நாட்டில் எந்தவித உல்லாச விடுதிகளும் நடக்கக் கூடாது என்று உத்தரவிட்டார். பிறந்தநாள் கொண்டாட் டங்களுக்குத் தடை விதித்தார். பிறரிடமிருந்து பரிசுப் பொருள்கள் வாங்குவதை அறவே தவிர்த்தார். ஆண்கள் தாடி, மீசை வைப்பதற்குக் கூட கட்டுப்பாடுகள் விதித்தார்.
உதடுகள் தெரியும்படி மீசை இருக்க வேண்டும். அப்பொழுதுதான் இறைவன் பெயரை உச்சரிக்கும்போது தடையிருக்காது என்பது அவர் எண்ணம். மதுவை வெறுத்தவரான அவர் தன் பேரரசில் மது உற்பத்தி, விற்றல் ஆகியவற்றைத் தடை செய்தது அவரது அரசாங்கம். கஞ்சா போன்ற போதைப் பொருட்களை பயன்படுத்தினால் கடுமையான தண்டனை வழங்கினார்.
இவை அனைத்திற்கும் அடிப்படைக் காரணம் மக்கள் ஒரு ஒழுங்கான வாழ்க்கை அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில்தான். அதைவிட முக்கியமான சீர்திருத்தங்களாக அவர் செய்தது, தன் பேரரசிலும், தன் கீழ் இருந்த இராஜபுத்திரர்கள் நாடுகளிலும் “சதி” என்ற உடன்கட்டை ஏறும் வழக்கத்தை தடை செய்தார்.
ராஜபுத்திரர்கள் அந்தக் கொள்கைக்கு எதிராக பேரரசரிடம் பெரிய அளவில் விவாதித்தனர். ஆனால் பேரரசர் அதற்கு இணங்கவில்லை. விதவைகள் மறுமணம் செய்து கொள்வதை ஆதரித்தார். அளவுக்கு அதிகமான கட்டுப்பாடுகள், சனாதனத்திற்கு எதிரான கொள்கைகள் அவரை ஒரு கொடுங்கோலராகச் சித்தரிக்க வேத விற்பன்னர்களுக்கு ஒரு வாய்ப்பாக அமைந்து விட்டது என்பது உங்களுக்குத் தெரியுமா?

அவ்ரங்கசீப் இந்துக்களுக்கு “ஜிஸியா” என்ற தலைவரி
விதித்ததைப் பற்றி வரலாற்று ஆசிரியர்கள் பெரிதாகக் குறிப்பிடுகிறார்கள். பேரரசில் வாழும் பிற மக்களின் பாதுகாப்புக்காக ஆகும் செலவினங்களுக்காக இந்த வரி விதிக்கப்பட்டதாக பேரரசர் அறிவித்தார். இது இந்து மக்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.ஆனால். முதியோர், பிச்சைக்காரர்கள், ஊனமுற்றோர், துறவிகள், கிறிஸ்துவ குருமார்கள், குழந்தைகள் முக்கியமாக பார்ப்பனர்களுக்கு இந்த வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. ஜிஸியா வரியைப் பற்றி இவ்வளவு பேசுகின்ற வரலாற்று ஆசிரியர்கள் அவ்ரங்கசீப்பின் மற்ற வரி விதிப்புக் கொள்கைகளைப் பற்றி அதிகம் பேசவில்லை.
வரிவிலக்கு
பேரரசர் அவ்ரங்கசீப், இந்துக்கள் தீபாவளியன்று வீடுகளில், வீதிகளில் கோவில்களில் வரிசையாக விளக்குகள் ஏற்றுவர். இதற்கு வரி விதிக்கப்பட்டிருந்தது.இது இந்துக்களுக்கு மட்டுமல்ல. ஷியா முஸ்லிம்களும் முகரம் பண்டிகையின் போது விளக்குகள் ஏற்றும் வழக்கம் வைத்திருந்தனர்.அரசு அதற்கு வரி விதித்திருந்தது. அவ்ரங்கசீப் அந்த வரியை நீக்கினார்.
முகலாயர்கள் ஆட்சியில் கங்கை நதியில் நீராட வரி விதிக்கப்பட்டது. அதே போல் இறந்தவர்களின் அஸ்தியைக் கங்கையில் கரைக்க இந்துக்கள் வரி செலுத்த வேண்டியிருந்தது.அவ்ரங்கசீப் இந்த வரிகளை இனிமேல் கட்ட வேண்டியதில்லை என்று உத்தரவு பிறப்பித்தார். நதிகளில் மீன் பிடிப்பவர்களுக்கு வரி, பால் கறந்து விற்பவர்களுக்கு வரி, காய்கறிகள் விற்பவர்களுக்கு வரி, வரட்டியைத் தட்டி விற்பவருக்கும் வரி என்று மக்கள் மீது வரி விதிப்புத் தாக்குதல்கள் பல வகையிலும் நடந்தன. அவை அனைத்தையும் பேரரசர் அவ்ரங்கசீப் நீக்கி அதற்கெல்லாம் இனிமேல் வரி கட்ட வேண்டியதில்லை என்று ஆணையிட்டார்.கோவில் திருவிழாக்களின் போது வணிகர்கள் போடும் சந்தை கடைகளுக்கு வரி செலுத்த வேண்டும். அதையும் நீக்கினார் பேரரசர்.இது போன்று வரிகளை நீக்கியது பொது மக்களுக்கும், வணிகர்களுக்கும் பெரிய ஆறுதலையும், மகிழ்ச்சியையும் தந்தது.
மதம் சார்ந்த கொள்கை முடிவுகள்:
அவ்ரங்கசீப் மற்ற மதத்தினரை முக்கியமாக (இந்து?)க்களைக் கொடுமைப்படுத்தியதாகக் கூறப்படுவது உண்மையில்லை தன் கீழ் பணியாற்றிய வாரணாசி கவர்னருக்கு அவ்ரங்கசீப் ஓர் உத்தரவிட்டுள்ளார்.(Maasir | Alamgiri – அவ்ரங்கசீப்பின் அதிகாரபூர்வ அவைக்குறிப்பு, 15th of Jumada A.H.1069 “நமது பேரரசில் வாழும் அனைத்து நிலை மக்களின் நலனுக்காகவும், நமது மத விதிகளின்படியும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. புராதனக் கோயில்கள் எல்லாம் அப்படியே இருக்கட்டும்.
புதிய கோயில்கள் கட்ட அனுமதிக்க வேண்டாம். வாரணாசியிலும், அதைச் சுற்றியுள்ள சில பகுதிகளிலும், இந்துக்கள் வாழ்விடங்களிலும், கோயில்களிலும் துன்புறுத்தப்படுவதாகக் கேள்விப்பட்டேன். இந்த உத்தரவு உங்கள் கைக்குக் கிடைத்ததும், இது போன்ற செயல்கள் தொடராமல் உடனடி நடவடிக்கை எடுக்கவும். இறைவனை அமைதியாக வழிபடும் யாருக்கும், எந்தத் தொந்தரவும் இருக்கக் கூடாது” என்பதே அந்த உத்தரவு. சைவ சமயத்தைப் பரப்பியவர்களில் (அந்தக் காலகட்டத்தில் “இந்து” என்ற சொல்லோ, மதமோ கிடையாது. சைவம், வைணவம் என்றேதான் இருந்தது.) குமரகுருபரர் என்பவர் முக்கியமானவர்.(1625–1688)
அவ்ரங்கசீப் காலத்தில் சைவ சமயத்தைப் பரப்பியவர்களில் முக்கியமானவர் அவர். குமரகுருபரர் காசியில் சைவ மடங்களை நிறுவ அரசு நிலங்களை இலவசமாக வழங்கியவர் அவ்ரங்கசீப். அதேபோல் பல சைவ, வைணவக் கோயில்களுக்குள் மானியங்கள் அவர் வழங்கியதற்கான குறிப்புகளும் உள்ளன. மற்ற மதத்தினரை அவ்ரங்கசீப் எப்படி நடத்தினார் என்பதற்கு எடுத்துக்காட்டான நிகழ்வுகள் இவை.
கோயில்களை இடித்தாரா?
சைவ, வைணவக் கோயில்களை இடிக்கச் சொல்லி அவ்ரங்கசீப் உத்தரவிட்டார் என்று ஒரு பரப்புரை அவருக்கு எதிராகச் செய்யப் படுகிறது. ஆனால், அதுபோன்று எதுவும் நிகழவில்லை என்பதே உண்மை. மற்ற மத வழிபாட்டுத் தலங்களை இடிக்க வேண்டாம் என்று அவர் கூறியது உண்மை. ஆனால், தனது ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் பழைய வழிபாட்டுத் தலங்களை அழிக்க வேண்டாம் என்ற அவ்ரங்கசீப், புதிய வழிபாட்டுத் தலங்களைக் கட்ட அனுமதியில்லை என்ற உத்தரவைப் பிறப்பித்ததுதான் உண்மை. ஆனால், டில்லியைச் சுற்றியுள்ள மசூதிகளை அவர் புதுப்பித்தார். (டில்லியைச் சுற்றியுள்ள 600 மசூதிகளை அவர் புதுப்பித்ததாக ஒரு குறிப்பு காணப்படுகிறது. இந்த வரலாற்றுக் குறிப்புகளிலிருந்து தெரிகின்ற செய்தி என்னவென்றால், அவர் மதத்தின் மீது ஆழ்ந்த பற்று வைத்திருந்த அவர், மற்ற மதத்தினரை அவர் தொல்லைப்படுத்தவில்லை என்பதே உண்மை.
வாராணாசி விஸ்வநாதர் கோயிலை இடித்தது ஏன்?
வாரணாசிக்கு அய்ந்து மைல்களுக்கு முன்பே தன் பரிவாரங்களோடு கூடாரமிட்டு அவ்ரங்கசீப் தங்கினார். இந்து மன்னர்களின் ராணிகள் காசி, கங்கையில் நீராடி விட்டு விஸ்வநாதரைத் தரிசிக்கச் சென்று அந்த வழிபாடு முடியும் வரை பொறுமையாகக் காத்திருந்தார் ஆலம்கீர் அவ்ரங்கசீப்.அப்பொழுது அவருக்கு ஓர் அதிர்ச்சியூட்டும் தகவலும், கோரிக்கையும் வந்தது. கங்கையில் குளித்து விட்டு, விஸ்வநாதரைத் தரிசிக்கச் சென்ற ராணிகள் எல்லோரும் திரும்பி விட்டனர், ஒருவரைத் தவிர.
அவர் “கட்ச்” தேசத்து ராணி. மிகவும் அழகான அவர் விஸ்வநாதரை வணங்கச் சென்றவர் திரும்பி வரவேயில்லை. அவரைக் கண்டுபிடித்துக் கொடுக்கும்படி பேரரசரிடம் கோரிக்கை வந்தது. அவர் தன் படை வீரர்களை அனுப்பி அரசியைத் தேடச் சொன்னார். அவர்கள் தேடிச் சென்ற போது கட்ச் ராணி கோயிலின் கருவறைக்குக் கீழே மிகவும் அலங்கோலமான நிலையில் அழுது கொண்டிருந்தார்.
அவரைப் பாலியல் வன்முறை செய்து அலங்கோலமாக்கியவர்கள் கோயிலின் தலைமை அர்ச்சகப் பார்ப்பனரும், அவரின் சீடர்களும்! இந்தச் செய்தி அவ்ரங்கசீப்பின் காதுகளுக்கு எட்டியது. ஒழுக்கத்தில் மிகவும் கண்டிப்பான அவர் கடும் கோபம் கொண்டார்.இந்த இழி செயலால் பார்ப்பனர்கள் கோயிலின் புனிதத்தையே (அதுவும் விஸ்வநாதரின் சிலை அமைந்திருந்த இடத்திற்கு நேர் கீழே) கெடுத்து விட்டார்கள் என்று கூறி, அந்த அர்ச்சகப் பார்ப்பனர்களுக்குக் மரண தண்டனை விதித்தார்.
அந்தக் கோயிலையும் இடிக்க உத்தரவிட்டார். அந்தக் கோயிலை இடித்ததைப் பற்றி பெரிதாகப் பேசும் சங்கிக் கூட்டங்கள், நடந்த அக்கிரமத்தைப் பார்ப்பனர்கள் செய்ததால் அதை வெளியிடாமல் இருட்டடிப்புச் செய்து விட்டனர் என்பது உங்களுக்குத் தெரியுமா? (அன்று கருவறைக்குக் கீழ் தொடங்கிய பார்ப்பனர்கள் வன்புணர்வு அக்கிரமம் இன்று வரை காஞ்சிபுரம் மச்சேசுவர் கோயில் அர்ச்சகன் தேவநாதன் முதல் திருவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் அர்ச்சகன் வரை நீள்கிறது!
[“முகலாயர்கள்” by முகில், பக்கம் 310, 311]
(நிறைவு…)





