Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

உள்ளங்கையில் உள்ள ரேகைகளைப் பார்த்து ஜோதிடம் சொல்லும் முறையும் உலகில் பெருவாரியாகக் காணப்படுகிறது.

கையில் உள்ள கோடுகள் இறைவனால் பதிவு செய்யப்பட்டவை என்ற நம்பிக்கையையும் மதவாதிகள் மக்கள் மத்தியில் பரப்பி வருகின்றனர்.

“நான் இக்கட்டுரையில் முன்னர் குறிப்பிட்ட படி அவரவருடைய வினைகளுக்குத் தகுந்த தலையெழுத்தை ஆணுக்கு வலது உள்ளங்கையிலும், பெண்ணுக்கு இடது உள்ளங்கையிலும் சுருக்கெழுத்துப் போன்ற ரேகைகளால் பொறித்துக் கடவுள் பிறக்கச் செய்கிறான்” என்று மதுரை ஆதீனகர்த்தர் கூறியுள்ளார்.

அதாவது, நாம் எப்படி வாழப்போகிறோம் என்ற விதியை கடவுள் கையில் ரேகையாகப் பதித்துள்ளான். அதைப் பார்த்து நம் வாழ்வு இப்படித்தான் இருக்கும் என்று அறிந்து கொள்ளலாம் என்பதே இதன் பொருள்.

ஆணின் தலையெழுத்தை ஆணின் வலக்கையிலும், பெண்ணின் தலையெழுத்தைப் பெண்ணின் இடக்கையிலும் ஆண்டவன் விதிக் கோடுகளாகப் பதிவு செய்துள்ளதாகக் கூறுகிறார். அப்படியென்றால் ஆணுக்கு இடது கையிலும், பெண்ணுக்கு வலது கையிலும் உள்ள கோடுகள் என்ன கோடுகள்?

விதிக் கோடுகள்தான் ரேகைக் கோடுகள் என்றால், இன்னொரு கையில் ரேகையே இருக்கக்கூடாது அல்லவா?

அது மட்டுமா, கால்களில் கூட ரேகைகள் உள்ளனவே!

ஆணிலும் சேராத, பெண்ணிலும் சேராத திருநங்கைளுக்கு விதிக்கோடு எங்கு பதிவு செய்யப்படுகிறது? பதில் சொல்வார்களா?

ஆணாக இருந்து பெண்ணாகவும், பெண்ணாக இருந்து ஆணாகவும் மாறுகிறார்கள். அவர்களுக்கு ரேகைக்கோடு எந்தக் கையில் பார்ப்பது?

மேலும், ரேகைக் கோடுகள் அடிக்கடி மாறிக் கொண்டிருக்கின்றன. ரேகைக் கோடுகள் விதிக் கோடுகள் என்றால் ஆயுள் முழுவதும் மாறாமல் அப்படியே அல்லவா இருக்க வேண்டும்?

எனவே, ரேகைக் கோடுகள் விதிக் கோடுகள் அல்ல, அவை நம் வாழ்வைக் காட்டக் கூடியவையும் அல்ல என்பது தெளிவாகிறது.

கைரேகைக் கோடுகள், உடல்கூறு, உடல் நலம் சம்பந்தப்பட்டவற்றை வேண்டுமானால் ஓரளவிற்குப் பிரதிபலிக்கலாமே தவிர விதியை, வாழ்வை அல்ல.

இராணுவத்தில் உள்ள சிப்பாய்கள் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கில் இறக்கிறார்கள். அப்படியென்றால் அவர்கள் அத்தனை பேர் கையிலும் உள்ள ஆயுள் ரேகை அன்றோடு அவர்கள் இறந்து போவதாகக் காட்டுமா?

இப்படி அறிவோடு சிந்தித்தால் இவற்றில் உண்மையில்லை என்பது எளிதில் விளங்கும்.

ஜோதிட பாதகங்கள்:

செவ்வாய் தோஷம்: ஒரு பெண்ணின் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருந்து விடுமானால் அந்தப் பெண்ணுக்கு அவ்வளவு எளிதில் திருமணமாவதில்லை. செவ்வாய் தோஷமுள்ள ஓர் ஆணைத் தேடி மணம் முடிக்க வேண்டும் என்று அலைவார்கள்.

இதனால், மற்ற பொருத்தங்களும் தகுதிகளும் பார்க்கப்படாமல் செவ்வாய் தோஷப் பொருத்தம் மட்டுமே பார்க்கப்பட்டு, தகுதியற்ற மாப்பிள்ளை அமைந்து விடுவதே அதிகம். செவ்வாய் தோஷமுள்ள ஆணின் நிலையும் இதுபோலத்தான்!

மூடநம்பிக்கையின் விளைவாய்ப் பார்க்க வேண்டிய பொருத்தங்கள் பார்க்கப்படாமல், தேவையற்ற பொருத்தத்தைப் பார்த்து வருத்தப்பட வேண்டி வருகிறது.  இக்காலத்தில் செவ்வாய் தோஷத்திற்கும் விளக்கஞ்சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.

செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு, செவ்வாய் தோஷம் இல்லாதவர்களைத் திருமணம் செய்தால் இரத்தப் பொருத்தம் சரியாய் அமைவதில்லை. ஆகவே, செவ்வாய் தோஷம் பார்ப்பது அறிவியல் சார்ந்ததுதான் என்கிறார்கள்.

ஒருவன் விபத்தில் சிக்கி, அவனுக்கு மற்றவர் இரத்தம் ஏற்றவேண்டி வரும்போது இரத்தப் பிரிவு (Blood Group) சரியாக இருக்கிறதா என்றுதான் பார்க்கிறார்களே தவிர, செவ்வாய் தோஷம் பார்ப்பதில்லை.

இரத்த உறவு என்பதில் உண்மையிருக்கு மேயானால், அது மற்றைய விலங்குகளுக்கும் பொருந்து
மல்லவா? அவை செவ்வாய் தோஷம் பார்த்தா உடலுறவு கொள்கின்றன? கற்பழிக்கிறவன், காதல் ஜோடிகள், விபசாரியிடம் போகிறவன் எல்லாம் செவ்வாய் தோஷமா பார்க்கிறான்?

அழகிய பெண்ணை அனுபவிக்க வாய்ப்புக் கிடைக்கிறவன் செவ்வாய் தோஷம் பார்த்துவிட்டுத்தான் உடலுறவு கொள்வேன் என்றா சொல்கிறான். கிடைத்தால் போதும் என்றல்லவா அலைகிறான்.

அங்கெல்லாம் வேலை செய்யாத அறிவியல் திருமண விஷயத்தில் மட்டும் வேலை செய்வதேன்?

இரத்தப் பொருத்தம் பார்க்க வேண்டும் என்பது சரியென்றால் அதற்குத் தோஷம் பார்க்க வேண்டாமே! திருமணம் செய்யப் போகிறவர்கள் எல்லோரும் மருத்துவரிடம் இரத்தப் பொருத்தம் பார்த்துக் கொள்ளலாமே!

அதுவும் ‘எய்ட்ஸ்’ போன்ற கொடுமையான நோய்கள் பரவியுள்ள இக்காலத்தில் இரத்தப் பரிசோதனை செய்தபின்பே திருமணப் பேச்சைத் தொடங்கலாமே!

செவ்வாய் தோஷம் இல்லாதவர், செவ்வாய் தோஷம் உள்ளவரை மணந்தால், இல்லாதவர் இறந்து போவார் என்பது நம்பிக்கை.

ஒருவனுடைய ஜாதகத்தில் 80 வயது வரை வாழ்வான் என்று உள்ளது. அவன் செவ்வாய் தோஷம் இல்லாதவன்; அவனுக்குச் செவ்வாய் தோஷமுள்ள பெண்ணை மணம் முடித்தால் அவன் எப்படி அற்ப ஆயுளில் இறக்க முடியும்?

பெண்ணின் ஜாதகத் தோஷம் இவனைப் பாதிக்கிறது என்றால், இவனுடைய ஜாதகப் பலன் என்னாவது? இதில் வேறு ‘மெகாவாட்’ வித்தியாசம் உண்டா? செவ்வாய் தோஷம் 1000 வாட், மற்ற ஜாதகம் 500 வாட்டா?

இதிலே இரண்டில் செவ்வாய் என்றால் தாய்க்கு ஆகாது; 4இல் செவ்வாய் இருந்தால் மாடு, மனை, வாகன நஷ்டம்; 7இல் செவ்வாய் இருந்தால் மனைவிக்குப் பாதிப்பு என்று கிளை விதிகள் வேறு – செவ்வாய் தோஷம் இரத்த சம்பந்தமான காரணங்களால் பார்க்கப்படுகிறது என்ற வாதம் இதில் அடிபட்டுப் போகிறது. மாட்டு இரத்தத்திற்கும் மனித இரத்தத்திற்கும் என்ன தொடர்பு? வீடு, வாகனத்திற்கு ஏது இரத்தம்?

அதிலும் சூரியன் இருந்தாலும் அவன் பார்வை பட்டாலும் நிவர்த்தி; சனிப் பார்வை இருந்தால் நிவர்த்தி; இப்படி ஏகப்பட்ட விதிவிலக்குகள் வேறு. இவையெல்லாம் எதற்கு? ஒத்துவராதபோது சமாளித்துக் கொள்வதற்
காகத்தானே?

கேட்டையும் மூலமும்:

அதேபோல் கேட்டை நட்சத்திரம், மூல நட்சத்திரம், அனுஷம், பூரம் இவற்றில் பிறந்தவர்களும் படாதபாடு படவேண்டுமாம்! காரணம், இவையெல்லாம் கெடுதலான நட்சத்திரங்களாம்! கேட்டையில் பிறந்த பெண்ணைக் கேட்டவர்கள் இறந்து போவார்கள்; மூல நட்சத்திரம் மிகவும் கெட்டது; புகுந்த இடம் நாசம் என்று எழுதிவைத்து எவ்வளவோ பேர்களின் வாழ்வைப் பாழாக்குகின்றனர்.

அதிலும் கடகம், கன்னி, ரிஷபம், விருச்சிகம்,
தனுசு, கும்பம் இவற்றை ஜென்ம லக்னமாகப் பெற்றவர்களுக்கு எந்த தோஷங்களும் அண்டா
தாம். இப்படி ஏகப்பட்ட துணைவிதிகள்! விதிவிலக்குகள்! எனவே, எப்படி வேண்டு
மானாலும் சொல்லலாம், அதுதான் ‘ஜாதகம்’!

எதிர்காலம் பாழாதல் :

சிலர் இந்த ஜோதிட நம்பிக்கையால் தங்கள் வாழ்வைப் பாழடிப்பதோடு, தங்களின் குழந்தைகளின் வாழ்வையும் பாழடிக்கின்றனர்.

இப்படித்தான் தங்கள் வாழ்வு என்று நம்பி, அதற்குள் முடங்கிப் போகிறார்கள். முன்னேற வேண்டும் என்ற ஊக்கமும் உற்சாகமும் குறைந்து போகிறது.

பிள்ளைகளைப் படிக்க வைக்கக் கூட ஜோதிடம் பார்க்கின்றனர். ஜோதிடன் படிப்பு வராது என்று சொல்லிவிட்டால், அத்தோடு படிக்க வைக்காமல் விட்டு விடுகிறார்கள். அவனைப் படிக்க வைத்திருந்தால் அவன் பிற்காலத்தில் ஏதாவது ஒரு துறையில் வல்லுநராகக்கூட வந்திருப்பான்!

இங்கு என் வாழ்வையே உதாரணமாகக் காட்ட விரும்புகிறேன்.

எனக்கு அப்போது வயது பதினாறு. நான் கல்லூரியில் புகுமுக வகுப்பில் (P.U.C.) சேர்வதற்காக வீட்டில் கலந்து பேசிக் கொண்டிருந்தோம். அப்போது ஒரு ஜோதிடர் தற்செயலாக வந்தார்.

என் கையைக் காட்டச் சொன்னார், காட்டினேன், என் கை ரேகையைப் பார்த்தார்.

“‘தம்பிக்கு அவ்வளவாகப் படிப்பு வராது. மேற்படிப்புக்கு உரிய அறிகுறிகள் இல்லை. இரும்பு சம்பந்தமான வியாபார வாய்ப்புத்தான் இருக்கிறது” என்றார்.

ஆனால், நான் தொடர்ந்து படித்தேன். படித்து அதன் அடிப்படையில் வேலை ஏற்றுத்தான் வாழ்க்கை நடத்துகிறேன். வியாபாரம் எதுவும் நான் செய்யவில்லை. எனவே, ஜோதிடர் கூறுவதற்கும் வாழ்க்கைக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை.

சிலர் தொழில் தொடங்க, ஒரு செயலில் ஈடுபட ஜோதிடம் பார்த்து, ஆலோசனை பெற்றுச் செயல்படுகிறார்கள். ஜோதிடர் தாறுமாறாகக் கூற, யோசனை பெற்றவரின் வாழ்க்கையே மாறி விடுகிறது; பெரிதும் பாதிக்கப்படுகிறது.

அரசியல்வாதிகள் பலர், இன்றைக்கு ஜோதிடப் பித்தர்களாக இருந்து நாட்டையே பாழடிக்கின்றனர்; நாட்டையே ஜோதிடர்கள் நடத்தும் நிலை வந்து விடுகிறது.

சந்தர்ப்பம், சூழல், வாய்ப்பு இவற்றைப் பரிசீலிப்பதற்குப் பதிலாகக் கிரகம், பெயர்ச்சி, திசை என்று பல்வேறு மூடநம்பிக்கையில் சிக்குண்டு, அதற்கேற்ப ஆட்சி நடவடிக்கை
களையே மேற்கொண்டு, நாட்டின் வளர்ச்சியைப் பாழடிக்கின்றனர்.

ஜோதிட மோசடி குறித்தும், ஜோதிடம் உண்மையல்ல என்பது குறித்தும் இவ்வளவு கூறிய பின்னும், ஜோதிடத்தில் இன்னும் யாருக்கேனும் நம்பிக்கை இருப்பின் அவர்களுக்
காகக் கீழ்க்கண்டவற்றைக் கூற விரும்புகின்றேன்.

சுனாமியில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் இறந்தார்களே… அவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் அன்றைக்கு இறக்க வேண்டும் என்று ஜோதிடத்தில் குறிப்பு இருந்திருக்குமா? இருந்திருக்கத்தான் முடியுமா?

ஏதாவது ஓரிடத்தில் இருக்கிற பத்துப் பேரின்ஜாதகத்தைப் பார்த்தால்கூட ஒவ்வொருவரும் வெவ்வேறு காலத்தில் இறப்பார்கள் என்றுதான் ஜோதிடம் சொல்லும். அப்படியிருக்க ஆயிரக்கணக்கானவர்கள் எப்படி ஒரே நேரத்தில் இறந்தனர்?

சில ஆண்டுகளுக்கு முன் வட இந்தியாவில் ஓர் இரயில் விபத்து ஏற்பட்டது. ஆற்றுப் பாலத்தின் மேல் இரயில் சென்று கொண்டிருந்த போது, அந்த இரயிலின் கடைசி இரண்டு பெட்டிகள் தடம் புரண்டு ஆற்றில் விழுந்தன. இந்த இரண்டு பெட்டிகளில் இருந்த நூற்றுக்கணக்கானவர்கள் நீரில் மூழ்கி இறந்து போயினர். அவர்களுள் முதல் நாள் திருமணம் செய்து கொண்ட 2 புதுமணத் தம்பதிகள் உட்பட பலர் இருந்தனர்.

தமிழ்நாட்டைவிட வட இந்தியர்கள் ஜோதிடம் அதிகம் பார்க்கக் கூடியவர்கள். அதுவும், திருமணம் செய்வதற்கு முன், கட்டாயம் ஜோதிடம் பார்த்து, ஆயுட்காலம், பொருத்தம் எல்லாம் ஜாதகமாக இருந்தால்தான் மணம் முடிப்பார்கள்.

அப்படியெனில், ஆற்றில் மூழ்கி ஒரே நேரத்தில் இறந்துபோன புதுமணத் தம்பதிகளின் பெற்றோர்களும் ஜோதிடம் பார்த்து, நீண்ட நாட்கள் நலமாக இருப்பார்கள் என்று ஜோதிடன் சொன்ன பிறகுதானே திருமணம் முடித்திருப்பார்கள்?

நீண்ட காலம் வாழ்வார்கள் என்று ஜோதிடனால் சொல்லப்பட்ட தம்பதிகள் எப்படித் திருமணமான மறுநாளே இறந்தார்கள்? மறுநாளே இறந்து விடுவார்கள் என்று ஒரு ஜோதிடன் கூடச் சொல்லியிருக்க மாட்டானே?

எனவே, ஜோதிடத்திற்கும் வாழ்விற்கும் சம்பந்தமில்லை என்பது தெளிவாகிறது.

அண்ணன், தங்கை என்ற விவரத்தைச் சொல்லாமல், அவர்கள் ஜாதகத்தைக் கொடுத்தபோது, திருமணப் பொருத்தம் பிரமாதமாக உள்ளது என்று ஜோதிடர் சொல்கிறார்!

இறந்துபோன இளைஞன் ஒருவனின் சாதகத்தைக் கொடுத்துப் பார்க்கச் சொன்னால், இன்னும் 60 ஆண்டுகள் உயிருடன் வாழ்வான் என்று அடித்துச் சொல்கிறார் ஜோதிடர்!

பெண் கன்றுக்குட்டி பிறந்த நேரத்தைக் குறித்துக் கொடுத்து, ரேவதி என்று பெயரையும் சொல்லி ஜோதிடம் பார்க்கச் சொன்னால், அரசு உத்தியோகத்தில் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுவாள் என்கிறார் ஜோதிடக்காரர்.

இன்னும் நம்புகிறீர்களா ஜோதிடம் உண்மையென்று?

அன்றாடம் செய்தித்தாள்களில் வரும் ராசிபலன், மற்றும் வாரம் ஒருமுறை வரும் இராசிபலன் இவற்றை எடுத்து ஆராய்ந்து பார்த்தால் இவை எவ்வளவு மோசடி என்பது விளங்கும்.

பத்துச் செய்தித்தாள்களை எடுத்து, ஏதாவது ஒரு ராசிபலனை ஒப்பிட்டுப் பாருங்கள்; ஒவ்வொரு பத்திரிகையிலும் ஒவ்வொரு பலன் சொல்லியிருப்பார்கள். நான்கைந்து வாரம் சோதித்துப் பாருங்கள். நான் சொல்லும் உண்மை நன்கு விளங்கும்.

ஜோதிடம் எவ்வளவு பெரிய மோசடி என்பதற்கு இதுவே சரியான சான்று!

(தொடரும்…)