சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநாடு 4.10.2025 அன்று காலை செங்கை மறைமலைநகரில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் மிகுந்த எழுச்சியுடன் தொடங்கி நடைபெற்றது.
செங்கை மறைமலை நகருக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு தமிழ்நாடு முழுவதும் இருந்து வந்திருந்த கழகத் தோழர் – தோழியர்கள் பெருந்திரளாகக் கூடி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கழகக் கொடி ஏற்றினார் தமிழர் தலைவர்
இதனைத் தொடர்ந்து “பெரியார் சமூகக் காப்பு அணி”யின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட கழகத் தலைவர், திராவிடர் கழகக் கொடியை ஏற்றி வைத்தார்.
முன்னதாக காலை 8.30 மணியளவில் மாநாட்டுத் தொடக்க நிகழ்வாக ஆழ்வார் பேலஸ் – பெரியார் சுயமரியாதை இயக்க நூற்றாண்டுத் திடலில் சுயமரியாதை முழக்கம் – கலை நிகிழ்ச்சிகள் நடைபெற்றன.
அதைத் தொடர்ந்து அங்கு பட்டுக்கோட்டை அஞ்சாநெஞ்சன் அழகிரிசாமி நினைவுப் பந்தலில் அமைக்கப் பட்டிருந்த “சுயமரியாதை இயக்கத்தின் சமூகப் புரட்சி” வரலாற்றுக் கண்காட்சியை தமிழ்நாடு அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டுத் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்கள் திறந்து வைத்துச் சிறப்பித்தார்.
இராசகிரி கோ.தங்கராசு – அ.கோ.கோபால் சாமி நினைவு மேடையில் தொடங்கிய மாநாட்டு நிகழ்வுக்கு வந்திருந்தவர்களை வரவேற்று மாநாட்டு வரவேற்புக் குழுத் தலைவர், தாம்பரம் மாவட்ட கழகத் தலைவர் ப.முத்தையன் உரையாற்றினார்.
திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் மாநாட்டின் தலைவரை முன்மொழிந்தார். திராவிடர் கழக வழக்குரைஞரணித் தலைவர் த.வீரசேகரன், வடசென்னை மாவட்டக் கழகத் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், தென் சென்னை மாவட்ட கழகத் தலைவர் இரா.வில்வநாதன் ஆகியோர் தலைவரை வழி மொழிந்து உரையாற்றினர்.
இம்மாநாட்டிற்கு திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி (விசிக), திராவிடர் கழக மகளிரணி மாநிலச் செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் பனையூர் பாபு (விசிக), திராவிடர் கழகத் தொழிலாளரணி மாநிலச் செயலாளர் மு.சேகர், புதுவை மாநில திராவிடர் கழகத் தலைவர் சிவ.வீரமணி, திராவிட விவசாயத் தொழிலாளரணி மாநிலச் செயலாளர் வீ.மோகன், தகவல் தொழில்நுட்பக் குழு மாநில ஒருங்கி ணைப்பாளர் வி.சி.வில்வம், கருநாடக மாநில திராவிடர் கழக செயலாளர் இரா.முல்லைக்கோ, பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வன், தாம்பரம் மாவட்ட இளைஞரணித் தலைவர் அ.இர.சிவசாமி, பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் செந்தில்குமாரி, திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தே.செ.கோபால், மதுரை வே.செல்வம், ஈரோடு த.சண்முகம், தே.எடிசன்ராஜா, இராஜ பாளையம் இல.திருப்பதி, ஆண்டிமடம் க.சிந்தனைச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சுயமரியாதைச் சுடரொளிகள் படத்திறப்பு
பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறு வனத்தின் தலைவர் பொத்தனூர் க.சண்முகம் தலைமையில் சுயமரியாதைச் சுடரொளிகளின் படத்திறப்பு நிகழ்வு நடைபெற்றது. பின்னர் மூத்த பெரியார் பெருந் தொண்டர்களுக்குப் பாராட்டு நிகழ்வு நடைபெற்றது.
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டை திராவிட முன்னேற்றக் கழக துணைப் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா அவர்கள் திறந்து வைத்து உரையாற்றினார்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் தோழர் மு.வீரபாண்டியன் அவர்கள், தந்தை பெரியார் 147ஆம் ஆண்டு பிறந்த நாள் ‘விடுதலை’ மலரை வெளியிட்டு உரை யாற்றினார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலை வர் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித் தமிழர் முனைவர் தொல். திருமாவளவன், ‘உலகத் தலைவர் தந்தை பெரியார் வாழ்க்கை வரலாறு’ (தொகுதி-12) நூலை வெளியிட்டு உரையாற்றினார். ம.தி.மு.க. அமைப்புச் செயலாளர் வந்தியத்தேவன் மற்றும் மனித நேய மக்கள் கட்சித் தலைவர் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வாழ்த்துரை வழங்கினார்.
நிறைவாக திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மாநாட்டின் முற்பகல் தலைமைப் பேருரையாற்றினார். செங்கல்பட்டு மாவட்டச் செயலாளர் ம.நரசிம்மன் நன்றியுரை கூற, வி.கே.ஆர். பெரியார் செல்வி இணைப்புரை வழங்கினார்.
தீர்மான அரங்கம்
இதைத் தொடர்ந்து தீர்மான அரங்கம் நடைபெற்றது. திராவிடர் கழகப் பொருளாளர் வீ.குமரேசன் தலைமையுரையாற்ற, திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் ஒருங்கிணைப்புரை வழங்க, முக்கிய தீர்மானங்களை தமிழர் தலைவர் முன் மொழிந்தார். மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநாட்டின் தீர்மானங்களை முன் மொழிந்தனர். இத்துடன் முற்பகல் நிகழ்வு நிறைவடைந்தது.
பேரணி
மாநாட்டில் திராவிட இன எழுச்சிப் பேரணி மாலை 5.00 மணியளவில் பாரதியார் சாலையில் எழுச்சியுடன் தொடங்கியது.
மாநில இளைஞரணிச் செயலாளர் நாத்திக.பொன்முடி, தலைமை தாங்கினார்.
திருவள்ளூர் மா.மணி, வே.பாண்டு, எண்ணூர் வெ.மு.மோகன், ஆவடி கார்வேந்தன், புழல் த.ஆனந்தன், அரக்கோணம் சு.லோகநாதன், செங்கை பூ.சுந்தரம், மு.அருண்குமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திராவிட மாணவர் கழக மாநிலச் செயலாளர் இரா.செந்தூரபாண்டியன். கொடியசைத்துத் தொடக்கி வைத்தார்.
கலை நிகழ்ச்சிகள், வீர விளையாட்டுகளை பகுத்தறிவு கலைத்துறை மாநிலத் தலைவர் கலைமாமணி மு.கலைவாணன் தொடங்கி வைத்தார்.
கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், இன எழுச்சிப் பேரணியைப் பார்வையிட்டு மகிழ்ந்தார்.
மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தஞ்சை இரா.ஜெயக்குமார், உரத்தநாடு இரா. குணசேகரன், கழகத் துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், தலைமைச் செயற்குழு உறுப்பினர் வே. செல்வம்,மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சோ.சுரேஷ் ஆகியோர் நிகழ்வினை ஒருங்கிணைத்தனர்
திரும்பும் இடமெல்லாம் கருங்கடல் போல் காட்சி அளித்தது, கழகத் தோழர்களின் அணிவகுப்பு, பெரியார் பிஞ்சுகள், மாணவர் கழகம், இளைஞரணி, மகளிர் அணி, மகளிர் பாசறை, தந்தை பெரியார் சமூகக் காப்பு அணியென தோழர்கள் கையில் கழக இலட்சியக் கொடி ஏந்தி பெரியார் படத்துடன் மாநில உரிமைகளை மீட்டெடுத்திடும் வகையில் முழக்கங்கள் எழுப்பினர்.

சடையார் கோவில் நாராயணசாமி குழுவினரின் கோலாட்டம், மற்றும் பறை இசை, வீர விளையாட்டுகள். பெரியார் பிஞ்சு முதல் தொண்டர்கள் பட்டாளம் வரை எனத் தொண்டு செய்து பழுத்த பழங்களாகிய பெரியாரின் பெருந் தொண்டர்கள் அனைவரும் கலந்து கொண்டு ஆர்ப்பரித்து வந்தனர். மின்னலாய் கழகக் கொள்கை முழக்கங்கள் விண்ணை முட்டின. மூடப்பழக்க வழக்கங்களை ஒழிக்கும் அறிவியல் வீர விளையாட்டு நிகழ்ச்சிகள், சிலம்பம், நாக்கில் சூடம் ஏந்தி சாமியார்களின் பித்தாலாட்டம் ஒழிக என மோசடிகளைத் தோலுரித்துக் காட்டும் வகையிலும். பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் எல்லாம் இணைந்த கட்டுப்பாடான அணிவகுப்பு கண் கவர வைத்தது, பார்த்தவர்கள் நெஞ்சங்கள் நிறைந்தன.
ஊர்வலம். பாவேந்தர் சாலை சந்திப்பு வழியாக எம்.ஜி.ஆர் சாலையைக் கடந்து ஆர்ச் சர்வீஸ் ரோடு மறைமலை நகராட்சிப் பக்கம் மாநாட்டுத் திடலுக்கு வந்து சேர்ந்தது.
உணர்வு பீறிட்ட தலைமையுரை!
“உலகம் போற்றும் ஒப்பற்ற முதலமைச்சர் திராவிட மாடல் ஆட்சியின் நாயகர் அவர்களே,
வெள்ளம்போல் திரண்டிருக்கின்ற அனைத்துக் கட்சி நண்பர்களே!

இந்த இயக்கம் பதவிக்காக அல்ல; மக்களுக்காக – ஒடுக்கப்பட்ட மக்களுடைய உதவிக்காக, உயிருக்காக, உரிமைக்காக வந்த இயக்கம். அன்றும் – இன்றும் – என்றும் இந்த இயக்கம் நிலைக்கும்!
முதலமைச்சர், தமிழ்நாட்டின் வரலாற்றில், திராவிட இயக்க வரலாற்றில், சவால்களைச் சந்திக்கக்கூடிய ஒரு முதலமைச்சராக, இருக்கிறீர்கள் – உங்களுக்கு ஆயிரம் முத்தங்கள்! ஆயிரம் முத்தங்கள்! ஆயிரம் முத்தங்கள்!

‘‘பெரியார் உலக மயம்’’ – உலகம் பெரியார் மயம்” என்பதற்காகத்தான் ‘‘பெரியார் உலகம்’’ நூறு கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்படுகிறது.
நிச்சயமாக, இப் பணி உங்களால் முடியும்; மக்களால் முடியும்!
உங்களுடைய துணை இருக்கிறது; உங்கள் வழிகாட்டல் இருக்கிறது.
‘‘கருப்புச் சட்டைக்காரர், காவலுக்குக் கெட்டிக்காரர்’’ உங்களுக்குத் துணை நிற்க வேண்டியது எங்கள் கடமை – இதைத்தவிர எங்களுக்கு வேலையில்லை.
அண்ணா அவர்கள் மறைந்துவிட்டார். கலைஞர்தானே என்று சாதாரணமாக நினைத்தார்கள். ஆனால், கலைஞரோ, ‘‘அண்ணாவே பரவாயில்லை’’ என்று நினைக்க வைத்தார், நம்முடைய இன எதிரிகளை!
ஆனால், இன்றைக்கு, “கலைஞரைவிட ஸ்டாலின் ஆபத்தானவர்” என்று எதிரிகள் புலம்புகின்றனர்.

கற்பாறை மீது கட்டப்பட்ட கருங்கோட்டை!
எனவே, எங்களை, இந்தத் திராவிட இயக்கத்தவர்களை மிரட்டிப் பார்க்காதீர்கள்; அச்சுறுத்திப் பார்க்காதீர்கள். ஆட்களைப் பிடித்து, கூலிப்படைகளைக் கொண்டு வந்து இந்த ஆட்சியைக் கவிழ்த்துவிடலாம்; தோற்கடித்துவிடலாம் என்று நினைக்காதீர்கள்!
இது கற்பாறைமீது கட்டப்பட்ட கருங்கோட்டை – இதை அசைக்க முடியாது உங்களால்!

நீங்கள் வெறும் மணல்மேடுகள்; நீங்கள் சாதாரணமானவர்கள்!
மாண்புமிகு மானமிகு முதலமைச்சர் அவர்களுக்கு – பெரியார் பிறந்த நாளை, ‘‘சமூகநீதி நாள்’’ என்று அறிவித்து, ‘‘அனை
வருக்கும் அனைத்தும்’’ என்று உறுதிமொழி எடுக்கச் சொன்ன முதலமைச்சர் அவர்களுக்கு – காலங்காலமாக நன்றி செலுத்தக் கடமைப்பட்டு இருக்கின்றது தமிழினம்.
உங்கள் வேலை “என்ட்ரி”
எங்கள் வேலை “சென்ட்ரி”
எங்கள் வேலை, கோட்டைக்குள்ளே போவது அல்ல; எங்களுடைய வேலை, கோட்டைக்குள்ளே உங்களை மீண்டும் அனுப்புவது – கோட்டைக்குள்ளே நீங்கள்தான், 2026ஆம் ஆண்டிலும் போகப் போகிறீர்கள்.

ஆகவேதான், உங்கள் வேலை ‘என்ட்ரி’ (Entry)- எங்களுடைய வேலை ‘சென்ட்ரி’ (Sentry) அவ்வளவுதான்.
நாங்கள் வெளியே நிற்போம். எல்லையில் ராணுவ அதிகாரிகள், துப்பாக்கியை ஏந்திக் கொண்டு நிற்பார்கள். அவர்களுக்கு விழிகள் நன்றாகத் திறந்திருக்கும். எங்கே, யார் ஓட்டை போடுகிறார்கள்? எங்கே யார் வருகிறார்கள்? என்று கழுகுப் பார்வையோடு பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
அந்தப் பார்வைதான், கருஞ்சட்டைக்
காரனுடைய உயிர்க்கடமை! அதைத்தான் தீர்மானமாக இன்றைக்கு வடித்திருக்கின்றோம்.

ஜப்பான், சிங்கப்பூர், லண்டனில் பெரியாரை முழங்கும் முதலமைச்சர்!
பெரியாரை உலக மயமாக்கும் எங்களுடைய பணியை நம்முடைய பணியை இன்றைக்கு நீங்கள் முன்னெடுத்துச் செல்கிறீர்கள் – பெரியாரை உலகமயமாக்குவதற்கு நீங்கள் தயாராகிக் கொண்டிருக்கிறீர்கள். அதற்கு அச்சாரம்தான், ஜப்பானிலே முழங்கினீர்கள்; சிங்கப்பூரிலே முழங்கினீர்கள்; லண்டன் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் முழங்கினீர்கள். சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கும்போது தந்தை பெரியார் சொன்னார், ‘‘இது ஒரு சிறிய எஞ்ஜின்; இது ஓர் ஊரோடு நிற்காது – உலகத்திற்கே வழிகாட்டும்’’ என்றார்.

பெரியார் உலகமயமாகிக் கொண்டிருக்கின்ற இந்தக் காலகட்டத்தில், 2026 ஆம் ஆண்டிலும் நீங்கள் கோட்டைக்குள்ளே போகவேண்டும். அது உங்களுக்காக அல்ல – எங்களுக்காக அல்ல – மக்களுக்காக!
ஓட்டு எண்ணிக்கைத் தேர்தல் அல்ல;
சமூகத்தைக் காக்கின்ற தேர்தல்!
வருகின்ற தேர்தல் என்பது வெறும் ஓட்டு எண்ணிக்கை தேர்தல் அல்ல! வெற்றி – தோல்வியைக் கணிக்கின்ற தேர்தல் அல்ல!
நம்முடைய தலைவர்கள் உழைத்து, திராவிட இயக்கம் பாடுபட்டுத் தந்ததே சமூகநீதி – திராவிட இயக்கம் பாடுபட்டு, தலைவர் தந்தை பெரியார் அவர்கள் தந்தார்களே, அந்தச் சுயமரியாதை உணர்வு – அந்த சமூக வாய்ப்பு, பெண்களுக்குச் சம வாய்ப்பு, சம உரிமை, இவற்றையெல்லாம் காட்டுகின்ற தேர்தல்!


அம்பேத்கர் சொன்னார், சமத்துவம் என்று சொல்லும்போது, ஆங்கிலத்தில் ஈக்குவாலிட்டி என்று போட்டார்கள். ஒப்பற்ற முதலமைச்சர் அவர்களுடைய திராவிட மாடல் ஆட்சியின் சாதனையின் தனிச் சிறப்பு என்ன தெரியுமா தோழர்களே, சமத்துவம்தான் முதல் கட்டம். இதுதான் திராவிட மாடல் ஆட்சியினுடைய தனித்தன்மை, தனிச்சிறப்பு!
அடுத்தகட்டம், சமத்துவத்தோடு பெண்களுக்கு அதிகாரமளித்து, அவர்களுக்கு 50 விழுக்காடு கொடுத்து, அவர்களை அமர வைக்கவேண்டிய இடத்தில், அமர வைப்பது! இந்தியாவிலேயே இதைச் செய்தது இந்த ஆட்சியைத் தவிர, வேறு எந்த ஆட்சி?
“மானம்’’ – அறிவு – உரிமை ஆட்சி!
எனவேதான், மனுதர்மக்காரர்கள், மனுவின் மைந்தர்கள், வருணாசிரமத்தின் வாரிசுகள் – இந்த ஆட்சி மீண்டும் வரக்கூடாது என்று நினைக்கிறார்கள்.
இந்த ஆட்சி மீண்டும் வரவேண்டும் என்று நாங்கள் ஏன் நினைக்கின்றோம்?

எங்களுக்கு மானத்தைத் தருகின்ற ஆட்சி!
எங்களுக்கு அறிவைத் தருகின்ற ஆட்சி!
எங்களுக்கு உரிமைகளைத் தருகின்ற ஆட்சி! அதனால் விரும்புகிறோம்.
நான் தலைகுனிய விடமாட்டேன் என்று சொல்லி, சமரசம் செய்துகொள்ளாத ஒரு முதலமைச்சர் இருக்கின்றார் என்றால், இந்தியாவிலேயே திராவிட மாடல் முதலமைச்சர்தான் என்கின்ற பெருமையை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். எனவே, உங்களுக்குத் துணையாக இருப்பதுதான் எங்கள் வேலை!
இனி, ஆறு மாதத்திற்கு எங்களுக்கு எந்த வேலையும் கிடையாது. எனக்கு 93 வயது என்றெல்லாம் சொன்னார்கள். அது எனக்கு நினைவிற்கு வராது, வரவும்கூடாது. என் நினைவிற்கு வரவேண்டியது கொள்கை எதிரிகள் – அவர்களுடைய குதர்க்கங்கள்; அவர்களை எதிர்த்து, இந்த ஆட்சியைக் காக்க புகழ் நாடாத, பதவி நாடாத, நன்றி பாராட்டாத இந்த இயக்கம் தன்னுடைய பணிகளைச் செய்யும் என்பதே!

பெரியாரை உலகமயமாக்குகின்ற பணி எங்கள் பணி; எங்கள் பணி பிரச்சாரம். எங்களுக்குத் தெரிந்தது இரண்டேதான்! ஒன்று பிரச்சாரம், இன்னொன்று போராட்டம்!
இந்த ஆட்சியை அசைத்துவிடலாம், விஷமப் பிரச்சாரங்களைச் செய்து வீழ்த்திவிடலாம் என்று நினைத்துக் கொண்டு, எங்கெங்கோ இருக்கின்றவர்களை அழைத்து நீங்கள் வேவு பார்க்காதீர்கள். அது நடக்காது; நடக்கவும் விடமாட்டோம்.
இது பெரியார் மண்! தமிழ் மண்! மானத்தைச் சொல்லிக் கொடுக்கின்ற மறவர் மண்! உரிமைக்காகப் போரிடுகின்ற மண்!
தலைகுனிய விடமாட்டோம் என்று சொல்லி, ஆயிரம் போர்களை வென்றெடுக்கக் கூடிய ஓர் அற்புதமான வீர காவியம் படைக்கக்கூடிய, ஒரு தளபதியாக நின்று நீங்கள் ஆட்சி நடத்தக்கூடிய மண்!
எனவே, உங்களுக்காகப் பணி செய்வது இந்த இனம் காப்பாற்றப்படவேண்டும் என்பதற்காக!
அது வெறும் தேர்தலுக்காக அல்ல நண்பர்களே! தலைமுறை தலைமுறையாக, நம்முடைய தலைவர்கள் பெற்றுத் தந்ததை, தலைவர்கள் கற்றுத் தந்ததை நாம் பாதுகாத்து வளர்க்கவேண்டும் என்பதற்காக.
உங்களுக்கு என்றைக்கும் துணையாக இருப்போம்!
வருகின்ற 2026ஆம் ஆண்டு நடைபெறவிருக்கின்ற தேர்தல் முடிந்து, நூறாண்டு காலம் வாழ்க இந்த ஆட்சி என்று, இதே மண்ணில் வெற்றி விழாவை நடத்துவோம்!
இன்றைக்கு எப்படி சுயமரியாதை இயக்கத்திற்கு வெற்றி விழாவோ – அதுபோல, நீங்கள் பெறுகின்ற வெற்றியை, விழாவாக இந்த மண்ணில் அனைவரும் கொண்டாடுவோம்!
அதற்கு ஆயத்தமாவோம்! ஆயத்த மாவோம்!!
வாழ்க பெரியார்! வளர்க சுயமரியாதை இயக்கம்!” என்று உணர்வு பொங்கக் குறிப்பிட்டார்.
முதல்வரின் முத்தான நிறைவு உரை!
“சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவில் நான் பங்கேற்பதில் பெருமைப்படுகிறேன்!
சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழா – திராவிடர் கழகத்தின் மாநில மாநாடு எழுச்சியோடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது!

இந்த விழாவில் கலந்து கொண்டு உரையாற்றக்கூடிய வாய்ப்பைப் பெற்றமைக்கு திராவிட முன்னேற்றக் கழகத் தலைவராக மட்டுமல்ல, தமிழ்நாட்டின் மாண்புமிகு முதலமைச்சராக மட்டுமல்ல, மானமிகு சுயமரியாதைக்காரன் என்ற உணர்வோடு பங்கெடுப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்! பெருமை அடைகிறேன்!
சுயமரியாதை இயக்கத்தின் தொடர்ச்சி திராவிடர் கழகம் என்றால் – திராவிடர் கழகத்தின் நீட்சிதான் திராவிட முன்னேற்றக் கழகம்!
இன்று, தமிழ்நாட்டின் உரிமைகளை – தமிழர்களின் சுயமரியாதை – பகுத்தறிவு – சமூகநீதிச் சிந்தனை உள்ளிட்டவற்றை நாம் பாதுகாக்கிறோம் என்றால், சுயமரியாதை இயக்கம் இந்த மண்ணில் வேர்விட்டதுதான் அதற்குக் காரணம்!
தமிழ்நாடு முழுவதிலும் இருந்து குடும்பம் குடும்பமாக வந்திருக்கும், இந்தக் கருப்புச் சட்டைக்காரர்கள்தாம் தமிழ்நாட்டின் காவலுக்குக் கெட்டிக்காரர்கள்!
பகுத்தறிவுச் சிந்தனையும் – சுயமரியாதை உணர்வும் கொண்ட ஒரு கருப்புச் சட்டைக்காரர் ஓர் ஊரையே முன்னோக்கி இழுத்துச் செல்லும் ஆற்றல் பெற்றவர்!
மானமும், அறிவும் உள்ள மக்களாக நாம் தொடர்ந்து நடைபோட வேண்டும்! தான் வாழும் காலத்திலேயே தன்னுடைய சிந்தனைகள் செயல்வடிவம் பெறுவதைப் பார்க்கும் வாய்ப்பு தந்தை பெரியாருக்குத்தான் கிடைத்தது!

பேரறிஞர் அண்ணா அவர்கள் சுயமரியாதைத் திருமணச் சட்டத்தை இயற்றினார்! தலைவர் கலைஞர் அவர்கள் அனைத்துச் ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்ட அங்கீகாரம் வழங்கினார்! அதன் நீட்சியாகத்தான் சமூகநீதிக்கான இட ஒதுக்கீடுகள் – மகளிர் முன்னேற்றத்துக்கான திட்டங்கள் என்று ஏராளமானவற்றைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறோம்!
மானமிகு ஆசிரியர் அவர்கள் இந்த மாநாட்டில், நல்ல பல தீர்மானங்களை வடித்து வழங்கியிருக்கிறார். நான் மானமிகு ஆசிரியர் அவர்களுக்குச் சொல்லிக் கொள்வது, இதற்கான பரப்புரைகளை நீங்கள் சமூகக் களத்தில் செய்யுங்கள்!

மக்களின் ஆதரவைப் பெற்று, ஆட்சியைப் பயன்படுத்தி இவற்றைச் சட்டங்களாக – விதிமுறைகளாக – நெறிமுறைகளாக மாற்றும் பணிகளை திராவிட முன்னேற்றக் கழகம் பார்த்துக் கொள்ளும்!
அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்கி ஆணைகள் வழங்கி இருக்கிறோம்! ஜாதி வேறுபாடு மட்டுமல்ல, பாலின பேதத்தையும் உடைத்து, பெண்களையும் அர்ச்சகராக்கி இருக்கிறோம்!
தந்தை பெரியார் பிறந்த நாளிலும், புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாளிலும், தமிழ்நாடே முக்கிய நாளாகக் கருதி உறுதிமொழி எடுக்கிறது!
ஆதிக்கத்தின் அடையாளமாக இருக்கின்ற ‘காலனி’ என்ற சொல்லை அகற்ற அறிவித்திருக்கிறோம்!
ஜாதிப் பெயரில் இருக்கின்ற விடுதிகளை, சமூகநீதி விடுதிகளாக மாற்றியிருக்கிறோம்!

மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்களைச் சந்தித்து, ஜாதிப் பெயர்களின் இறுதி எழுத்து, ‘R’ என முடிவடையும்படி மாற்றம் செய்து, மக்களுக்கு உரிய மரியாதை கிடைக்கச் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறேன்!
என்னை வழிநடத்தும் நல்லாசிரியர்தான்
‘தகைசால் தமிழர்’ ஆசிரியர் அவர்கள்!
திராவிடர் கழகத்தினரின் உழைப்பு, விலை மதிப்பில்லாதது! பலன் எதிர்பாராதது! அதனால்தான், பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்கள் சொன்னார்கள்… “மனமகிழ்ச்சி ஒன்றுதான் நான் அடையும் பலன்” என்று சொன்னார். அந்த மன மகிழ்ச்சியை மட்டுமே நோக்கமாகக் கொண்டு, கருத்தியல் உறுதியோடு போராட்ட வாழ்வை வாழும் திராவிடர் கழகத் தோழர்கள் அனைவருக்கும் எனது ‘சல்யூட்!’ அதிலும், 92 வயது இளைஞராக, ஓய்வின்றி, தமிழ்ச் சமுதாயத்துக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கும், தமிழர் தலைவர் மானமிகு அய்யா ஆசிரியர் அவர்களுக்கு என்னுடைய வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

தமிழினத்தின் மேன்மைக்காக உழைத்துக் கொண்டு வரும் அவரின் ஒப்பற்ற தியாக வாழ்வைப் போற்றும் விதமாகத்தான் நம்முடைய ‘திராவிட மாடல்’ அரசில், மானமிகு அய்யா அவர்களுக்கு ‘தகைசால் தமிழர்’ விருது வழங்கியிருக்கிறோம்!
ஆசிரியர் எனது வழிகாட்டி!
தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களும், இனமானப் பேராசிரியர் பெருந்தகை அவர்களும் மறைவுற்ற பின்னர், என்னை வழிநடத்தும் நல்லாசிரியர்தான், நம்முடைய தகைசால் தமிழர் ஆசிரியர் அய்யா அவர்கள்! அதனால்தான், திராவிட முன்னேற்றக் கழகம் செல்ல வேண்டிய பாதையை ‘பெரியார் திடல்’ தான் தீர்மானிக்கிறது என்று நெஞ்சை நிமிர்த்திச் சொன்னேன்.

இந்த இயக்கத்தின் கொள்கைகள் – தமிழர்களின் இரத்தத்தில் கலந்திருக்கின்ற கொள்கைகள்! கடைசித் தமிழரின் மூச்சு இருக்கும் வரை, அவர் உயிரில் சுயமரியாதை உணர்வு இருக்கும் வரை, எப்பேர்பட்ட எதிரிகள் வந்தாலும் இந்த இனம் சளைக்காமல் போராடும்! சிலர் தி.மு.க-வைப் பிடிக்காது என்று சொல்வார்கள்… அதற்குப் பொருள் – ஒடுக்கப்பட்ட வீட்டுக் குழந்தைகள் படிப்பது பிடிக்காது! இந்த இனத்தில் இருந்து, படித்து, முன்னேறி அய்.ஏ.எஸ்.- அய்.பி.எஸ். என்று வருவது பிடிக்காது!
இடஒதுக்கீடு பிடிக்காது! சமூகநீதி பிடிக்காது! சமத்துவம் பிடிக்காது! சரிசமமாக உட்காருவது பிடிக்காது! எல்லோரும் கோயிலுக்குள் நுழைவது
பிடிக்காது! அனைத்து ஜாதியினரும்
அர்ச்சகராவது பிடிக்காது! ஒற்றுமையாக இருப்பது பிடிக்காது! தமிழ் பிடிக்காது! தமிழர்கள் பிடிக்காது! நாம் தலைநிமிர்ந்து நடப்பது பிடிக்காது!
இந்த நூறாண்டுகளில், கொஞ்சம் கொஞ்சமாக நம்முடைய மக்களுக்குக் கிடைத்ததை, வேக வேகமாகப் பறிக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள்! சுயமரியாதை இயக்கம் தேடித் தந்த உயர்வைப் பறிக்கின்ற சூழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது!
அறிவியலைப் பின்னுக்குத் தள்ளி, பிற்போக்குத்தனங்களையும், ஆதிக்கத்தையும் மீண்டும் நிலை நிறுத்துவதற்கான சூழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது!
தமிழ்நாட்டை மட்டுமல்ல, இந்திய நாட்டையே ஒரு நூற்றாண்டுக்குப் பின்னோக்கி இழுத்துச் செல்ல நுணுக்கமாகவும், தீவிரமாகவும் முயற்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது! இதையெல்லாம் தடுத்து நிறுத்துகின்ற அரண்தான், திராவிட மாடல்!
அடுத்து, திராவிட மாடல் 2.0 என்று சொல்லப் போகிறோம்! வரப் போவது அரசியல் தேர்தல் கிடையாது; தமிழினம் தன்னைக் காத்துக் கொள்ள வேண்டிய சமுதாயத் தேர்தல்!
தமிழ்நாட்டை நாசப்படுத்தத் துடிக்கும் கூட்டத்தை வேரோடும் – வேரடி மண்ணோடும் வீழ்த்தவேண்டும்! அதற்கான கொள்கை தெளிவும் – போராட்டக் குணமும் – செயல்திட்டமும் – ஒற்றுமை உணர்வும் – மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்குத்தான் இருக்கிறது! எனவே, ஏழாவது முறையும் திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆட்சியில் அமர்த்திட, இந்தக் கூட்டணியின் வெற்றிக்கு நீங்கள் எல்லோரும் துணை நிற்கவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்!
பெரியார் உலகத்திற்கு 1.5 கோடி ரூபாய்
‘பெரியார் உலகத்துக்கு’ திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பங்களிக்காமல் இருக்க முடியுமா? மீண்டும் சொல்கிறேன்…. நீங்கள் உருவாக்கிக் கொண்டிருக்கக்கூடிய ‘பெரியார் உலகத்துக்கு’ திராவிட முன்னேற்றக் கழகம் பங்களிக்காமல் இருக்க முடியுமா? எனவே, என்னுடைய ஒரு மாத ஊதியத்தை பெரியார் உலகத்துக்காகக் கொடுக்கிறேன். அதேபோல் தி.மு.க. எம்.எல்.ஏ., எம்.பிக்கள் எல்லோருடைய ஒரு மாத ஊதியத்தையும் தருகிறோம். சுமார் ஒன்றரை கோடி ரூபாய் வரும். அந்தப் பணத்தை பெரியார் உலகத்துக்கு மகிழ்ச்சியோடு, நன்றி உணர்வோடு வழங்குவதில் நாங்கள் எல்லோரும் பெருமை அடைகிறோம் அய்யா! பெருமை அடைகிறோம் அய்யா!
தமிழ்நாடு எப்போதும் மகிழ்ச்சியாக வாழும் நிலைமையை உறுதி செய்ய பகுத்தறிவுச் சிந்தனையையும் – சுயமரியாதை உணர்வையும் மக்களிடையே தொடர்ந்து விதைத்திட இந்தக் கருஞ்சட்டைப் பட்டாளம் உறுதிமொழி எடுக்கும் மாநாடுதான், இந்தச் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் திராவிடர் கழக மாநில மாநாடு!
தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம் என்றும் உறுதி நாம் எடுப்போம்! வென்று காட்டுவோம்! தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்! விடைபெறுகிறேன்” என்று நெகிழ்ச்சி
யும், எழுச்சியும் கொண்ட உரையை ஆற்றினார்.
ஆக, இந்த மாநாடு வரலாற்றில் முத்தான முத்திரையைப் பதித்து, தமிழ் இனத்தின் உணர்வுகளைத் தட்டி எழுப்பி, அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டுவதாய் அமைந்தது என்ற பெருமையைப் பெற்றது! ©





