அந்த விழா, வெறும் கொண்டாட்டமல்ல. ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக திராவிட இயக்கம் பாடுபட்டு விதைத்ததன் விளைச்சல். ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்னும் தலைப்பில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் 25-9-2025 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடந்த விழா என்பது, அந்த விளைச்சலை நமது மாநிலம் மட்டுமல்ல, பிற மாநிலங்களும் தெரிந்து கொண்டு, தங்கள் மாநிலத்தில் கல்விப் பயிர் வளர்க்க உதவியது.
தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட இந்த விழாவில், துணை முதலமைச்சர், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் உள்ளிட்ட பலரும் பங்கேற்றதுடன், சிறப்பு விருந்தினர்களாக கல்வி-நீதி-கலைத்துறையைச் சார்ந்த பலரும் அழைக்கப்பட்டு, மாணவ-மாணவியரின் திறனைப் பாராட்டினர்.
இந்தியாவில் வேறெந்த மாநிலமும் சிந்திக்காத வகையில் தமிழ்நாட்டில் நான் முதல்வன் திட்டம், காலை உணவுத் திட்டம், புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம் உள்ளிட்டவை செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இவை அனைத்தும் மாணவர்களின் கல்விப் பயணம் தொடரவும், அவர்களின் திறன்கள் மேம்படவும் உதவக் கூடியனவாகும். குறிப்பாக, அரசுப் பள்ளியில் பயிலும் மாணவ-மாணவியரின் வளர்ச்சியில் இந்தத் திட்டங்கள் பெரும் பயனளிக்கின்றன. இவற்றை முன்னிறுத்தி நடைபெற்ற ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ விழாவில் பயனாளிகளே திட்டங்களின் சிறப்பை விளக்கியதால் உண்மையாகவும் உணர்வுப்பூர்வமாகவும் அமைந்தது.

நான் முதல்வன் திட்டத்தை தன்னுடைய கனவுத் திட்டம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் சொல்வது வழக்கம். தமிழ்நாட்டு மக்கள் அவரை முதலமைச்சர் ஆக்கினார்கள். அவரோ தமிழ்நாட்டில் உள்ள குடும்பங்களில் ஒவ்வொரு மாணவரையும் திறமையில் முதல்வனாக்கும் திட்டத்தை வழங்கியிருக்கிறார். உயர்கல்வி பயிலும் இருபால் மாணவர்கள், தங்களுக்குரிய பட்டத்துடன், தொழில்நிறுவனங்களில் பணிவாய்ப்புப் பெறுவதற்கான திறனை மேம்படுத்திக்கொள்வதுதான் நான் முதல்வன் திட்டத்தின் நோக்கம்.
அண்மையில் தூத்துக்குடியில் வியட்நாம் நாட்டின் புகழ்பெற்ற மின்வாகன உற்பத்தி நிறுவனமான வின்ஃபாஸ்ட் தனது தொழிற்
சாலையை அமைத்தது. எந்த இடத்தில் தொழிற்சாலை அமைகிறதோ அதனைச் சுற்றி இருப்பவர்களுக்கே பணியில் முதலிடம் தரவேண்டும் என்பது முதலமைச்சரின் கோரிக்கை. அதற்காக தூத்துக்குடி
மாவட்டத்தில் உள்ள பாலிடெக்னிக்குகளில் இறுதியாண்டு பயின்ற 300க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியருக்கு வின்ஃபாஸ்ட் நிறுவனம் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு, 200 பேர் நிறுவனத்தில் வேலைக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் அரசு பாலிடெக்னிக்குகளில் படிப்ப
வர்கள்.
நான் முதல்வன் திட்டத்தால் பயனடைந்த மாணவி ஜாலிஜா வெளிநாட்டு இன்டர்ன்ஷிப் மூலமாக தனக்கு ஜப்பான் நாட்டின் நெக்ஸ்டன் நிறுவனத்தில் இன்டர்ன்ஷிப் செய்து, ஆண்டுக்கு 21 இலட்சம் ரூபாய் ஊதியத்தில் வேலை கிடைத்திருப்பதாகச் சொன்னதுடன், ஜப்பான் மொழியைக் கற்று வருவதாகவும் தெரிவித்தார்.
விழா நிகழ்வைத் தொகுத்த திவ்யதர்ஷினி, “ஜப்பான் மொழியில் நன்றி சொல்ல முடியுமா?’‘ என்று கேட்டதும், மாணவி ஜாலிஜா சரளமாக ஜப்பான் மொழியில், தனக்கு இன்டர்ன்ஷிப் வாய்ப்புக் கிடைத்ததையும், அதற்கு, தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டம் உறுதுணையாக இருந்ததையும், தற்போது எந்த நிலைக்கு வந்திருக்கிறார் என்பதையும் சொல்லி இறுதியாக, ‘அரிகட்டோ ஹொசைஸ்மாஸ் (நன்றி)’ என்று தெரிவித்தார். அரங்கம் அதிர்ந்தது. இந்தித் திணிப்பை ஏன் எதிர்க்கிறோம்? வாய்ப்புள்ள நிலையில் ஜப்பான் உள்பட எந்த மொழியையும் ஏன் விரும்பிக் கற்கிறோம்? என்பதற்கான பதில் மாணவி ஜாலிஜாவின் பேச்சின் உள்ளடக்கமாகப் பொதிந்திருந்தது.
நான் முதல்வன் திட்டத்தின் மூலம் திறன் மேம்பாட்டுப் பயிற்சி பெற்று தகுந்த வேலைக்குச் சென்ற மாணவி பிரேமா, தனது முதல் மாத சம்பளத்தை விழா அரங்கிற்கு வந்துள்ள தன் தந்தையிடம் கொடுக்கவேண்டும் எனத் தெரிவித்து, அதன்படியே வழங்கியபோது அரங்கில் இருந்த அத்தனை பேரின் கண்களும் கலங்கின. தனக்கு எல்லாமே அப்பாதான் என்றும், அவர் ஆலங்குளம் அருகே கழுநீர்க்குளம் எனும் சிற்றூரில் ஒழுகும் வீட்டில் இருப்பதாகவும் அந்த மாணவி சொன்னார். அடுத்த நாளே, கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் மாணவியின் குடும்பத்திற்கு புதிய வீடு வழங்கப்படும் என அறிவித்தார் முதலமைச்சர்.
புதுமைப் பெண் திட்டத்
தால் மாதம் ஆயிரம் ரூபாய் பெறும் மாணவி சுப்புலட்சுமி, எதிர்காலத்தில் கணக்கு டீச்சராக வரவேண்டும் என்று சொல்லி முடிக்க, எதிரில் உட்கார்ந்து அதைக் கேட்ட முதலமைச்சர், “வாங்க கணக்கு டீச்சர்” என்று அழைத்து பேனாவைப் பரிசளித்தார். மற்றொரு மாணவி, மாதம் ஆயிரம் ரூபாயைச் சேமித்து தன் தாயாருக்கு காதுகேட்கும் கருவி வாங்கித் தந்ததைச் சொன்னபோது, அரங்கின் ஏதோ ஒரு பகுதியிலிருந்த அவரது தாயும் தந்தையும் அதைக் கேட்டு எழுந்து நின்று நன்றிக் கண்ணீர் வடித்தனர்.
காலை உணவுத் திட்டத்தால் பயன்பெறும் தொடக்கப் பள்ளி மாணவ-மாணவியர், இந்தத் திட்டத்திற்கு முன் தாங்கள் காலையில் சரியாகச் சாப்பிட முடியாத நிலையையும் தற்போது பள்ளியில் விரும்பிச் சாப்பிடுவதையும் இயல்பான மழலை மொழியில் சொன்னார்கள். அவர்களின் பெற்றோரின் பணிச்சுமையை அரசு ஏற்றுக்கொண்டிருப்பதும் தெரிந்தது. “பெண்களிடமிருந்து கரண்டியைப் பிடுங்கிவிட்டு, புத்தகத்தைக் கொடுங்கள்” என்ற தந்தை பெரியாரின் அறிவுரைப்படி, அம்மாவின் கையிலிருந்த காலை நேரக் கரண்டியைப் பறித்துவிட்டு, அந்த உணவை அரசே வழங்கி, அவர்தம் பிள்ளைகளுக்குப் புத்தாக்கத்தைக் கொடுத்திருக்கிறது தமிழ்நாடு அரசு.
பெரியாரின் இலட்சியத்தை நிறைவேற்றி, பாரதியாரின் பாடல் வரியின் அடிப்படையில், ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்ற தலைப்பில் விழா நடத்தி அதில் பல துறை வல்லுநர்களையும் பங்கேற்கச் செய்தது. திரைக் கலைஞர்கள் பலர் பங்கேற்றபோது, பள்ளி-கல்லூரி மாணவர்கள் அவர்களின் பேச்சில் உணர்வுடன் ஒன்றியிருந்தனர். முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன், பொறியியல் பட்டம் உள்பட இரண்டு (டிகிரி) பட்டங்கள் வாங்கியிருப்பதையும், நிரந்தரமற்ற திரைத்துறை கைவிட்டாலும், தன் படிப்பு கைகொடுக்கும் என்றும் சொன்னது கல்வியின் அவசியத்தை இளம் நெஞ்சங்களில் பதியமிட்டது.
இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா, துரோணாச்சாரியார் காலம் முதல் ராஜகோபாலாச்சாரியார் காலம் வரை நமக்கு கல்வி
மறுக்கப்பட்டதையும், கடந்த 60 ஆண்டுகளில் நாம் கல்வியில் உயர்ந்துள்ள நிலையையும் சுட்டிக்காட்டியபோது திராவிட இயக்கத்தின் சமூக நீதியின் தாக்கம் புரிந்தது. இயக்குநர் வெற்றிமாறன், தமிழ்நாடு மட்டும் ஏன் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது, தனக்கென கல்வியில் ஒரு பாதை வகுத்து எப்படி முன்னேறு
கிறது, மேலே இருந்து போடப்படும் தடைகளை எப்படி உடைக்கிறது என்பதை விவரித்தார்.
‘லப்பர் பந்து’ திரைப்பட இயக்குநர் பச்சமுத்து தமிழரசன், சச்சின் டெண்டுல்கர் என்ன படிச்சாரு என்று சொல்வதை நம்பவேண்டாம். படிக்காமல் வென்றவர்களைவிட, படித்து வென்றவர்கள்தான் அதிகம். அதனால் படிங்க, படிங்க, படிங்க என்று முதலமைச்சர் சொல்வதுடன் நான் இன்னும் சேர்த்துச் சொல்கிறேன் படிங்க… படிங்க… படிங்க… படிங்க…” என்று நான்கு முறை சொன்னார். இயக்குநர்கள் மிஷ்கின், மாரிசெல்வராஜ், ஞானவேல்ராஜா ஆகியோர் இந்த விழாவில் பங்கேற்றனர்.
கல்வி விழாவுக்கு எதற்காக சினிமாக்காரர்கள்? கல்வியாளர்களோ வல்லுநர்களோ இல்லையா? என்று ஒரு சிலர் விமர்சனம் செய்தாலும் அந்த நிகழ்வில் பேராசிரியர் கல்விமணி (கல்யாணி), நீதியரசர் சந்துரு, காலை உணவின் ஊட்டச்சத்து குறித்து விளக்கிய டாக்டர் அருண்குமார், நான் முதல்வன் திட்டம் உள்ளிட்டவற்றின் பொறுப்பாளர்கள் யாவரும் தெளிவாகப் பேசியதை மறக்க முடியாது.
மாணவர்களின் கல்விக்காக முதலமைச்சர் உருவாக்கிய முன்னோடித் திட்டங்கள் நீடிக்கின்ற காலம்வரை இந்த நாட்டை அவர்தான்
ஆட்சி செய்வதாக அர்த்தம் என்று துணை முதலமைச்சர் பேசியதும், மாணவர்கள் விரும்பும் கல்வி கிடைக்க இந்த அரசு அனைத்தும் செய்யும் என்ற முதலமைச்சரின் உறுதிமொழியும், சிறப்பு விருந்தினராக
வந்திருந்த தெலங்கானா முதலமைச்சர் தங்கள் மாநிலத்திலும் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்ததும், கல்வியில் சிறந்த தமிழ்நாடு இந்தியாவுக்கே வழிகாட்டுவதை மெய்ப்பித்தது. |





