| த |
மிழ்நாட்டில் 2026ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல், மதவெறி – இந்துத்வா சங்கிகளுக்குச் சாவு மணி அடிக்கும் என்பதில் அய்யமில்லை. இத்தேர்தலில் தி.மு.க. மீண்டும் ஆட்சியமைத்தால், அதன் விளைவாக ஒன்றிய அரசு கவிழ்ந்துவிடும் என்கிற நிலை இல்லை. ஆனால், மீண்டும் தி.மு.க. ஆட்சியமைக்கக் கூடாது என்று ஆணவத்தோடும், அதிகாரத் திமிரோடும், “தி.மு.க.வை வேரோடு பிடுங்கி எறிவேன்”- என்று அமித்ஷா எகிறிக் குதிப்பதேன்? ஒரு குரங்கைப் பிடித்து அதற்கு சாராயத்தை ஊற்றி, மேலும் ஒரு தேளை விட்டு அக்குரங்கைக் கடிக்க வைத்தால் – அக்குரங்கு எவ்வாறு அலறுமோ… அதுபோன்ற நிலைதான் அமித்ஷாவிற்கு உள்ளது என்றால் மிகையல்ல.
சுயமரியாதை இயக்கத்தின் வழிவந்த – திராவிட இயக்கத்தின் வழிவந்த தி.மு.க. ஆட்சியை வெறும் அரசியல் கட்சியாக மட்டும் பார்க்க வேண்டாம். நாங்கள் கொள்கை முடிவெடுக்குமிடம் ‘பெரியார் திடல்’ என்று பிரகடனப்படுத்திய தி.மு.க. தமிழ் மொழி உணர்வு, பண்பாட்டு உணர்வு, பகுத்தறிவு உணர்வு, தமிழன் என்ற இன உணர்வு ஆகியவற்றால் கட்டமைக்கப்பட்ட அமைப்பு என்பது “பச்சை அரசியல் வியாபாரி”யான அமித்ஷாவுக்குத் தெரியவில்லை. இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலும், உங்கள் “தகிடுதத்த வேலை செல்லுபடியாகிறது; ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் தோல்வி அடைகிறதே என்று சிந்திக்காத மரமண்டைகள்தானே நீங்கள் என்றால் தவறல்ல. ஏனெனில், மற்ற மாநிலங்களில் சுயமரியாதை இயக்கம் தோன்றவில்லை; பெரியார் பிறக்கவில்லை; அங்கெல்லாம் உங்கள் பித்தலாட்டம் பெருமளவில் வியாபாரம் ஆகிறது.
தமிழ்நாடு சட்டமன்றத்தில், உங்கள் மதவாத – பிரிவினைவாத சக்தி இரண்டு முறை இடம் பெற்றது.ஒருமுறை தி.மு.க. போட்ட பிச்சை; இன்னொருமுறை, அதாவது 2021ஆம் ஆண்டு அ.தி.மு.க. போட்ட பிச்சை காரணமாகும்.இதைவிடுத்து என்றைக்காவது தனித்து வென்றதுண்டா? தமிழ்நாட்டில், திராவிட இயக்கங்களின் துணையில்லாமல், எத்தனை கோடிப் பணத்தை வாரி இறைத்தாலும், தங்கள் அதிகார பலத் திமிரைக் காட்டினாலும் ‘டெபாசிட்’ வாங்க முடியாது என்பதைக் காட்டியதுதான் 2024ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலாகும்.
தமிழ்நாட்டில் ஒரு வழக்குமொழி உண்டு; என்னவென்றால், ‘எதற்கும் நான்கு பேர்கள் வேண்டும்’ என்பதாகும். தமிழ்நாடு சட்டமன்றத்தில் உள்ள நான்கு உங்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், தனித்துப் போட்டியிட்ட உங்கள் கட்சியை – பாடை கட்டித் தூக்கிச்சென்று அடக்கம் செய்துவிட்டார்கள்.
இந்த நாடாளுமன்றத் தேர்தலில் கிடைத்த மரண அடிதான், தமிழ்நாட்டிலுள்ள சில எட்டப்பர்களை மிரட்டி, அவர்கள் மீதுள்ள வழக்குகளை பூதாகரமாக்கி, உங்கள் கூட்டணியில் வலுக்கட்டாயமாகச் சேர்த்துள்ளீர்கள். இதன் விளைவு என்ன ஆகுமென்றால், “எண்ணெய்ச் செலவுதானே ஒழிய, பிள்ளை பிழைத்த பாடில்லை” என்ற வழக்கு மொழியைத்தான் மெய்ப்பிக்கும் என்பதில் அய்யமில்லை.
உங்களுக்குத்தான் ‘விஸ்வகுரு’ இருக்கின்றார்; அதிகார ஆட்டம் போடும் அமித்ஷா இருக்கின்றார்; கொட்டிக் கொடுக்க கோடிகோடியாய்ப் பணமிருக்கிறது; பயந்து நடுங்கும் கும்பலிருக்கிறது – எனவே, யாருடனும் கூட்டணியில்லாமல் தனித்து நிற்க வேண்டியதுதானே. உங்களுக்குத் துணிவிருந்தால் – நாணயமிருந்தால்- யோக்கியதையிருந்தால் – நம்பிக்கையிருந்தால் – 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வா! உன் திருக்குறள் முகமூடி, துணைக் குடியரசுத் தலைவர் தமிழர் என்ற முகமூடிகள் கிழிக்கப்படும். ஏனெனில், இது பெரியார் மண்! சுயமரியாதை மண்!
வாழ்க பெரியார்! |


