Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

அய்.நா.மன்றத்திலும் – ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்திலும் பாராட்டப்படுபவர்

தந்தை பெரியார் எனும் மகத்தான புரட்சியாளர்!

பிறக்கும்போதே செல்வச் செழிப்பான -பெருவணிகர் குடும்பத்தில் தோன்றியவர். வறுமை – துன்பம் உடலுழைப்பு எனும் நிலையில் உழலாத சூழலைச் சிறுபிராயம் முதல் பெற்றிட்டவர். கல்வி எனும் வாய்ப்பை நான்காம் வகுப்பு வரை பெற்றவர்.

இளம் பருவத்திலேயே வணிகத் தொடர்பு பெற்றுச் சிறந்தவர். பொதுப்பணி என்னும் நிலையில் பிறர் நலம் பேணும் உள்ளம் கொண்டவர். தனக்கு நினைவு தெரிந்த நாள்முதல் இறை நம்பிக்கை இல்லாத – எதையும் கேள்வி கேட்கும் கூர்மை படைத்த – உண்மையின் பக்கம் நிற்கும் இயல்பு கொண்டவர்.

பக்தியுணர்வு மிகுந்த குடும்பத்தில் – பார்ப்பனக் கூத்து நாளும் அரங்கேறும் வீட்டில் பகுத்தறிவுச் சிந்தனைப் பொறியைக் கக்கியவர். இந்தச் சூழலில் ஜாதி எனும் கொடுமை – கடவுள் நம்பிக்கை எனும் மூடத்தனத்தின் ஊற்றுக்கண் ஆகியவற்றைக் கண்டு உள்ளம் நொந்த நிலையில் – பார்ப்பனரல்லாதார் கல்வி உரிமை மறுக்கப்பட்டும் – அதனால் அரசு வேலைவாய்ப்பு அற்றும் இருந்த பஞ்சம – சூத்திர மக்கள் உரிமைகளைப் பெற உழைக்க நினைத்தவர் காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்தார்.

கல்வி வேலைவாய்ப்புக்கு வழியமைக்கும் வகுப்புவாரி உரிமைக்காக அரசியல் கட்சியில் (காங்கிரஸ்) 1919 முதல் 1925 வரை தொடர்ந்து குரல் கொடுத்தவர். வகுப்புரிமைக் கோரிக்கை நிறைவேறாது போகவே, இந்நாட்டில் அரசியல் என்பது ஆரிய ஆதிக்கமே என்றும், அரசியல் போராட்டம் என்பது ஆரிய – திராவிடப் போராட்டம் என்றும் உணர்ந்தார். காங்கிரசை விட்டு வெளியேறினார்.

பார்ப்பனரல்லாதார் உரிமைக்கு – சுயமரியாதைக்கு பார்ப்பனரல்லாதார் இயக்கம் கண்டு அதற்கு 1925ஆம் ஆண்டு சுயமரியாதை இயக்கம் கண்டார். வாழ்நாளில் பார்த்திட்ட, அனுபவித்த பார்ப்பன ஆதிக்கக் கொடுமைகளை ஒழித்திட களம் அமைக்க – வகுப்புவாரி உரிமையைக் கல்வி – உத்தியோகத்தில் கொண்டு வர – ஜாதி இழிவை, பெண் அடிமைத்தனத்தை ஒழித்திட – சுயமரியாதை இயக்கத்தின் மூலம் பிரச்சாரம் – போராட்lம் – சிறை என்ற சுழற்சியில் வாழ்நாள் எல்லாம் உழைத்திட்ட தலைவர்தான் பெரியார்.

சுயமரியாதை இயக்கம் தொடங்கும்போது, பஞ்சம – சூத்திர மக்கள் கல்வி கற்றிட, தெருவில் நடக்க, பொது இடங்களைப் பயன்படுத்த, மனிதனை மனிதன் தொட, தோளில் துண்டுபோட, காலில் செருப்பணிய, வேட்டிகட்ட போன்ற அடிப்படை உரிமைகளை அனுபவிக்க உரிமையின்றி விலங்கைப் போல் அடிமையாய் இருந்திட்ட திராவிட இன மக்களுக்காக நாளும் உழைத்திட்டார் – மேடையில் முழங்கிட்டார்.

கேரள மாநிலம் வைக்கம் தொடங்கி தமிழ்நாட்டிலும் இக்கொடுமைகளை எதிர்த்துப் போரிட்டார்.

பெண்களுக்குக் கல்வி கற்க உரிமை – பெண் கல்வி நிறுவனங்கள் – பெண்களுக்கு வேலைவாய்ப்பில் தனியாக ஒதுக்கீடு – உள் ஆட்சியில் ஒதுக்கீடு என்று எவ்விடத்திலும் பெண்கள் இடம் பெறுகிறார்கள். சட்டமன்றம் – ஆட்சி மன்றம் – நீதிமன்றம் எங்கும் பிரகாசமாய் பெண்கள் மிளிர்கிறார்கள்.

தாழ்த்தப்பட்டோர் – தொட்டால் தீட்டு என்று ஒதுக்கப்பட்டோர் – பார்த்தால் பாவம் என்று பந்தாடப்பட்டோர் இன்று நீதிபதிகளாக – மாவட்ட ஆட்சியாளர்களாக – குடியரசுத் தலைவராக இருக்கிறார்கள். பெண்கள் தொடர்ந்து 10, 12ஆம் வகுப்புத் தேர்வுகளில், கல்லூரி, பல்கலை. தேர்வுகளில், அகில இந்தியப் பணிக்கான இந்திய ஒன்றியத் தேர்வுகளில் முதலிடம் பெற்று வருகிறார்கள்.

கல்வி – மருத்துவம் – தொழில்துறை – வெளிநாட்டு முதலீடு திரட்டல், மோட்டார் வாகன உற்பத்தி எனப் பல துறையில் இந்தியாவிலேயே முதலிடம் வகிக்கிறது தமிழ்நாடு.

வெளி மாநில முதல்வர்கள் தமிழ்நாட்டைப் போல் காலை உணவுத் திட்டம், 69 விழுக்காடு இடஒதுக்கீடு சட்டம், ஆளுநரின் போக்கை எதிர்த்து நீதிமன்ற நடவடிக்கை, தனியார்த் துறையில் பணியாற்ற படித்த இளைஞர்களுக்குப் பயிற்சி அளிக்கும் திட்டம், மகளிர் உரிமை காக்கும் பல திட்டங்கள் – மாணவ, மாணவியர் முன்னேற முற்போக்குத் திட்டங்கள் என நீதிக்கட்சி தொடங்கி, அதன் நீட்சியான திராவிட இயக்க ஆட்சியின் சமூக – ஆரியப் பண்பாட்டுப் புரட்சிக்கான திட்டங்கள் எனப் பல சாதனைகள், சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு நிறைவில் – நூற்றாண்டு காணும் சுயமரியாதை இயக்கத்தின் சாதனை கொடிகட்டிப் பறக்கிறது. குன்றிலிட்ட விளக்காய்ப் பிரகாசிக்கிறது. குவலயம் போற்றும் பெருமை உடையதாய் விளங்குகிறது.

சுயமரியாதை இயக்கம் தொடக்கக் கல்வி முதல் அனைத்துக் கல்வியிலும் குரல் கொடுத்தது. இன்று தொடக்கக் கல்வி – நடுநிலைக் கல்வி – உயர்நிலைக் கல்வி- மேனிலைக் கல்வி – கல்லூரிக் கல்வி – பல்கலைக்கழகக் கல்வி – மருத்துவம், பொறியியல், குடிமைப் பயிற்சிப் படிப்பு என்று இன்னோரன்ன பள்ளிகள் – கல்லூரிகள் – பல்கலை  நிறுவனங்கள் ஏராளமாய் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் உருவாகியுள்ளன.

ஹிந்தி எனும் ‘அரக்கன்’ ஒருபோதும் தமிழ்நாட்டில் நுழைந்து விடாமல் – அதன்வழி சமஸ்கிருத பண்பாட்டுப் படையெடுப்புக்கு மீண்டும் நாம் அடிமையாகாது காக்கும் திராவிட மாடல் ஆட்சி – நூற்றாண்டுச் சாதனையின் மகுடமாய் விளங்குகிறது.

வாழ வழியற்று வறுமையில் வாடும் வறிய – எளிய மக்கள் வட மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டுக்கு
வந்து வேலை செய்து வாழ்க்கை நடத்துகிறார்கள். அன்று, கடல் நீர் ஏன் உப்பாக இருக்கிறது என்று கேட்டதற்கு அண்ணா சொன்னார் – வாழ வழியின்றி வெளிநாடு சென்றோர் சிந்திய கண்ணீர்தான் கடல்நீரை உப்பாக்கி விட்டது” என்று. இன்று என்ன நிலை? உலக நாடுகளில் எல்லாம் தமிழர் பட்டங்கள் பெற்று உயர் தொழிற்சாலைகளில் – கணினியியல் பொறியாளர்களாக – மருத்துவர்களாக விளங்கு
வதும் – தமிழ்நாட்டுப் படித்த இளைஞர்களால் உலக நாடுகளின் தொழில்நுட்ப நிறுவனங்கள் நடத்தப்படுவதும் அதிகரித்து வருகிறது.

சுயமரியாதை இயக்கம் தோன்றியபோது பொட்டுப் பூச்சிகளாய் புன்மைத் தேரைகளாய் இருந்த மக்கள் – திராவிட இனம் – இன்று கல்வி, அறிவியல், சமூகநீதி எனும் ஏணிப்படியால், ஆங்கிலம் எனும் அறிவியல் மொழியால் விண்ணைத் தொட்டு நிற்கிறது. சுயமரியாதை இயக்கம் – திராவிட மாடல் ஆட்சி சுயமரியாதை இயக்கக் கொள்கைகளைச் சட்டமாக்கி, சரித்திரப் புகழ் பெறுகிறது.

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியாரின் படத்தை தமிழ்நாட்டு முதலமைச்சரை அழைத்து பல்கலைக்கழக வளாகத்தில் திறந்து வைத்துச் சிறப்படைகிறது. பெரியாரைச் சிறப்பிக்கிறது. நூற்றாண்டு சுயமரியாதை இயக்கத்திற்கு வேறென்ன சிறப்பு வேண்டும்!

சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டில் அதன் கொள்கை அகில இந்தியாவிலும் பரவுகிறது.

சுயமரியாதை இயக்கத்தின் தந்தை – உலகத் தலைவர் பெரியாரின் புகழ் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்திலும் – அய்.நா. மன்றத்திலும் கொடிகட்டிப் பறக்கிறது. |