Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

அரசு தன் நடவடிக்கையை முடுக்கிவிடும்!

கே 1:     மும்மொழிக் கொள்கையை ஒன்றிய அரசு கட்டாயப்படுத்தி, மாநில அரசுக்குத் தரவேண்டிய நிதியை மறுப்பதற்கு எதிராய் உச்சநீதிமன்றத்தில் தீர்வு பெற முடியாதா?

– ம.கருணாகரன், திருத்தணி

ப 1: தமிழ்நாடு அரசு உச்சநீதி மன்றத்தை நிதிப் பிரச்சினை குறித்து நாடியிருக்கிறது!

கே 2:     ஆங்கிலேயக் கல்வி முறை தொடர்வது வேதனை என்று ஆளுநர் வேதனைப்படுவதன் நோக்கம் – சனாதன குலக்கல்வி, குருகுலக் கல்வியைக் கொண்டுவர வேண்டும் என்பதுதானே?

– ச.மருதமுத்து, நாகர்கோவில்

ப 2: ஆங்கிலேயக் கல்வி முறையில் படித்துத்தான் இவர் அய்.பி.எஸ். அதிகாரியானார். வெறும் சமஸ்கிருதம் மட்டும் படித்திருந்தால் அவர் கையில் என்ன இருந்திருக்கும் என்று அவரிடமே எழுதிக் கேளுங்கள்.

கே 3:     முதல்வரை வீண் வம்புக்கு இழுக்கும் த.வெ.க. தலைவரின் நோக்கம், முதல்வர் பதில் அளித்தால் செல்வாக்குப் பெறலாம் என்ற சூழ்ச்சியில் தானே?

– க.சந்திரசேகர், வியாசர்பாடி

ப 3: பொறுப்பற்ற முறையில், சினிமா உலகில் பேசுவதுபோல, பெரிய தலைவரைப் பற்றிய வம்பு பேசினால், எதிர்வினையாகப் பதில் சொல்வார்கள். தனக்கு
மேலும் ஊடக வெளிச்சம் கிடைக்கும் என்ற காரணத்தால்தான் இப்படி.

கே 4:     மோடி தனது இராஜதந்திரத்தால் அதிபர் ட்ரம்ப்பை இறங்கி வரச் செய்துள்ளார் என்ற பாராட்டு சரியா?

– வே.சத்தியசீலன், ஒசூர்

ப 4: ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்!

கே 5:     அ.தி.மு.க. மேனாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் “தமிழகத்தின் மணிமகுடம் தினமலர்” என்கிறார். அ.தி.மு.க.வை திராவிடக் கட்சியென்று எப்படி ஏற்பது?

– தி.வடிவேலன், விருதுநகர்

ப 5: அவரைப் போன்றவர்களுக்கு அண்ணாவின் கொள்கை என்ன என்றே தெரியாதே! பின் என்ன இது அதிசயமா?

கே 6:     அ.தி.மு.க., பா.ம.க. இரண்டு கட்சிகளும் தங்கள் உள்கட்சிப் பிரச்சினையைத் தீர்க்க அமித்ஷாவைச் சந்திக்கும் போக்கை எப்படிப் பார்க்கிறீர்கள்? இக்கட்சிகளில் உள்ள தொண்டர்களுக்கு விழிப்பு உண்டாக்க வேண்டியது நமக்குக் கட்டாயமாகும் நிலையல்லவா இது?

– வா.வாசுதேவன், திருச்சி

ப 6: ‘விடுதலை’யை நாளும் படியுங்கள். நமது கழகப் பிரச்சாரங்களையும் தயவு செய்து நடப்புகளையும் பாருங்கள்.

கே 7:     புதுக்கோட்டை மாவட்டத்தில் விடுதியில் தங்கிப் படித்த பல்கலைக்கழக மாணவன் அறை நண்பர்களின் பாலுறவு தொல்லை, பணம், நகைப் பறிப்புக்கு ஆளாகி, தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு அரசு தீவிரமாகச் சிந்திக்க வேண்டிய ஒன்றல்லவா?

– அ.வெற்றி, காஞ்சிபுரம்

ப 7: உரிய பார்வையுடன் நடவடிக்கையை அரசு முடுக்கி விடுவது உறுதி!

கே 8:     இந்தியாவின் அனைத்துச் சிக்கலும் தீர தற்சார்பு ஒன்றே தீர்வு என்று பிரதமர் கூறியிருப்பது சரியா?

– சா.தமிழரசு, கரூர்

ப 8: பலே பலே! எப்படி இந்தத் திடீர் ஞானோதயம்? புரிய வில்லையே!