்டுமல்ல, சின்னச் சின்ன கிளை நூலகங்களிலும் வாசகர் கூட்டங்கள் நடத்தப்படவேண்டும். பொது மக்களின், வாசகர்களின் பங்களிப்பு ஒவ்வொருஊர் நூலகத்திலும் இருக்கவேண்டும். அதற்கு ‘புரவலர்’ என்ற ஒரு திட்டம் ஏற்கனவே இருக்கிறது.பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் பொது நூலகத்துறை,மாணவ மாணவிகளைப் படைப்பாளர்களாக மாற்றுவதற்கான பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.மாணவ வயதிலேயே ஆங்கிலத்தில்,தமிழில் படைக்கும் படைப்பாளர்களை அடையாளம் கண்டு,அவர்களையும், அவர்கள் பயிலும் பள்ளியையும் இந்தத்துறை பாராட்டி மகிழ்வது மகிழ்ச்சி அளிக்கிறது.

எழுத்தாளர்களை மதிக்கும், போற்றும் சமூகம் எப்போதும் முன்னேறுகிறது.அந்தச் சமூகம் படைப்பாளிகள் மூலமாக  எப்போதும் புதிய, புதிய வழிகாட்டுதலைப் பெறுகிறது. நாமும் நம்மைச்சுற்றி இருக்கும் பொது நூலகங்களுக்குச் செல்லுதல், அங்கு நடைபெறும் நிகழ்வுகளுக்கு உறுதுணையாக இருத்தல், தொடர்ந்து வாசிப்பதன் மூலமாக நம்மைப் புதுப்பித்துக்கொள்வதோடு மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருத்தல் என்பதன் மூலமாக பொது நூலகங்களுக்கு உறுதுணையாக இருப்போம்.