| ந |
ாட்டில் அரசியலின் பேராலோ, மதத்தின் பேராலோ, சமுதாயத்தின் பேராலோ ஏற்பட்டிருக்கும் ஒவ்வொரு கட்சியாரும் அக்கட்சித் தொண்டாற்றுவதற்கு என்று ஒவ்வொரு படையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதை எவரும் மறுக்க முடியாது. ‘ராமத்தண்டு’, ‘அனுமான் சைனியம்’ ‘செஞ்சட்டை’, ‘நீலச்சட்டை’, ‘இந்துஸ்தான் சேவா தளம்’ என்பன போன்ற படைகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. அவற்றைப்பற்றி எல்லாம் எவரும் பேசாமல் இருந்துவிட்டு, கருஞ்சட்டைப் படை என்பதற்காக மாத்திரம் ஏன் இத்தனை பேர்கள் பரிகாசம் செய்யவும், ஜாடை பேசவும், பொம்மை போட்டுக் காட்டவுமான காரியங்கள் செய்கிறார்கள் என்பது விளங்கவில்லை. எப்படி இருந்தபோதிலும் கருஞ்சட்டைப் படை என்பது மற்ற படைகளை விட மக்கள் கவனத்தை அதிகமாகக் கவர்ந்திருக்கிறது என்பதில் அய்யமில்லை என்பதோடு, அதற்கேற்றபடியே மக்கள் கவனத்தை ஆழ்ந்து செலுத்தும் படியான அளவுக்கு கருப்புச்சட்டைப் படை வேலை செய்யப் போகிறது என்பதிலும் அய்யமில்லை.
கருஞ்சட்டைப் படை அரசியலில் ஏதாவது தீவிர கிளர்ச்சி செய்யவோ, ஓட்டுப் பெறவோ, அல்லது ஏதாவது ஒரு வகுப்பு மக்கள் மீது வெறுப்புக் கொண்டு யாருக்காவது தொல்லை கொடுக்கவோ, அல்லது நாச வேலை செய்து நம் மக்களையே பலி கொடுக்கவோ, நம் பொருளையே பாழாக்கிக் கொள்ளவோ அல்ல என்பதை தெளிவாக வலியுறுத்திக் கூறுவோம். மற்றபடி அப்படை எதற்கு ஆக என்றால் இழிவு கொண்ட மக்கள் தங்கள் இழிவை உணர்ந்து வெட்கமும், துக்கமும் அடைந்திருக்கிறார்கள் என்பதைக் காட்டவும், இழிவை நீக்கிக்கொள்ளத் தங்கள் வாழ்வை ஒப்படைக்கத் தயாராக இருக்கிறார்கள் என்பதைக் காட்டவும், அதற்கான முயற்சிகளைச் செய்ய தலைவர் கட்டளையை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்கள் என்பதைக் காட்டவுமே ஏற்படுத்தப்பட்டிருப்பதாகும்.
-‘குடிஅரசு’ – தலையங்கம் – 17.11.1945.
மேற்கண்ட உன்னத இலட்சியங்களுக்காகத் தொடங்கப்பட்ட கருஞ்சட்டைப் படையினரைத் தடைசெய்ய வேண்டும் எனக் கொக்கரித்த அரசுக்கு எதிராகப் பொங்கி எழுந்த துறையூர் கருஞ்சட்டைப் படைக் காரியதரிசி வீ.நாராயணன் எனும் வீர இளைஞன், அழியட்டுமே திராவிடம் எனும் வீரகாவியம் படைத்தான். ஆரியத்தால் அடிமையுண்ட திராவிடரைத் திராவிடத்தின் எதிர்நின்று தாக்குவதுபோல ஆரியத்தை அலறவிட்ட மானமறவன் வீ.நாராயணன்.
து.வீ.நாராயணன் வீசிய எழுத்து ஆயுதங்களை இன்றைய இளந் தோழர்களே எடுத்துச் சுழற்றுவோம், வாரீர்!
திராவிடர் கழகத்தைக் கலையுங்கள்! ஆம், கலைத்தே விடுங்கள்!
கோடிக்கணக்கான திராவிட மக்களின் உழைப்பை உறிஞ்சி, அவர்களின் வேர்வையிலே குளித்து, அவர்களின் ரத்தத்தை நீராக அருந்தி, அவர்களின் எலும்புக்கூடுகளால் கட்டப்பட்ட மாளிகையில் வசித்து, இன்னமும் மேனி மெருகு கெடாது வாழ்ந்து வரும் ஆரியக் கூட்டத்தை அழித்தொழிக்க அரும்பாடுபட்டு வரும் திராவிடர் கழகத்தைக் கலையுங்கள்!
முணுமுணுப்பை முழக்கமாக மாற்றி, எழுச்சிப் போர் புரிய எத்தனிக்கும் ஏழைத் தொழிலாளியிடம் விதி என்ற சதிச்சொல்லைச் சுட்டிக்காட்டி, அவர்களின் எழுச்சிக்குத் தடைகள் விதித்து, தங்கள் இன்பத்தை அவர்களின் துன்பத்தின் மேல் நிறுவி, கூழுக்கு உப்பில்லையே என அவ்வேழைத் தொழிலாளிகள் குடிசைகளிடையே கூக்குரலிடும்போது, இன்ப வல்லியின் இடையிலே தனது இடது கரம் இருக்க, தனது இரு செவிகளும் இன்னிசை விருந்துண்ண தமது மதியையும் மனதையும் மதுவிலே செலுத்தி, மமதை கொண்டு மெய்மறந்து கிடக்கும் முதலாளி வர்க்கத்திற்குச் சாவு மணி அடிக்கும் திராவிடர் கழகத்தைக் கலையுங்கள்!…….
ஆம் திராவிடம் அழியட்டும்!
அழிந்தே போகட்டும்!
மண்ணோடு மண்ணாக மக்கி மடியட்டும்! தமிழன் ரத்தத்தைத் தமிழன் சிந்தக்கூடிய நிலைமைக்குப் பின்னோக்கிச் சென்ற திராவிடம் அழியட்டும்! தமிழனைத் தமிழன் தீண்டத்தகாதவன், உழைக்கப் பிறந்தவன், வகுப்புத் துவேஷி எனத் தூற்றும் திராவிடம் அழியட்டும்!தமிழன், தமிழர் கூட்டங்களிலே, தமிழர் மாநாடுகளிலே, கலவரம் செய்வதில் பெருமை அடையக்கூடிய நிலைமைக்கு அறிவையிழந்துவிட்ட திராவிடம் அழியட்டும்! தமிழன் தமிழனைக் கொன்று அந்தப் பிணத்தின் மீது ஏறி நின்று பாரீர், என் பராக்கிரமத்தை என்று கொக்கரிக்கக் கூடிய நிலைமைக்கு இன உணர்வை இழந்து விட்ட திராவிடம் அழியட்டும்!
சலிப்புற்ற திராவிட வாலிப உள்ளத்தின் இன்றைய முரசொலி அல்ல இது! எதிர்கால ‘முரசொலி’ ஆனந்தமாக வீசும் தென்றல் காற்றிலே அசைந்தாடும் கருங்கொடியின் கீழ் அணிவகுத்து நிற்கும் ஆயிரக்கணக்கான திராவிட வாலிபர்கள் எதிர்காலத்தில் முழங்கப் போகும் மரண சாசனத்தின் இறுதிக் கோஷம் இது! இன உணர்வின் கீழ் ஒன்றுபட்ட அய்க்கிய முன்னணிப் படையின் எதிர்காலப் போர் முழக்கம் இது! ஊராரின் தூற்றல், உறவினர்களின் எதிர்ப்பு, குடும்பத்தாரின் தொல்லை, நண்பர்களின் வசவு அனைத்தையும் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டு நாட்டு நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு தொண்டு செய்யும் தியாகக் கூட்டங்களின் புரட்சிப் பாட்டு இது!
எரியுண்ட மதுரையைப் போல் தீப்பற்றி எரியட்டும்; வேண்டாம் இந்த நாடு; இந்த நாட்டைச் சீர்திருத்துவதை விட அதை அழித்துவிட்டே அதன் மேல் ஒரு புதிய சமுதாயத்தை நிறுவிடுவோம்…
இப்படி எழுதி எழுதி, திராவிட மக்களை எழுச்சி பெறச்செய்த சுயமரியாதை இயக்க எழுத்து இளைஞன் தோழர் துறையூர் வீ.நாராயணன் துறையூர் நகர திராவிடர் கழகச் செயலாளராகவும் பணியாற்றியவராவார். ‘புரட்சிப் பதிப்பகம்’ நடத்தி பல்வேறு நூல்களை வெளியிட்ட தோழர் வீ.நாராயணன் 21.04.1948ஆம் ஆண்டில் முடிவெய்தினார்.
பெரும் இழப்பு :
“இள வயதும், எழுச்சியும் நிறைந்து மக்கள் தொண்டில் பேரார்வம் கொண்டுழைத்த தோழர் நாராயணன் அவர்கள் 19 வயதுற்ற தனது வாழ்க்கைத் துணைவியையும், 2 வயதுள்ள தனது மகனையும் பரிதவிக்கச் செய்து இயற்கையின் கொடுமைக்குப் பலியானார் என்பதைக்கேட்க எவரும் திடுக்கிடவே செய்வர்.
ஆறுதல் கூறவோ, ஈடு செய்யவோ முடியாத இந்தப் பெரும் இழப்பைக் குறித்து நாம் ஆறுதல் எதுவும் கூறினால் அது பொருளற்றதாகும். அவரின் குடும்பத்தாரோடு நாமும் அவ்வருத்தத்தில் பங்கு கொள்கிறோம்..”
– ‘குடிஅரசு’ – இரங்கல் செய்தி- 01.05.1948.
‘குடிஅரசு’வின் இரங்கல் செய்தியைக் காணும்போதே தோழர் வீ.நாராயணன் இழப்பு திராவிடர் கழகத்தாரின் தத்தமது குடும்ப இழப்பாகத் தோன்றுவதை உணரலாம்.
‘பெரியார் உலக மயம் – உலகம் பெரியார் மயம்’ எனும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் இலக்கை எட்ட – பெரியாரை எழுத இளைஞர்களே வாரீர்! அழியட்டுமே திராவிடம் து.வீ.நாராயணன் விட்டுச்சென்ற பணியைத் தொடர்வோம்.
(சுடர் பரவும்…)


