
1.கே: : கரூரில் நிகழ்ந்த உயிரிழப்புக்கு விஜய் 6 மணிநேரம் காலம் தாழ்த்தி வந்தமையும், திருச்சியிலிருந்து 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை உடன் வரச் செய்ததும், வழிநெடுக நின்ற மக்களுக்கு வாகனத்தின் மீது நின்று காட்சி தராமையும், கூட்டத்தினருக்கு தண்ணீர் அளிக்காமையும், தன் வாகனத்தைக் கூட்டத்திற்குள் கொண்டு சென்றமையும் காரணமாய் இருக்க, அரசையும், காவல் துறையையும் காரணமாய்க் கூறுவது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் அல்லவா?
– ம.கண்மணி, திருவாரூர்
ப : உங்களுக்குப் புரிந்தது. இளைஞர்களுக்கு – ரசிகர்களுக்குப் புரிதல் வேண்டாமா? புரிய வைக்க உங்கள் பங்களிப்பு என்ன?
2.கே: சட்டங்கள், அரசாணைகள் இயற்றப்பட்டாலும், அனைத்து ஜாதியினரும் இன்னும் அர்ச்சகராக முடியவில்லை என்று உயர்நீதிமன்ற மேனாள் நீதியரசர் அரிபரந்தாமன் அவர்கள் கூறியுள்ளது பற்றித் தங்கள் கருத்து என்ன?
– வ.சித்தன், மதுரை
ப : நடைமுறை காலதாமதங்களையும், இப்பிரச்சினையை அக்கறையோடு அணுகத் தவறிடும் நிலையை, சுட்டிக்காட்டத் தகுதியுள்ளவர் சுட்டிக் காட்டுகிறார்.
இதற்குரிய பரிகாரங்களையும், அனைத்து முயற்சிகளையும், நாம் முன்னெடுத்துக் கடமையாற்றுவோம்!
3.கே : பக்கத்து வீட்டில் தனிமையில் இருந்த 6 வயதுச் சிறுமியை வன்புணர்வு செய்து கொன்று, எரித்ததோடு அல்லாமல், தட்டிக்கேட்ட தாயையும் கொன்ற போரூரைச் சேர்ந்த வாலிபனுக்கு உயர்நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை உச்சநீதிமன்றம் போதிய ஆதாரம் இல்லை என்று ரத்து செய்தது அப்பட்டமான அநீதியல்லவா? அரசு மேல்முறையீடு செய்ய வேண்டு மல்லவா?
– தெ.சந்திரன், வேலூர்
ப : நிச்சயம் மேல்முறையீடு செய்து, வெறும் சட்டத் தீர்ப்பை – நியாயத் தீர்ப்பாக மக்களுக்குத் தருவது அரசின் அவசரக் கடமையாகும். மேல்முறையீடுதான் மக்களின் நம்பிக்கையைப் பெருக்குவதாக அமைவதற்கு ஒரே வழி!

4.கே : தானே முதலமைச்சர் என்ற முடிவில் இருக்கும் விஜய் கட்சியுடன் அ.தி.மு.க. கூட்டணி என்று ஊடகங்கள் கட்டமைக்கும் செய்தி நகைப்பிற்குரியதல்லவா? பி.ஜே.பி.யை விலக்காமல் அதைப் பற்றிப் பேசுவதே பொருளற்றதல்லவா?
– அ.தமிழ்மணி, திண்டிவனம்
ப : உங்களின் கேள்வியிலேயே பதிலையும் இணைத்துள்ளீர்களே – பலே! பலே! பாராட்டுகள்!
5.கே : தன்னுடைய பிரச்சார நிகழ்விலே 41 பேர் மரணமடைந்த நிலையில், அதைப் பற்றிச் சிறிதும் கவலையும் பொறுப்பும் இன்றிச் சென்னைக்குப் பறந்தவர் மக்களைக் காப்பேன் என்பது மோசடியல்லவா?
– த.ஆனந்தன், நாகர்கோவில்
ப : மேலே உள்ள பதிலே – இதற்கும்!

6.கே : சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா, சரித்திரச் சாதனை நிகழ்வாக நடந்தேறிய நிலையில், முதலமைச்சரின் பேச்சும், செயலும் முத்திரை பதித்த மாண்பு கண்டு நீங்கள் நெகிழ்ந்த தருணம் எப்படி?
– வா.மணிமேகலை, காஞ்சி
ப : வாழ்வில் நாம் பெற்ற அரும்பேறு ஒவ்வொரு கருஞ்சட்டையையும், கழகக் கடமை வீரர்களையும் சந்தித்த சுயமரியாதை வீரர்களையும் மகிழ்ச்சி – அடையச் செய்த தருணம். இப்படி நம்மை உற்சாகப்படுத்தி மேலும் உழைக்க ஊக்க மாத்திரை தந்து உவகையைத் தந்தது!
7.கே : உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மீது செருப்பை வீசிய சனாதன வெறிகொண்ட குற்றவாளி, தன் செயல் கடவுள் கட்டளைப்படி செய்யப்பட்டது என்று கூறுவது மன்னிக்கப்படலாமா? தண்டிக்கப்பட வேண்டியதல்லவா?
– க.வெற்றிவேல், வேளச்சேரி
ப : கட்டாயம் தண்டிக்கப்பட வேண்டும். கண்டிக்கப்பட வேண்டியது – அவரைத் தூண்டிய சனாதன வெறியும், அவரது ஆணவத் திமிரும்.
8.கே : பீகார் தேர்தலில் இந்தியா கூட்டணியை வலுப்படுத்த, தாங்களும், முதலமைச்சரும் நேரில் செல்வீர்களா?
– ச.ஏழுமலை, வந்தவாசி
ப : முதலமைச்சர் செல்லக்கூடும். தேவையின்றி நமக்கு எதற்கு? களம் காணாமல் எழுத்துப் பணி, கருத்துப் பணிகளில் உதவுவோம். வாய்ப்பு எப்போதும் உண்டு.
9.கே : துணை வேந்தர்களை நியமிக்க முதலமைச்சர் நடவடிக்கை மேற்கொள்ள மேனாள் துணைவேந்தர் பாலகுருசாமி கடிதம் எழுதியுள்ளதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
– ம.மாசிலாமணி, திண்டுக்கல்
ப : பரிதாபத்துக்குரிய நண்பர் – பாலகுருசாமி அவர்கள் எதை எதிர்பார்க்கிறார் என்பது நமக்குப் புரியவில்லை! ©





