Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

இயக்க வரலாறான தன் வரலாறு – 368 – கி.வீரமணி

நடிகவேள் எம்.ஆர்.ராதா, பாவலர் பாலசுந்தரம் இருவருக்கும் நூற்றாண்டு விழா!

பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் பணியாளர் மேம்பாட்டுத் திட்டத்தின் சார்பில் புதுடெல்லி அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழக உதவியுடன் தொழில்நுட்பக் கல்வியின் ‘தொழில் முனைவோர் மேம்பாடு’ மற்றும் ‘கருவி இயல் 3 டி ஸ்டுடியோ மேக்ஸ் மூலம் மாடலிங் அண்ட் அனிமேஷன்’ ஆகிய தலைப்புகளில் ஒரு வாரம் நடைபெற்றது அதன்  தொடக்க விழாவில் தலைமையேற்று உரையாற்றினோம்.

இப்போது வாழ்கின்ற அறிவு யுகத்தில் அனைவரும் தொழில்நுட்ப அறிவைப் பெறவேண்டும் என்றும், அந்தத் தொழில் நுட்பத்தால் நமது வாழ்க்கை முறை எளிமையாக்கப்படும் என்றும், ஒரு ஆசிரியர் என்பவர் ஒரு முன்னேறிய மாணவர்தான்; புரட்சிமூலம் “காகிதம் இல்லா நிருவாகத்தை” நம்மால் நடத்திட முடியும் என்றும் கூறினார். அமெரிக்க கம்ப்யூட்டர் நிறுவனக் கோடீஸ்வரர் பில்கேட்ஸை உதாரணமாகக் குறிப்பிட்டோம்.

சென்னையில் ரூ 1.11.2007 அன்று காலை 10 மணிக்கு தாஜ் கன்னிமாரா ஓட்டலில் மறைந்த பகுத்தறிவாளர் பொறியாளர் சோ. ஞானசுந்தரம் – மீனா ஆகியோரின் செல்வன் பாலாஜிக்கும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த செல்வி அமரீத் அவர்களுக்கும் வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த விழாவினை நடத்தி வைத்து வாழ்த்துரை வழங்கினோம்.

ஈழத் தமிழர்களை தனது ராணுவம் மூலம் கொன்று குவித்து வந்த சிங்கள அரசின்  படுகொலைகளைக் கண்டித்து வந்த நிலையில் ஒரு பேரதிர்ச்சி நம்மைத் தாக்கியது.  3.11.2007 அன்று இலங்கை விமானப்படையின் குண்டுவீச்சில் விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு பொறுப்பாளர் சுப.தமிழ்ச்செல்வனும், லெப்டினன்ட் கர்னல் அன்புமணி (எ) அலெக்ஸ், மேஜர் முகுந்தன், கேப்டன் நேதாஜி, லெப்டினன்ட் ஆட்சிவேல், வாகைக்குமரன் ஆகிய தளபதிகளும் கொல்லப்பட்டனர் என்ற செய்தி தமிழர்களுக்கு மட்டுமல்ல, மனிதாபிமானம் கொண்ட அனைவருக்கும் நெஞ்சுருக்கும் செய்தியாகும்!

அரசியல் மேதை ஆன்டன் பாலசிங்கம் மறைந்த நிலையில், தமிழ்ச்செல்வன் அவ்விடத்தைப் பெரும் அளவில் நிரப்பி, விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைசிறந்த பேச்சாளராகவும், சிந்தனையாளராகவும், அமைதிக் குழுவிடம் அடக்கத்தோடும், உறுதியோடும் தமது உரிமைகளை எடுத்து வைத்துப் பேச்சுவார்த்தைகளைத் திறம்பட நடத்தியவர்!

முன்பு ஒரு முக்கியக் கட்டத்தில் தளபதி கிட்டுவையும். மற்ற முன்னணியினரையும் இழந்த கொடுமைக்கு இயற்கை அவர்களை ஆளாக்கியது.

அதன்பிறகு ஆன்டன் பாலசிங்கம் மறைவு, ஓர் ஈடு செய்ய இயலாத இழப்பாகும். அவருக்கு வீரவணக்கச் செய்தியை அறிக்கையாக வெளியிட்டோம். அந்த அறிக்கை கனடா நாட்டில் இயங்கும் உதயம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. மாவீரன் தமிழ்ச்செல்வன் மறைவுக்கு கலைஞர் அவர்கள் ஒரு கவிதை எழுதினார். அதற்காக அந்தக் கவிதைக்கு உள்நோக்கம் கற்பித்த எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா அவர்கள் கலைஞர் ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதற்குப் பதிலடி தந்து இரங்கல் செய்தியைக் கூட உள்நோக்கம் கொண்டு கற்பிக்கும் இழிவான செயலைக் கண்டித்தோம். அந்த அறிக்கையில் மனத்தாலும் இனத்தாலும் ஒன்றுபட்டவர் கலைஞர் என்றும் விளக்கியிருந்தோம்.

கொரட்டூரில் 04.11.2007 அன்று காலை நடைபெற்ற மடிப்பாக்கம் பெரியார் பெருந்தொண்டர் வேலாயுதம் (இன்றைய சோழிங்கநல்லூர் மாவட்டத் தலைவர் வே.பாண்டு, வே.பன்னீர்செல்வம். ஆகியோரின் தந்தையார்) படத்திறப்பு விழாவில் பங்கேற்று உரையாற்றினோம்.

புதுப்பேட்டையில் 5.11.2007 அன்று நடைபெற்ற சுப.தமிழ்ச்செல்வன் படுகொலை வீரவணக்கப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினோம். பேராசிரியர் சுப. வீரபாண்டியன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் நம்முடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் தொல்.திருமாவளவன் செஞ்சி ராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினர் பண்ருட்டி தி.வேல்முருகன்  ஆகியோர் உரையாற்றினர்.

சேது சமுத்திரக் கால்வாய்த் திட்ட விழிப்புணர்வுப் பிரச்சாரப் பயணத்தின் இரண்டாம் கட்டப் பயண நிறைவு விழா 6.11.2007 அன்று வேலூரில் நடைபெற்றது. அதில் பங்கேற்றுச் சிறப்புரையாற்றினோம். அக்டோபர் 31இல் திருத்தணியில் இருந்து ஒரு குழுவும் கோவையில் இருந்து ஒரு குழுவும் தொடர்ச்சியாக பல்வேறு இடங்களில் பிரச்சாரம் செய்து வேலூரில் நிறைவு செய்தன. இதற்கு முன்பாக முதல் கட்டப் பயணம் ராமேஸ்வரத்தில் தொடங்கி ஒரு குழுவும் நாகர்கோவிலில் தொடங்கி ஒரு குழுவும் பிரச்சாரம் செய்து கொண்டே வந்து அக்டோபர் 31ஆம் தேதி மதுரையில் நிறைவு செய்தனர். நிறைவு விழாக்களில் பங்கேற்று சேது சமுத்திரக் கால்வாயின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி உரையாற்றினோம்.

ஆந்திர மாநிலத் தலைநகர் அய்தராபாத்தில் ஜூப்லி ஹால் பக்கத்தில் இருந்த ஓர் அரங்கில் 10.11.2007 மற்றும் 11.11.2007 ஆகிய இரு நாட்கள் தாழ்த்தப்பட்டோர் மற்றும் மதச் சிறுபான்மையினர் மாநாடு நடைபெற்றது.

மாநாட்டிற்கு ஆந்திர மாநில மேனாள் தலைமைச் செயலாளரும் மேனாள் மாநிலத் தேர்தல் ஆணையருமான காக்கி மாதவராவ்  அய்.ஏ.எஸ். தலைமையேற்றார். மூத்த காங்கிரஸ் தலைவர் மேனாள் ஒன்றிய அமைச்சர் ஜி.வெங்கிட்டசாமி எம்.பி. மாநாட்டைத்தொடங்கி வைத்தார். எம்.அய்.எம். என்ற இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஆசாதுதீன் ஓவாய்சி, ஆந்திரா மாநில மேனாள் உள்துறை அமைச்சர் தேவேந்திர கவுட் (தெலுங்கு தேச கட்சியின் சட்டமன்றத் துணைத் தலைவர்). ஆந்திர அரசின் மேனாள் சிறப்புச் செயலாளர் சங்கரன் அய்.ஏ.எஸ். ஆகியோர் உரைக்குப் பின் நாம் சிறப்புரையாற்றினோம்.

முன்னதாக ஆந்திர மாநில உயர்நீதிமன்றத்தின் மேனாள் நீதிபதி பி.எஸ்.ஏ.சாமியின் இல்லத்தில் உயர்நீதிமன்ற மூத்த வழக்குரைஞர் சுப்பாராவ் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் புதுடெல்லயில் சமூகநீதி வழக்குரைஞர்கள் மாநாடு குறித்துக் கலந்தாலோசித்தோம். மறுநாள் (11.11.2007) ஒட்டன்சத்திரம் தொகுதி சட்டப்பேரவை மேனாள் உறுப்பினரும், தேவத்தூர், மணிமேகலை இளங்கோ உயர் நிலைப்பள்ளித் தாளாளருமான நா.நாச்சிமுத்து அய்யா அவர்களது 80ஆம் வயது நிறைவுப் பாராட்டு விழா  காமாட்சி திருமண மண்டபத்தில்நடைபெற்றது. இவ்விழாவில்  பங்கேற்று நிறைவுரை ஆற்றினோம்.

சட்டப்பேரவை உறுப்பினரும் தமிழ்நாடு அரசு தலைமை கொறடாவுமான மாண்புமிகு அர.சக்கரபாணி காலை நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். ப.ஈஸ்வரமூர்த்தி, முத்துசாமி, எஸ்.கே.கார்வேந்தன் எம்.பி., மேனாள் எம்.பி. அ.கணேசமூர்த்தி, ப.காளிமுத்து, மு.இராமநாதன், தி.பழனிசாமி உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். வருவாய்த் துறை, வீட்டு வசதி வாரியத் துறை அமைச்சர் அய்.பெரியசாமி, சுப்புலெட்சுமி ஜெகதீசன் ஆகியோர் பங்கேற்றனர்.

சென்னை பெரியார் திடலில் பேராசிரியர் அ.சிதம்பரநாதன் மற்றும் கவிஞர் புதுவை சி.மு.சிவம் இருவருக்கும் 12.11.2007 அன்று, நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. பெரியார் பேருரையாளர் கு.வெ.கி.ஆசான் தலைமையேற்றார்.

திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் சு.அறிவுக்கரசு அவர்கள் அறிமுக உரையாற்ற, முனைவர் அ.சிதம்பரநாதன் அவர்கள் படத்தை,முனைவர் அவ்வை நடராசன் அவர்களும், கவிஞர் புதுவை சி.மு.சிவம் அவர்களின் படத்தை முனைவர் மறைமலை இலக்குவனார் அவர்களும் திறந்துவைத்தனர்.

அ.சிதம்பரநாதன் அவர்களின் வாழ்க்கை வரலாற்று நூலை எழுதிய ந.வேலுசாமி அவர்களும், புதுவை சிவம் அவர்களின் மகன் முனைவர் சிவ.இளங்கோ அவர்களும் பாராட்டப்
பட்டனர்.

நிறைவாக நாம் சிறப்புரையாற்ற, பெ.செல்வராசு நன்றியுரையுடன் விழா நிறைவு பெற்றது.

அதேபோல, 13.11.2007 அன்று மற்றுமோர் நூற்றாண்டு விழா, நடிகவேள் எம்.ஆர். ராதா அவர்களுக்கும்; பாவலர் பாலசுந்தரம் அவர்களுக்கும் ஒருசேர நடைபெற்றது.

நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்களின் படத்தை நாமும், பாவலர் பாலசுந்தரம் அவர்களின் படத்தை கவிஞர் கலி பூங்குன்றன் அவர்களும் திறந்து வைத்தோம்.

நடிகவேள் ராதா அவர்களின் ஒப்பனையாளர் கஜபதி அவர்களும், நடிகவேள் ராதா அவர்களின் வரலாற்று நூலை எழுதிய திருக்குறள் சோமசுந்தரம் அவர்களும், எம். ஆர். ஆர். வாசு விக்ரம் அவர்களும் பாராட்டப்பட்டனர்.

‘இனமுரசு’ சத்யராஜ் அவர்கள் சிறப்புரையாற்ற, எமது நிறைவுரைக்குப் பின், செ.ர.பார்த்தசாரதி நன்றியுரையுடன் விழா நிறைவுபெற்றது.

2007ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் 45 பேரில் 5 பேர் பார்ப்பனர்கள் என்ற நிலையில் மேலும் 2 பார்ப்பனர்களை கொலிஜியம் பரிந்துரைத்தது. இதற்குக் கண்டனம் தெரிவித்து நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி தேவை என்பதை வலியுறுத்தினோம். இதனைக் கண்டித்து 20 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்தோம். 17.11.2017 அன்று காலை திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கலைச்செல்வன் படுகொலை செய்யப்பட்ட செய்தி கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தோம். இரங்கல் தெரிவித்தோம்.

திருப்பத்தூர் பெரியார் பெருந்தொண்டர் மானமிகு ஏ.டி.கோபால் அவர்களது 85ஆம் பிறந்தநாள் விழா 19.11.2007 விஜய சரவண மகாலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. எமது தலைமையில் நடந்த விழாவில் அனைவரையும் வரவேற்று மாவட்டத் தலைவர் கே.சி.எழிலரசன் வரவேற்புரையாற்றினார். ஏ.எஸ்.ஏ.பரமசிவம், சாரங்கபாணி, டாக்டர் டி.கோபால், டி.சி.ஆறுமுகம், செய்யாறு பா.அருணாசலம் ஆகியோர் விழாவிற்கு முன்னிலை வகித்தனர்.

நகர் மன்றத் தலைவர் சொக்கம்மாள் துளசிநாதன், மேனாள் சட்டமன்ற உறுப்பினர் மணவாளன், அண்ணாதுரை, எஸ்.ராஜேந்திரன், பி.கணேஷ்மல், எஸ்.அரசு (தி.மு.க.),
டி.என்.டி.தாமோதரன், பழநி.புள்ளையண்ணன், வழக்குரைஞர் அனந்த கிருஷ்ணன், கழகப் பொருளாளர் வழக்குரைஞர் கோ.சாமிதுரை ஆகியோரது வாழ்த்துரைக்குப் பின் பெரியார் பெருந்தொண்டர் மானமிகு ஏ.டி.கோபால் அவர்களுக்கு கழகத்தின் சார்பில் பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசினை நானும் பொருளாளர் கோ.சாமிதுரை அவர்களும் பலத்த கரவொலிக்கிடையே வழங்கினோம்.

நாம் உரையாற்றும் பொழுது பெரியார் பெருந்தொண்டர் மானமிகு ஏ.டி.கோபால் அவர்கள் தந்தை பெரியார் காலந்தொட்டு இன்றுவரை எந்த வகையில் கொள்கைப் பணிகளைச் செய்வதில் சிறப்படைந்தார் என்பதையும், கழகப் போராட்டங்களிலும் விழாக்கள், மாநாடுகளிலும், தம்மோடு பல்வேறு நாட்டு சுற்றுப் பயணங்களிலும் உடன் வந்தவர். சிறைச் சாலைக்கு அஞ்சாதவர் ஏ.டி.கோபால் என்றும் அவரது கழகப் பிரச்சாரப் பணிகளைச் சுட்டிக்காட்டி வாழ்த்திப் பேசினோம்.

ஒன்றிய அரசின் மருத்துவத் துறை எம்.பி.பி.எஸ். படிப்பை அய்ந்தரை ஆண்டுகளிலிருந்து ஆறரை ஆண்டுகளாக உயர்த்தியது. இதனைக் கண்டித்து விளக்கமான ஓர் அறிக்கையை வெளியிட்டோம். அய்ந்தரை ஆண்டுகள் மருத்துவப் படிப்பை ஆறரை ஆண்டுகளாக ஆக்கினால் அதற்குமேல் பட்டப் படிப்பு 2 ஆண்டு. அதற்கு மேலே ‘Super Speciality’ போன்ற சிறப்பு மேல் ஆய்வுப் பட்டங்கள் போன்றவை என்றால் சுமார் 10 ஆண்டுகளுக்குமேல் ஆகுமே! எங்களால், எங்கள் பெற்றோர்களால் இந்தச் சுமையைத் தாங்க முடியுமா என்ற மாணவர்களின் கேள்வி நியாயமான கேள்வியாகும். குறிப்பாக மருத்துவக் கல்லூரியில் பெண்கள் சேர்வது. இந்தக் கால நீட்டிப்பால் பாதிக்கப்படும் என்பதைக் கவனிக்கத் தவறக்கூடாது” என்று தெரிவித்திருந்தோம். மேலும் மற்றொரு அறிவிப்பை வரவேற்றோம். மாணவர்கள் மருத்துவப் படிப்பை முடித்தவுடன் கிராமங்களில் பணியாற்ற வேண்டும் என்னும் அறிவிப்புதான் அது.

தற்போது எம்.பி.பி.எஸ். படிக்கும் மாணவர்கள் படித்து முடித்தவுடன் கிராமப்புறங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மருத்துவமனைகளிலும் பணியாற்றத் தயங்க கூடாது என்று கேட்டுக் கொண்டோம்.

சிங்கப்பூர் அரசின் தேசிய நூலக வாரியமும், தேசிய நூலகமும் இணைந்து கடந்த பல மாதங்களாக ஏற்பாடு செய்து, தற்போது அங்கே 10ஆவது மாடியில் ”தென்கிழக்கு ஆசியாவில் இந்தியர்களின் தாக்கம்’ என்பதை “காலச்சக்கரம்” என்ற பெயரிட்டு, 6 மாதங்கள்வரை அற்புதமான ஒரு கண் காட்சியை கருத்துக் காட்சியாக அமைத்துள்ளதில், தொடக்க விழாவில் பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் உலகின் பல பாகங்களிலிருந்தும் வந்து ஆய்வுரைகளை நிகழ்த்தினார்கள். தொடக்க விழாவில் நிறைவுரை நிகழ்த்த எம்மை அழைத்திருந்தார்கள். அவர்களின் அழைப்பையேற்று 21.10.2007 அன்று காலை சிங்கப்பூர் சென்றடைந்தோம். சிங்கப்பூர் விமான நிலையத்தில் பெரியார் சமூக சேவை மன்றத்தின் சார்பாக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதே நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நம்முடன் அதே விமானத்தில் வருகை புரிந்த திரைப்பட நடிகர் நாசர் அவர்களுக்கும் வரவேற்பு அளிக்கப்பட்டது. எம்.இலியாஸ், இராஜராஜன் (துணைத் தலைவர், பெரியார் சமூக சேவை மன்றம்). மாறன் (பொருளாளர், பெரியார் சமூக சேவை மன்றம்), க.பூபாலன், கு.ரமேஷ்குமார் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டார்கள்.

சிங்கப்பூர் தேசிய நூலக வாரியத்தின் சார்பாக, காலச் சக்கரா என்ற கண்காட்சியின் ஒரு பகுதியாக ‘காலச் சக்கரம்’ என்ற தமிழ்க் கருத்தரங்கு 23.11.2007 அன்று, சிங்கப்பூர் தேசிய நூலக வளாகத்தில் நடைபெற்றது. அக்கருத்தரங்கில் கலந்துகொண்டு, “தமிழின் தொன்மையும் தொடர்ச்சியும்” என்ற தலைப்பில் உரையாற்றினோம்.

அப்போது,

“வீழ்ச்சியுறு தமிழகத்தில் எழுச்சி வேண்டும்

விசை ஒடிந்த தேகத்தில் வன்மை வேண்டும்”

என்று சொன்னால் மொழி அதற்கு அற்புதமான ஒரு வாய்ப்பு.

மொழியின் அடையாளத்தை மறந்துவிட்டு, மொழியின் தொன்மையைத் துறந்து விட்டு கவலைப்படாமல் இருக்க முடியாது.

எனவேதான், இன்றைய தொடர்ச்சிக்கும் தமிழ் பயன்படும் தொடர்ச்சியை நோக்கி நாம் தமிழை அழைத்துச் செல்ல வேண்டும்.

அந்தப் பொறுப்பு இது போன்ற அறிஞர் பெருமக்கட்கு உண்டு. இதை ஆய்வோடு நாம் நிறுத்திவிட முடியாது.

காரணம் என்னவென்றால், அறிவுக்கு அறிவு தேவையில்லை; செயலுக்குத்தான் அறிவு தேவை.

எனவே அறிவு, செயலுக்குப் பயன்பட வேண்டும். அழகாக வீடு கட்டியிருக்கின்றோம். எதற்காக? வெளியில் இருந்து வேடிக்கை பார்ப்பதற்காகவா? அல்ல. குடியிருப்பதற்காக. அதுபோல மக்கள் மத்தியிலே மொழி பயன்பட வேண்டும். அந்த மொழி அவனைச் சிந்திக்க வைக்க வேண்டும். சிந்திக்க வைத்தவனைச் செயலாக்கும் படியாகச் செய்ய வேண்டும்.

இழந்த இனத்தின் பெருமையை மீட்க வேண்டும்; படை எடுப்பு நடத்த வேண்டும் என்று சொல்லவில்லை.

பண்பாட்டுப் படை எடுப்பிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். எந்த மொழி வீழ்ந்தாலும் அந்த இனம் வீழ்ந்து விடும்.

எனவேதான், தமிழர்கள் நாட்டால் வேறுபட்டிருந்தாலும் மொழியின் காரணமாக வீட்டால் ஒன்று பட்டிருக்கின்றவர்கள் என்ற காரணத்தால்தான், நம்மை தூரம் பிரிக்கவில்லை – நம்மைக் கடல் பிரிக்கவில்லை.

நம்முடைய அரசியல் கோடுகள் நம்மைப் பிரிக்கவில்லை; நாடுகள் பிரிக்கவில்லை.

‘யாதும் ஊரே” என்று சொல்லக் கூடிய அளவிற்கு நல்ல அளவிற்கு உணர்வோடு இன்றைக்கு வாழக்கூடிய நிலைக்கு இந்தத் தொன்மையும் அதற்குப் பயன்பட்டது.

எனவே, தொன்மை வன்மையாக இருந்தாலும், தண்மையாக மென்மையாக மாறட்டும். அதற்கே நாம் பயன்படுவோம்” என்று குறிப்பிட்டோம்.

நிறைவு நாள் நிகழ்ச்சிக்குமுன் 23.11.2007 அன்று சிங்கப்பூர் வானொலி 96.8 என்ற பிரபலமான அலைவரிசையில் அதன் செய்தி வாசிப்பாளர் திருமதி மீனாட்சி சபாபதி அவர்கள், மேற்கண்ட மூன்று அறிஞர் பெருமக்களோடு நடத்திய ஒரு கலந்துரையாடலை இரவு 9 மணிமுதல் 10 மணிவரை (Live) நேரடி ஒலிபரப்பினர். பல்வேறு சுவையான கேள்விகளுக்கு நாம் உள்பட அனைவரும் மிகச் சிறப்பாகப் பதிலளித்து அந்த நிகழ்ச்சியை மிகவும்
சுவையாக்கினர்.

நிகழ்ச்சியைக் கேட்ட சிங்கப்பூர் குடிமக்கள் பலரும், தொலைப்பேசி மூலமும், நேரிலும் வாழ்த்துகளையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொண்டனர்!

(நினைவுகள் நீளும்…)

——-