Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

கார்ப்பரேட் சுரண்டலில் இருந்து தங்கள் கலாச்சாரத்தைப் பாதுகாக்கப் போராடும் லடாக்!

சீன இந்திய எல்லைப்பகுதி பரந்து விரிந்துள்ளது லடாக் பகுதி, ஜம்மு காஷ்மீர் பகுதியை விட அதிகப் பரப்பளவு கொண்ட பகுதி இது. இங்கு வாழும் மக்களில் 95 விழுக்காட்டினர் பழங்குடி மக்கள். அதிலும் பெரும்பாலானோர் பவுத்த மத்த்தை சார்ந்தவர்கள்.

ஜம்மு-காஷ்மீரின் ஒரு பகுதியாக இருந்த லடாக், மோடியின் பாசிச அரசால் கடந்த 2019இல் ஜம்மு-காஷ்மீரின் 370ஆம் சட்டப்பிரிவை நீக்கி சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தபோது, தனியாகப் பிரிக்கப்பட்டு யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது. லடாக் தனியாகப் பிரிக்கப்பட்டதை லடாக் மக்கள் அப்போது வரவேற்றார்கள்.

பிரிக்கப்பட்ட லடாக் தனி யூனியன் பிரதேசத்தில் 95 விழுக்காடு மலைவாழ் மக்கள் உள்ளதால், பழங்குடி மக்களுக்கான சிறப்பு அதிகாரங்களை வழங்கும் இந்திய அரசமைப்பின் 6ஆம் அட்ட
வணையில் சேர்க்க வாய்ப்புள்ளதால் அதன்மூலம் தங்களுக்குச் சிறப்பு அதிகாரங்கள் கிடைக்கும் என்று நம்பினார்கள். ஆனால், நடந்தது என்ன?

மோடியின் அரசு அவர்களை வஞ்சித்து, கார்ப்பரேட் கொள்ளையர்களின் லாப வேட்டைக்கு லடாக் பிரதேசத்தை கொஞ்சம் கொஞ்சமாகத் தாரை வார்த்து வருகிறது.

இந்தக் கைங்கர்யத்தை ,மலையக வளர்ச்சிக் குழுவில் (Hills Development Council) பாஜக தங்களது கட்சி ஆட்களை நிரப்பி, கார்ப்பரேட் கொள்ளையை மோடி அரசு நடத்துகிறது. இதன் பொருட்டே இப் பகுதிக்குச் சட்டமன்றத் தகுதி வழங்குவதோ, ஆறாம் அட்டவணையின் பாதுகாப்பை வழங்குவதோ மத்திய அரசுக்கு வேப்பங்காயாகக் கசக்கிறது.

லடாக் பகுதிக்கு மாநில அந்தஸ்து கோரியும், அரசியலமைப்புச் சட்டம் அட்டவணை ஆறில் லடாக்கை இணைக்கக் கோரியும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயல்பாட்டாளர் சோனம் வாங்சுக் இரண்டு வார காலமாக உண்ணாவிரதம் இருந்தார். இவர் ராமன் மக்சாசே விருது பெற்றவர். இது மக்களிடம் பெரிய ஆதரவைப் பெற்றது. இதைத் தொடர்ந்து கடந்த 24.09.2025 “லெ அபெக்ஸ் பாடி” என்ற லடாக் மக்கள் கூட்டமைப்பு முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்தது. இதுதான் மாபெரும் மக்கள் போராட்டமாக வெடித்துள்ளது.

இந்தப் போராட்டத்தின் மீது போலீசார் நடத்திய தாக்குதலில் இதுவரை பலர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 60 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்தப் போராட்டத்தில் லடாக் மலைப் பகுதி மேம்பாட்டு தன்னாட்சி ஆணைய அலுவலகம் மற்றும் பி.ஜே.பி. அலுவலகம் சூறையாடப்பட்டு, தீ வைக்கப்பட்டுள்ளது. இப்போராட்டத்தை வன்முறை என்று ஆளும் வர்க்க ஊடகங்கள் பொய்ப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இது ஒரு வரலாற்று மோசடி.

ஆனால், ஒன்றிய மோடி அரசின் அதிகாரிகளால், ராணுவத்தினால் ஒடுக்கு முறைக்கு உள்ளாக்கப்பட்டு உரிமைகள் பறிக்கப்படுவதை கண்முன்னே கண்டனர். அதன் பிறகு 2021 இல் இருந்தே தங்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், வெளி மாநிலத்தவர்கள் யாரும் லடாக்கில் நிலம் வாங்காத வண்ணம் தங்களுடைய இயற்கை வளங்களைப் பாதுகாக்கக் கோரியும் தொடர்ந்து போராடி வருகின்றனர். மாநில அந்தஸ்து மற்றும் அரசியலமைப்புச் சட்டம் அட்டவணை ஆறில் சேர்க்கக் கோருவதன் மூலம் 370ஆம் பிரிவுக்கு நிகராக தங்கள் உரிமைகளைப் பாதுகாக்க முடியும் என்ற அடிப்படையில் லடாக் மக்கள் போராடி வருகின்றனர்.

அம்பானி, அதானி கார்ப்பரேட் கும்பலுக்கு ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் மக்களின் நிலங்களை வாரிக் கொடுப்பதற்காக மாநில அந்தஸ்து கொடுக்காமலும் அரசியலமைப்புச் சட்டம் அட்டவணை ஆறில் சேர்க்காமலும் ஒன்றிய மோடி அரசு ஒடுக்கு முறைகளைத் தொடர்ச்சியாக ஏவி வருகிறது. மோடி, அமித்ஷா கும்பலின் இத்தகைய பாசிச ஒடுக்கு முறைகளை உறுதியான மக்கள் போராட்டங்களின் மூலமாகத்தான் முடிவுக்குக் கொண்டு வர முடியும் என்ற உண்மை நம் கண் முன்னே உள்ளது.

லடாக் மக்களின் உரிமைக்கான கோரிக்கைகள் வெற்றி அடைய ஜனநாயகத்தைப் பாதுகாக்க விழையும் அமைப்புகள் துணை நிற்போம்! |