Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

முறுக்கு, காராசேவு, அதிரசம், லட்டு போன்ற பலகாரங்களைச் சாப்பிடும்போது சுவையாகத்தான் இருக்கிறது.

ஆனால், அந்தப் பலகாரங்களை வீட்டில் செய்வதற்கு எவ்வளவு சிரமம் எடுத்துக் கொள்ள வேண்டியதாகியுள்ளது! அந்தச் சிரமத்தை சாந்தியும் ஒருநாள் அறிய நேரிட்டது.

சிறு வயதிலிருந்தே சாந்திக்கு இனிப்பு சாப்பிடுவது மிகவும் பிடிக்கும். அதுவும் ஜிலேபி, அதிரசம், லட்டு இவற்றை அதிகம் பிடிக்கும். அதோடு மட்டுமல்லாமல் முறுக்கு போன்ற கார வகைகளும் மிகவும் பிடிக்கும்.

தீபாவளி நெருங்கிவிட்டது. அம்மாவுக்கு உடம்பு சரியில்லை. பலகாரம் செய்ய வேண்டும். ஆனால், மாவு அரைக்க மில்லுக்குச் செல்ல வேண்டும். சளி, இருமல், சுரம் இருப்பதால் அம்மாவால் முடியாது. அப்பா வேலைக்குப் போய் விடுவார். இந்த வேலையெல்லாம் அவர் செய்யவே மாட்டார். என்ன செய்வது? தீபாவளி கொண்டாட வேண்டுமே!

தீபாவளி என்றால் சாந்திக்கு ஒரே கொண்டாட்டமாகப் போய் விடும். நாள்தோறும் நாட்காட்டியைப் பார்த்து ஒவ்வொரு நாள் தாளையும் கிழிக்கும் போது தீபாவளி வரும் நாளைக் கணக்கிட்டு வருவாள், படிப்பு முடிந்து போட்டித் தேர்வு எழுதி அதிலும் வெற்றி பெற்ற நிலையில், அவள் தீபாவளி முடிந்த பின் அரசுப் பணியில் சேர வேண்டும். படித்துப் பட்டம் பெற்றிருந்தாலும், அவளுக்குத் தீபாவளி என்றால் ஒரே கொண்டாட்டமாகப் போய்விடும், ஒவ்வோர் ஆண்டும் இனிப்பு, காரம், பலகாரங்கள் சாப்பிட மிகவும் விரும்புவது மட்டுமல்லாமல் சிறு பிள்ளை போல் வெடி வெடித்தும், மத்தாப்பு கொளுத்தியும் மகிழ்வாள்.

அம்மாவிடம் ஈர அரிசி, பச்சரிசி, ரவா, சர்க்கரை எல்லாவற்றையும் எடுத்து வைக்கச் சொன்னாள்.

“தீபாவளி அதாவது தீப ஆவலி என்பது விளக்குகளின் வரிசை எனப் பொருள்படும். இதுவே தீபாவளி எனத் திரிந்தது. குஜராத்திகளும் மார்வாடிகளும் அன்று புதுக்கணக்குத் தொடங்குகிறார்கள். மகாவீரர் விடியற்காலை நேரத்தில் இயற்கை எய்தியதால் அவரை நினைவு கூர்ந்து விடியற் காலையில் நீராடி விளக்கேற்றி தீபாவலியைக் கொண்டாடுகிறார்கள். இதை ஏற்க இயலாதவர்கள் கட்டிய கட்டுக் கதைதான் நரகாசுரன் கதை.”

“என்னால் மில்லுக்கு வரமுடியாது, அங்கு வந்தால் எனக்கு இருமலும் தும்மலும் அதிகமாயிடும்”, என்றார் அம்மா.

“நீ வரவேணாம்மா. நானே போய் அரைச்சிக்கிட்டு வர்றேன், நீ தேவையான எல்லாத்தையும் எடுத்துக் கொடுத்தால் போதும்”, என்றாள் சாந்தி.

அம்மாவுக்கு எதுவும் செய்யத் தோன்றவில்லை. ஒரே மகள் ஆசைப்படுகிறாள். சற்று நேரம் யோசித்து விட்டுச் சொன்னார்.

“சாந்தி, நீ சின்னப் பிள்ளை இல்லை. உனக்கு கல்யாண ஏற்பாடு பண்ண அப்பா அலைஞ்சிக்கிட்டு இருக்காரு தெரியுமில்ல… மில்லுக்கெல்லாம் நீ போனால் நல்லாயிருக்காது” என்றார்.

“அம்மா, நான் இதுவரைக்கும் வெளியில் போனதே இல்லையா? நம்ம வீட்டு வேலையாகத்தானே போறேன். நான் கேட்டதை யெல்லாம் எடுத்துக் கொடு”, என்று கேட்டாள் சாந்தி.

இனி இவளிடம் பேசிப் பயனில்லை என்று கருதிய அம்மா பொருள்களை எடுத்துக் கொடுத்தார்.

மாவு அரைக்கும் மில்லில் ஒரே கூட்டம். தீபாவளி நெருங்கி விட்டதல்லவா! பொருள்களை எடைபோட்டு, பணத்தைக் கொடுத்தாள் சாந்தி.

பொருள்களை எடுத்துக்கொண்டு இயந்திரம் அருகே சென்றாள். ஏற்கனவே சிலரது தானியங்களை இயந்திரம் அரைத்துக் கொண்டிருந்ததால் இவள் முறை வரும்வரை காத்திருக்க வேண்டியதாகிவிட்டது. ஆனால், எதிர்பாராதவிதமாக இயந்திரம் பழுதாகிவிட்டது. அந்த இயந்திரம் மட்டுமல்லாமல் அதன் அருகில் மிளகாய் அரைத்துக் கொண்டிருந்த இயந்திரமும் பழுதாகி விட்டது. ஏதோ மின்சாரக் கோளாறுதான்.

பழுது நீக்க சம்பந்தப்பட்டவர்கள் முயற்சி செய்ய ஆரம்பித்தனர். இதனால் சாந்திக்கு மேலும் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டு விட்டது. அதேபோல் மிளகாய் அரைக்க வந்திருந்த இராஜேந்திரனும் காத்திருக்க வேண்டிய தாகிவிட்டது. அரசுப் பணியில் உள்ள அவன் பக்கத்துத் தெருவைச் சேர்ந்தவன். வெளியூரில் பணி செய்யும் அவன் ஊருக்கு வந்த நிலையில் அம்மாவுக்கு உடல் நலமில்லாததாலும், மிளகாய்த்தூள் வீட்டில் இல்லாமையாலும் தானே மிளகாயை எடுத்துக் கொண்டு அரைக்க வந்திருந்தான். அவனும் மில்லிற்குப் புதியவன்.

அவனது மிளகாய் இயந்திரத்தில் கொட்டப்பட்டு பாதி அரைபட்ட நிலையில் இருந்தது.

மில்லின் இரைச்சல் நீங்கி அமைதி நிலவியது. ஆனால், அரைக்க வந்தவர்கள், “இயந்திரம் பழுதாகி விட்டதே. நேரமாகிறதே! எப்போது சரி செய்வார்களோ! தீபாவளி வேலைகள் நிறையவே கிடக்கிறதே!” என்று வருத்தப்பட்டு மெலிதாகப் பேசும் குரல்கள் கேட்டன.

“இன்னும் அய்ந்து நிமிடம் கழித்து பழுது ஏற்பட்டிருக்கக் கூடாதா? நம் வேலை முடிந்திருக்குமே!”, என்று இராஜேந்திரன் வாய் முணுமுணுத்தது.

சாந்திக்கு மிளகாய் நெடி தாங்க முடியவில்லை. தும்மல் வந்தது. தும்மியபடியே ஓரமாகப் போய் நின்றாள். இராஜேந்திரனும் அங்கு வந்து நின்றான். சாந்தியைப் பார்த்த அவன் அவள் முகத்தை எங்கேயோ பார்த்ததைப் போல் உள்ளதை உணர்ந்தான்.

“ச்சே, மாவு அரைக்க வந்தா இப்படி ஆயிருச்சே. தீபாவளியைக் கொண்டாட நினைக்கும் போது எவ்வளவு சிக்கல் எல்லாம் வருது. சாந்தி, இது உனக்கு கஷ்டமான தீபாவளிதாண்டி!” என்று தன் பெயரை தானே சொல்லிக் கொண்டு முணுமுணுக்க நினைத்தவள் சற்று உரத்த குரலிலேயே சொல்லிவிட்டாள்.

இதை அருகில் இருந்து கேட்ட இராஜேந்திரன் சட்டென அவளைத் திரும்பிப் பார்த்தான்.

சாந்திக்கு சற்று வெட்கமாகப் போய் விட்டது. பேச்சைத் திருப்ப, “இயந்திரத்தை எப்போது சரி செய்வார்களாம்?” என்று ஏதோ பேச வேண்டும் என்பதற்காக இராஜேந்திரனிடம் கேட்டு வைத்தாள்.

அவள் பெயரை அவள் வாயாலேயே சொல்லித் தெரிந்து கொண்ட அவன், தன் பெயரை அவளிடம் சொன்னான்.

”என் பெயர் இராஜேந்திரன். தீபாவளி உங்களுக்கு மிகவும் பிடிக்குமா? என்று கேட்டான்.

“ஆமாம்! சிறுவயதிலிருந்தே தீபாவளிப் பண்டிகையை மிகவும் பிடிக்கும்”, என்று பதில் சொன்னாள் சாந்தி.

“தீபாவளி எதற்காகக் கொண்டாட வேண்டும்?” என்று கேட்டான் இராஜேந்திரன். அவர்கள் உரையாடல் தொடர்ந்தது.

”நரகாசுரன் இறந்த நாள், அதைத்தான் கொண்டாடுகிறோம்.”

”அப்படியா? யார் அந்த நரகாசுரன்? யார் அவனைப் பெற்றார்கள்? அவன் எப்படி இறந்தான்? உங்களுக்குத் தெரியுமா?

“அவன் கடவுளுக்குப் பிறந்தவனாம். தேவர்களுக்குத் தொல்லை கொடுத்தானாம். அதனால் கடவுளே அவனைக் கொன்று விட்டாராம். இப்படித் தான் நான் கேள்விப்பட்டேன்.”

“சுரன் யார்? அசுரன் யார்? உங்களுக்குத் தெரியுமா?”

“தெரியலையே”

“சுராபானம் என்ற போதை தரும் பானத்தைக் குடித்து விட்டு கும்மாளம் போடுபவன் சுரன். அதைக் குடிக்காதவன் அசுரன். இதில் யார் நல்லவன்?”

இப்படி அவன் கேட்டதை அவள் எதிர்பார்க்கவில்லை. இருப்பினும் பதில் சொன்னாள்.

“நீங்கள் சொல்வதைப் பார்த்தால் அசுரன் தான் நல்லவன்”

“சரியா சொன்னீங்க. நீங்க என்ன படிச்சிருக்கீங்க?”

“எம்.எஸ்ஸி விலங்கியல் படிச்சிருக்கேன்”

“மிகவும் நல்லது. நான் நரகாசுரன் பிறந்த கதையைச் சொல்கிறேன். இரண்யாட்சதன் என்பவன் ஓர் அரக்கனாம்” இவ்வாறு இராஜேந்திரன் சொன்ன வுடன் சாந்தி இடைமறித்துக் கேட்டாள்.

“அரக்கனா? அசுரனா?”

“இராட்சதன், அரக்கன், அசுரன் எல்லாம் ஒன்றுதானாம். அந்த இரண்யாட்சதன் ஒரு நாள் நமது பூமியைப் பாய் போல் சுருட்டிக் கொண்டு கடலில் போய் ஒளித்து வைத்து விட்டானாம்! இதனால் கலக்கமடைந்த தேவர்கள் மகாவிஷ்ணுவிடம் போய் முறையிட்டார்களாம். உடனே மகாவிஷ்ணு பன்றி அவதாரம் எடுத்து கடலுக்குள் சென்று, அவனைக் கொன்று, பூமாதேவியை மீட்டாராம். அப்படி மீட்கும் போது பன்றியாகிய மகாவிஷ்ணுவிற்கும் பூமாதேவிக்கும் காதல் உண்டாகி அதன் மூலம் நரகாசுரன் பிறந்தானாம்” என்று சொல்லிவிட்டு நிறுத்திய இராஜேந்திரன் சாந்தியை நோக்கிச் சில கேள்விகள் கேட்டான்.

“இந்தக் கதையை நீங்கள் நம்புகிறீர்களா? சந்தேகம் ஏதும் வரவில்லையா? நீங்கள் அறிவியல் – அதுவும் விலங்கியல் படித்தவராயிற்றே?”, என்று கேட்டான்.

“பூமி உருண்டை வடிவமானது. அதை எப்படி பாய்போல் சுருட்ட முடியும்? கடலும் பூமியில் தானே உள்ளது? பாயை எப்படி அதில் ஒளித்துவைக்க முடியும்?, என்று கேட்டாள் சாந்தி.

“இந்தக் கேள்வியைத்தான் நாங்களும் கேட்கிறோம். ஆனால், பதில்தான் இல்லை. அப்புறம் இன்னொன்றையும் நீங்கள் கவனிக்க வேண்டும். நரகாசுரன் அரக்கன் என்றும் கொடியவன் என்றும் சித்திரிக்கப்படுகிறான். ஆனால், அரசனுக்கும் அரசிக்கும் பிறந்த குழந்தை இளவரசனாகத் தானே இருக்க முடியும்? அது போல கடவுளுக்குப் பிறந்த குழந்தை எப்படி அரக்கனாக, கொடியவனாக இருக்கமுடியும்?”

“இருக்க முடியாதே”, என்றாள் சாந்தி.

“நல்லது. நன்றாகப் புரிந்து கொண்டீர்கள் என நினைக்கிறேன். அப்புறம் அந்த நரகாசுரன் என்ன செய்தானாம் தெரியுமா?” என்று மற்றொரு வினாவைத் தொடுத்தான் இராஜேந்திரன்.

“மக்களுக்குத் தொல்லை கொடுத்தானாம்”, என்று பதில் சொன்னாள் சாந்தி.

“மக்களுக்கு அல்ல. தேவர்களுக்காம். அசுரர்கள் வேதத்தைத் திருடினார்களாம். கல்வி, அறிவைத் திருடினார்களாம். யாகங்களைத் தடுத்தார்களாம். அதாவது விலங்குகளை உயிருடன் தீயில் போட்டு எரிப்பதைத் தடுத்தார்களாம். அந்தத் தேவர்களின் தலைவன் இந்திரனின் யோக்கிதை பற்றி அகலிகை கதை வரும் போது சொல்கிறேன். தேவர்கள் நரகாசுரன் பற்றி விஷ்ணுவிடம் முறையிட்டதாகவும் பிறகு விஷ்ணு கிருஷ்ணனாகவும், பூமாதேவி சத்திய பாமாவாகவும் அவதாரம் எடுத்ததாகவும், அப்படி அவதாரம் எடுத்து தங்கள் மகனுடனேயே சண்டை செய்து கொன்றதாகவும் புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது. அவன் இறந்ததை நாம் கொண்டாட வேண்டுமாம். இது சரியா?”, என்று கேட்டான் இராஜேந்திரன்.

சாந்தி யோசனையில் ஆழ்ந்தாள்.

ஒரு அசுரனைக் கொன்றதற்காக ஒரு கொண்டாட்டம் இருக்க முடியாது. அப்படியானால் இராவணன், இரணியன், இடும்பன் மகன் சலந்தரன், அந்தகன் முதலிய அரக்கர்களைக் கொன்றதற்கும் கொண்டாட்டம் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாததால் நரகாசுரனைக் கொன்றதற்கும், தீபாவளிக்கும் தொடர்பு இல்லை. நரகாசுரனைக் கொன்றதற்காக தீபாவளி ஏற்பட்டதன்று, இவ்வாறு திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள் எழுதிய வாரியார் விரிவுரை விருந்து என்ற நூலில் 95ஆம் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு மட்டுமல்லாமல் தீபாவளி என்ற பண்டிகை பற்றி இது போன்ற பல்வேறு கதைகள் உள்ளன”, என்று விளக்கமாகக் கூறினான்.

“அது என்ன பல்வேறு கதைகள்!” என்றுகேட்டாள். சாந்தி.

“நம் தமிழ்நாட்டில் சோழர் காலம் வரை தீபாவளி கொண்டாடப்படவில்லை, திருமலை நாயக்கர் காலத்தில்தான் அது உள்ளே நுழைந்தது. அது தமிழர் விழா இல்லை.

தீபாவளி அதாவது தீப ஆவலி என்பது விளக்குகளின் வரிசை எனப் பொருள்படும். இதுவே தீபாவளி எனத் திரிந்தது. குஜராத்திகளும் மார்வாடிகளும் அன்று புதுக்கணக்குத் தொடங்குகிறார்கள். மகாவீரர் விடியற்காலை நேரத்தில் இயற்கை எய்தியதால் அவரை நினைவு கூர்ந்து விடியற் காலையில் நீராடி விளக்கேற்றி தீபாவலியைக் கொண்டாடுகிறார்கள். இதை ஏற்க இயலாதவர்கள் கட்டிய கட்டுக் கதைதான் நரகாசுரன் கதை.

இராஜேந்திரன் இவ்வாறு சொல்லிக் கொண்டிருந்தபோது, மில்லில் இருந்த மக்களி டையே சற்று பரபரப்புக் காணப்பட்டது. இயந்திரங்கள் பழுது நீக்கம் செய்யப்பட்டு விட்டதாக அவர்கள் பேசிக் கொண்டார்கள்.

“மில் இயங்கப் போகிறது என நினைக்கிறேன். நான் சொல்லும் புத்தகங்கள் கிடைத்தால் படியுங்கள்”, என்றாள் இராஜேந்திரன்.

”என்ன புத்தகங்கள்?”

“தமிழறிஞர் கா.சுப்ரமணிய பிள்ளையின் தமிழர் சமயம், பேராசிரியர் அ.கி.பரந்தாமன் அவர்களின் நாயக்கர் வரலாறு, மறைமலை அடிகளாரின் தமிழர் மதம், ஆ.சிங்காரவேலு முதலியார் தொகுத்த அபிதான சிந்தாமணி, மயிலை சீனி.வேங்கடசாமி அவர்களின் சமணமும் தமிழும், டாக்டர் மா.இராசமாணிக்கனார் எழுதிய தமிழர் நாகரிகமும் பண்பாடும், திருமுருக கிருபானந்த வாரியார் அவர்களின் வாரியார் விரிவுரை விருந்து ஆகிய புத்தகங்கள்.”

“சரி. வேறு எந்த விழாவைத்தான் கொண்டாடுவது? என்றாள் சாந்தி.

“தை மாதம் வரும். புத்தாண்டு, பொங்கல் கொண்டாடலாம்.” என்று மகிழ்ச்சியுடன் சொன்னான் இராஜேந்திரன்.

“நீங்க சொல்றது சரிதான். இப்போது மாவு அரைக்கலாமா வேண்டாமா என்று யோசிக்கிறேன்.”

“நிறுத்த வேண்டாம். ஈர அரிசி வீணாகிவிடும். மற்ற பலகாரங்களைப் பொங்கலுக்கு வைத்துக் கொள்ளுங்கள்”, என்று சொன்ன இராஜேந்திரனுக்கு அவள் உருவத்தைப் பார்த்த நினைவு வந்தது.

“உங்கள் புகைப்படத்தை சிலநாட்களுக்கு முன் பார்த்தேன்” என்றான் சாந்தியிடம்.

“அப்படியா? எங்கு?”, என்று வியப்புடன் கேட்டாள் சாந்தி.

“மணமகன் தேவைக்காக என் தந்தையின் நண்பர் எங்கள் வீட்டுக்கு வந்து அம்மா, அப்பாவிடம் உங்கள் படத்தைக் காட்டிக் கொண்டிருந்தார்”, என்றான்.

இதைக் கேட்ட சாந்தி வியப்புடன் அவனை நோக்கினாள். அவளது பார்வை…”

“உங்கள் முடிவு என்ன?” என்று கேட்பதைப் போல் இருந்தது.

“நான் என் விருப்பத்தைத் தெரிவிக்கிறேன்” என்றான் இராஜேந்திரன்.

”நானும்தான்”, என்ற அவளது எண்ணம் அவள் பார்வையில் தெரிந்தது.

மில் இயங்கியது. மீண்டும் பரபரப்பு தொற்றிக் கொண்டது. அனைவரும் தத்தம் பணிகளில் ஈடுபடலாயினர். |